ஐங்குறுநூறு எளிமையாக!
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிOct 29, 2022
ஐங்குறுநூறு 1 வேட்கைப் பத்தில் ஓரம்போகியார் எழுதிய பாடல். இவை மருதத் திணைக்குரியவை. மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் என்பதை அறிவோம். ஊடலும் ஊடல் நிமித்தமும் அதன் சூழல். தலைவன் பரத்தையரை கூடிவிட்டு பின்பு தலைவியிடம் வந்து தன்னை மன்னித்து விடும்படி கேட்கத் தலைவியும் மன்னிக்கின்றாள். தோழியிடம் தான் இல்லாத பொழுதில் தலைவியின் நிலை பற்றிக் கேட்க, தோழி கூறுவதாக அமைந்த பாடல்.
வாழி ஆதன்! வாழி அவினி!
நெல் பல பொலிக, பொன் பெரிது சிறக்க,
என வேட்டோளே யாயே, யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க,
பாணனும் வாழ்க, என வேட்டேமே.
இது போன்ற ஐங்குறுநூறு பாடல்களில் உள்ளுறை உவமம் பயின்று வரும். இந்தப் பாடலின் உள்ளுறை உவமம், பூவும் புலாலும் ஒன்றாக விளையும் ஊரன் என்றது குலமகளிரைப் போலப் பொது மகளிரையும் ஒப்புக் கொண்டொழுகுவான் என்பதாம் எனப் பழைய உரையில் காணப்படுகின்றது.
இந்தப் பாடலை எளிமையாகப் புரிந்து கொள்ள ஏதுவாக எனது கவிதை.
தலைவனவன் தலைவியை நீங்கித்
தடம்மாறிச் சென்றனன்
அது கேட்ட தலைவியும் புலம்பி
உளம்தனைத் தேற்றியே வாழலானாள்
நிழலின் அருமை
வெயிலில் உணர்வதுபோலே
தலைவியின் அருமை உணர்ந்து
அவள் வாயில்
வந்த தலைவனைத்
தலைவியின் தண்நிழல் உள்ளம்
ஏற்றுக் கொண்டே வாழ்த்தியது,
தான் இல்லா பொழுதில் தலைவி
துவண்டனளோ
தன்னை நினைந்து?
துன்புற்றனளோ தன்
நினைவால் என அறிய
வேண்டி தோழியிடம்
வினவ, அவளோ
ஊர் செழிப்புற
நெல் விளைய
மழையையும்
இரந்து வருவோர்க்கு
இல்லை எனச் செப்பிடாது
பொருள் தந்திடப்
பொன்னையும்
தலைவி வேண்டினள்;
நாங்களோ
மொட்டுகளை உடைய
காஞ்சி மரங்களையும்
சூல் கொண்ட சிறு
மீன்களையும்
கொண்ட
உன் ஊர்
செழிக்கட்டும் என்றே
வேண்டினோம்
புலாலும்
பூவும்
ஒரு சேர விளையாடும்
நிலத்தின் தலைவன் நீ,
எங்கள் எழிலாளையும்
பரத்தையரையும்
ஒரு சேர நினைப்பது
தகுமோ ? என எண்ணி
மனமது தளர்ந்து
வருந்தினாலும்
தலைவியின்
நட்பும் காதலும்
செழிக்கட்டும்
அன்பு செழிக்கட்டும்
தலைவன் ஊர் சேர்ந்த
பாணனும் வாழட்டுமென
வாழ்த்தி நின்றோம்!
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐங்குறுநூறு எளிமையாக!”