மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி – பருவமறிந்து பொழிந்த கவிதை மழை

முனைவர் மு.பழனியப்பன்

Jul 16, 2016

Siragu-krishnamurthy-poet-fi

இருபதாம் நூற்றாண்டு சார்ந்த மரபுக் கவிஞர்களுள் குறி்க்கத்தக்கவர் கு. சா.கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் கவிஞராக உணர்ச்சிப் பெருக்கோடு வாழ்ந்தவர்; தன் மக்கள் திருமண அழைப்பிதழ்களைக் கவிதையால் வடிவமைத்தவர்; மகன் இறந்த துயரத்தைக் கவிதையால் ஆற்றிக்கொண்டவர்; திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நடிகர், நாடக நூல் ஆசான், நாவலாசிரியர் போன்ற பல அடையாளங்கள் இவருக்கு இருந்தாலும் இவரைக் கவிஞர் என அடையாளப்படுத்துவதே பொருத்தமானது.

இவர் பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர். இவர் கவிஞர் கண்ணதாசன், சுரதா போன்றோர்களை வாழ்த்தித் திரையுலகிற்கு வரவேற்ற பெருமைக்குரியவர். நடிகர் பி.யு. சின்னப்பாவிற்குத் தி்ரையுலகில் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தவர்.

இவர் தமிழ் உணர்வு, பக்தி, சான்றோர்களைப் பாராட்டுதல் போன்ற கருப்பொருட்களில் கவிதை வரைந்தவர். மேலும் இவர் வரதட்சணை வாங்குதல், பொருந்தாத திருமணம் செய்தல், சாதி சமய ஏற்றத் தாழ்வுகளால் மக்களைப் பிரித்தல் போன்ற சமுதாய இழிவுகளைத் தம் கவிதைகளால் சாடியவர். இவர் வரைந்த கவிதைகளில் சில நூறு கவிதைகளே அச்சாக்கம் பெற்றன. பல கவிதைகள் சேமிப்பார் இன்றித் தொகுக்க முடியாமல் போயின. .

Siragu-krishnamurthy-poet2இசையின்பம், அமுதத்தமிழிசை, அருட்பா இசையமுதம், பருவமழை போன்றன இவரின் கவிதை நூல்கள் ஆகும். இவற்றுள் இசையின்பம் (1946) பல்வேறு இசைப்பாடல்களைக் கொண்டுத் தொகுக்கப்பெற்ற இவரின் மூத்தப் படைப்பாகும். அருட்பா இசையமுதம் என்பது வள்ளலார் பாடல்களுக்கு இசைவடிவம் தந்த நிலைப்பாடுடையது. அமுதத்தமிழிசை (1980) என்பது பல்வேறு பாடல்களை இசை, தாளக்குறிப்புடன் கொண்டுத் தொகுக்கப்பெற்றதாகும். பருவமழை (1978) இவரின் தேர்ந்த கவிதைகளைக் கொண்டுத் தொகுக்கப்பெற்ற நல்ல தொகுப்பாகும். இதனுள் இசையின்பம், அமுதத்தமிழிசை ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த பல நல்ல கவிதைகளும் உள்ளன. பல புதிய கவிதைகளும் இணைக்கப்பெற்றுள்ளன. வானதி பதிப்பகத்தாரால் கண்ணதாசன் கவிதைகளைத் தொகுத்த முறையில் இது தொகுக்கப்பெற்றுள்ளது. மேற்சுட்டிய கவிதைத் தொகுப்புகள் இவரின் கவிஆழத்தை உணர்த்தி நிற்பனவாகும்.

இவரின் கவி்தையாற்றலை ‘‘கு. சா. கி அவர்கள் எப்பொழுதும் வாயில் வெற்றிலை தரித்த வண்ணமே இருப்பவர். வெற்றி்லை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றின் கலவையால் அவர் வாய் சிவந்து சிறப்புப் பெறுவது போலவே எளிய நடை என்ற வெற்றி்லையுடன் கருத்துவளம் என்ற பாக்கைச் சேர்த்து, யாப்பமைதி என்ற சுண்ணாம்பைத் தடவி தன் கவிதையெனும் வாய்க்குச் சிவப்பூட்டியிருக்கிறார். சிலருடைய வாய்க்கு வெற்றிலைப் பாக்கு அதிக சிவப்பைத் தராது. சிலருக்கோ நன்கு சிவக்கும். கு.சா.கியின் வாய் நன்கு சிவப்பதுபோலவே அவருடைய கவிதையும் சிறந்து காணப்படுகிறது’’ என்று கணிக்கின்றார் சிலம்பொலி செல்லப்பன். இவரின் கவிதைகளில் பொருள் ஆழம், எளிய நடை, யாப்புச் செழுமை ஆகியன திறம்பட இருக்கும் என்பது மேற்கண்ட கருத்தின் வழியாகப் பெறப்படுகின்ற செய்தியாகும்.

பருவமழை என்னும் நூலுக்கு கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆசிரியர் உரையாகத் தன்னுரையை வரைகின்றபோது ‘‘அவ்வப்போது நாட்டின் சூழ்நிலைக்கேற்ப எனது இதயத்தில் எழுந்த உணர்ச்சியின் எதிரொலியே ‘‘பருவமழை’’ என்னும் இக்கவிதை நூல்தொகுப்பு’’ என்று குறிப்பிடுகின்றார். நாட்டின் சூழலுக்கு ஏற்ப நடக்கும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் போக்குடையவர் இக்கவிஞர் என்பதற்கு இவரின் இவ்வரிகளே சான்றுகள் ஆகும்.

இவரின் இசையின்பம் என்ற நூல் தமிழிசைக்குப் பெருமை சேர்ப்பது என்கிறார் சுத்தானந்த பாரதியார். இவ்வாறு தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னுடன் வாழ்ந்த பல அறிஞர் பெருமக்களின் தொடர்பினையும் இவர் பெற்றிருந்தார். இத்தொடர்புகள் வழியாக இவர் தேர்ந்த கவிஞராகவும் நட்புலகில் அறியப்பெற்றிருக்கிறார்.

கு.ச. கிருஷ்ணமூர்த்தியின் கவிதைகள் எளிமையானவை. ஆனால் இசை நலம் மிக்கவை. மக்கள் மனங்களில் உடன் பதியத்தக்கவை. இவற்றின் காரணமாக தமிழ் இசை உலகிலும், மக்கள் மனதிலும் அழியா இடத்தை இக்கவிஞர் பெற்றுத் திகழ்ந்தார்.

பருவமறிந்து பெய்யும் கவிமழை

Siragu krishnamurthy poet5

கு.ச. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நாட்டு நடப்புகளினை அறிந்து அவற்றின் போக்கிற்கேற்ப கவிதைகள் வரைந்தவர். கவிதை எழுத வேண்டும் என எழுதாமல், நடப்புகளைத் தன் பார்வையில் பதிவு செய்ய வேண்டும் எனக் கவிதைகளை வரைந்தவர். இதன் காரணமாக இவரின் கவிதைகள் காலத்தின் தேவை அறிந்துப் பாடப்பெற்றனவாக அமைந்தன.

இவர் வாழ்ந்த காலத்தில் ஒருமுறை மழை பெய்யாமல் வளம் குன்றியது. மழை பெய்வதற்காக திருமயிலாப்பூர் கபாலிசுவரர் கோயிலில் மழை வேண்டல் கவியரங்கம் ஒன்றை வானதி திருநாவுக்கரசு நடத்த திட்டமிட்டார். இக்கவியரங்கில் பல கவிஞர்கள் மழை வேண்டிக் கவிதை புனைந்தனர். அப்போது இவரின் கவிதை – மழை பெய்ய – மழை எனப் பொழிந்தது.

‘‘நட்ட நடுப்பகுதியுறும் பூமிப் பந்தின்

நன்னீரை உவர் நீரைக் கழிவு நீரைச்

சுட்டெரித்துக் கதிர்த் தூய்மை ஆவியாக்கிச்

சுண்டியிழுத்திடும்வேளை இடையில் ஆங்கே

வெட்டவெளிப் பொட்டலிலே காற்றின் வட்டம்

விளையாடிச் சுழன்றதனை விசும்பாய் மாற்றி

வட்டமிடும்போது அதன் மேல் குளிர்ச்சி மோத

வான்மேகம் பெய்வதையே மழை என்கின்றோம்’’

என்ற இக்கவிதை இவரின் கவிமழையாற்றலுக்கு நல்ல சான்று. இக்கவிதையில் மழை பெய்யும் முறைமையை அழகிய முறையில் இவர் வடித்துள்ளார்.

இவரது வாழ்வில் ஈடு கட்டமுடியாத சோகம் ஒன்று வந்துசேர்ந்தது. இவரின் அருமை மகன் அசோகன், இவர் பாடல்களைப் படியெடுத்துப் பாதுகாக்கும் மேன்மை குணம் கொண்ட செல்வன். தன் மணத்தைத் தாமதமாக்கித் தன் உடன்பிறந்தார் மணத்தை விரைவுபடுத்திய மகன் எதிர்பாராமல் சாலைவிபத்தில் இறந்து போகின்றான். அப்போது இவரின் துயரம் கவிதைகளில் வெளிப்படுகின்றது. இத்தருணத்தில் தன் வாழ்க்கையையும் தன் கவிதைகளுக்குள் மதிப்பிடுகிறார் கவிஞர்.

       ‘திரைப்படத்துறையில் முன்பு

              திரட்டிய செல்வமெல்லாம்

       வரட்டு ஜம்பத்துக்காக

              வருபவர் போவோர்க்கெல்லாம்

       இரைத்து விட்டதனால் கல்வி

              இளமைக்குப் பயனில்லாமல்

       இருட்டினிலே வைத்தேன் என்றா

              இவ்வாறு என்னைத் தண்டித்தாய்?’’

என்ற இக்கவிதையில் தன் வாழ்வை எடைபோட்டுக் கொள்கிறார் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. திரைத்துறையில் அதிகம் பணம் திரட்டும் வாய்ப்பு வந்தபோதும் அவற்றைச் சரியாகச் சேமிக்காமல் செலவழித்த தன் வாழ்வின் நிலையைக் கவிஞர் இக்கவிதைக்குள் எண்ணிப் பார்க்கிறார். தன் மகனின் கல்விக்குச் செலவிட முடியாத நிலையில் அவர் இருப்பதையும் இக்கவிதை எடுத்துரைத்து விடுகின்றது.

இவ்வாறு தன் வாழ்வையும், சமுதாய வாழ்வையும் முன்வைத்து அவற்றின் பதிவுகளாக இவரின் கவிதைகள் அமைகின்றன. மேலும் இவரின் கவிதைகள் இந்தியத் தத்துவப் பின்னணி சார்ந்து இயங்குவதால் மற்ற கவிஞர்களிடமிருந்தும் அவர்களின் படைப்புகளில் இருந்தும் இவரின் கவிதைகள் வேறுபட்டமைகின்றன. தனித்துவம் மிக்கனவாக விளங்குகின்றன.

கு.சா. கிருஷ்ணமூர்த்தி தரும் கவிதைக்கான இலக்கணம்

கு.சா. கிருஷ்ணமூர்த்தி கவிதை பற்றிய தெளிவான பார்வை உடையவர். அவரின் கவிதைகள் காலம் சிறக்க வழி காட்டவேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.

       ‘‘ யாப்பும் இலக்கணமும் அணியும் தெரிந்தெழுத்தைக்

       கோப்பதுதான் கவிதையென்றால் குப்பையில் போடென்பேன்!

       யாப்பெதுகை மோனையின்றி அடுக்குச் சொல் வரிவரியாய்ச்

       சேர்ப்பதுதான் கவிதையென்றால் சீசீசீ எனவுரைப்பேன்

       புரட்சியின்றி உணர்ச்சியின்றிப் புதுமையற்ற சொல்லடுக்கி

       அரட்டுவது கவிதையில்லை. அவற்றாலோர் பயனுமில்லை

       முந்தியவர் பெருமை சொல்லி மூண்டிருக்கும் சிறுமை எள்ளி

       வந்திடும் காலம் சிறக்க வழிகாட்டல் கவிதை என்பேன்’’

என்பது கு. சா. கிருஷ்ணமூர்த்தியின் கவிதைக் கொள்கை ஆகும்.

மரபுக்கவிதைகளில் அழகிற்காகச் சேர்க்கப்படும் எதுகை, மோனைத் தொடைகளுக்கு இவர் முக்கியத்துவம் அளித்துச் சொற்களைக் கோர்க்கின்ற பணியால் கவிதை செய்ய முன்வரமாட்டார்.

இவர் வெறும் சொல்லடுக்குளில் கவிதைகளை அமைத்துத் திருப்தி அடைபவர் அல்ல.

புரட்சிக்கருத்துகளோடு, புதுமை நோக்குடன், சிறுமைகளை தள்ளிடப் படைக்கப்படுவதே கவிதை என்ற நோக்கில் நின்றவர் கு,சா. கிருஷ்ணமூர்த்தி.

மற்றொரு நூலில் தமிழின் கவிதைப் பெருமையை இவர் எடுத்துரைக்க வரும்போதும் நல்ல கவிதைக்கான இலக்கணத்தை வரைகின்றார்.

       ‘‘எதுகையோடு நல்ல மோனையும் எழில்சேர்

       இனியபொருள் சொரியும் எளிய தமிழில் பண்ணைச்

       சுதியுடன் இணைந்தே லயத்துணையோடு

       சொல் வழுவில்லாமல் சொல்லும் செழுந்தமிழ்’’

என்ற இந்தக் கவிதைப் பகுதி தமிழ்க் கவிதைக்கு இலக்கணம் தருவதாக உள்ளது.

தமிழ்க் கவிதை இசையோடு பாடப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் எழுதப்படவேண்டும் என்பது கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆர்வமாக உள்ளது. இதன் காரணமாகவே அமுதத்தமிழிசை என்ற நூலை இசைக் குறிப்புகளுடன் இவர் வெளியிட்டுள்ளார். சொல் வழுவில்லாமல் எதுகை, மோனையுடன் பொருள் விளங்க பண், சுருதி, லயம் ஆகியன இணையப் படைக்கப்படுவது கவிதை என்ற கருத்துடையவர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி.

கவிதைக்கு இலக்கணம் வரைந்த இவர் கவிஞருக்கும் இலக்கணம் வரைகின்றார்.

       ‘‘ புவியை அளக்கும் எம் உள்ளம்- காணும்

              புன்மைகள் யாவையும் போக்கிடுதற்குக்

       கவிதைப் பல்லாயிரங்கோடி – செய்து

              காரிருள் காயும் கதிரென நிற்போம்

என்ற இந்தக்கவிதை கவிஞர்க்கான இயல்புகளை எடுத்துரைப்பதாக உள்ளது. சமுதாயப் புன்மைகளைப் போக்கிடும் கவிதைகள் செய்யும் கதிரவனாக உலகை கவிதையால் அளக்கும் வல்லமை பெற்றவர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி என்பதற்கும் இக்கவிதை அடையாளமாகின்றது.

தமிழ் உணர்வு

tamil mozhi fiபண்டைக் காலந்தொட்டுத் தமிழில் கவிதையே ஆட்சி செய்து வந்ததைச் சிறப்பெனக் கருதுகிறார் கு.சா. கிருஷ்ணமூர்த்தி.‘‘உலகக் கலைகள் அனைத்திலும் தலைசிறந்தது கவிதைக்கலை. அதனிலும் உன்னதப் பெருமை வாய்ந்தது தமிழ்மொழிக்கவிதை என்பது ஆன்றோர் கருத்து. இதற்கு முதலாவது காரணம் தமிழுக்கே உரிய தனிப்பெரும் ஆற்றல், அதன் தொன்மை, வன்மை, வளமையாகும். இரண்டாவது காரணம் அதைக் கையாண்ட பெருமக்களின் திறமை, தகுதி, புலமை ஆகியனவாகும்’’ இவ்விரு காரணங்களின் அடிப்படையில் தமிழ்க்கவிதை சாகாவரம் பெற்றது என்று குறிக்கிறார் கு.சா. கிருஷ்ணமூர்த்தி. இக்கவிதைப் பரம்பரையில் தானும் ஒரு கவிஞராக இடம் பெறுவதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றார் கவிஞர்.

தமிழின் கவிதையாற்றலுக்கும், கவிதைப் பெருக்கத்திற்கும் தலைவணங்கும் கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழ் உணர்வுமிக்கக் கவிஞராகவும் விளங்குகின்றார்.

       ‘‘சிந்தாமணி இழை சிரத்தினிலாட

       செவிகளில் குண்டலகேசிகளாட

       செந்தாமரை வாய்த் திருக்குறள் பாட

       செந்தளிர்க்கரத்தில் வளையாபதியாட

     இந்துவை நிகழ்த்திடும் எழில் முகங்காட்டி

       இனிய செந்தேன் தமிழ் இசையமுதூட்டி

       செந்திருமேனியின் மணிமேகலை பூட்டி

       சிலம்பணி புனைந்திடும் செல்வ சீமாட்டி

       வந்தனள் எந்தன் செந்தமிழ்க்காதலி

       சிந்தனை உலகினிலே ஒருநாள்’’

என்ற பாடலில் உன்னத இலக்கியங்களை அணிந்தவள் தான் விரும்பும் செந்தமிழ்க்காதலி என்று பெருமை கொள்ளுகின்றார் கவிஞர்.

அமுதத் தமிழிசை தொகுப்பில் இடம் பெற்றுள்ள பின்வரும் கவிதை பாவேந்தர் பாரதிதாசன் கொண்டிருந்த தமிழ்ப்பற்றுக்கு இணையாக கு.சா. கிருஷ்ணமூர்த்தியை எண்ணவைக்கின்றது.

’‘புதுப்புனலே புனலில் பூத்ததோர் தாமரை

பூவே பூவின் சுவைமிகும் தேனே- என்

இதய வண்டு உந்தன் அமுதத்தேன் பருகி

இன்ப மணம் நுகர அன்பு பெருகியதால்

இடர்களைந்திடும் கூர்வாளும் நீயே- என்

எண்ணமும் செயலும் வாழ்வும் நீயே

திடமளிக்கும் அறிவின் சக்தியும் நீயே

செல்வமெல்லாம் தரவல்லவள் நீயே’’

என்ற இக்கவிதையில் தமிழை எண்ணமும், செயலும், வாழ்வும், அறிவும், சக்தியும், செல்வமும் ஆக எண்ணுகிறார் கு.சா. கிருஷ்ணமூர்த்தி.

தமிழின் தனிச்சிறப்பு ‘ழ’ காரம் என்ற எழுத்தாகும். இவ்வெழுத்தின் சிறப்பினையும் கவியடிகளில் ஒன்றாக ஆக்கியுள்ளார் கவிஞர்.

       ‘‘அமையும் பொருள் நயமும் அழகும் நிறைந்தது

       அரிய ழ காரத்தனிச் சிறப்பால் உயர்ந்தது’’

என்று தமிழின் தனிச்சிறப்பைத் தன் கவியடிகளில் உணர்த்தியுள்ளார் கவிஞர்.

இவ்வாறு தமிழ்க் கவிதை வடிவத்தையும், தமிழின் தனிச்சிறப்புகளையும் எடுத்துரைத்துத் தமிழ் வளர வழி வகுத்தவராகின்றார் கு.சா. கிருஷ்ணமூர்த்தி. இவருடைய காலத்தில் தெலுங்கு இசை தமிழகத்தில் தலைதூக்கி இருந்தது. அந்நி்லையை மாற்றித் தமிழ் இசை தலை நிமிர இவர் பாடல்கள் பாடினார். தமிழ் உணர்ச்சியைப் பாடல்கள் வழி பெருக்கினார்.

சான்றோர்களைப் போற்றுதல்

நாடு முன்னேற, தமிழ் தழைக்கப் பாடுபட்ட சான்றோர்களைப் போற்றும் நன்மரபினையும் கு.சா. கிருஷ்ணமூர்த்தி கைக்கொண்டுள்ளார். மகாத்மா காந்தி, பண்டித நேரு, கலைவாணர், திரு.வி.க, பாரதி, இளங்கோ, வள்ளுவர், சுந்தரர், மாணிக்கவாசகர், வள்ளலார், சித்தர்கள், ஔவையார், சங்கரதாஸ் சுவாமிகள், இராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி, விவேகானந்தர் போன்ற பல சான்றோர்களை போற்றும் கவிதைகளை கு.சா. கிருஷ்ணமூர்த்தி படைத்தளித்துள்ளார். அவற்றில் ஒன்றிரண்டு பின்வருமாறு.

       ‘‘திங்களை ஞாயிற்றினை வான்மழைத்

              தேவியைக் காவிரியை – எங்கும்

       பொங்கும் இயற்கையினை இறையெனப்

              போற்றிய மாகவிஞன்

       பெண்ணின் பெருமையெல்லாம்

              உலகில் பேசி முழக்கவந்த முதல்

       வண்ணத்தமிழ்க்கவிஞன்- அவன் புகழ்

              வாழ்த்தி வணங்கிடுவோம்’’

என்ற இந்தப் பகுதியில் இளங்கோவினை அவர் பாடிய சிலப்பதிகாரத்தின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ள இயற்கை வாழ்த்திற்காகப் பாராட்டுகிறார் கவிஞர். இளங்கோவை இவர் பெண்ணின் பெருமை பேசிய வண்ணத் தமிழ்க் கவிஞராகக் காண்கின்றார் கவிஞர்.

பாரதியாரைப் பற்றிய இக்கவிஞரின் பாடல் பின்வருமாறு.

‘‘அறிவு ஓங்கி வையம் தழைக்கப் பாடியவன் – உலகில்

ஆணும் பெண்ணும் ஓர் நிகரெனப் பாடினான் – அடிமைச்

சிறுமை வாழ்வுச் சிதைவுறுமெனப் பாடினான் – நாட்டின்

திறமை மேவும் தொழில் வளங்கள் பெருகவென்று பாடினான்’’

என்று பாரதியாரின் கவிதைகளைக் கொண்டே அவரின் கருத்துகளைக் கொண்டே பாரதியார்க்குப் புகழ்க் கவிதையைப் படைக்கிறார் கு.சா. கிருஷ்ணமூர்த்தி.

       ‘‘நாடகத்திற்கான கதைக் கருவூலத்தை

              நல்லபடி தேர்ந்தெடுத்தல்- தேர்ந்தவற்றைப்

       பீடுபெறக் காட்சிகளாய் அமைத்தல்- காட்சிப்

              பின்னலிடை நவரஸத்தைப் புகுத்தல்- ஆடல்

       பாடல்வகை இடையிடையே வைத்தல்- மற்றும்

              பாத்திரங்கட் கேற்ற உரையாடல் எல்லாம்

       ஆடரங்கமின்றிதிரை அரங்கினுக்கும்

              அவரளித்த வழிமுறையே மறுப்பார் யாரே’’

என்ற கவிதை சங்கரதாஸ் சுவாமிகளுக்குப் பாடப்பெற்ற கவிதையாகும். இக்கவிதையில் ஆடரங்கத்திற்கும் திரையரங்கிற்கும் உரிய வழிமுறைகளை உருவாக்கித் தந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள் என்று அவர் பணியைப் பதிவு செய்கின்றார்..

இவ்வாறு சான்றோர்களைப் போற்றி வணங்கும் பணிவுடைமை உடையவராகவும் அவர்களின் பணிகளைத் தமிழகத்திற்கு அறிவிப்பவராகவும் கு.சா. கிருஷ்ணமூர்த்தி விளங்குகின்றார்.

தெய்வம் பணிதல்

கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் தொடக்க கால கவிதையாக்கங்கள் பெரும்பாலும் தெய்வங்களைப் போற்றும் கவிதைகளாகவே அமைந்திருந்தன. தமிழிசை வழியாகப் பக்தி வளர்த்த பாடகர்களான சீர்காழி கோவிந்தராசன், மதுரை சோமு , டி.எம். சௌந்தரராசன் போன்ற பல பாடகர்கள் இவரின் தெய்வீகம் சார்ந்த பல பாடல்களை மேடைகளில் முழங்கினர். இவர்களின் தேவைக்காகவும் நட்பிற்காகவும் தன் மன அமைதிக்காவும் பல தெய்வப் பாடல்களை இவர் எழுதியுள்ளார். தெய்வ வலிமையை உணர்த்தும் அப்பாடல்களில் சில இங்கு எடுத்துக்காட்டப்பெறுகின்றன.

       ‘‘அடித்தாலும் அணைத்தாலும் அன்னை உன்னை

       ஆதரித்தாள்வது யாரம்மா – என்

       அகத்தாலும் அறியாமை மனத்தாலும் நான் என்ன

       அபராதம் செய்தாலும் பொறுத்தாளம்மா

       படித்தாலும் தேடிய பணத்தாலும் உலகில்

       பயன்ஏதும் காணேன் அம்மா- யார்

       பழித்தாலும் என்னைப் பகைத்தாலும் கடைக்கண்

       பார்ப்பதுன் பாரமம்மா- அம்மா

கற்பகமேஉனது பொற்பாதமல்லாது

கடைத்தேற வழியேதம்மா- அம்மா’’

என்ற இப்பாடல் டி.எம். சௌந்தரராசன் குரலில் பரவலாக அறியப்பட்ட அம்பிகை மீதான பாடல் ஆகும். அகத்தால் செய்த பிழை, அறியாமல் செய்த பிழை எதுவானாலும் பொறுத்துக் காத்தருள்வது கற்பகாம்பிகையின் கடன் எனக் கவிஞர் தன்னை அவளிடம் இக்கவிதை வழி ஒப்படைக்கிறார். படிப்பாலும், பணத்தாலும் பயன் ஏதுமில்லை, அம்பிகையின் அருள் இருந்தால் எல்லாம் நலமாகும் என்பது இக்கவிதையின் மையக்கருத்து ஆகும்.

முருகக் கடவுளைப் புகழும் மற்றொரு தெய்வக் கவிதை பின்வருமாறு.

       ‘‘பாலாபிஷேக யோகன் பக்தர்க்கிரங்கும் தியாகன்

       பாவை வள்ளிதன் மோகன் பரமதயாளன்

       வேலாயுதவிமல கோலகலன் அன்பர்

       மேலான பதம் புகழ் மாலின் மருகன்யேகன்’’

என்ற இப்பாடல் இசைவடிவமாய் முருகனை துதிக்கின்றது. காவடிச்சிந்தின் அமைப்பு பெற்றது. இதுபோன்ற பல பக்தி நலம் சொட்டும் கவிதைகளை இக்கவிஞர் படைத்துச் சிறந்துள்ளார்.

‘‘ கடந்திட முடியாத கடலிடை எனைமீட்கக்

கப்பலில் வந்து நீ கையெடுப்பாய்

கனலிடை வெந்து நான் துடித்திடும் போதங்கே

கார்மழையாய்ப் பெய்தென் துயர்துடைப்பாய்்

நடந்திட முடியாமல் தவித்திடும் போதெந்தன்

நற்றுணைவன் ஆகி எனை எடுப்பாய்

நலிவுறும் பசியால் நான் அலைவுறும் போதெல்லாம்

வலிய வந்தமு தூட்டிப் பசி தவிர்ப்பாய் என்றே’’

என்ற இப்பாடலில் துயர் வரும் வேளைகளில் துன்பம் துடைக்கப் பரம்பொருள் வந்து சேரும் என்று நம்புகின்றார் கவிஞர்

இவ்வகையில் பக்திப் பாடல்களை பாடுபவர் கேட்பவர் உள்ளம் உருக படைத்திட்டவர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி என்பது உறுதியாகின்றது.

சமுதாய நலம் பெறப் பாடியவர்

கு.சா. கிருஷ்ணமூர்த்தி சமுதாயம் நலம் பெறவும் பாடியவர். சமுதாயத்தில் நிகழும் கொடுமைகளை எதிர்த்தும் பாடியவர். இவ்வகையில் இவரின் கவிதைகள் புதுப்பொலிவும் புரட்சியும் பெற்றுத் திகழ்கின்றன.

வரதட்சணை பெறுவது தவறென்பதை இவரின் பல கவிதைகள் எடுத்தியம்புகின்றன.

              ‘‘உணர்வும் உளமும் உடலும் உயிரும்

            ஒப்படைப்பவளிடம் பேரமா

             உன் இன்ப வாழ்வுக்குத் தன் வாழ்வையெ நல்கும்

              உத்தமியாள் உனக்கோர் பாரமா

              பணம்தான் நீ விரும்பும் இல்லற வாழ்வுக்கு

              பயன்படும் லட்சிய தாரமா?’’

என்ற பாடலடிகள் வரதட்சணை வாங்கும் எண்ணமுடைய அனைவரையும் சாடுகிறது. குறிப்பாக வரதட்சணை வாங்கும் மணமகனை நேர் நிறுத்திக் கேள்வி கேட்கின்றது.

உடல் நோயுற்ற ஒருவனைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்து திருமண நாளன்றே பெண்ணைக் கைம்பெண் ஆக்கிய நிகழ்வினைக் கண்ட கவிஞர் பின்வருமாறு கொதிக்கின்றார்.

‘‘மணமான அன்றிரவே மடமான் தன்னை

       மது துளிர்க்கும் மலர்ந்த புதுமலரை இன்ப

       உணர்வெழுப்பும் எழில் நிறைந்த ஒளிநிலாவை

       ஒப்பற்ற கலாநிதியைப் போன்ற அன்புக்

       குணவதியை பெண்ணினத்தைக் கொத்தித் தின்னும்

       கோட்டான்கள் மத்தியிலே தனியே விட்டுப்

       பிணமானான் மணவாளன் மணப்பெண்ணோடு

       பெற்றோரும் துடிதுடித்தார் புழுவைப்போலே!’

என்ற இப்பாடலில் திருமணம் என்ற பெயரில் பெண்ணிற்கு நடக்கும் அநியாயத்தின் கொடுமைப் பகுதி சுட்டப்படுகிறது.

மது குடித்து மனம் போன போக்கில் மானம் கெட்டு அலைவதைத் தவிர்க்கப் பாடுகின்றார் கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி

‘‘மானத்தையும் தள்ளி தானத்தையும் செய்யும்

              தானத்தையும் விடுக்கும் –அவ

     மானத்தையும் அடுக்கும்- மது

பானங்குடித்து மயங்கிவிட்டால்கலை

              ஞானத்தையம் கெடுக்கும்-மதி

              ஈனத்தையம் கொடுக்கும்- மதுக்

கிண்ணத்தை ஏந்தாதே- கெட்ட

       எண்ணத்தில் நீந்தாதே’’

என்ற இந்தக் கவிதை மது அருந்தும் பழக்கத்தை மனிதர்கள் விட்டொழிக்க வேண்டுகோள் விடுக்கின்றது. தற்காலத்திற்கும் இக்கவிதை வேண்டுவதாகின்றது.

சமுதாயக் கேடு களையப் பாடிய கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனிமனித ஒழுக்கத்தின் மேன்மைகளையும் தம் கவிதைக்குள் கொண்டுவந்து சேர்த்துள்ளார்.

       ‘‘பிறர் துன்பம் கண்டு இரங்குவதே மனிதப்

       பிறவியின் பயனாகும் – மனமே

       அறமெனச் சொல்வது அவனியின் மீதே

       ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்வதே

       மறந்தும் எவர்க்கும் நீ தீமை செய்யாதே உன்

       வலிமைக்கு எளியோரைப் பலியிட்டிடாதே

       பிறந்தார் இறப்பதும் மறப்பதும் உண்டுலகில்

       பேரருளாளர் என்றும் இறப்பதில்லை’’

என்ற இக்கவிதையில் தனிமனிதருக்கான நெறிகள் பல எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. மனிதநேயம் இன்னதென அறிவிக்கப்படுகின்றது.

       ‘‘அடுத்துக் கெடுக்க எண்ணும் நண்பனிலும் பகைவன்

       ஆயிரம் வகையில் மேலானவன் நம்மை

       நடித்து நயவுரைகள் நாட்கணக்கில் தொடுத்து

       படித்துப் படித்து நம்மைப் படுகுழியில் வீழ்த்தும்’’

என்ற பாடலில் தனிமனிதனுக்கு ஏற்படும் உறவுகளில் நண்பன், பகைவன், அடுத்துக் கெடுக்கும் நண்பன் ஆகியோர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. அடுத்துக் கெடுத்த நண்பர்களால் அழிவுற்றோர்க்கு இவ்வடிகளின் உண்மைத் தன்மை பெரிதும் தெரியவரும்.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் முக்கியமானவர் என்பதை இவரின் மற்றொரு பாடலடி விவரிக்கின்றது.

       ‘‘எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை உலகில்

       ஏதும் தெரியாதவன் ஒருவனில்லை’’

தனிமனிதர் அவரின் சிறப்பு, மாண்பு இவற்றோடு அவர் சமுதாயத்துடன் உறவு கொள்ளும்போது ஏற்படும் தொண்டு உள்ளம் ஆகிய நல்லறங்களைப் பாடிய நலமான கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆவார்.

புதுக்கோட்டையில் டவுன் பாங்க் எனப்படும் நிறுவனம் தன் பொன்விழாவைக் கொண்டாடியபோது கவிதை ஒன்றைப் படைக்கின்றார் கவிஞர்.

‘‘புதுக்கோட்டை தனிஉரிமை இழந்திட்டாலும்

புரட்சியினால் மக்கள் உள்ளம் நலிந்திட்டாலும்

மதுக் கூட்டைத் தகர்க்க எண்ணும் மந்தி போன்றோர்

மனக்கோட்டைத் தனைத் தகர்க்கும் தேனீக்கள் போல்

நிதிக்கோட்டைத் தாங்கும் டவுன் பாங்க் என்னும்

நிலையத்தைக் காத்துப் பொன்விழாவும் கண்ட

மதித்தேட்டம் நிறைந்தோரே!’’

இக்கவிதையில் புதுக்கோட்டை தனியாட்சியை இழந்ததை வருத்தத்துடன் பதிவு செய்கிறார் கு.ச. கிருஷ்ணமூர்த்தி. இருப்பினும் தனியாட்சியில் சிறப்புடன் விளங்கிய நிதி அமைப்பான டவுன் பாங்க் தன் நிலை மாறாமல் தாழாமல் தொடர்ந்து பணி செய்வதைப் பொன்விழாவில் கவிதையால் கவிஞர் பாராட்டுகின்றார். இத்துடன் நில்லாமல் புதுக்கோட்டை தனியரசு இருந்ததற்கான அடையாளமாக டவுன் வங்கி விளங்குவதையும் இக்கவிதை எடுத்துக்காட்டுகின்றது,

இவ்வாறு பருவமழையாக தன் காலப் பதிவாக கவிதைகளைப் படைத்துக் கொண்டவர், நேரிய கவிதையாற்றல் உடையவர், இசைநலம் அறிந்து கவிதைகளைப் படைத்தவர் என்பதும் இவரின் தனித்த பெருமைகள் ஆகும்.

தொகுப்புரை 

கு.சா. கிருஷ்ணமூர்த்தி படைப்பிலக்கியத் துறை, திரைத்துறை, நாடகத்துறை, ஆய்வுத்துறை போன்ற பல துறைகளில் தடம் பதித்தவராக விளங்குகின்றார். தன் கால அறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பு மிக்கவராகவும் அவர் விளங்கியுள்ளார். இவரின் கவிதை ஆற்றல் என்பது இயல்பானது. கவிதை எழுத வேண்டும் என்ற கட்டாயத்தின்படி ஏற்பட்டது அல்ல. பருமறிந்து பெய்கின்ற மழை போன்று தங்குத் தடையின்றித் தேவையானபோது, தேவையானவர்க்காக, தேவையான அளவறிந்துப் பாடப்படுவது.

தன் வாழ்வின் பிரதிபலிப்பாகவும், தன் கால சமுதாய வாழ்வின் பிரதிபலிப்பாகவும் கவிதைகளைப் புனைந்தளித்தவர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. இவரின் கவிதைகள் தாள, லயக் குறிப்புகளுக்குள் அடங்குபவை. இதன் காரணமாக தமிழிசை வாணர்கள் இவர்களின் பல பாடல்களை தமிழிசை வளர்வதற்காக எடுத்துக் கொண்டு பல மேடைகளில் பாடியுள்ளனர்.

வரதட்சணை மறுப்பு, மது ஒழிப்பு, பொருந்த மணத்தைக் கண்டித்தல் போன்ற சமுதாயக் கேடுகளைக் களைய இவரின் கவிதைகள் குரல் தந்துள்ளன. பக்தி வளர்க்க, தமிழ் உணர்ச்சி தமிழரிடத்தில் பெருக. தனிமனித ஒழுக்கம் சிறக்க இவரின் கவிதைகள் உரமூட்டுகின்றன.

இவரின் கவிதைகளில் இசை, மரபு, எதுகை, மோனை ஆகியன நிரம்பியருந்தாலும் அவற்றின் அடிநாதமாக புதுமைப் பொருள், சமுதாய நலிவுகளை எடுத்துரைத்தல் என்ற நிலைப்பாடு காணத்தக்கதாக உள்ளது என்பது மெய்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கு.சா.கிருஷ்ணமூர்த்தி – பருவமறிந்து பொழிந்த கவிதை மழை”

அதிகம் படித்தது