சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைக்கு அழகு

முனைவர் மு.பழனியப்பன்

Dec 31, 2022

siragu kavithai1
கலைகள் அழகானவை. அவை சாதாரண நிலையில் இருந்து கலைத்துவம் மிக்கதாக இருப்பதால் கலைகள் அழகானவை. மனதிற்கு அமைதியையும் அழகுணர்வையும் அளிப்பவை. கலைகள் உலகிற்குப் பொதுவானவை. எத்தனை கலைகள் இந்த உலகில். எழுதினால், பேசினால், வரைந்தால், செதுக்கினால், கட்டும் முறையில் கட்டினால், நடனம் ஆடினால், யோகம் செய்தால், பயிற்சி செய்தால், நடந்தால், ஓடினால், பாடினால், தாவினால், நடித்தால், இயங்கினால், நின்றால், அமைதியாக இருந்தால், முத்திரைகள் இட்டால், சமைத்தால், உண்டால், நடத்தினால், படித்தால், அழுதால், சிரித்தால், விழுந்தால், எழுந்தால் ….. இப்படி எத்தனை எத்தனை கலைகள்….. அறுபத்துநான்கையும் தாண்டி இன்னும் விரிகிறது கலைகளின் பட்டியல்

இக்கலைகளின் பட்டியலில் கவிதைக்குத் தனித்த இடம் உண்டு. கவிதை சொற்களின் சுருக்கம். கருத்தின் செறிவு. அறிவின் விளக்கம். அனுபவத்தின் வெளிப்பாடு. தேர்ந்த சொற்களால் தேர்ந்த பொருளை விளக்குவது. வெற்றுச் சொற்களுக்கு அங்கு இடமில்லை. இதனால் கவிதை மிகச் சிறந்த கலையாகிறது.

மனிதனின் தனித்துவமான கலைஅம்சமான சிந்தனை கவிதைக் கலையாகும். ஒரு கவிதையை உருவாக்குபவன் எவ்வகையில் சிறந்தவன் ஆகிறான். ஒரு கவிதையை ரசிப்பவன் எவ்வகையில் சிறந்தவன் ஆகிறான். ஒரு கவிதையை அதன் ஆழ்நிலையில் அனுபவிப்பன் எவ்வகையில் சிறந்தவன் ஆகிறான் என்று கேட்டால் அதற்கு உரிய பதில் ஒரு தனிப்பாடலில் கிடைக்கிறது.

    கவியாக மாதினைப் பெற்றோன் புலவன்
கற்றோன் அனையாம்
செவியாரக் கேட்டங்கு உணர்வான்
சகோதரன் செந்தமிழுக்கு
உதவியாய் அருமை அறிவான் பதி
அவன்தான் இல்லையேல்
புவியாகி மண்ணுக்குள் என் பலமாம்
கலை பூங்கொடிக்கே

கவிதையை எழுதும் புலவன் அக்கவிதைக்குத் தந்தை போன்றவன் ஆகிறான். அந்தக் கவிதையைக் கற்றவன் அன்னையாகிறான். அந்தக் கவிதையைச் செவியாரக் கேட்டு நிற்பவன் சகோதரன் ஆகிறான். இக்கவிதை சிறக்க உதவியாய் அதன் அருமையை உணர்ந்தவன் அக்கவிதைப் பெண்ணுக்குக் கணவன் போன்றமைகிறான். இத்தனைபேரும் இல்லையானால் கவிதை சிறக்காது. கலை சிறக்காது.

எனவே கலைக்குத் தந்தை உண்டு. கலைக்குத் தாய் உண்டு. கலைக்குச் சகோதரன் உண்டு. கலைக்குக் கணவன் உண்டு. பெண்ணைப் பெற்றவன் அப்பெண்ணைப் பேணி வளர்த்திடல் வேண்டும். கலைக்குத் தாய் உண்டு. அவள் பெண்ணின் மனம் அறிந்து வளர்க்க வேண்டும். பெண்ணைத் தக்க துணையாக இருந்து மணமாகும் வரை காத்து நிற்பவன் சகோதரன். செவியாறக் கவிதை கேட்போன் சகோதரன் ஆகிறான். கணவன் என்பவன் திருமணத்திற்குப் பின் பெண்ணுக்குத் தக்க மதிப்பளித்து உதவிகள் செய்து அவளின் அருமையைப் பேணிக்காத்திடுபவன் கணவன் ஆகிறான். கவிதையோடு ஒன்று கலந்து வாழ்பவன் கணவன் ஆகிறான். இவ்வகையில் கவிதையைப் பெண்ணாய்க் கண்டு மகிழ்கிறது இந்தத் தனிப்பாடல்.

வாராய்!கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,
நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள,யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து
எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்

என்று பாரதியாரும் கவிதையைக் காதலியாய் காண்கிறார். கவிதைப் பெண்ணாளுடள் அவர் கலந்து வாழ்ந்ததைத் தன் கவிதைக்குள் புனைகிறார்.

கவிதை என்பது கலைகளில் மகுடம் போன்றது. கவிஞனின் மனம் புதுமையைச் சுவைக்கிறது. புதுமைப் பண்பினை எடுத்துரைக்கிறது. பழமை விதையில் விளைந்த புதிய செடியாக கவிதை வளர்ந்து நிற்கிறது.

இன்பத் தமிழின் சுவையே அமுதம்
எழில்சேர் கலையின் வடிவே அமுதம்
அன்புப் பணியால் மலரும் கண்கள்
அழகாய் வீசும் ஒளியே அமுதம்
துன்பந் தீர்க்கத் துணிவாய் நீளும்
தூய்மைக் கையின் தீண்டல் அமுதம்
நன்பும் மகிழ்வும் எங்கும் பொங்க
நன்றே நாடும் இதயம் அமுதம்!

பெரியசாமி தூரன் எழுதிய அமுதக் கவிதை இது. இன்பத்தமிழ் அமுதம். கலை வடிவம் அமுதம். அன்பு ஒளி வீசும் கண்கள் அமுதம். தூய்மைக் கையின் தீண்டல் அமுதம். நட்பும், மகிழ்வும் பொங்க நன்றே நாடும் இதயம் அமுதம் என்று அமுத ஊற்றுகளை முன்வைக்கிறது பெரியசாமி தூரனின் கவிதை.

அன்பொளியும், ஆறுதல் கரமும் அளிப்பது கவிதைக் கலை. கவிதைகளை வாசிப்போம். நேசிப்போம். கவிதைகளின் சகோதரனாக வாழ்வோம்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைக்கு அழகு”

அதிகம் படித்தது