மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காலம் இப்படியே போகாது… (சிறுகதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 7, 2019

siragu kuruttaattam1
“என்ன தாயி ஒரு மாதிரி இருக்க? ஒடம்பு ஏதும் சரியில்லையா?”

“அதெல்லாம் இல்லம்மா, நான் இஸ்கூலுக்கு போயிட்டு வரேன்”

“சரிம்மா”

மருதாயி ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளின் தாய் அஞ்சுகம் வீட்டு வேலை செய்து தான் அவர்கள் பொழப்பு ஓடுகின்றது. அஞ்சுகத்தின் கணவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். ஏதோ கொஞ்சம் பணம் வரும். மருதாயி அவர்களுக்கு ஒரே மகள். எப்படியும் அவளை உசந்த படிப்பு படிக்க வச்சிரணும்னு இருவருமே வாயை கட்டி வயித்தை கட்டி உழைத்தார்கள்.

அஞ்சுகத்திற்கு ரெண்டு நாளாக காய்ச்சல், வீட்டில் ஒரு சமையலும் செய்ய முடியவில்லை. எப்படியும் இன்னைக்கு புள்ளைக்கு எதாவது செஞ்சு கொடுக்கணும் என்று நினைத்துக் கொண்டே கடை வீதிக்கு தளர்வாக நடந்து வந்தாள். .

“இந்தா அஞ்சுகம், உம் பொண்ணு வந்தா ஒரு எட்டு வீட்டுக்கு வந்துட்டு போகச் சொல்லு”, என்று மீனாட்சி மாமி கூறினாள்.

“எதுக்கு மாமி?”

“அட, நீ தான் ரெண்டு நாளா ஒடம்புக்கு முடியலன்னு வேலைக்கு வரல, வீட்ல போட்டது போட்டபடி இருக்குது, உம் பொண்ண அனுப்பினா எனக்கு ஒத்தாசையா இருக்கும் பாரு”.

“இல்ல மாமி, அவ படிக்கணும், நானே சாயங்காலம் வந்துட்றேன்”

“ஏதோ பண்ணித் தொலை”

தெம்பை எல்லாம் ஒன்று கூட்டி ரசம் வைத்து, கத்திரிக்காய் வதக்கல் செய்து கொஞ்சமாக சோறு பொங்கியிருந்தாள்.

“அம்மா, நாளையில இருந்து ஸ்பெசல் கிளாஸ் இருக்கு”

“எதுக்குமா?”

siragu kaalam sirugadhai1

“அதுவாமா, இந்த வருசத்துல இருந்து 5 ஆம் வகுப்புக்கு, 8 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வாம், அதுல மார்க் எடுத்து பாஸ் பண்ணினா தான் ஆறாப்பு போக முடியும்னு வாத்தியார் சொன்னாருமா” என்றாள் ரசத்தை தட்டில் ஊற்றி குடித்தவாறே.

“நீ சாப்டியாமா?”

“இல்லடா, அந்த மீனாட்சி மாமி வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்”

“உனக்கு தான் காய்ச்சலா இருக்குல்ல”

“பரவாயில்ல தங்கம், நீ படி”

“அம்மா, வரும்போது ஒரு பேனாவும், நோட்டும் வாங்கியாறியா?”

“சரிடா”

“மாமி ஒரு 50ரூ இருந்தா கொடுங்களேன்”

“ஏண்டி,எப்ப பாரு சம்பளத்துக்கு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா வங்கிட்ற?” என்றாள்.

“இல்ல மாமி எம்பொண்ணு பேனாவும், நோட்டும் கேட்டா”

“ஆமா, அது ஒண்ணு தான் இப்ப கொறச்சலாக்கும், மாசம் பொறந்தவுடனே சம்பளம் தரேன், அவ்ளோதான்”

அஞ்சுகம் வாடிய முகத்துடன் வெளி நடக்கும் போது மாமியின் குரல் கேட்டது.

“பாத்தேளா, அபிஷ்ட்டுகளா, வேலைக்காரி பொண்ணு படிக்க நோட்டு, பேனா கேக்குறா, நீங்க இங்க படிக்காம விளையாடிண்டு இருக்கேள், இந்த வருசம் பொதுத்தேர்வு வருதோ இல்லையோ, படிச்சு தொலையுங்களேன்”

“அதெல்லாம் பாத்துக்கலாம்மா, இப்ப தான் நம்மவா மீண்டும் கோலோச்சுறானு நீதான அன்னிக்கு சொன்ன?”

“அதிலென்ன சந்தேகம், நம்மவாள யாரும் ஒன்னும் செய்ய முடியாது. நாம தலையில பொறந்தவா, அறிவு நமக்கு நிறைய பகவான் கொடுத்திருக்கான், சரி சரி படிங்கோ”

“அம்மா நோட்டு, பேனா வாங்கினியா?”

“இல்லடா தங்கம், கொஞ்சம் பொறுத்துக்க, அப்பா வந்ததும் வாங்கித்தரச் சொல்றேன்”

“ஏய், அஞ்சுகம், இங்க வாடி, உன் புருசன் கைய வெட்டிட்டாங்க” என்ற பக்கத்து வீடு சாந்தி குரல் கேட்டு, ஐயோ என அலறிக்கொண்டு ஓடினாள்.

“ஒரு மாசமா வேலை வாங்கிட்டு காசு கொடுக்காம ஏமாத்துறியேனு கேட்டேன்”

“ஏன்டா, ஈன சாதி பயலே, எங்கிட்டேயே எதிர்த்து கை நீட்டி பேசரியானு….” குரல் தழுதழுத்தது மாரிக்கு

இனி எப்படி இந்த ஒத்த கையில வீட்டுக்கு ஒழைக்க போறோம்ன்னு அவனுக்குத் தோன்றியது.

“அஞ்சுகம், போலீஸ்காரனுவ கைய வெட்டினவன் சாதி, அதனால் கேச பதிய மாட்றானுங்க”

siragu saadhi1“அய்யோ”

அஞ்சுகத்திற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. காவல் நிலையத்தில் இருந்து வெளி வந்து இரண்டு தெரு தள்ளி வந்திருப்பாள், இ ல ….வ்வ்…ச… சடீ .. சே ட் ட … உ…தா…வீ மய்யம், எழுத்து கூட்டி எப்படியோ படித்து புரிந்து கொண்டு உள்ளே போனாள்.

“வாங்கம்மா உக்காருங்க” என்றான் அந்த இளம் வயது கறுப்புச் சட்டைக்காரன்.

“தம்பி, எங்க வூட்டுக்காரர் கைய வெட்டிப்புட்டு கேச பதிய மாட்றானுங்க, கேட்டா சாதிய சொல்லி திட்றானுவ”

“அட, நாங்க பாத்துக்கறோம், இதோ இந்த நீல சட்ட போட்டு வாராருல்ல அவரு வக்கீலு”

“ஆமா அக்கா, நீங்க கவல படாமா போங்க கேச நாங்க எடுக்க வைக்கிறோம்”

“சரிப்பா, வரேன்”

“தம்பி வந்து…”

“சொல்லுக்கா”

“இல்ல இங்க இருந்து ஒரு பேனா எடுத்துக்கவா? எம்பொண்ணுக்கு பொதுத் தேர்வு வருதாம், அஞ்சாப்பு படிக்கிறா”

“அதுக்கு என்னக்கா எடுத்துக்கோ…”

“அக்கா நாங்க சாயங்காலத்துல பசங்களுக்கு படிப்பு சொல்லித்தரோம்”

“பாப்பாவ அனுப்புங்க, பாடம் சொல்லித் தந்து அஞ்சாப்பு தேற வச்சிடறோம்”

“பாப்பா நல்லா படிப்பா தம்பி”

“என்னமோ நமக்குத்தான் படிக்க கொடுத்து வைக்கல”

“கொடுத்து எல்லாம் வச்சிருக்கு, கொடுத்ததை கெடுக்கிற கூட்டம் தான் பிரச்சனை”

“என்னமோ தம்பி, பத்து வயசு குழந்தைக்கு ஸ்பெஷல் கிளாஸ் அது இதுனு வைக்கறாங்க, நமக்கு எங்க புரியுது?

“அக்கா, நமக்கு புரியாம இருக்கிறதால தான் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைக்கறாங்க, அத புரிய வைக்கத்தானே எங்கள போல படிப்பு வட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலேயும் இயங்கறோம்”

“ம்ம்ம்”

“நீங்க கவல படாம போங்க, காலம் இப்படியே போகாது…”

“அஞ்சுகம், உம் புருசன் கைய வெட்டினவன கைது பண்ணிட்டாங்களாம்”

“வன்கொடுமை தடுப்பு சட்டத்துல கைது பண்ணிருக்காங்கனு, டீவில சொல்றாங்க”

“ரொம்ப நன்றி, தம்பி”

“பாத்துக்கலாம் அக்கா, உங்க கணவருக்கு கிடைக்க வேண்டிய நீதி, கிடைக்கும்”

“ஏண்டி அஞ்சுகம் உம் பொண்ணு எங்க போறா?”

“கறுநீல படிப்பு வட்டத்துல படிப்பு சொல்லித்தராங்களாம் மாமி, அங்க தான் போறா”

கண்றாவிகள், என்ன பண்ணாலும் இதுங்க ஆட்டத்த நிறுத்த முடியல என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மீனாட்சி மாமி.

“கோடு போட்டா கொன்னு போடு

வேலி போட்டா வெட்டி போடு

நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.!!!

siragu thavarilaikkakoodaadhavai1


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காலம் இப்படியே போகாது… (சிறுகதை)”

அதிகம் படித்தது