மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கோட்டுத் தத்துவம்: சிறுவர் சிறுகதை

மா.பிரபாகரன்

Jan 30, 2016

kottu thaththuvam1ஆசிரியர் ஆறுமுகம் தனது கைப்பையை வகுப்பறையில் மறந்து விட்டுவிட்டார். அவர் எட்டாம்வகுப்பு ஆசிரியர்; அதை எடுப்பதற்காக வகுப்பறைக்குப் போனவருக்கு ஒரு அதிர்ச்சி; விளையாட்டு வகுப்பு என்பதால் மாணவர்கள் அனைவரும் விளையாடச் சென்றிருந்தார்கள். திவாகர் மட்டும் இருந்தான்; உடல்நலம் சரியில்லாத மாணவர்கள் விளையாடச் செல்லாமல் வகுப்பறையில் ஓய்வெடுப்பது வழக்கம்; ஆனால் திவாகர் அவ்வாறு இல்லை; அவன் வேறு ஒரு மாணவனின் பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து தனது பையில் அவசர அவசரமாக ஒளித்து வைத்துக்கொண்டிருந்தான். திவாகர் நன்றாகப் படிக்கும் மாணவன்தான்; வகுப்பில் அவன் எப்போதும் இரண்டாவது நிலையில் இருப்பான். அவன் முதலாவது நிலை எடுக்கும் தினேஷ் என்ற மாணவனின் பையிலிருந்துதான் அந்தப் புத்தகத்தை எடுத்தான். வகுப்பறையை விட்டுச்சென்ற ஆசிரியர் மீண்டும் அங்கே வருவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. வெலவெலத்துப் போய்விட்டான். பயத்தில் அவன் கைகால்கள் நடுங்கின.

“நீ என்ன பண்ணிக்கிட்டுருக்குற? உண்மையச் சொல்லு!”- ஆறுமுகம் அதட்டிக் கேட்டார்

“எவ்வளவு சிரமப்பட்டுப் படிச்சாலும் என்னால தினேஷை முந்த முடியல! அவன் ஒவ்வொரு பாடத்தையும் புக்ல மார்க் பண்ணித்தான் படிப்பான்! அவனோட புத்தகத்த எடுத்து ஒழிச்சு வைச்சுட்டா பரீச்சையில் அவன் படிக்க முடியாம திண்டாடுவான்! நாம அவனை முந்திரலாம்னு நினச்சு இப்படி செஞ்சேன் சார்!”- என்று அழுது அரற்றியபடி உண்மையை ஒத்துக்கொண்டான்.

“நீ செஞ்சுருக்குறது மோசமான காரியம்! இதுக்காக நான் உன்னைத் தண்டிக்கப் போறதில்ல! உன்னோட பெற்றோர்கள்தான் உன்னை நல்வழிப்படுத்த சரியான நபர்கள்! நான் அவங்களிடம் பேசிக்கொள்கிறேன்! நீ புத்தகத்த தினேஷோட பையில திரும்ப வைச்சிரு!”- என்றவர் அத்துடன் அவனை விட்டுவிட்டார்.

அந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் சென்றிருக்கும்; ஒருநாள் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் ஆறுமுகம் மாணவர்களிடம் “பாடத்துக்கு போறதுக்கு முன்னாடி நாம இப்ப கொஞ்சநேரம் பேசப்போறோம்!”- என்றபடி சுண்ணத்துண்டு எடுத்து கரும்பலகையில் கிடைமட்டமாக நீள்கோடு ஒன்றை வரைந்தார்.

“இதை சின்னதாக்கிக் காட்டணும்”- என்றவர் முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவன் ஒருவனை அழைத்தார். அவன் துடைப்பான் எடுத்து ஒருபக்கம் அழித்துக் கோட்டை சிறியதாக்கினான். அழித்த கோட்டை மீண்டும் போட்டுவிட்டு அடுத்த மாணவனை அழைத்தார். அவனும் அதையே செய்தான். முதலாவது மாணவன் வலப்புறமிருந்து அழித்தான் என்றால் இவன் இடப்புறமிருந்து அழித்தான். அடுத்து ஆசிரியர் வேறு ஒரு மாணவனை அழைத்தார். அவன் புத்திசாலித்தனமாக கோட்டை இருபுறமும் அழித்து மிகவும் சிறியதாக்கினான். அடுத்துவந்த மாணவன் துடைப்பானுக்குப் பதிலாக சுண்ணத்துண்டை எடுத்து ஆசிரியர் போட்ட கோட்டிற்கு அருகில் அதற்கு இணையாக அதைக்காட்டிலும் நீளமான வேறுஒரு கோட்டை போட்டான். இப்போது ஆசிரியர் வரைந்த கோடு சிறியதாகி விட்டது.
“இது ஒரு நல்ல அணுகுமுறை!”- என்று அவனைப் பாராட்டிய ஆசிரியர் மாணவர்களிடம் பேச ஆரம்பித்தார்.

“நான் வரைஞ்சது வெறும் கோடு கிடையாது! அது ஒரு குறியீடு! உங்களோட உழைப்பு முயற்சி இதோட குறியீடாத்தான் நான் அந்தக்கோட்டை வரைஞ்சேன்! நம்ம வகுப்புல நல்லாப் படிக்குற மாணவர்கள் நிறையப்பேர் இருக்கீங்க! இசை ஓவியம் என்று கலைகளில் ஆர்வமுடைய மாணவர்கள் இருக்கீங்க! விளையாட்டுத்திறன் உள்ள மாணவர்களும் இருக்கீங்க! உங்க எல்லாருக்குமே உங்களுக்கு விருப்பமான துறைல நல்லாவரணும் சிறப்பா செயல்படனும்ங்குற ஆசை இருக்கும்! இது தப்பில்ல! அந்தத்துறைல யாராவது உங்களுக்கு முன்னாடி இருந்தா அவங்களை முந்தனும்னு நினைப்பீங்க! இதுவும் தப்பில்ல! ஒரு வேளை உங்களால் அவங்களை முந்த முடியாமப் போயிருச்சுனா எப்படியாவது அவங்களை வீழ்த்தனும்னு நினைக்க ஆரம்பிச்சுர்றீங்க! இது தப்பு! முந்தனும்னு நினைக்குறது நேர்மறை எண்ணம்! இது உங்களோடத் திறமைகளை வளர்த்துக்க உதவும்! வீழ்த்தனும்னு நினைக்குறது எதிர்மறை எண்ணம்! இது உங்களைக் குரூரமா சிந்திக்கவைக்கும்! மத்தவங்களை வீழ்த்த குறுக்கு வழிகளைக் கடைபிடிச்சா அது காலப்போக்குல உங்களுக்கும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை நீங்க மறந்துவிடக்கூடாது! பறக்கனும்னு ஆசைபட்டா எப்படி சிறகுகளை விரிச்சு பறக்குறதுன்னு கத்துக்கனுமே ஒழிய பறந்துக்கிட்டுருக்குற பறவையோட சிறகுகளை ஒடிச்சுப் போடறது அழகில்ல!”- என்றஆசிரியர் சற்று இடைவெளி கொடுத்து நிறுத்தினார். பின் தொடர்ந்து பேசினார்.

“கோட்டைச் சின்னதாக்கனும்னு நான் சொன்னப்பம் உங்க முன்னாடி இரண்டு வாய்ப்புக்கள் இருந்துச்சு! ஒன்னு துடைப்பான்! இன்னொன்னு சுண்ணத்துண்டு! துடைப்பான் எதிர்மறை எண்ணத்தின் குறியீடு! சுண்ணத்துண்டு நேர்மறை எண்ணத்தின் குறியீடு! நீங்க எல்லாருமே துடைப்பானை பயன்படுத்தி அழிச்சுத்தான் கோட்டைச் சின்னதாக்குனீங்க! யாருக்குமே சுண்ணத்துண்டை பயன்படுத்தி அதைவிட பெரிய கோடா போடலாமேன்னு தோணல! நாம எல்லாருமே பல சந்தர்ப்பங்கள்ல்ல இப்படித்தான் நடந்துக்குவோம்! ஏன்னா அழிக்குறது எளிதான வேலை! ஆனா புதுசா ஒன்னை உருவாக்குறது…! அதுக்கு யோசிக்கனும்! நீங்க வளர்ந்த பிள்ளைங்க! நான் என்ன சொல்லவர்றேன்னு உங்களுக்குப் புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்!”- என்ற ஆசிரியர் ஆறுமுகம் அடுத்து பாடங்களை நடத்தத் துவங்கிவிட்டார்.

ஆசிரியர் திவாகரை அடிக்கவில்லை; திட்டவில்லை; தலைமை ஆசிரியரிடம் கூட்டிக்கொண்டுபோய் நிற்கவைத்து அவமானப்படுத்தவுமில்லை. மிகவும் முக்கியமாய் வேறுயாரிடமும் இதுபற்றி மூச்சுவிடவில்லை. இதனால் இவன் படிப்பு பாழாகவில்லை; இவன் பெற்றோர்களிடம் மட்டும் சொல்லி இவனை நல்வழிப்படுத்தி விட்டார். இவன் தவறை உணரச் செய்துவிட்டார்; மாணவர்கள் அனைவருக்குமே இதை ஒரு வாய்ப்பாக வைத்து அறிவுரையும் வழங்குகிறார்; இது போன்ற ஆசிரியர்கள் அமைவது அபூர்வத்திலும் அபூர்வம் அல்லவா? காரணமே இல்லாமல் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தோட அமர்ந்திருந்த திவாகரை அருகிலிருந்த மாணவர்கள் புரியாமல் பார்த்தனர்.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோட்டுத் தத்துவம்: சிறுவர் சிறுகதை”

அதிகம் படித்தது