மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கும்மிப் பாடல்கள்

பி. பிரதீபா

Nov 13, 2021

siragu kummiyadi2

நாட்டுப் புறப்பாடல்களில் கும்மிப் பாடல்கள் என்பன கொண்டாட்டம் சார்ந்த பாடல்கள் ஆகும். கடவுள் சார்ந்த விழாக்களைக் கொண்டாடும்போது நாட்டுப்புற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடி ஆடும் பாடல்கள் கும்மிப்பாடல்கள் ஆகும். கும்மிப் பாடல்களை ஆண்களும் பாடி ஆடலாம். அதற்கு ஒயிற்கும்மி என்று பெயர். கும்மிப் பாடல்களை பெண்களும் பாடலாம். அதற்குக் கும்மி என்று மட்டும் பெயர்.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பெற்ற களத்தில் கும்மிப் பாடல்களாகப் பத்துப் பாடல்கள் கிடைக்கின்றன. ஆய்வு எடுத்துக் கொள்ளப்பெற்ற பகுதியில் இன்னமும் கும்மி கொட்டல் என்பது நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் அதிக அளவில் கும்மிப் பாடல்கள் கிடைக்கின்றன.

ஆய்வுக் களத்தில் ஆய்வாளர் சேகரித்த கும்மிப் பாடல்கள் அளவில் பெரியதாகவும், திரும்பத் திரும்பக் கருத்துகள் வரும் நிலையிலும் பாடப்பெற்றுள்ளன. ஆய்வுக்களத்தில் இருந்துச் சேகரிக்கப்பெற்ற பாடல்களில் வட்டாரத்தன்மையும் காணப்படுகிறது. கிடைத்துள்ள பத்துக் கும்மிப் பாடல்களை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளை எடுத்துரைப்பதாக இவ்வியல் அமைகின்றது.

கும்மிப் பாடல்கள் வடிவும் வகைமையும்

மக்கள் பலரும் குழுமி நின்று கைகொட்டி ஆடும் பாடல்கள் கும்மிப்பாடல்கள் எனப்படுகின்றன. பக்தி, வீரம், சமூகம் சார்ந்த கருத்துகளை உள்ளடக்கிக் கும்மிப் பாடல்கள் பாடப்படுகின்றன. கும்மி என்பது பழமை வாய்ந்த நாட்டுப்புற வடிவமாக விளங்குகிறது. “கொம்மை என்று சீவக சிந்தாமணி குறிப்பிடுவது கும்மியையே. அகநானூறு ‘கொப்பி’ என்று கும்மியைக் குறிப்பிடுகிறது. ஆந்திரத்திலும் தமிழகத்திலும், செட்டிநாட்டிலும் இப்பெயரினைக் காணலாம். தன்னானே கொட்டுதல், தட்டியாங் கொட்டுதல், கொண்டான் கொட்டுதல் என்று கும்மியைச் சுட்டும் வழக்கத்தினை ஆற்காடு மாவட்டங்களில் காணலாம்” என்று கும்மியின் இலக்கியப் பழமையை சு.சண்முகசுந்தரம் காட்டுகின்றார்.

நாட்டுப்புறப் பாடல் ஆடல் வடிவமான கும்மியானது கரகக் கும்மி, முளைப்பாரி கும்மி, மதுக்குடக் கும்மி, ஒயில் கும்மி, இயற்கும்மி என்று இது பலவகைகளில் அமைகின்றது. ஆய்வுக்களத்தில் கிடைத்த கும்மிப் பாடல்களில் கரகம் சார்ந்த கும்மிப்பாடல்கள், முளைப்பாரி சார்ந்த கும்மிப்பாடல்கள், மதுக்குடம் எடுத்தல் சார்ந்த கும்மிப் பாடல்கள் ஆகியன கிடைத்துள்ளன.

கரகக் கும்மி

siragu kummiyadiகரகம் என்பது அம்மனின் அருள் பெற்ற உருவமாக நாட்டுப்புற மக்களால் வேப்பிலை, எலுமிச்சம்பழம் கொண்டு உருவாக்கப்படுவதாகும். நல்ல பானை, அல்லது குடம் ஆகியவற்றில் மஞ்சள் நீர் நிரப்பி, அதற்கு மேல் வேப்பிலையால் ஆன கோபுரம் போன்ற அமைப்பினை உருவாக்கி அதற்குப் பூக்கள், சந்தனம் பொட்டு ஆகியன வைத்து எலுமிச்சம்பழம் சொருகி உருவாக்கப்படுவது கரகம் ஆகும். இக்கரகத்தை நடுவாக வைத்துக் கும்மி கொட்டப்பெற்றுள்ளது.

ஆய்வுக்களத்தில் கரகத்தை முன்வைத்து பாடப்பெற்ற கும்மிப் பாடல் பின்வருமாறு:

தன னானான்னே னானே னன்னே

தன்னே னான னானே!

ஒன்னாங் கரகமம்மா நம்ம முத்துமாரி

அவ ஆடி வரும் ஜோதி

அவ மக்களோட மாரி

அவ கவலபடுவா மாரி

அவ எடுத்தாலும் பூக்கரகம்

நம்ம முத்துமாரி!

என்று இப்பாடல் ஒன்னாங் கரகத்தில் தொடங்கி பத்துக் கரகம் வரை பாடப்பெற்றுள்ளது. இதன்வழி நாட்டுப்புற மக்களின் கரகக் கும்மி பற்றி அறிந்து கொள்ளமுடிகின்றது.

முளைப்பாரி கும்மி

கும்மிப்பாடலில் முளைப்பாரி கும்மி என்பது ஒரு குறிக்கத்தக்க வகைப்பாடு ஆகும். முளைப்பாரி என்பது பெண் தெய்வங்களுக்காக வளர்க்கப்படுவது ஆகும். இது கிராமங்களில் உள்ள நாட்டுப்புற பெண் தெய்வங்களுக்கு முளைப்பாரி இட்டு பொங்கல் வைத்து கொண்டாடப்பெறுகிறது.

வளர்பிறை காலங்களில் காப்புக்கட்டி அதன் பின்னர் முளைப்பாரி வைப்பதற்கான வேலைகள் தொடங்கப்படும். திருவிழா நடக்கும் பகுதியில் உள்ள அனைத்துப் பெண்களும் முளைப்பாரியை வளர்க்கின்றார்கள். முளைப்பாரி வளர்க்கும் வீட்டின் அடையாளமாக அவ்வீட்டின் முன்பகுதியில் வேப்பிலைத் தோரணம் கட்டப்பெறுகிறது.

முளைப்பாரி வளர்க்கும் விதம்

முதலாவதாக முளைப்பாரி போடுவதற்கு மண்பானை, அல்லது கூடைகள் போன்றவற்றில் ஆறு அல்லது குளத்து வண்டல் மண்ணை எடுத்து வருவர். அதன்பின் அம்மண்ணுடன் மாடடின் எரு, ஆட்டின் எரு ஆகியவற்றைச் சேர்ப்பர். இந்த வளம் மிகுந்த மண்ணில், மொச்சைப் பயிறு, சோளம், கம்பு போன்ற நவதாணியங்களின் விதைகளையும் போட்டு முளைக்க வைப்பர்.

ஊர் செழிப்பாக இருந்தால் இருபத்தொரு வகையான விதைகளையும், செழிப்பு குறைந்த காலத்தில் பதினொரு வகையான விதைகளையும் பொட்டு முளைப்பாரி வளர்ப்பர். இவ்வாறு விதைகளை இட்டபின்பு, அதன் மேல் ஆட்டெருவையும், மாட்டுச்சாணத்தையும் பரவலாகப் போடுவர். அதனை எட்டு நாட்கள் தண்ணீர் ஊற்றி வளர்ப்பர். ஒன்பதாம் நாள் முளைப்பாரியை வீட்டில் இருந்து எடுத்து ஊர்வலமாகத் திருவிழா நடக்கும அம்மன் கோயிலுக்குக் கொண்டுவருவர். முளைப்பாரியை அம்மனின் முன் வைத்து பெண்கள் அனைவரும் கும்மி கொட்டுவர். அதன்பின்பு முளைப்பாரியை நீர் நிலைகளில் கொட்டிவிடுவர்.

முளைப்பாரி வளர்க்கும் முறையை ஆய்வுக்களத்தில் கிடைத்த ஒருபாடலே தெளிவாக எடுத்துரைக்கிறது.

திருவிழா நாள் குறித்தல்

ஆய்வுக்களமான பாண்டுகுடிப் பகுதியில் கிடைத்த கும்மிப் பாடல்களில் ஐந்தாவதாகத் தொகுக்கப்பெற்ற பாடலில் திருவிழா நாள் குறித்தல் முதல் வீட்டை விட்டு முளைப்பாரி கிளம்பும் பத்தாம் நாள் வரையான செய்திகள் பாடப்பெற்றுள்ளன. திருவிழாவிற்கான நாள் குறிப்பதை,

பஞ்சாங்கம் பாத்தல்லவோ பத்தினிக்கு காப்புக்கட்டி

தேதி கெ(கி)ழமை எல்லாம் தேவதைக்கு நாள்குறித்து

அரண்மனைய சுத்தம்பண்ணி ஆத்தாளுக்கு காப்புக்கட்டி

ஊரையெல்லாம் சுத்தம் பண்ணி உத்தமிக்கு காப்புக்கட்டி

தன்னானே னான னன்னே தானதந்தன தன்னானே

தன்னானேனான னன்னே தானதந்தன தன்னானே

என்று திருவிழாவுக்கான நாள் குறிப்பதைக் கும்மிப் பாடல் சுட்டுகின்றது. பஞ்சாங்கம் பார்த்துத் திருவிழாவிற்கான நாள் குறிக்கப்படுகிறது. அதன்பின் கோயில், வீடுகள், கோயிலை நிர்வகிக்கும் அரண்மனை சார்ந்த வீடுகள் எல்லாம் சுத்தம் செய்யப்படுகின்றன.

முளைப்பாரி போடுதல்

முளைப்பாரி போடுவதற்குத் தேவையான பானை, ஓலைக் கொட்டான்களைத் தயார்படுத்திய செய்தி அடுத்து அந்தப் பாடலில் காட்டப்படுகிறது. தானியங்களைக் கழுவி போடுவதற்காக கொட்டான்கள் தயார் செய்யப்படுகின்றன. கொட்டான் ஐந்து எடுத்து நவதானியங்கள் அதில் ஊர வைக்கப்படுவதை

வண்ணக் கொட்டம் ஐந்தெடுத்து

வளரும் பொன்னு முத்தெடுத்து

பெரியக் கொட்டம ஐந்தெடுத்து

பெரிய பொண்ணு முத்தெடுத்து

என்று இப்பாடல் காட்டுகின்றது. இதன் பிறகு வண்டல் மண் எடுத்துப் பானையில் நிரப்பப்படுவதை

குயவனூர் கொல்லையிலே கோலவண்ண ஓடெடுத்து

வட்டவட்ட ஓடெடுத்து வாசலிலே கழுவிவச்சேன்

சின்னசின்ன ஓடெடுத்து திண்ணையிலே கழுவிவச்சேன்

வண்ணவண்ண ஓடெடுத்து வாசலிலே கழுவிவச்சேன்

தன்னானே னான னன்னே தானதந்தன தன்னானே

தன்னானே னான னன்னே தானதந்தன தன்னானே

என்று இப்பாடல் குறிக்கிறது. இதன்பிறகு தானியங்கள் வாங்கிய நிலையை, வீட்டில் வேப்பிலை சொருகி முளைப்பாரி வைத்திருப்பதற்கான அடையாளத்தைக் காட்டிய நிலையைப் பின்வரும் பாடல் பகுதி காட்டுகின்றது.

காரைக்குடி கடைத்தெறந்து கருப்பு மொச்ச வாங்கிவந்து

மதுரை மாநகரிலே பார்த்து பார்த்து முத்தெடுத்தேன்.

கொண்டுவந்த முத்தையெல்லாம் அண்டாவிலே ஊறவச்சேன்

வாங்கிவந்த முத்தையெல்லாம் வகைவகையாய் கையெடுத்தேன்

என்பது தானியங்களை வாங்கி வந்த நிலையைக் காட்டுவதாகும்.

வேப்பில்லை குச்சியிலே வேறுகுச்சி ரெண்டெடுத்தேன்

பனஓலை சில்லாடையை பக்குவமா நறுக்கி வச்சேன

என்று முளைப்பாரிக்கான அடையாளம் வீட்டில் வைக்கப்படுவதற்கான நிலையை இப்பாடலில் காணமுடிகின்றது.

கண்ணாடி எருப்பொறக்கி ஆத்தாலுக்கு காய வச்சேன்

ஆட்டுத்தொழு திறந்து ஆட்டெருவ எடுத்து வந்தேன்

மாட்டுத்தொழு திறந்து மாட்டெருவ வாரி அள்ளி

ஓடுகிற தண்ணியிலே நெரசெம்பு நீரெடுத்தேன்

எருவையெல்லாம் கீழ்பரப்பி ஆத்தாளையும் மேல்பரப்பி

தன்னானே னான னன்னே தானதந்தன தன்னானே

தன்னானே னான னன்னே தானதந்தன தன்னானே

மேற்கண்ட பாடல் அடிகளில் முளைப்பாரியையே ஆத்தாளாகக் காணும் முறைமை தெரியவருகிறது. மேலும் ஆட்டின் எரு, மாட்டின் எரு ஆகியன மண்ணுடன் கலந்து மண்ணை வளப்படுத்திய நிலைப்பாடும் தெரியவருகிறது.

முளைப்பரப்பின ஒன்னாம்நாள் முகம்காட்டி ஒளிந்திருப்பாள்

முகம்காட்டி ஒளிந்திருப்பாள் முகுந்தனோட தங்கையம்மா

முளைப்பாரப்பின ரெண்டாம் நாள் ரெட்டைக்கிளி போலிருப்பாள்

ரெட்டைக்கிளி போலிருப்பாள் நெடுமாறன் தங்கையம்மா

முளைப்பரப்பின மூனாம்நாள் முத்துமுகம் கொண்டிருக்காள்

முத்துமுகம் கொண்டவளாம் முகுந்தனோட தங்கையம்மா

முளைப்பரப்பின நான்காம்நாள் நாகரத்தினம் போலிருப்பாள்

நாகரத்தினம் போலிருப்பாள் நாராயணன் தங்கையம்மா

முளைப்பரப்பின அஞ்சாம்நாள் காலையிலே அழகாக கண்குளிர்வாள்

அழகாக கண்குளிர்வாள் அபிராமி தங்கையம்மா

ஆறாம்நாள் காலையிலே ஆங்காரம் கொண்டிருப்பாள்

ஆங்காரம் கொண்டவளாம் அபிராமி தங்கையம்மா

ஏழாம்நாள் காலையிலே எல்லோருக்கும் கண்குளிர்வாள்

எல்லோருக்கும் கண்குளிர்வாள் எம்பெருமான் தங்கையம்மா

எட்டாம்நாள் காலையிலே வந்திடுவாள் கொழுமேடை

ஒன்பதாம்நாள் சாயாந்திரம் போய்வருவாள் பொய்கையிலே

சிந்தாமத்தான் சிதறாமத்தான் வளர்த்தேனே மாரியம்மா

என்று ஒவ்வொரு நாளும் முளைப்பாரி வளர்ந்த நிலையை மேற்பாடல் காட்டுகின்றது.

முதல் நாள் மண்ணுக்குள் தானியங்கள் மறைந்திருப்பதையும், இரண்டாம் நாள் இரட்டைக் கிளிபோல் அவை வளரத் தொடங்குவதையும் நாட்டுப்புறப் பெண் நயமான இதனுள் பாடியுள்ளார். இதன்பின் நாள்கள் நகர வளர்கிறது முளைப்பாரி. எட்டாம் நாளில் கொழுமேடைக்குச் செல்கிறது முளைப்பாரி. ஒன்பதாம் நாள் நீர் நிலைக்குள் கரைக்கப்படுகிறது.

முளைப்பாரிக் கும்மியின் செயல்பாடுகள் அனைத்தையும் இப்பாடல் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.இப்பாடல் கும்மி பற்றிய ஆய்வில் குறிக்கத்தக்க இடம் வகிக்கும் பாடலாகும்.

மதுக் கும்மி

இராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் சார்ந்த பகுதிகளில் மது எடுப்புத் திருவிழா என்பது நடைபெற்றுவருகிறது. திருவிழா நாள் குறித்து, முளைப்பாரி முளைக்கச்செய்து இவை ஒருபுறம் நடக்க மது எடுத்தல் என்ற நடைமுறையும் திருவிழாக்களில் ஒரு நடைமுறையாக செய்யப்பெற்று வருகிறது.

குடம் ஒன்றில் நெல்லும் பாலும் இட்டு, அதன் மீது தென்னம்பர்ளையையைச் சொருகி அதனைப் பெண்கள் தலையில் வைத்து வீட்டில் இருந்துக் கோயிலுக்குக் கொண்டுவரும் நடைமுறை மது எடுத்தல் எனப்படுகிறது. இந்த மதுவை வைத்தும் கும்மி கொட்டப்படுகிறது. அவ்வகையில் மதுக்குடம் குறித்த ஒரு பாடல் ஆய்வுக் களத்தில் கிடைத்துள்ளது.

ரெண்டாங் கரகம்மா நம்ம தெருவிலே

பொன்னுங் கரகம்மா நம்ம தெருவிலே

பொன்னுங் கரகத்த பூவால சோடிங்க

புதுமையுள்ள மாரிக்கு மின்னே நடத்துங்க

மதுவா மதுக்குடமா தன்னானே னானன்னே

மதுக்கேத்த சும்மாடமா தன்னானே னானன்னே

மதுவ இறக்குங்க தன்னானே னானன்னே

புதுமையுள்ள மாரிக்கு மின்னே நடத்துங்க

என்ற இப்பாடல் மதுக்குடத்தை முன்வைத்துப் பாடப்பெற்ற கும்மிப் பாடல் ஆகும். இவ்வாறு நாட்டுப்புற மக்களால் இன்னமும் பாடப்பெற்று ஆடப்பெற்று வருகின்ற கும்மிப் பாடல்கள் நாட்டுப்புற இலக்கியத்தின் உயிர்ப்புக்குத் துணை செய்து வருகின்றன.

இனி ஆய்வுக்களத்தில் கிடைத்த பாடல்களின் பொருள் நலம் கவிநலம் ஆகியவற்றை ஆராயும் நிலையில் பின்வரும் பகுதி அமைகின்றது.

பொருள்நலம்

கும்மிப் பாடல் -ஒன்று

கரகத்தை முன்வைத்து பாடி ஆடப்பெறும் கும்மிப் பாடலாக ஆய்வு களத்தில் கிடைத்த முதல் பாடல் அமைகின்றது, இப்பாடலில் முத்துமாரி என்ற தெய்வம் வணங்கப்படுகிறது. அவளே கரகத்தின் வடிவமாக விளங்குகிறாள் என்பது இப்பாடலின் மையக் கருத்தாகும். அவளின் கரகம் பூக்களால் செய்யப்பட்ட கரகம் ஆகும். அது ஒன்றாம் கரகம், இரண்டாம் கரகம் என்று பத்தடிக்கிப் பெருமைபடப் பாடப்பெறுகிறது. இக்கரகம் ஆடி வருவது ஜோதி வருவது போல உள்ளதாம் என்று இப்பாடலின் பொருள் அமைகிறது.

கும்மிப் பாடல் – இரண்டு

இப்பாடல் அம்பாளின் பெருமையைப் பேசுவதாக உள்ளது. மயில் என்றும், மாரி என்றும் தேவதை என்றும் அம்பாள் பாராட்டப்பெறுகிறாள். மேலும் மதுரை மண்ணழகு, குன்றக்குடி மலையழகு, திருவாடானை தேர் அழகு, பாண்டுகுடி தெருவழகு என்று சுற்றிலும் உள்ள ஊர்களையும் தன்னூரையும் பதிவு செய்வதாக இக்கும்மிப் பாடல் அமைகிறது,

கும்மிப் பாடல் -மூன்று

ஆய்வுக் களத்தில் கிடைத்த மூன்றாம் கும்மிப் பாடல் மாரியம்மனைப் போற்றிப் பாடுவதாக உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு உரிய நாளில் வணங்க வந்தோம் என்றும், தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம் கொண்டகோயில் மாரியம்மன் கோயில் என்றும் அம்மனின் சக்தியைப் பெருமைபட இக்கும்மிப்பாடல் பேசுகின்றது. இப்பாடலின் தொடக்கத்தில் நாகூர் ஆண்டவரை நலமிகு தரும்படி கும்மி அடிப்பவர் பாடுகின்றார். இவ்வடி மதச் சார்பற்றதன்மை நாட்டுப்புற மக்களிடம் உள்ளதை அறியமுடிகின்றது.

கும்மிப்பாடல் – நான்கு

மாமியார் வீடு வந்த மருமகள் அவ்வீட்டில் தனக்கான மரியாதை, மதிப்பு இல்லை என்று ஏங்குவதைக் கருப்பொருளாகக் கொண்டு ஆய்வுக்களத்தில் கிடைத்த நான்காம் பாடல் அமைகின்றது. தயிர்க்குடத்தை எடுக்கப்போன மருமகள் அவளின் கவனக் குறைவால் அக்குடம் உடைந்துபோய் தயிரெல்லாம் வீணாகிவிடுகிறது. இதனைக் கண்டு மருமகள் பதறுகிறாள். மாமியார், நாத்தனார், கொழுந்தனார் ஆகியோர் குறை சொல்வார்களே என்று அவள் கலங்குகிறாள். இவளின் மாமனார் மட்டும் நல்லவர் என்று அவள் காட்டுவதன் வாயிலாக அவர் ஒருவர் மட்டும் இவளை மதிப்பவராக இருந்துள்ளார் என்பது தெரியவருகிறது. இது புகுந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.

கும்மிப் பாடல் – ஐந்து

ஆய்வுக்களத்தில் கிடைத்த ஐந்தாம் கும்மிப் பாடல் முழுக்க முழுக்க முளைப்பாரி திருவிழாவை முன்வைத்துப் பாடப்பெற்றுள்ளது. அய்யனார், மாரியம்மன், பிள்ளையார், கருப்புசாமி, மாரியம்மன் போன்ற அனைத்து தெய்வங்களையும் வணங்கி முளைப்பாரி வளர்த்துத் திருவிழா கொண்டாடுவதை இப்பாடல் காட்டுகின்றது. மேலும் ஒன்றாம் நாள் முதல் முளைப்பாரி வளருவதைக் காட்டி, பத்தாம் நாள்வரை அது குளத்தில் செலுத்தும் நாள் வரையான வளர்ச்சியை இப்பாடல் பதிவு செய்துள்ளது.

கும்மிப் பாடல்- ஆறு

மாரியம்மன் பூக்களால் அலங்காரம் செய்யப்பெற்றுள்ள அழகைக் காட்டுவதாக ஆறாம் பாடல் அமைகின்றது. மாரியம்மன் தலைமீது, தாழம்பூ, மடிமீது மல்லிகைப் பூ ஆகியன வைத்து மாரியம்மன் அலங்காரம் செய்யப்படுகிறாள். அவளுக்காக முளைக்க வைக்கப்பெற்ற முளைப்பாரியானது எட்டு நாள்கள் வளர்ந்து செழிப்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது. மேலும் திருவிழாவின்போது குதிரை வாகனத்திலும், யானை வாகனத்திலும் அம்மன் உலா வருவதையும் போற்றி உரைக்கிறது இப்பாடல்.

கும்மிப் பாடல்- ஏழு

ஆய்வுக் களத்தில் கிடைத்த ஏழாம் பாடல் முளைப்பரரியையும் பாடுகிறது. கரகத்தையும் இணைத்து அதனுடன் பாடுகிற்து. கரகத்தைப் பொன்னாலும் பூவாலும் அலங்காரம் செய்யவும், மதுக்குடம் செய்து மாரியம்மனுக்கு இறக்கவும் இப்பாடல் மக்களைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இதிலும் பத்தடுக்கிப் பாடப்பெற்றுள்ளது.

கும்மிப் பாடல் – எட்டு

முத்துமாரியின் சிறப்பினைக் காட்டுவதாக அவள் காட்சி தருவதையும் மையமாக வைத்து ஆய்வுக்களத்தில் கிடைத்த எட்டாம் பாடல் பாடப்பெற்றுள்ளது. ஓங்காரி, ஸ்ரீங்காரி, ஜெயமாரி, அன்னைமாரி என்று பல நிலைகளில் மாரி பாராட்டப்பெறுகிறாள். மேலும் சமயபுரம் மாரியம்மனாக, நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாளாக, காரைக்குடி கொப்புடையாளாக மாரியம்மன் விளங்குவதாக இப்பாடல் பதிவு செய்கிறது. மேலும் குங்குமக்காரியாக, வேப்பிலை ஆடைக்காரியாக, வேல், சூலம் ஏந்தியவளாக, பம்மை உடுக்கை ஒலியுடன் வருபவளாக இக்கும்மிப் பாடல் மாரியம்மனின் வருகையைக் காட்டுகின்றது. இவளை வணங்குவதால் மழை பொழியும், நெல்விளையும், வாழ்வு செழிக்கும் என்று பயனும் இப்பாடலில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

கும்மிப் பாடல் ஒன்பது

ஆய்வுக்களத்தில் கிடைத்த ஒன்பதாம் பாடல், மாரியம்மனின் பல்லழகினை எடுத்துரைப்பதாக உள்ளது. பாவை, சூரைக் கொடி படர்ந்த இடமான பாண்டுகுடிப் பகுதியில் பாவை, சூரை போல பல்வரிசை கொண்டவளாக மாரி விளங்குவதை இப்பாடல் காட்டி அவளின் இருப்பிடமாகப் பாண்டுகுடியைக் காட்டுகின்றது.

கும்மிப் பாடல் பத்து

ஆய்வுக்களத்தில் கிடைத்த பத்தாம் கும்மிப் பாடல் ஆறாம் பாடலின் சாயலுடையதாக விளங்குகின்றது. ஆறாம் பாடலும், பத்தாம் பாடலும் ஒரே குழுவினரால் பாடப்பெற்ற நிலையில் இத்தகைய தொடர்பு அமைந்திருக்கலாம். தலைமேலே தாழம்பூ மடிமேலே மல்லிகைப்பூ என்ற தொடர் அப்படியே இரு பாடல்களில் காணப்படுகிறது. இருவாட்சிப் பூ போன்ற பூக்களை மாரியம்மனின் வழிபாட்டிற்காக ஒரு பெண் கொண்டுவருவதாக இப்பாடலில் பாடப்பெற்றுள்ளது. இதுவும் மாரியம்மனை வணங்கும் பாடலாகும்.

இவ்வாறு பொருள் நலம் சிறப்பதாக கும்மிப்பாடல்கள் அமைந்துள்ளன. இனி இக்கும்மிப்பாடல்களில் உள்ள இலக்கியச் சிறப்புகள் ஆராயப் பெறுகின்றன.

siragu kummiyadi3கும்மிப் பாடல் -ஒன்று

ஓசை நயம்

தன்னானே கொட்டும் இசை வடிவம் உடையதாக முதல் பாடல் அமைகிறது. நீண்ட தன்னனானே – இசை வடிவை இப்பாடல் பெற்றுள்ளது.

தன்ன னன்னே னான னன்னே

தன்னே னான னானே

தன னானே னன்னே னானே

தன னானான்னே னானே னன்னே

தன்னே னான னானே!

தன்ன னன்னே னான னன்னே

தன்னே னான னானே

தன னானே னன்னே னானே

தன னானான்னே னானே னன்னே

தன்னே னான னானே!

என்பது பாடலின் இசைவடிவம் அமைந்த பகுதியாகும். இது பாடுபவருக்கும் கேட்டு திரும்பப் பாடுபவருக்கும் சற்று கடினத்தைத் தரும் என்றாலும் இந்த ஓசை ஒழுங்கு கேட்பதற்கு இனிதாக விளங்குகின்றது. அவள் என்ற சொல்லும் அவ என்று குறைந்து ஓசைபட ஒலிக்கின்றது.

எளிய வடிவம்

கும்மிப்பாடலின் ஒன்றாம் பாடல் எளிய வடிவம் உடையதாக விளங்குகின்றது.

ஒன்னாங் கரகமம்மா நம்ம முத்துமாரி

அவ ஆடி வரும் ஜோதி

அவ மக்களோட மாரி

அவ கவலப்படுவா மாரி

அவ எடுத்தாலும் பூக்கரகம்

நம்ம முத்துமாரி!

என்ற அடிகளைக் கொண்டு பத்து;வரை அடுக்கி மொழியப்படுகிறது. இதன் காரணமாக பாடுபவருக்கும் இத்தொடர்கள் மனனம் ஆகி பாட்டு வலிமை பெற்றுப் பாடப்படுதற்கு வாய்ப்பாக அமைகிறது.

மாரி என்பவள் மக்கள் தெய்வம் என்பதை மக்களோட மாரி என்று இப்பாடல் எடுத்துரைக்கிறது. எனவே நாட்டுப்புற மக்கள் வணங்கும் சிறு தெய்வ நிலைப்பாடு உடையது மாரி என்பதை மேற்பாடலடி வழி உணரமுடிகின்றது.

கும்மிப் பாடல்- இரண்டு

ஆய்வுக்களத்தில் கிடைத்த இரண்டாம் பாடல்

அப்டி ஏலை ஏலோ ஏலோமயிலால ஏலையேலோ

அப்டி ஏலை ஏலோ ஏலோமயிலால ஏலையேலோ

என்ற ஓசை வடிவம் உடையதாக விளங்குகிறது. அப்டி, என்பதும், ஏலோ மயிலால என்ற சொல்லும் முறையே ஒன்றாம் சொல்லாகவும், மூன்றாம் சொல்லாகவும் அமைகின்றன.

மோனைத் தொடை நலம்

குங்குமத்த

குணமுள்ள, கொரலயுந்தா

கொரலிழுத்து, சாந்துடிக்கும்

சாய்ந்திருந்தா, சாந்துதண்ணி

மாவிடிக்கும் , மறஞ்சருந்தா

மாவுதண்ணி, மதுரவிட்டா

மண்ணழகாம், மலையழகாம்

தேரழகாம், தெருவழகாம்

என்று இப்பாடலில் முதல் எழுத்துகள் ஒன்றி மோனை நலம் சிறந்துள்ளது. இது இப்பாடலின் யாப்பு வடிவத்திற்கு அழகினைத் தருவதாக உள்ளது. மேலும் மண்ணழகு, மலையழகு, தேரழகு, தெருவழகு என்று அழகுகளையும் அடுக்கி மொழிகிறது இக்கும்மிப்பாடல்.

கும்மிப் பாடல் மூன்று

தன்னே னானே னானே

தன்னே னானே னான்னே னானே

என்ற ஓசைநலம் உடையதாக ஆய்வுக்களத்தில் கிடைத்த மூன்றாம் பாடல் அமைகின்றது.

அங்கே ஆடுகிற பம்பரமோ

தன்னே னானே னானே

பம்பரத்த நம்பியில்ல தன்னே னானே னானே

தன்னே னானே னானே னானே

நாங்க வெம்பரப்பா ஆனோமம்மா

தன்னே னானே னானே

தன்னே னானே னன்னே தன்னே னானே னானே

பம்பரம், வெம்பரம் என்று எதுகை நலம் மேற்பாடலடிகளில் சிறக்கின்றது.

கும்மிப் பாடல் நான்கு

“ஆகா ஓகோ” என்ற ஓசைக்குறிப்புடன் ஆய்வுக்களத்தின் நான்காம் பாடல் தொடங்கி இடையேயும், முதலிலும், முடிவிலும் அச்சொற்களைப் பெற்றுவரும் நிலையில் பாடப்பெற்றுள்ளது. கண்ணா என்ற சொல்லும் இடை இடையே பயின்று வந்துள்ளது.

மாமியாரு –மட்டம்

நாத்தனாரு- கிண்டல்

கொழுந்தனார் – கோள்

மாமனார் – மதிப்பார்

என்ற நிலையில் புகுந்த வீட்டில் பெண்கள் படும் இயல்பினைச் சமுதாய நோக்குடன் இப்பாடல் பதிவு செய்யப்பெற்றுள்ளது..

கும்மிப் பாடல்- ஐந்து

தன்னானே னான னன்னே தானதந்தன தன்னானே

தன்னானே னான னன்னே தானதந்தன தன்னானே

என்ற ஓசைக்குறிப்பு கொண்டதாக ஆய்வுக்களத்தில் கிடைத்த கும்மிப்பாடலின் ஐந்தாம் பாடல் அ;மைகிறது. மேலும் கும்மி;ட்டோம், கட்டி, எடுத்து போன்ற பல சொற்கள் திரும்பத் திரும்ப வரும் நிலையில் இப்பாடல் இசை ஒழுங்கு உடையதாக உள்ளது.

தொடை நலம்

இப்பாடல் தொடை நலம் சிறந்த பாடலாகவும் விளங்குகின்றது.

அல்லி – அய்யனார்

மல்லி- மாரியம்மன்

பிச்சி- பிள்ளையார்

கதம்பம் – கருப்பசாமி

என்று அடிதோறும் மோனைத் தொடை இடம்பெறும் நிலையில் இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

மேலும் இப்பாடலில் இயைபுத் தொடையும் சிறப்பாக அமைந்துள்ளது.

மல்லி மலரெடுத்து மாரியம்மன கும்பிட்டோம்

பிச்சி மலரெடுத்து பிள்ளையார கும்பிட்டோம்

கதம்ப மலரெடுத்து கருப்புசாமிய கும்பிட்டோம்

கனாகம்பர மலரெடுத்து முத்துமாரிய கும்பிட்டோம்

வண்ணவண்ண மலரெடுத்து வடிவழகிய கும்பிட்டோம்

என்ற பகுதியிலும்,

பஞ்சாங்கம் பாத்தல்லவோ பத்தினிக்கு காப்புக்கட்டி

தேதிகெ(கி)ழமை எல்லாம் தேவதைக்கு நாள்குறித்து

அரண்மனைய சுத்தம் பண்ணி ஆத்தாளுக்கு காப்புக்கட்டி

ஊரையெல்லாம் சுத்தம் பண்ணி உத்தமிக்கு காப்புக்கட்டி

என்ற பகுதியிலும்

வண்ணக் கொட்டம் ஐந்தெடுத்து

வளரும் பொன்னு முத்தெடுத்து

பெரியக் கொட்டம் ஐந்தெடுத்து

பெரிய பொண்ணு முத்தெடுத்து

குயவனூர் கொல்லையிலே கோலவண்ண ஓடெடுத்து

என்ற பகுதியிலும் இயைபுத் தொடை நலம் சிறந்துள்ளது.

உவமை நலம்

இப்பாடலில் உவமைகள் பயன்படுத்தப்பெற்றுள்ளன. முளைப்பாரி வளருவதைப் பல உவமைகள் சொல்லி இந்நாட்டுப்புறப் பாடல் மகிழ்கிறது.

முளைப்பரப்பின ரெண்டாம் நாள் ரெட்டைக்கிளி போலிருப்பாள்

முளைப்பரப்பின நான்காம்நாள் நாகரத்தினம் போலிருப்பாள்

என்ற பாடலடிகளில் ரெட்டைக்கிளி, நாகரத்தினம் போன்றன உவமைகளாக முளைப்பாரிக்கு விளங்குகின்றன.

இவ்வாறு இலக்கிய நலம் பல உள்ள பாடலாக இப்பாடல் விளங்குகின்றது.

கும்மிப்பாடல் – ஆறு

தன்னானே மாரியம்மா என்ற இசைக்குறிப்புடையதாக ஆய்வுக்களத்தில் கிடைத்த ஆறாம் கும்மிப் பாடல் அமைகின்றது. இப்பாடலில் இசைக்குறிப்பு அதிக அளவில் இடம்பெறவில்லை.

ரெண்டான மாரியாத்தா ரேகையில் விரிந்திருப்பாள்

மூனான மாரியாத்தா முளைத்து வளர்ந்திடுவாள்

நாலான மாரியாத்தா நல்லா வளர்ந்திடுவாள்

அஞ்சான மாரியாத்தா அரக்குமஞ்ச பூசிடுவாள்

ஏழான மாரியத்தா எட்டி வளர்ந்திடுவாள்

என்ற பாடலடிகளில் ரெண்ட ரேகை, மூனான- முளைத்து, நாலான- நல்லா, அஞ்சான – அரக்கு மஞ்ச, ஏழான- எட்டி ஆகிய நிலைகளில் மோனைத் தொடை அமைய கும்மிப் பாடல் பாடப்பெற்றுள்ளது.

எட்டான மாரியத்தா கொட்டும் கொலவையோடு

என்ற அடியில் எதுகைத்தொடையும்

நான்போற பாதையெல்லாம் கல்லுமுல்லு குத்துது

ஆத்தாநீ போறபாதை பூப்பந்தலா மாறுது

என்ற அடிகளில் முரண் தொடையும் அமையப்பெற்றுள்ளன.

யானபோறத பாருங்கம்மா யான அசைஞ்சு போறதபாருங்கம்மா

யானத்தளம் போல நம்மூருமாரிக்கு அட்டியல் மின்னுது பாருங்கம்மா

பச்சிபோறத பாருங்கம்மா பச்சிபறந்து போறத பாருங்கம்மா

பச்சித்தளம்போல நம்மூருமாரிக்கு பதக்கம் மின்னுது பாருங்கம்மா

குதுரபோறத பாருங்கம்மா குதுரகுதித்து போறத பாருங்கம்மா

குதிரத்தளம் போல நம்மூருமாரிக்கு கொலுசு மின்னுது பாருங்கம்மா

என்ற பாடலடிகளிலும்

கூடநெறயா திருவாச்சி கொண்டுவந்தேன் மாரியம்மா

பத்தாட்டினா என்னசெய்வேன் பருத்திமுடி மாரியம்மா

பாலெடுத்து தலையில்வைத்து பாத்துவா மாரியம்மா

பூவெடுத்து தலையில்வைத்து முன்னே வா மாரியம்மா

என்ற பாடலடிகளிலும் இயைபுத் தொடை அமைந்துள்ளது.

கும்மிப் பாடல்- ஏழு

தன்னானே னானே னன்னே தன்னானே னானன்னே

தானே னன்னேதானே னன்னே தன்னானே னானன்னே

என்ற நீண்ட இசைக்குறிப்பு உடையதாக ஆய்வுக்களத்தில் கிடைத்த ஏழாம் பாடல் கிடைக்கின்றது. இதுவும் ஆய்வுக் களத்தில் கிடைத்த முதல்பாடல் போல பத்து முறை அடுக்கிவரும் நிலையில் எளிமையான சொற் சேர்க்கை உடைய பாடலாக விளங்குகிறது.

ஒன்னாங் கரகம்மா நம்ம தெருவிலே

பொன்னுங் கரகம்மா நம்ம தெருவிலே

பொன்னுங் கரகத்த பூவால சோடிங்க

புதுமையுள்ள மாரிக்கு மின்னே நடத்துங்க

மதுவா மதுக்குடமா தன்னானே னானன்னே

மதுக்கேத்த சும்மாடமா தன்னானே னானன்னே

மதுவ இறககுங்க தன்னானே னானன்னே

மேலும் இப்பாடலில் ‘தன்னானே னானன்னே’ என்ற இசைக்குறிப்பும் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.

கும்மிப் பாடல் -8

இப்பாடலில் தன்னானே என்ற இசைக்குறிப்பு எதுவும் இடம்பெறவில்லை. எனினும் இப்பாடலில் வந்தாளே என்ற சொல் திரும்பத் திரும்ப வந்து ஓசையைத் தருகின்றது.

குங்கும பொட்டுக்காரி மகமாயி வந்தாளே

குங்கும பொட்டுக்காரி மகமாயி வந்தாளே

வேப்பிலை ஆடைகட்டி மகமாயி வந்தாளே

வேப்பிலை ஆடைகட்டி மகமாயி வந்தாளே

கற்பூர நாயகியாம் கருமாரி வந்தாளே

என்ற பாடலடிகளில் இயைபுத் தொடை நயம் அமைந்துள்ளது. இப்பாடல் முழுவதும் வந்தாளே என்ற சொல் இயைபிலும் முன்னும் வந்து ஓசை ஒழுங்கு தருகின்றது.

கும்மிப் பாடல்-9

தன்னேனம் னானேனம் தன்னேனம் னானினம்

தன்னேனம் னானினம் தன்னானே!

என்ற ஓசை நயம் ஆய்வுக்களத்தில் கிடைத்த ஒன்பதாம் பாடலில் அமைந்துள்ளது. இவ்விசைக் குறிப்பு வேறுபட்ட இனிமையான இசைக்குறிப்பாக விளங்குகின்றது. கும்மிப் பாடல் தன்னானே பாட்டு என்றழைக்கப்படுவதற்கு இப்பாடலில் இடம்பெறும் இசைநலம் சான்றாக உள்ளது.

பாருங்களேன் என்ற சொல் இயைபுத் தொடையாக இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

கும்மிப் பாடல்-10

ஆய்வுக்களத்தில் கிடைத்த ஆறாம் பாடல் போலவே இப்பாடலும் தன்னானே மாரியம்மா என்ற இசைக்குறிப்பு உடையதாக உள்ளது. இயைபுத் தொடை நலமும் இப்பாடலில் அமையப்பெற்றுள்ளது.

இவ்வாறு பாண்டுகுடி வட்டார கும்மிப் பாடல்கள் இசை இனிமை, பொருள் நலம், இலக்கிய நலம் உடையனவாக விளங்குகின்றன. படிக்காத மக்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் தமிழ் மொழியின் உயர் இலக்கியங்களில் காணப்படும் இலக்கிய நயங்கள் அமைந்திருப்பது வியப்புக்கு உரியதாக உள்ளது.

தொகுப்புரை.

பாண்டுகுடிப் பகுதியில் கள ஆய்வு செய்தபோது கிடைத்த பத்து கும்மிப் பாடல்கள் நாட்டுப்புற கும்மிப் பாடல்களின் தன்மையினைப் பெற்றுத் திகழ்கின்றன. கரக கும்மிப்பாடல்கள், முளைப்பாரி கும்மிப் பாடல்கள், மதுக் கும்மிப்பாடல்கள் என்ற வகைமையில் கும்மிப் பாடல்கள் பாண்டுகுடிப் பகுதியில் கிடைக்கின்றன. கும்மிப்பாடல்கள் மிக நீளமானதாக, பத்து அடுக்கிப் பாடுவனவாக இப்பகுதியில் கிடைக்கின்றன. ஒன்றில் தொடங்கி பத்து வரை அடுக்கிப் பாடும் நிலையில் திரும்ப திரும்ப ஒரே சொற்றொடர்களே இடம்பெற்றுப் பாடுபவர்களுக்கு எளிமையும் இனிமையும் கலந்து பாட உதவி செய்கின்றன. தன்னனானே தன்னானே என்ற நிலையில் தன்னானப்பாடல்களாகக் கும்மிப் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. இவ்வோசை கருதி இவை இப்பகுதியில் தன்னான கொட்டுதல் என்பதாக அழைக்கப்படுகிறது. மோனை, எதுகை போன்ற தொடைநலங்கள் அதிக அளவில் கொண்டனவாகக் கும்மிப் பாடல்கள் அமைந்துள்ளன.     சிறு தெய்வ வழிபாட்டை முன்வைத்து இக்கும்மிப்பாடல்கள் பாடப்பட்டும் ஆடப்பெற்றும் பாண்டுகுடிப் பகுதியில் நிகழ்த்தப்பெற்று வருகின்றன.   முளைப்பாரி கும்மி சிறப்பானதாக விளங்குகிறது. முளைப்பாரி ஒவ்வொரு நாளும் வளரும் தன்மையை இணைத்து நாட்டுப்புற மக்கள் கும்மியை உருவாக்கியுள்ளனர்.

மொத்தத்தில் பாண்டுகுடி சார்ந்த கும்மிப்பாடல்கள் அளவாலும் மக்கள் பயன்பாட்டாலும் பெருந்த வளர்ச்சியில் அமைந்து வருகின்றன என்பதை உணரமுடிகின்றது.

சான்றாதாரங்கள்

1.   சு.சண்முக சுந்தரம், தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள், ப. 211


பி. பிரதீபா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கும்மிப் பாடல்கள்”

அதிகம் படித்தது