மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள்

தேமொழி

Aug 7, 2021

siragu kilikkanni book

கிளிக்கண்ணி சுவாமிகள் என அறியப்படும் சுப்பராய சுவாமிகள் (1825 – ஜூலை 31,1871) மறைந்து இந்த ஆண்டோடு 150 ஆண்டுகள் நிறைவுறுகிறது. இவர் கிளிக்கண்ணிகள் என்ற பாடல் வகையினால் 19 ஆம் நூற்றாண்டின் தமிழிசையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர். பாடல் வரிகளை ‌கண்ணிகளாக அமைக்கும் மரபு 14ஆம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்த சைவ ஆசாரியரான காழிச் சிற்றம்பல நாடி சுவாமிகளுடன்‌ தொடங்குகிறது. காழிச் சிற்றம்பல நாடி அவர் பாடல்களை ஈரடிகளையுடைய கண்ணிகளாகவே பாடி, அவற்றில்‌ தத்துவப்பொருளை உணர்த்தும்‌ வகையில் அமைத்தார். அவருக்குப் பின்னர் கண்ணிகள் அமைத்துப் பாடும் மரபு தொடர்ந்துள்ளது. இது போன்ற கண்ணிகள் கிளியை விளிக்கும் வகையில் அமைந்தால் அவை கிளிக்கண்ணிகள் என்று பெயர் பெற்றன.

கண்ணி:

   வந்து முத்‌தாடுவான்‌ வண்ணங்கள்‌ பாடுவான்‌

   குந்திமுகந் துடைப்பான்‌ – கந்தன்‌

   குத்திரத்தை என்ன சொல்ல

     -புரசை சபாபதி முதலியார்‌

பாடலில் சொற்கள் அமைப்பு:

X .. X .. X .. X

X .. X – X

X .. X .. X

கிளிக்கண்ணி:

   நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி

   வஞ்சனை சொல்வாரடீ – கிளியே!

   வாய்ச் சொல்லில் வீரரடி

     – பாரதியார் பாடல்

பாடலில் சொற்கள் அமைப்பு:

X .. X .. X .. X

X .. X – Y (Y = கிளியே)

X .. X .. X

அடி எதுகை, தனிச்சொல்‌ கொண்டது கண்ணி பாடலின் அமைப்பு. அதில் இரண்டாம் அடியின் தனிச்சொல்லானது ‘கிளியே’ என மாறுவது கிளிக்கண்ணியின் சிறப்பு. இறுதி வரியில் மூன்று சொற்களுக்குப் பதில் இரண்டும் இருப்பதுண்டு. கண்ணிகள் கொண்டு அமைந்த பாடல்களில் கண்ணி ஒன்றின் அடிகளின் எண்ணிக்கையும் அமைப்பும், பாடல்களின் எண்ணிக்கையும் மாறுபடுவது வழக்கமே. பாடலின் முதல் இரு அடிகளின் எதுகை அமைப்பைக் கருத்தில் கொள்ளாது பாடல்களை நான்கு அடிகள் கொண்ட பாடலாக கீழ்க்கண்ட வடிவில் எழுதும் முறையும் வழக்கத்தில் உள்ளது.

பாடலில் சொற்கள் அமைப்பு:

X .. X

X .. X

X .. X – Y (Y = கிளியே)

X .. X

   வள்ளிகணவன் பேரை

   வழிப்போக்கர்‌ சொன்னாலும்‌

   உள்ளங் குழையுதடி – கிளியே

   ஊனும் உருகுதடி

     – கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள்‌

சுப்பராய சுவாமிகள் போன்றே, இவரின் சமகாலற்றவரான ஆறுமுக சுவாமிகள்‌ (1827-1882) கிளிக்கண்ணி பாடல்கள் எழுதியுள்ளார். அவை சுப்பராய சுவாமிகள் கிளிக்கண்ணி சாயலில் இருப்பினும், கட்டமைப்பில் சற்றே மாறுபட்டவை. எடுத்துக்காட்டாக கீழே ஆறுமுக சுவாமிகள் எழுதிய கிளிக்கண்ணி பாடல்கள் இரண்டு கொடுக்கப்பட்டுள்ளன.

   பள்ளம்‌ புகும்‌ புனல்போல்‌ – கிளியே

   நாம்‌ பரமன்‌ சரண்‌ புகுந்தால்‌

   உள்ளம்‌ குளிருமடி – கிளியே

   ஓயும்‌ நம்‌ அல்லலடி

   சிற்பரம்‌ நாம்‌ உணர்ந்தால்‌ – கிளியே

   செய்வினை யாதுமில்லை

   பிற்பேறு பயனுமில்லை – கிளியே

   பெறுவானும்‌ பேறுமில்லை

சொல்ல வல்லாயோ, கிளியே:

சங்கப்பாடல்கள் காலம் தொட்டே தலைவனைக் காண விரும்பும் பெண்கள் தங்கள் விருப்பத்தை அவர்களின் கிளியிடம் ஒரு மனக்குறையாக சொல்வதாகவோ, அல்லது தலைவனிடம் தூது சென்று வா கிளியே வேண்டுவதாகவோ வெளிப்படுத்தும் பாடல்கள் உள்ளன.

   கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி

   அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு

   நின் குறை முடித்த பின்றை என் குறை

   செய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல்

   பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு

   நின் கிளை மருங்கின் சேறி ஆயின்

   அம் மலை கிழவோற்கு உரைமதி இம் மலைக்

   கானக் குறவர் மட மகள்

   ஏனல் காவல் ஆயினள் எனவே.

     (நற்றிணை 102, செம்பியனார், குறிஞ்சித் திணை – தலைவி கிளியிடம் சொன்னது)

பின்னர் பக்தி இலக்கியக் காலம் தொட்டு இறைவனைத் தங்கள் காதலானாகப் பாவித்துக் கொண்டும், தலைவனைச் சேர விரும்பும் பெண்ணாகத் தன்னை பாவித்துக் கொண்டும் கிளியிடம் செய்தி சொல்வதாகப் புலவர்கள் பாடுவதாக இம்முறை தொடர்ந்து வந்தது.

“என் பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீ அலை”(நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 2939, தலைவி சொன்னது)

“சிறையாரும் மடக்கிளியே இங்கேவா” (திருஞானசம்பந்தர், முதல் திருமுறை : திருத்தோணிபுரம் : 1.0)

“மல்லார் தோள் வடவேங்கடவன் வர சொல்லாய் பைங்கிளியே!” (திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1946, தலைவி சொன்னது)

மாணிக்கவாசகர் கிளி கூறும் முறையில் இயற்றியது ‘கிள்ளைப் பத்து’ பாடல்களான திருத்தசாங்கம் பதிகம்.

காலத்தால் பிற்பட்ட சிற்றிலக்கியங்கள் வரை கிள்ளை விடு தூது என்று இம்முறை தொடர்ந்தது. பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை எழுதிய ‘அழகர் கிள்ளை விடு தூது’ இலக்கியம் அதற்குச் சான்றாக விளங்குகிறது. பிறகும், கிளியிடம் உரையாடும் முறை தொடர்ந்ததில் பிற்காலத்துத் தமிழிசைக்கும் இலக்கியத்திற்கும் சிறப்பு சேர்த்தவையாக கிளிக்கண்ணி பாடல்கள் உருவெடுத்தன.

siragu kilikkanni chart

கிளிக்கண்ணிகள்:

இசை என்ற கலை தெலுங்கு மொழியின் கட்டுப்பாட்டில் சிக்கி மேடைகளில் பரவலாக தெலுங்குப் பாடல்களே பாடப்பட்ட காலத்தில், இசையில் நாட்டம் கொண்ட தமிழ் ஆர்வலர்களுக்காகப் புதிய இசை வடிவங்கள் தோன்றின. ‘காவடிச்சிந்து’ பாடல்களை எழுதிய சென்னிகுளம்‌ அண்ணாமலை ரெட்டியார் பாடல்களும், ‘கிளிக்கண்ணி’ பாடல்களை எழுதிய‌ சுப்பராய சுவாமிகள் பாடல்களும் பண்டிதர் பாமரர் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஈர்த்ததற்குப் பாடலின் எளிமையும் காரணமாக அமைந்தது. சித்தர்‌ பாடல்களும் அவ்வாறே மக்கள்‌ விரும்பிக்கேட்கும்‌ பாடல்களாக மாறின. சித்தர்‌ பாடல்களே காவடிச்சிந்துக்கும்‌, கிளிக்கண்ணிப்‌ பாடல்களுக்கும்‌, பின்னால்‌ பாரதியாரின்‌ பாடல்களுக்கும்‌ பெருந்தூண்டுதலாக அமைந்தன என்று குறிப்பிடுகிறது தமிழ் இசை இலக்கிய வரலாறு நூல். புதுவகை தமிழிசைப் பாடல்களின் வருகையால், தெலுங்கு கீர்த்தனை இசைநிகழ்ச்சிகளில் தமிழார்வலர்கள் வருகை குறையத் தொடங்கிய பொழுது ‘துக்கடா’ என்று கூறி இது போன்ற பாடல்களையும் இசைப் பண்டிதர்கள் தம் மேடை நிகழ்ச்சியில் இணைத்துக் கொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டது.

தாயுமானவடிகள் (1705 – 1742) பல கண்ணிகள் கொண்ட பாடல்களை இயற்றியுள்ளார்.

“அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்

சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே”

என்று தொடங்கும் 58 கண்ணிகள் கொண்ட பைங்கிளிக்கண்ணி என்பதும் அவற்றில் ஒன்று. இவை மெய்ப்பொருள் விளக்கும் கண்ணிகள்.

மதுரை மீனாட்சியம்மாள்‌ என்பவரும் 1850 ஆண்டுகள் கால வாக்கில்;

“ஆதி சிதம்பரத்தைக்‌ – கிளியே

ஆடிவணங்கிக்‌ கொண்டு

சோதி இலக்கணத்தைக்‌ – கிளியே

சொல்லுகிறேன்‌ உனக்கு”

என்று 40 கண்ணிகளில் வேதாந்த தத்துவப்பொருள் உடைய கிளிக்கண்ணிகளை இயற்றியுள்ளார்.

இருப்பினும், அதே 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்த திரு. சற்குரு சுப்பராய சுவாமிகள் (1825 – 1871) என்பவர்தான் கிளிக்கண்ணி சுவாமிகள் என்றே அறியப்படுகிறார். இவர் திருநெல்வேலி, அம்பா சமுத்திரம் அருகேயுள்ள கோடரங்குளம் என்ற சிற்றூரில் வாழ்ந்தவர். இவர் ஆற்றிய பணியின் அடிப்படையில் ‘ஏட்டய்யா என்னும்‌ சுப்பராய சுவாமிகள்’ என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது தந்தையார் ‘கொத்தவால்’ என்ற பணிபுரிந்தவர். சிறுவன் சுப்பராயன் தனது இளமைப் பருவத்திலேயே முருக பக்தராய் விளங்கியவர், 24 ஆம் வயதில் ஞானக் கல்வி பெற்று, 28 வயதில் துறவறம் மேற்கொண்டவர். தனது சீடர்கள் மூலம் ஆன்மீகக் கல்வி பரப்பி வந்தார்.

இதை அவர் தான் எழுதிய கிளிக்கண்ணி பாடலில் இதைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது

   அறுநான்கில் கல்வி பெற்றேன் அப்படியப்படித்தான்

   எழுநான் காமாண்டிலே – கிளியே

   என்னை அறிந்தேனடி (கிளிக்கண்ணி – 74)

சுப்பராய சுவாமிகள் தமது 46 ஆம் வயதில், 1871 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாளன்று மறைந்தார். அவர் மறைந்த நாளை ஒட்டி, ஆடித் திங்கள் முழுநிலவு நாளன்று, உத்திராடம் ஓரையில் ஆண்டு தோறும் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி குருபூஜையாக அவரது உறவுகளால் செய்யப்படுகிறது.

இவர் இயற்றிய பாடல்கள் பல, 1. திருப்பரங்குன்றப் பதிகம், 2. திரு ஆசிரியவிருத்தம், 3. குருபராபரணம், 4. குமரபோதம், 5. குகானந்தலகிரி, 6. திருச்செந்தூர் பதிகம், 7. கழுகுமலைப் பதிகம், 8. கிளிக்கண்ணி, 9. கழுதைக் கண்ணி, 10. பூரணக் கண்ணி, 11. ஆனந்தக்களிப்பு, 12. மிருதுபாஷ்யம், 13. பருவதவிலாசக் கோவை, 14. பிள்ளைத்தமிழ், 15. மருதுறைப்பதிகம், 16. வேலாயுதக்கண்ணி, 17. இலாவணிகள், 18. கீர்த்தனைகள், 19. தனிப்பாடல்கள் எனப் பல பாடல்கள் எழுதியுள்ளார்.

சுப்பராய சுவாமிகள் எழுதிய பாடல் தொகுப்புகள் அச்சு நூல் வடிவம் பெற்றதில்லை. கடுக்காய் மையினால் எழுதப்பட்டு, சிதிலமடைந்து அவரது கையெழுத்துப் படிகள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தன. சுப்பராய சுவாமி அவர்களின் மகனார் திரு. ஆழ்வார்சுவாமி, பேத்தி திருமதி ஜானகி நல்லையா, கொள்ளுப்பேரன் திரு. ந. காளிதாசன், எள்ளுப்பேத்தி திருமதி ரேவதி கணபதி என அவரது நான்கு தலைமுறை கொடிவழி உறவுகளின் பெரு முயற்சியால் அவரது எழுத்துக்கள் தேடி எடுக்கப்பட்டு, கையெழுத்துப்படிகள் உருவாக்கப்பட்டது. இன்று அதற்கடுத்த பேரப் பிள்ளைகள் தலைமுறையினரால் வலையேற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது சுப்பராய சுவாமிகளின் பாடல்களுக்காக அவரது உறவுகளால் உருவாக்கப்பட்ட இணைய தளம். இருப்பினும், கிளிக்கண்ணிகள் பாடல் மட்டும் ‘வேதாந்தக்‌ கிளிக்கண்ணி’ என்ற பெயரில்‌ அவருடைய மகனாரின் (பூ. சு. மாரியப்ப சாமிகள்) ‌விருப்பப்படி மதுரையில்‌ நூலாக அச்சிடப்பட்டது என தமிழ்‌ இசை இலக்கிய வரலாறு நூல் குறிப்பிடுகிறது. அந்த வேதாந்தக்‌ கிளிக்கண்ணி நூலும் தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத் தொகுப்பில் உள்ளது. பின்னரும் மலிவுவிலைப் பதிப்பாக மேலும் பல கிளிக்கண்ணி பதிப்புகளும் வெளிவந்துள்ளன. சுப்பராய சுவாமிகள் மறைந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்ட படியால் காப்புரிமை சட்டப்படி அவரது எழுத்துக்கள் பொதுவெளியில் மக்கள் பயன்பாட்டில் இருக்கவேண்டியவை. இருப்பினும் கொடிவழி உறவுகள் காப்புரிமை கோருகிறார்கள்.

சுப்பராய சுவாமிகள் இயற்றிய பாடல்களில் அவர் இயற்றிய கிளிக்கண்ணி பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை, அவை இன்றும் பாடலாகவும் ஆடலாகவும் நிகழ்த்தப்படுகின்றன. இவரது கிளிக்கண்ணி பாடல்களின் எண்ணிக்கை 102. பாடகர் ஸ்ரீமதி ஐயம்மாள்‌ பாட, அவருடைய மகளும்‌ தனம்மாள்‌ அவர்களின் பேத்தியுமான பாலசரஸ்வதி அபிநயம்‌ செய்து நாட்டியமாட 1935 – 1940 ஆண்டுகள் காலகட்டத்தில் இப்பாடல்கள் புகழ் பெற்றன. இப்பாடல்களை இசை ஆர்வலர்களிடம் கொண்டு சென்றதில் சிறந்த இசைவாணர்களாக விளங்கிய ‌’கந்தர்வகான கிட்டப்பா’ என்று பாராட்டப்பட்ட எஸ். ஜி. கிட்டப்பா அவர்களுக்கும் அவரது துணைவியார் கே. பி. சுந்தராம்பாள் அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பெரும்பாலும் கிளிக்கண்ணி பாடல்கள் ‘காவடி சிந்து’, ‘கிளிக்கண்ணி’ வர்ணமெட்டுகளிலும்செஞ்சுருட்டி ராகத்தில், ஆதி தாளத்தில் பாடப்படுகிறது.

சுப்பராய சுவாமிகள் இயற்றிய வேதாந்தக்‌ கிளிக்கண்ணி பாடல்கள்:

இவை திருச்செந்தூர் முருகன் மீது பாடப்பட்டவை;

   ஐந்துகரனுக்கிளைய ஆறுமுகவேலவனைச்

   செந்திற்குகந்தவனைக் கிளியே

   சேரமனந் தேடுதடி (1)

என்ற பாடலுடன் கிளிக்கண்ணி பாடல்கள் துவங்கி,

   மாமயிலோன் வாழ்க நாம் வருந்தாதுவகைதந்த

   நீமனமே வாழ்ந்திருப்பாய் கிளியே

   நீடூழிகாலம்வரை (102)

என்று பாடலுடன் முடிவடைகிறது.

இந்த 102 கிளிக்கண்ணி பாடல்களில் மிகவும் புகழ் பெற்றது, 14 ஆவது கிளிக்கண்ணியாகும்.

   வள்ளி கணவன்பேரை வழிப்போக்கர் சொன்னாலும்

   உள்ளங் குழையுதடி – கிளியே

   ஊனு முருகுதடி (14)

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் தேர்வு செய்யப்பட்ட சில கிளிக்கண்ணிகள் மட்டுமே நிகழ்த்திக் காட்டப்படுகிறது. வள்ளி கணவன்பேரை வழிப்போக்கர் சொன்னாலும் என்ற 14 ஆவது கிளிக்கண்ணியை முதலாவதாகக் கொண்டு, கலைஞர்களின் தேர்வுக்கு ஏற்ப மேலும் இரண்டு மூன்று கிளிக்கண்ணிகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பாடல் விவரம் அறியாதவர் வள்ளிக் கணவன் கிளிக்கண்ணியை பல்லவி என்றும், மற்றும் ஒரு கிளிக்கண்ணியை அனுபல்லவி என்றும், மேலும் இரு கிளிக்கண்ணிகளை சரணம் என்றும் கூறி இணைத்துக் கொண்டு 4 கிளிக்கண்ணிகள் கொண்ட ஒரு கோர்வையாக இப்பாடல்கள் இன்று பரவிய நிலையில் பரவியுள்ளது. பெரும்பாலோர் அதுவே முழுப் பாடல் என்று கூறும் நிலையும் உள்ளது.

‘அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது நீயும் அறிதி குயிலே!’ (நாச்சியார் திருமொழி -45 பாசுரம் 548) என்று ஆண்டாள் குயிலிடம் கூறுவது போல, காதலனின் பிரிவுத்துயர் குறித்துக் காதலி பாடுவதுதான் பாடலின் கருப்பொருள். காதலன், வள்ளியின் கணவனாகிய முருகன். இது போன்ற முருகனின் மீது காதல் கொண்ட நாட்டியப்பாடல்களை ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்’ (கவிஞர் வாலி, பஞ்சவர்ணக்கிளி – 1965), ‘வரச் சொல்லடி அவனை வரச்சொல்லடி அந்தி மாலைதனில்’ (கவிஞர் கண்ணதாசன், பாதுகாப்பு-1970) திரையிசையிலும் காணலாம். ஆண்டாள் முன்னரே மணமான மாலவனை நினைத்து உருகிப் பாடுவது போல, வள்ளியின் கணவனை நினைத்து, பிறன்மனை நோக்கும் பாடல்கள் வரிசையில் இவை இடம் பிடிக்கின்றன. ஆனால் இவற்றை வேதாந்த விளக்கம் என்று சொல்லிவிடுகின்றனர்.

வள்ளிக்கணவன் முருகனை தனது கணவனான கொண்டு கூடிக்குலாவி வாழ்ந்த, வெகுநாளைச் சொந்தமான அவனை சேரமனந் தேடுதடி என்று பெண் ஒருத்தி உருகுவதே பாடலின் மையக் கருத்து. அவள் தன் மனதைக் கிளியாக, ஒரு தோழி போல உருவகப்படுத்தி தன் குறையை அதனிடம் முறையிடுகிறாள் (தனிமையில் தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள் என்ற பொருள் வருகிறது). வேதாந்தக் கிளிக்கண்ணி பாடலின் 102 கிளிக்கண்ணிகளின் கருத்துகள் அனைத்தையும் தொகுத்தால் அந்தக் காதலி பாடுவது இவ்வாறாக அமையும்:

உண்டால் கிறுகிறுக்கவைக்கும் கள், ஆனால் கண்டாலே கிறுகிறுக்கவைக்கும் என் கட்டழகன் பேருருவம். என் உள்ளங் குழைகிறது, என் ஊன் உருகுகிறது. அந்தக் கன்னல் மதுரமொழிக் கட்டழகன் என்ன பொடி போட்டானோ தெரியவில்லை என் நெஞ்சம் கரைந்தது, பாலுங்கசந்தது, பசலையும் பூத்தது. எனது காமம் ஒரு கொடுந்துயர். பித்துப் பிடித்தவள் ஆனேன் நான். மானம்பறி போனது, மற்றவரின் ஏச்சுக்கு இடமானேன். என் நிலை கண்டு உற்றாரும் ஊராரும் என் மீது வசை பாடுகிறார்கள். ஐந்து வயதினிலே அறியாப் பருவத்திலே பிஞ்சு வயதிலே என்னைக் கலந்தான் (?!?! கிளிக்கண்ணி -7). இனிய சொற்களைக் கூறினான். நான் பேதையாதலினால் எல்லாவற்றையும் நம்பினேன். சொல்லாத சொல்லும் வரும், கல்லாத கல்வியும்வரும் என் கணவரைச் சேர்ந்தவர்க்கு. அவன் மீது கொண்ட ஆசை போகிறதில்லை. ஆசைக்கொரு மருந்தை எவரும் எந்த ஏட்டிலும் எழுதிவைத்தாரில்லை. ஏக்கமெடுக்கிறது, எலும்பை உருக்குகிறது அவன் நினைவு. வாரிமுத்தங் கொள்வதற்கு இதழ் துடிக்கிறது. பாவியென்ன செய்வேன். அவன் நினைவால் நான் அஞ்சி ஒடுங்கி நின்றேன், அழுது சலித்துப் போனேன். நான் பட்ட துயரை எழுதத் தொடங்கினால் ஏட்டிலும் அடங்காது. அண்ணலை நினைக்கும் போது ஆறாக கண்ணீர் பெருகும். மூச்சும் ஒடுங்குகிறது. வேலவன் என்னை மறக்கலாமா? இதற்காக வழக்கா போடமுடியும். நான் காத்திருப்பேன், அவர் வந்தவுடன் சண்டை போடுவேன், அவர் கோபம் கொள்ள மாட்டார். என் கணவர் மார்பில் சாய்ந்து துயில்வேன் என் மனக்கிளியே. நீயொரு மருவற்ற பெருங்கிளி.

நடைமுறையில் பெண்கள் தங்கள் பருவ வயது இயற்கை வெளிப்பாடான காதல் இச்சையை இவ்வாறு விவரித்தால் அவர்கள் வாழ்க்கையில் பல துயர்களை எதிர் கொள்ள நேரிடும். கண்ணனையோ முருகனையோ காதலித்து உருகுவதாகப் பாடினால், அதைக் கலையாகவோ பக்தியாகவோ மக்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு வியப்பு தரும் கருத்தாக்கம்.

சில கலைஞர்கள், குறிப்பாகப் பாடகர்கள், காதல் ரசம் சொட்டும் கிளிக்கண்ணிகளைத் தவிர்த்து சற்று பொதுவான பக்தி ரசம் பொருள் தொனிக்கும் கிளிக்கண்ணிகளை உள்ளடக்கிய பாடலாக, ஆணோ பெண்ணோ இருபாலரும் பாடும் வகையில், பக்திப் பாடல் வகையில் அமைக்கிறார்கள். வள்ளிக் கணவன் கிளிக்கண்ணிக்குப் பிறகு தொடரும் கிளிக்கண்ணிகளின் தேர்வும் அவற்றின் வரிசையும் கலைஞர்களின் தனிப்பட்ட விருப்பத் தேர்வுகளே. கிளிக்கண்ணிகளை மாற்றி மாற்றிப் பாடினாலும் பாடலின் பொருளில் மாற்றம் எதுவும் ஏற்படுவதில்லை என்பது இப்பாடல்களின் தனிச் சிறப்பு. அவ்வாறே, பாடலில் இருக்கும் முருகன் குறித்த சொற்களை ஆறுமுகன், வேலவன், செந்தில், குகன், வடிவேலன், சண்முகம், விசாகன், ஐய்யன், குமரன் என்று ஏதோ ஒன்றை வைத்தும் மாற்றிப் பாடுகிறார்கள். சொந்தம், பந்தம் என்பது போன்ற சொல் மாற்றங்களும் உண்டு. பொருள் மாறாத வகையில் பாடகர்களின் தேர்வுக்கேற்ப சொற்கள் அமைகிறது. பாடகர்கள் இடையே “எங்கும் நிறைந்திருப்போன் எட்டியுமெட்டாதிருப்போன்” (கிளிக்கண்ணி- 97) விருப்பத் தேர்வாகவும், பெரும்பாலும் பாடலின் இறுதியில் பாடப்படும் கிளிக்கண்ணியாகவும் அமைகிறது. அன்றைய சங்கீத கலாநிதி டி. கே. பட்டம்மாள் முதற்கொண்டு எம். எஸ். சுப்புலக்ஷ்மி, டி.கே. ஜெயராமன், நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ரகுநாதன், ரேவதி சங்கரன், அருணா சாயிராம், என்று இன்றைய அனுராதா ஸ்ரீராம் வரை இசைக்கலைஞர்கள் பாடும் இப்பாடல்கள் யூடியூப் காணொளிகளாகக் கிடைக்கின்றன.

ஆடற் கலைஞர்கள் காதல், நாணம், மயக்கம் போன்ற உணர்வுகளைத் தங்கள் முக பாவங்களாக வெளிப்படுத்த உதவும் வகையிலும், அடவுகள் அமைக்க ஏதுவாக காதல் ரசம் சொட்டும் வரிகளையே தேர்வு செய்கிறார்கள். “மாலைவடிவேலவர்க்கு வரிசையாய் நானெழுதும் ஓலையுங்கிறுக்காச்சடி” (கிளிக்கண்ணி- 5) என்ற கிளிக்கண்ணி இல்லாத நாட்டியப் பாடலே இல்லை எனலாம். இந்த முறையில் இருந்து விலகி பக்தி ரசப் பாடல் வகையில் இணைக்கும் முயற்சியில் ஒரு நாட்டியமும் உள்ளது. அதில் முருகா.. முருகா.. அரோகரா.. என்று பாடி ஆடிக்கொண்டு தெருவோடு செல்லும் காவடி பக்தர்களைப் பார்த்த இளநங்கைகள் சிலர் வள்ளிக் கணவனை, அதாவது பொதுவாக முருகனை, பக்தர்கள் பாடுவதைக் கேட்கும் பொழுதே முருகன் நினைவால் உள்ளம் உருகுதடி எனத் தங்களுக்குள் உரைத்து ஆடிப்படுவதாகக் காட்சி அமைந்துள்ளது, இது காதல் பாடல் போல அமைக்கப்படவில்லை. நாட்டியப் பாடலாக அமைக்கையில் கருப்பொருள் கொண்டே ஆடுபவரைத் தேர்வு செய்ய நேரிடும். பதின்ம வயதிற்கு உட்பட்டவர் நடனமாடக் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் தவிர்க்கப்படுதலே முறை.

“மாடுமனை போனாலென்ன மக்கள்சுற்றம் போனாலென்ன” (கிளிக்கண்ணி- 26) என்ற கிளிக்கண்ணி பாடலுக்கும் ஆடலுக்கும் என இருவகைக் கலைஞர்களுமே விரும்பும் கிளிக்கண்ணியாக அமைந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்ட 6 கிளிக்கண்ணிகளே பரவலாகப் பாடப்படுபவை. (ஆடல் காணொளிகள் 10, பாடல் காணொளிகள் 10, கட்டுரைக் குறிப்புகள் 5 ஆகியவற்றின் தரவுகளின் தொகுப்பின் மூலம் தெரிவது இது, வரைபடமாகவும் காணலாம்). துவக்கம் வள்ளி கணவன்பேரை வழிப்போக்கர் சொன்னாலும் என்ற கிளிக்கண்ணி, அதனைத் தொடர்ந்து வரும் கிளிக்கண்ணிகளின் வரிசை எப்படியும் இருக்கக்கூடும், ஆனால் கீழே பாடலில் கிளிக்கண்ணிகள் இடம்பெறும் வரிசை எண் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ‘அடி’ என்றுமுடியும் கிளிக்கண்ணிகள் தேர்வு செய்யப்படுகின்றன. அவ்வாறு இல்லாவிட்டால் மாற்றி பாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக 47 ஆவது ‘கட்டுக்கொடி படர்ந்த’ கிளிக்கண்ணியில் ‘வேலவர்க்குச் சொல்வதெவர்’ என்பது சுதா ரகுநாதனால் ‘வேலன் என்னும் பேரோனடி’ என்று மாற்றி பாடப்படுகிறது.

வள்ளி கணவன்பேரை வழிப்போக்கர் சொன்னாலும்

   உள்ளங் குழையுதடி – கிளியே

   ஊனு முருகுதடி (14)

   கூடிக்குலாவிமெத்தக் குகனோடு வாழ்ந்ததெல்லாம்

   வேடிக்கையல்லவடி – கிளியே

   வெகுநாளைச் சொந்தமடி (2)

   மாலைவடிவேலவர்க்கு வரிசையாய் நானெழுதும்

   ஓலையுங்கிறுக்காச்சடி – கிளியே

   என்னுள்ள முங்கிறுக்காச்சடி (5)

   மாடுமனை போனாலென்ன மக்கள்சுற்றம் போனாலென்ன

   கோடிசெம்பொன் போனாலென்ன – கிளியே

   அவன் குறுநகை போதுமடி (26)

   கட்டுக் கொடிபடர்ந்த கருவூருக்காட்டுக்குள்ளே

   விட்டுப்பிரிந்தாரடி – கிளியே

   வேலவர்க்குச் சொல்வதெவர் (47)

   எங்கும் நிறைந்திருப்போன் எட்டியுமெட்டாதிருப்போன்

   குங்கும வர்ணனடி – கிளியே

   என் குமரப்பெருமானடி (97)

பாடகர்களுக்குப் பக்தி வரிகள் தேவை என்றால், கீழ் வரும் இந்த இரு கிளிக்கண்ணிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

   தாழ்வாரைக்கை தூக்குந் தம்மனைக்குள்ளேயிருந்து

   வாழ்வாரை வாழ்த்துமடி – கிளியே

   மால் மருகன்றன் கருணை (21)

   பக்தியுள்ள பேர்களுக்குப் பயன்றரும் பொருளது

   முக்திபெற்ற பேர்கட்கெல்லாம் – கிளியே

   மூடிவைக்குஞ் செம்பொருளது (30)

‘குமரனவன் கருணையடி’ (21) என்றும், ‘மூடிவைக்கும் செம்பொருளடி’ (30) என்றும் இறுதி வரிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் பாடலுக்கும் ஆடலுக்கும் கிளிக்கண்ணிகள் வரிசையைப் பரிந்துரைக்கிறேன்.

பாடல்: (14) – (21) – (26) – (30) – (97)

   வள்ளி கணவன்பேரை …..

   தாழ்வாரைக்கை தூக்கும் …..

   பக்தியுள்ள பேர்களுக்குப் பயன் …..

   மாடுமனை போனாலென்ன மக்கள்சுற்றம் …..

   எங்கும் நிறைந்திருப்போன் …..

ஆடல்: (14) – (2) – (5) – (47) – (97)

   வள்ளி கணவன்பேரை வழிப்போக்கர் …..

   கூடிக்குலாவிமெத்தக் குகனோடு …..

   மாலைவடிவேலவர்க்கு வரிசையாய் …..

   கட்டுக் கொடிபடர்ந்த …..

   எங்கும் நிறைந்திருப்போன் …..

சென்ற 20ஆம் நூற்றாண்டு இசை நிகழ்ச்சிகளில், சுப்பராய சுவாமிகளின் கிளிக்கண்ணிகள் பாடல்களுக்காக மக்கள் ஆவலாகக் காத்திருந்து, அவற்றைக் கேட்டு சுவைத்து, வீடு திரும்புகையில் வழியில் இப்பாடல்களைப் பாடிக்கொண்டே செல்வார்கள் என்றும், அந்த அளவில் மக்களைக் கவர்ந்த புகழ் பெற்ற பாடல்கள் இவை என்றும் குறிப்பிடுகிறது தமிழ் இசை இலக்கிய வரலாறு நூல் (பக்கம்-660). (தனிப்பட்ட வகையில்; எனது பாட்டி முறை கொண்ட ஒருவர் 1940களில் வள்ளிக்கணவன் பேரை பாடலை மிக அருமையாகப் பாடுவார் என்பது எனது அம்மா மூலம் நான் அறிந்தது ஒரு செவிவழிச் செய்தி.) இன்றும் இவை மக்களைக் கவர்ந்த பாடல்களாகவே உள்ளன என்பதற்கு யூடியூப் தளமே சான்று.

______________________________

உதவிய நூல்களும் தளங்களும்:

[1] வேதாந்தக் கிளிக்கண்ணி (12 பக்க நூல்-102 கிளிக்கண்ணிகள் கொண்டது), பூ. சுப்பராய ஆச்சாரியார், அஷ்டலெக்ஷ்மி விலாஸ் பிரஸ், 1929.

www.tinyurl.com/TVABOOK-0007145

[2] கிளிக்கண்ணி (8 பக்க நூல்-40 கிளிக்கண்ணிகள் கொண்டது), கிட்டப்பா, S. G.{S. G. கிட்டப்பா- K. B. சுந்தராம்பாள் அவர்கள் பாடியது}, பதிப்பாளர்: ரத்தினம் பிரஸ், மதராஸ்,1952.

www.tinyurl.com/TVABOOK-0012195

[3] ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகள், 102 கிளிக்கண்ணி பாடல்கள்

https://www.srisubbarayaswamigal.in/p/blog-page_20.html

[4] தமிழ் இசை இலக்கிய வரலாறு: தொகுதி-1, அருணாசலம், மு., 2009, கடவு பதிப்பகம் (மதுரை), பக்கம்: 657-661.

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY9jhyy.TVA_BOK_0002811/mode/2up

[5] பாரதியார் பாடல்கள், 40. நடிப்பு சுதேசிகள் (பழித்தறிவுறுத்தல்) கிளிக்கண்ணிகள்

______________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள்”

அதிகம் படித்தது