மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூடா நட்பு (சிறுகதை)

மா.பிரபாகரன்

Feb 18, 2017

Siragu koodaa natpu

ஒரு ஊருக்கு வெளியே தூர்ந்த குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் சர்ப்பம் ஒன்று வசித்து வந்தது. குளத்தில் பெயரளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. குளத்தைச் சீந்துவார் யாருமிலர். அந்த குளத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் தடாகம் ஒன்று இருந்தது. அதில்தளும்பத் தளும்பத் தண்ணீர் கட்டி கிடந்தது. தடாகத்தில் தாமரை மலர்களும் அல்லிமலர்களும் நிறையப் பூத்துக் கிடந்தன. தடாகத்தில் அன்னம் ஒன்று வசித்து வந்தது. அது பூக்களோடு உறவாடிக் கொண்டும், சுவைமிகு தடாகநீரைப் பருகிக் கொண்டும், ஆடியும் பாடியும் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தது. சர்ப்பம் அன்னத்தின் வாழ்க்கையோடு தனது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தது. அன்னத்திற்குத்தான் எத்தனை சொகுசான வாழ்க்கை? அன்னத்தை யாரும் எந்தத் தொந்தரவும் செய்வது இல்லை. ஆனால் சர்ப்பத்தைக் கண்டாலே கல்லெறிந்து கொல்ல வருகிறார்கள். சர்ப்பத்திற்கு அன்னத்தின் மீது பொறாமை வந்தது. அன்னத்தை காணும்போதெல்லாம் அதன் பொறாமைத் தீ வளர்ந்தது. அன்னத்தின் மகிழ்ச்சியைக் கெடுக்க வேண்டும் என சர்ப்பம் நினைத்தது. அதற்கு ஓரேவழி உறவாடிக் கெடுப்பதுதான் என முடிவு செய்தது.

தடாகத்தில் அன்னம் வசித்து வருவது சர்ப்பத்திற்குத் தெரியும். ஆனால் குளத்தில் சர்ப்பம் இருப்பது அன்னத்திற்குத் தெரியாது. ஒருநாள் அன்னம் குளக்கரையில் வந்தமர்ந்தது. அப்போது சர்ப்பம் அன்னத்திடம் பேச்சுக் கொடுத்தது. சர்ப்பத்தை கண்டதும் அன்னம் அஞ்சி பின்வாங்கியது. “பயப்படாதே! நான் உனது நண்பன்தான்! நீ அழகாக இருக்கிறாய்! உன்னைக் காண்பதும் உன்னோடு பேசுவதும் மிகவும் இனிமையான விசயம்!”- என்று அன்னத்தை புகழ்ந்து பேசியது. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார்? அன்னம் சர்ப்பத்தின் புகழ்ச்சிக்கு மயங்கியது. அதோடு நட்புக்கொள்ள ஆரம்பித்தது. அதைக் கண்ட மூத்தஅன்னம் ஒன்று (கதையில் இரண்டு அன்னங்கள் வருவதால் இனிமுதல் மூத்தஅன்னத்தை பெரியபறவை என்றழைக்கலாம்) “அவன் நயவஞ்சகன்! அதனால்தான் மறைந்து வாழ்கிறான்! வேண்டாம் அவன் நட்பு!”- என்று எச்சரித்தது. பெரிய பறவையின் எச்சரிக்கையை அன்னம் கண்டுகொள்ளவில்லை. அதன் கூடாநட்பு தொடர்ந்தது.

ஒருநாள் பேசிக்கொண்டிருந்த போது சர்ப்பம் அன்னத்திடம் பச்சைநிறக்கல் ஒன்றைக் காட்டியது. அந்தக்கல் மிகவும் அழகாய் பளபளவென்று மின்னியது.

“இது என்ன?”-கேட்டது அன்னம்.

“இது மாணிக்கக்கல்! எங்களை மாதிரி வளர்ந்த நாகங்களோட வாயில மாணிக்கக் கற்கள் இருக்கும்! ராத்திரி இதைக் கக்கி வைச்சுட்டு இதோட வெளிச்சத்துலதான் நான் இரை தேடுவேன்!”- என்றது சர்ப்பம். பகலிலேயே இப்படி மின்னுகிறது என்றால் இரவில் இது எப்படி ஒளிரும்? அன்னம் ஆச்சரியத்தில் வாய் பிளந்தது.

“இது உனக்குத்தான்!”என்றது சர்ப்பம். அன்னம் தயங்கியது.

“நண்பனின் அன்புப்பரிசு! தயங்காமல் வாங்கிக் கொள்!”- என்றபடி மாணிக்கக்கல்லை அன்னத்தின் கைகளில் திணித்தது சர்ப்பம்.

தடாகத்தின் அருகிலிருந்த ஒரு மரப்பொந்தில் மாணிக்கக்கல்லை ஒளித்து வைத்தது அன்னம். அதை அவ்வபோது எடுத்து அழகு பார்த்துக்கொண்டது. இதை கவனித்த பெரியபறவை “ஏது உனக்கு இந்தக் கல்?”- என்று கேட்டது.

“சர்ப்பம் எனக்குப் பரிசாகத் தந்தது!”- என்றது அன்னம்.

“இதைப் பார்த்தால் நன்கு வடிவமைக்கப்பட்ட கல் மாதிரி தெரியுது! ஏதோ ஆபரணத்துல பதிச்சகல் மாதிரியும் தெரியுது! இத உனக்குத் தந்துட்டா இதோட வெளிச்சம் இல்லாம எப்படி இரை தேட முடியும்னு சர்ப்பத்தை கேட்கத் தோணலியா உனக்கு? இதுல ஏதோ சூது இருக்கு!”- என்று பெரியபறவை சொல்லிக்கொண்டிருக்கும் போதே கழுகுராஜா தனது படைபரிவாரங்கள் சூழ அங்கு வந்தார். உடன் சர்ப்பமும்.

“அரண்மனையிலிருந்து காணாமல் போன மாணிக்கக்கல் அதோ அந்த அன்னத்திடம்தான் இருக்குது! நான் பார்த்தேன்!”- என்றது சர்ப்பம்.

“அப்பாவி அன்னம் என்பதால் அந்தப்புரம் வரை வர அனுமதிச்சா என் கிரீடத்துல இருக்குற மாணிக்கக்கல்லைத் திருடிட்டுப் போற அளவுக்கு நீ துணிஞ்சிட்டியா?”- என்ற ராஜா தனது காவலர்களிடம் “அந்த அன்னத்தை கோட்டைச்சிறைக்குக் கொண்டுவாருங்கள்! நாளை அதற்கு மரணதன்டனை!”- என்று உத்தரவிட்டு விட்டுப் போய்விட்டார்.

“நான் திருடல! அந்த சர்ப்பம்தான் மாணிக்கக்கல்லை எனக்குக் கொடுத்துச்சு!”- என்று அன்னம் கூக்குரலிட்டது. ஆனால் அதைக் கேட்பார் யாருமிலர். அதன் குரல் காற்றோடுகாற்றாக கரைந்து போய்விட்டது. திகைத்து நின்ற அன்னத்தைப் பார்த்த சர்ப்பம் எக்காளமிட்டது. அருகிலிருந்த குத்துச்செடி ஒன்றின் மீதேறி வக்கிரக் களிப்புடன் நடனம் ஆடியது.

அன்னம் அழுத அழுகை சொல்லி மாளாது. “பார்த்தாயா கூடாநட்பினால் விளைந்த துன்பத்தை? உன்னைச்சுத்தி ஏதோ சதிவலை பின்னப்படுது! சதிவலையின் ஒருபாதி இந்த சர்ப்பம்! மறுபாதி அரண்மனையிலிருக்கிறது! நீ கலங்காமல் இரு! நான் உன்னை மீட்க முயற்சி செய்யுறேன்!”- என்ற பெரியபறவை அன்னத்தை காவலர்களுடன் அனுப்பி வைத்தது. பெரியபறவை யோசித்தது. அன்னத்தின் மீதான சர்ப்பத்தின் பொறாமையை அதனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் மாணிக்கக்கல்? அரண்மனையின் கட்டுக்காவலை மீறி மன்னரின் கிரீடத்திலிருந்து அதை அத்தனை எளிதில் எடுத்து வரமுடியாது. அங்கிருப்பவர்கள் யாராவது உதவி செய்திருக்க வேண்டும். சர்ப்பத்தின் அரண்மனைத் தொடர்புகள் எப்படி…? ஒவ்வொரு சித்ராபௌர்ணமி அன்றும் அரண்மனையில் நாட்டிய நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். அதை இந்த சர்ப்பம்தான் முன்னின்று நடத்தும். அதை வைத்து எப்படியோ அங்குள்ள தீயசக்திகளோடு சர்ப்பம் தனது தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை பெரியபறவை ஓரளவு யூகித்து விட்டது. அது சர்ப்பத்தின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது என முடிவு செய்தது.

நடுநிசிவரை குளத்தில் எந்த அசைவும் இல்லை. நடுநிசிக்கு மேல் கரையின் இடிபாடுகளிலிருந்து சர்ப்பம் வெளிவந்தது. அது அரண்மனையை நோக்கி வேகமாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. பெரியபறவை சத்தமில்லாமல் அதைப் பின் தொடர்ந்தது. அரண்மனைக்குள் நுழைந்த சர்ப்பம் நேராக மந்திரியின் அறைக்குச் சென்றது. பெரியபறவை தாமதிக்கவில்லை. ராஜாவை எழுப்பி நடந்ததைச் சொன்னது. சாளரம் வழியாக ராஜாகழுகும் பெரியபறவையும் மந்திரியாரின் அறைக்குள் புகுந்தன. அங்கிருந்த திரைச்சீலைக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு நடப்பதைக் கவனித்தன.

“நன்று செய்தாய் நண்பா! உன் உதவியை என்றும் என்னால் மறக்க முடியாது! நந்தவனத்தில் நானும் ஒற்றனும் பேசிக்கொண்டிருந்ததை அந்த அன்னம் ஒட்டுக்கேட்டு விட்டது! மகாராணியோடும் இளவரசியோடும் உறவாடும் அன்னமல்லவா? மன்னருக்கெதிராக நான் நடத்திய சதி ஆலோசனையை எங்கே அவர்களிடம் சொல்லிவிடுமோ என்று பயந்தேன்! நல்லவேளை அதற்குள் நீ மாணிக்கக்கல்லை வைத்து நல்லதொரு நாடகமாடினாய்! நாளை காலை அந்த அன்னத்தின் தலை கொய்யப்பட்டு விடும்! என் இரகசியம் அறிந்த எதிரி ஒழிந்தான்! உன் உதவிக்கு என்ன வெகுமதி வேண்டும் கேள் தருகிறேன்!”- என்றது மந்திரியார் கழுகு.

“மன்னரை அரியணையிலிருந்து அகற்றியதும் அந்த இடத்திற்குத் தாங்களும் தங்கள் இடத்திற்கு நானும் வர வேண்டும்! இதுதான் நான் தங்களிடம் எதிர்பார்க்கும் வெகுமதி!”- என்றது சர்ப்பம்.

“என் இரகசியம் அறிந்து இன்னும் மீதம் இருப்பவன் நீ ஒருவன்தான்! பதவிக்கு வந்ததும் உன்னைக் காலி செய்து விட்டுத்தான் மறுவேலை!”- என்று மனத்திற்குள் நினைத்த மந்திரியார் கழுகு “நீ எனது இனிய நண்பனல்லவா? உனக்கு இல்லாத பதவியா? கண்டிப்பாகத் தருகிறேன்!”- என்றது.

அப்போது திரைச்சீலையை விலக்கியபடி உறுவிய வாளோடு ராஜாகழுகு வெளிப்பட, மந்திரியார்கழுகும் சர்ப்பமும் திகைத்து நின்றன. “என்ன மந்திரியாரே! என்னை எதிர்பார்க்கவில்லையா அதுவும் இந்த அகாலவேளையில் தங்களின் அறைக்குள்!”- என்ற ராஜா சர்ப்பத்தைப் பார்த்து “எதிரிகளை மன்னித்து விடலாம்! துரோகிகளைத் துரத்தி விடலாம்! ஆனால் துரோகிகளுக்குத் துணைபோகிறவர்களுக்கு…அதுவும் பிறர் வாழப்பொறுக்காத உன்னைப் போன்ற கயவர்களுக்கு…வாழ அருகதை கிடையாது!”- என்றபடி வாள்வீசி சர்ப்பத்தை நார்நாராய் கிழித்துப் போட்டது. மந்திரியார் கழுகு சிறை பிடிக்கப்பட்டது. அன்னம் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது.

உங்களுக்குத் தெரியுமா? அன்னம் இப்போதும் அதே தடாகத்தில்தான் வசித்து வருகிறது. மன்னர் வெகுமதியாய் அளித்த ஆபரணங்களை அணிந்தபடி அது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம். அது இப்போது தனது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாய் இருக்கிறது.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கூடா நட்பு (சிறுகதை)”

அதிகம் படித்தது