மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறுந்தொகையின் 25 ஆவது பாடல்

பேரா. ருக்மணி

Nov 22, 2014

kurundhogai1குறுந்தொகையின் 25 ஆவது பாடல். பிறரறியாமல் தலைவனும் தலைவியும் காதலிக்கின்றனர். ஊரறிய மணம் செய்துகொள்ள நினைக்கின்றாள் தலைவி. ஆனால், தலைவனோ, மணம் புரியக் காலம் நீட்டிக்கின்றான். தலைவிக்கோ, மனதில் குழப்பம். காதலித்தவன் ஒருவேளை தன்னை கைவிட்டு விட்டால் என்ன செய்வது? என்று! இப்படிப் பதறுகின்ற பெண்ணின் இயல்பான புலம்பலைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர். இது, கபிலரின் பாடல்.

யாரும் இல்லை;தானே கள்வன்

தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?

தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான். இந்நிலையில் தலைவி, தோழியிடம் கூறியதாக அமைந்துள்ளது இப்பாடல்.

kurundhogai2கருத்துரை:

தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான். அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்? நான் அவனோடு கூடியிருந்த நாளில், அங்கே ஓடிக்கொண்டிருந்த நீரிலே ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது.

சொல்பொருள் விளக்கம்:

யாரும் இல்லை-நானும் அவனும் இருந்த இடத்தில்) யாரும் இல்லை. தானே கள்வன்- (என்னைக் களவிலே கலந்த )கள்வனாகிய அவனே என்னோடு இருந்தான்.தான் அது பொய்ப்பின்- அவன் செய்த சூளுரை பொய்யானால், யான் எவன் செய்கோ-யான் என்ன செய்வேன்? தினைத்தாள் அன்ன- தினைப்பயிரின் நீண்டு வளர்ந்த தாளினைப் போல, (தினைப் பயிரின் நீண்ட இலைகளை இன்றும் தாள் என்று கூறுவது நடைமுறையில் உள்ளது.) சிறு பசுங்கால- சிறிய பசிய கால்கள், ஒழுகுநீர்-ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும்- ஆரல்மீனின் வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு- குருகும் இருந்தது,தான் மணந்த –நானும் அவனும் களவில் கூடிய , ஞான்றே- நாளிலே.

பிறர் அறியாதவாறு தன்னோடு கூடியிருந்த தலைவன், இன்று பிறரறிய மணம் செய்து கொள்ள காலம் நீட்டிக்கின்றான் என்றமையால் காதலனைக் கள்வன் என்றாள் போலும்! நாங்கள் இருவரும் சேர்ந்திருந்தவேளையில் அங்கே குருகு ஒன்று இருந்தது. ஆனால், அந்தக் குருகுகூட எங்களைப் பார்க்கவில்லை, மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்லும்போது, “சாட்சியாகக்கூட ஒருவரும் இல்லையே” என்று மனம் குமுறும் ஒரு சாதாரண பெண்ணைத்தான் பார்க்க முடிகின்றது. சரி, பேசக்கூடிய சக்தியாவது குருகுக்கு இருக்குமானால் அவன் என்னிடம் சொன்ன உறுதிமொழியையாவது அது கூறும். ஆனால், அதுவும் இல்லையே என்ற ஆதங்கம், பாடலில் தொனிக்கிறது. இனிய பாடல்! எழுதியது கபிலரல்லவா?


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறுந்தொகையின் 25 ஆவது பாடல்”

அதிகம் படித்தது