உலகநாதர் இயற்றிய உலகநீதி
தேமொழிFeb 14, 2015
உலகநீதி என்ற நீதிநூல் உலகநாதர் என்ற புலவரால் எழுதப்பட்டுள்ளது, இந்நூலின் இறுதிவரிகள் இயற்றிய புலவரின் பெயரைத் தருகின்றன. பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களைக் கொண்ட இந்த நூலின் நோக்கம், உலக மக்களுக்குப் பொதுவான நீதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. பாக்களின் ஒவ்வொரு அடியும் ஒரு நீதியை அறிவுறுத்துகிறது. பாடல் வரிகளின் மூலம் உலகநாதர் ஒரு முருகபக்தர் என்பது மட்டுமே தெரிகிறது. இத்தகவலைத் தவிர இவரைப்பற்றிய பிற தகவல்களோ, காலமோ, வரலாறோ அறியக்கூடவில்லை. தமிழிலக்கியம் தரும் நீதி நூல்களின் தொகுப்பில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த நூல்களுள் உலகநாதர் இயற்றிய உலகநீதியும் ஒன்று.
நீதி என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் விளக்க உரையின்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய பாடல் வரிகளை பள்ளிச் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளார் உலகநாதர். ஒலி நயத்தோடு பாடவும் அதனால் மனதில் இருத்தவும் கூடிய வரிகளைக் கொண்ட பாடல்களாக இவை விளங்குகின்றன. உலகநீதியைப் பள்ளியில் படித்த நினைவில்லையே என்று வியப்பவர்களுக்கு “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்ற வரிகள் சட்டென இப்பாடல் படித்ததை நினைவிற்கு கொண்டு வந்துவிடும்.
உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
என்ற இரு இறைவணக்க வரிகளுடன் துவங்கி 13 ஆசிரிய விருத்தப்பாக்களும் தொடர்கின்றன. ஒவ்வொரு விருத்தப்பாவும் எட்டு வரிகள் என்ற வீதத்தில் (13 X 8) 104 வரிகளையும், பிள்ளையாரிடம் இந்த உலகநீதிபுராணத்தைப் பாட அருள் பெற வேண்டி வணங்கும் இரு காப்பு வரிகளுடன் சேர்த்து முழுப் படைப்பும் 106 வரிகள் மட்டும் கொண்டது. மிகச் சுருக்கமாக உலகநாதர் உலகிற்கு சொல்ல விரும்பபிய நீதிகள் அனைத்தும் இவற்றுள் சொல்லப்பட்டுவிடுகின்றன.
பதினொன்றாவது பாடலும், பதின்மூன்றாவது பாடலும் அமைப்பில் சற்றே மாறுபட்டவை. பதினொன்றாம் பாடல் முழுவதும் கோர்வையாக ஒருகருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடல். எனவே வரிக்கு வரி ஒரு நீதியை குறிக்கும் பொதுவான முறையில் இருந்து பதினொன்றாவது பாடல் மாறுபட்டுள்ளது.
இப்பாடல் நமக்கு இன்றியமையாச் சேவை செய்த ஐந்து வகை மக்களை ஏமாற்றாது கூலி கொடுக்க வேண்டும், அவர்கள் நமக்கு செய்த ஊழியத்திற்கு ஊதியம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. துணி வெளுத்துக் கொடுக்கும் வண்ணான், முடிதிருத்தும் நாவிதன், கல்வி அல்லது கலை கற்பித்த ஆசிரியர், குலம் தழைக்க மகப்பேறு பணியாற்றிய மருத்துவச்சி, நோய் தீர்த்த மருத்துவன் ஆகியவர்களுக்கு அவர்களது வாழ்வாதாரமான வருமானத்தை இனிய சொற்களுடன் அளிக்காது ஏமாற்றுபவர்கள் எமனால் துன்புறுத்தப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் கோணத்தில் வலியுறுத்தியுள்ளார் உலகநாதர்.
அஞ்சு பேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் தானே! … 11
மேற்சொன்ன பாடலின் எட்டு வரிகளைப் போலவே 13 வது அல்லது இறுதிப்பாடலின் எட்டு வரிகளும் பொது நடையில் இருந்து விலகியுள்ளது. இப்பாடலின் முதல் நான்கு வரிகளிலும் கல்வியும் பொருளும் தேடி அடைந்த தன்னைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அழகிய தமிழால் முருகனைப் போற்ற விரும்பும் உலகநாதனாகிய நான் பாடிவைத்த இந்தப் பாடல்களை விரும்பி கற்றவர்களும் கேட்டவர்களும் இந்த நீதிகளைக் கடைபிடிப்பதால், மகிழ்ச்சியும் புகழும் பெற்று வாழ்வார்கள் என்று சொல்லிச் செல்கிறார் உலகநாதர்.
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடி வைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே! … 13
ஒவ்வொரு பாடலின் இறுதி இரு வரிகளை முருகனை வாழ்த்த ஒதுக்கி வைக்கிறார். “மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!” என்ற போற்றுதல் எட்டு முறை கூறப்படுகிறது. எவ்வாறு கடவுள் வாழ்த்துப் பாடலில் பிள்ளையாரை நேரடியாகக் குறிப்பிடாமல் கரிமுகன் என்று குறிப்பிட்டாரோ, அது போல முருகனை “குமரவேள்” என்று இரு இடத்திலும், ஒன்பது முறை “வள்ளி பங்கன்” என்றும், “மயிலேறும் பெருமான்” என்று எட்டு முறையும் குறிப்பிடுகிறார். முருகனை தேவர் குலமகள் தெய்வானையின் மணாளனாக இவர் பார்க்கவில்லை, குறவள்ளியின் கணவனாக மட்டுமே போற்றுகிறார். ஓரிடத்தில் மட்டும் திருமாலின் தங்கையான உமையின் மைந்தன் என்றுக் குறிப்பிடுகிறார்.
“குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!” என்று ஒருமுறையும், “குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே!” என்று ஒரு முறையும், “திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!” என்று மற்றொரு இடத்திலும் குறிப்பிட்டு திருவடியையும், நாமத்தையும், திருக்கை வேலாயுதத்தையும் போற்றுகிறார். இந்த வேறுபாடுகளைத் தவிர்த்து “வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!” என்பதே தனது நெஞ்சிடம் புலவர் மன்றாடும் முறையாக இருக்கிறது. பாடலில் இறுதி இருவரி போற்றுதாலாக வரும் 22 வரிகளையும் பிரித்தெடுத்து பாடினாலும் வேலவனைப் பாடும் அழகிய சிறு போற்றுதல் பாடல் கிடைக்கும். உலகநீதி ஏதும் குறிப்பிடப்படாத இறைவணக்கப் பாடல்வரிகள் மட்டுமே இவை.
இறைவணக்கப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது …
(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் ( 7 )
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! ( 8 )
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன் (15)
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! (16)
வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன் (23)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! (24)
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன் (31)
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! (32)
வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன் (39)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! (40)
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன் (47)
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!(48)
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் (55)
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே! (56)
வாராரும் குறவருடை வள்ளி பங்கன் (63)
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! (64)
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன் (71)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! (72)
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன் (79)
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே! (80)
மாறான குறவருடை வள்ளி பங்கன் (95)
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! (96)
முதல் இருவரி காப்புப்பாடல், கூலி தருவதை வலியுறுத்தும் 11 வது பாடல் மற்றும் பாடலின் ஆசிரியர் குறிப்பு தரும் 13 வது பாடல் ஆகியவற்றின் இரு எட்டு வரிகள், வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தும் 22 வரிகள் தவிர்த்து ஏனைய 66 பாடல்வரிகளும் உலகநீதியை அறிவுறுத்தும் பாடல்வரிகள், அப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன …
(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ( 1 )
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் ( 2 )
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் ( 3 )
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் ( 4 )
போகாத இடந்தனிலே போக வேண்டாம் ( 5 )
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் ( 6 )
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் ( 9 )
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் (10)
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் (11)
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் (12)
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் (13)
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்(14)
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் (17)
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் (18)
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் (19)
தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம் (20)
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் (21)
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம் (22)
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் (25)
கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம் (26)
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் (27)
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் (28)
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்(29)
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் (30)
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்(33)
மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்(34)
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் (35)
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் (36)
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் (37)
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் (38)
வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத்திரிய வேண்டாம்(41)
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் (42)
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் (43)
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் (44)
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் (45)
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் (46)
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் (49)
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம் (50)
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம் (51)
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம் (52)
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் (53)
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் (54)
சேராத இடம் தனிலே சேர வேண்டாம் (57)
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் (58)
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் (59)
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்(60)
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் (61)
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம் (62)
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம் (65)
மனம் சலித்துச் சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம் (66)
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் (67)
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் (68)
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம் (69)
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம் (70)
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம் (73)
வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம் (74)
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம் (75)
தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்(76)
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் (77)
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் (78)
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம் (89)
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்(90)
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் (91)
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம் (92)
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் (93)
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம் (94)
மேற் கூறிய பாடல் வரிகளின் பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
(1) நூல்களை கற்காமல் ஒருபொழுதும் நீ வாளா இராதே
(2) யார் ஒருவர்க்கும் தீமை பயக்கும் சொற்களை சொல்லாதே
(3) பெற்ற தாயை ஒருபொழுதும் மறவாதே
(4) வஞ்சகச் செயல்களை செய்யுங் கயவர்களுடன் சேராதே
(5) செல்லத்தகாத இடத்திலே செல்லாதே
(6) ஒருவர் தன்முன்னின்றும் போன பின்னர் அவர் மீது புறங்கூறி அலையாதே
(9) மனதார பொய்யை சொல்லாதே
(10) நிலைபெறாத காரியத்தை நிலைநாட்டாதே
(11) நஞ்சுபோன்ற மக்களுடன் ஒரு பொழுதும் சேர்ந்து பழகாதே
(12) நல்லவரிடம் நட்பு கொள்ளாதவர்களுடன் நட்புக்கொள்ளாதே
(13) அஞ்சாமல் தன்னந்தனியான வழியில் செல்லாதே
(14) தன்னிடத்து வந்துஅடைந்தவரை ஒரு பொழுதும் கெடுக்காதே
(17) உள்ளமானது சென்றவாறெல்லாம் செல்லாதே
(18) பகைவனை உறவினன் என்று நம்பாதே
(19) பொருளை வருந்தித் தேடி உண்ணாமல் மண்ணிற் புதைக்காதே
(20) அறஞ் செய்தலை ஒரு பொழுதும் மறக்காதே
(21) சினம் தேடிக்கொண்டு அதனால் துன்பத்தினையும் தேடாதே
(22) வெகுண்டிருந்தாருடைய வாயில் வழியாக செல்லாதே
(25) ஒருவர் செய்த குற்றத்தை மாத்திரமே எடுத்துச்சொல்லி அலையாதே
(26) கொலையும் திருட்டும் செய்கின்ற தீயோருடன் நட்புச்செய்யாதே
(27) நூல்களைக் கற்றவரை ஒரு பொழுதும் பழிக்காதே
(28) கற்புடைய பெண்களை சேர்தற்கு நினையாதே
(29) எதிரேநின்று அரசனோடு மாறான சொற்களை பேசாதே
(30) கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்காதே
(33) மனையாளை வீட்டில் துன்பமுற வைத்து, அவளோடு கூடி வாழாமல் அலையாதே
(34) மனைவியின் மீது குற்றமான சொல் யாதொன்றும் சொல்லாதே
(35) விழத்தகாத பெரும் பள்ளத்தில் வீழ்ந்துவிடாதே
(36) கொடிய போரில் புறமுதுகு காட்டி திரும்பிவாராதே
(37) கீழான நடவடிக்கை கொண்டோருடன் சேராதே
(38) எளியோரின் மீது தீங்கு சொல்லாதே
(41) பயனில்லா சொற்கள் கூறுவாருடைய வாயைப் பார்த்துக் கொண்டு அவரோடு கூட அலையாதே
(42) நம்மை மதிக்காதவருடைய தலைவாயிலில் அடியெடுத்து வைக்காதே
(43) தாய், தந்தை, தமையன், ஆசான், அறிவிற்பெரியோர் அறிவுரைகளை மறக்காதே
(44) முன்கோபமுடையாருடன் சேராதே
(45) கல்வி கற்பித்த ஆசிரியருடைய சம்பளத்தை கொடுக்காமல் வைத்துக்கொள்ளாதே
(46) வழிப்பறி செய்து திரிந்து கொண்டிருப்பவருடன் சேராதே
(49) செய்யத்தக்க காரியங்களை, அவற்றை செய்யும்வழியை ஆராயாமல் முடிக்க முயலாதே
(50) பொய்க்கணக்கை ஒருபொழுதும் பேசாதே
(51) போர் செய்வாருடைய போர் நடக்கும் இடத்தின்கண் போகாதே
(52) பொதுவான இடத்தை ஒரு பொழுதும் ஆக்கிரமிக்காதே
(53) இரு மனைவியரை ஒருபொழுது தேடிக் கொள்ளாதே
(54) எளியாரை பகைத்துக் கொள்ளாதே
(57) சேரத்தகாத இடங்களில் சேராதே
(58) ஒருவர் செய்த உதவியை ஒருபொழுதும் மறக்காதே
(59) ஊரெல்லாம் திரியும் கோள் சொல்பவராக இருக்காதே
(60) உறவினரை இகழ்வாகப் பேசாதே
(61) புகழ் அடைதற்கு உதவும் செயலை செய்யாது விலக்காதே
(62) ஒருவருடைய அடிமையைப் போல அவருடன் துணையாக அலையாதே
(65) ஒரு நிலத்தில் நின்று அந்த மண்ணைப்பற்றி ஒருதலைச் சார்பாகப் பேசாதே
(66) உள்ளம் சலித்து யாருடனும் சண்டையிட்டு அலையாதே
(67) இரக்கமில்லாது பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாதே
(68) கண்ணால் காணாதவற்றைப் பற்றிக் கட்டுக்கதைகள் சொல்லாதே
(69) கேட்போர் மனதைப் புண்படும் சொற்களை சொல்லாதே
(70) புறம் சொல்லி அலைபவருடன் சேராதே
(73) வீரமொழி கூறி சண்டைக்காக அலைபவருடன் நட்புக்கொள்ளாதே
(74) வாதாடி ஒருவரை அழிக்கும் நோக்கில் கெடுவழக்கு சொல்லாதே
(75) வலிமைகூறி, கலகம் செய்து அலையாதே
(76) தெய்வத்தை ஒருபொழுதும் மறவாதே
(77) இறக்கநேரிடுமாயினும் கூட பொய்யை சொல்லாதே உண்மை
(78) இகழ்ச்சி செய்த உறவினரை விரும்பாதே
(89) ஒரு குடும்பத்தை பிரிவுபடுத்தி கெடுக்காதே
(90) பூவைத் தேடி கொண்டையின் மீது முடிக்கும் பகட்டையொத்த செயலைச் செய்யாதே
(91) பிறர்மீது பழி ஏற்படும்வகையில் அவர் வாழ்வில் தலையிட்டு அலையாதே
(92) தீயவர்களாகி ஊர்தோறும் அலைவருடன் சேராதே
(93) பெருமையுடையனவாகிய தெய்வங்களை இகழாதே
(94) மேன்மையுடைய பெரியோர்களை வெறுக்காதே
உலகநீதி பாடல் வரிகள், தான் கூறும் அறிவுரைகளை எதிர்மறையாகவே கூறிச் செல்கிறது. இம்முறையை புலவர் கையாண்டதை, அவர் சொல்லும் கருத்தை வலியுறுத்தும் முயற்சியாக, எச்சரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அறிவுரைகளாகக் கொள்ளலாம். இதை ஒட்டிய சுவையான தகவல் ஒன்றும் உண்டு. திரு அருட்பிரகாச வள்ளலார் இளமையில் கல்வி பயிலும்பொழுது “வேண்டாம், வேண்டாம்” என்று முடியும் இப்பாடல் வரிகளைக் கண்டு வியப்புற்றாராம். ஏன் அறநெறிகளை “வேண்டும், வேண்டும்” என்று எழுதலாகாது என்ற எண்ணம் கொண்டு “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்” என்ற பாடலை எழுதியதாகக் கூறப்படுகிறது.
உலகநீதி பாடலகளில் காணும் வெறும் 66 வரிகளே உள்ள அறநெறிப் பாடல் வரிகளை சிறுவயதில் பொருள் புரியாமல் மனனம் செய்தாலும்கூட, வளர்ந்த பின்னர் வாழ்நாள் முழுவதும் நல்வழிப்படுத்தும் கருத்துரைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது தெரிகிறது. எனவே அதன் அடிப்படையில் மனதில் எழும் கேள்வி; ஏனிந்த 66 வரிகளையும் ஆரம்பப்பள்ளி கல்வி நாட்களிலேயே சிறார் எண்ணத்தில் பதியுமாறு சொல்லி, கடைபிடிக்கும் அவசியத்தையும் வலியுறுத்தக் கூடாது என்பதே.
பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒரு திருக்குறள் கருத்துடன் இணைத்தும் கவிதை நயம் பாராட்டலாம், அத்துடன் மற்ற அறநெறி நூல்களின் பாடல்களும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவும் இயலாது. உலகநீதி பாடல் வரிகளை மேலும் பலகோணங்களிலும் ஆராய்ந்து இலக்கிய நயம் பாராட்டலாம்.
[தொடரும் …]
_________________________________________________________________________________
மேலும் தகவலுக்கு பார்க்க:
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகநாதர் இயற்றிய உலகநீதி”