மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

க.நா.சு கவிதைகள் ஒரு பார்வை

இல. பிரகாசம்

Sep 2, 2017

Siragu ka.na.su1

20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பாரதியாரால் மேற்கொள்ளப்பட்ட மரபை மீறிய புதிய வகையிலான கவிதை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் “free verse”என்று மேலை நாட்டினரால் மேற்கொள்ளப்பட்ட வசனகவிதை முறையை தமிழில் பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி மேற்கொண்டு பல சோதனைகளைச் செய்தார். அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில் செத்துக் கொண்டிருந்த பழைய யாப்புக் கவிதை மரபிற்கு மாற்றாக புதிய முறை அவசியம் என்று ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், க.நா.சு ஆகியோர் கணித்திருந்தனர். இவர்களில் ந.பிச்சமூர்த்திக்குப் பின் புதிய சோதனைகளை புதுமைபித்தன் தீவிரமாக கைகொண்டார். எனினும் இப்புது ரீதியான கவிதை முறைக்கு பண்டிதர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

எந்த ஒன்றும் புதியதாக வருகிறபோது அவை எதிர்ப்பை சந்திக்கும் என்று இலக்கியத்தில் பரவலாகக் காணப்பட்டு வருகிறது. அது போல் மரபை மீறி முயன்ற கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்த நிலையில் அதனைக் கையாண்டு வெற்றி பெற்றவர்களுள் க.நா.சு குறிப்பிடத்தக்கவர்.

புதுக்கவிதை முயற்சி:

க.நா.சு அவர்கள் தன் கல்லூரி நாட்களிலேயே கவிதை எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார். அதற்கு தூண்டுகோலாக அமைந்தது டி.எஸ்.எலியட்டின் நூல்கள் என்று குறிப்பிடுகிறார். அன்றைய கல்லூரி இளைஞர்களுக்கு டி.எஸ்.எலியட் மிகப் பிரபலமும் கூட.

“ஆங்கிலத்தில் free verse என்று சொல்லப்பட்டதற்குச் சரியான பதம் வசன கவிதை என்றுதான் நாங்கள் எல்லோருமே எண்ணியிருந்த காரியம். பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன் எல்லோருமே வசன கவிதை என்றுதான் அப்போது அதைக் குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஓரளவுக்கு முன்மாதிரியாகத் தமிழில் பாரதியாரின் காட்சிகளும், ஆங்கிலத்தில் வால்ட்விட்மன் கவிதைகளும் பயன்பட்டன. நான் மேலே குறிப்பிட்ட நால்வருக்குமே டி.எஸ்.எலியட் படிப்பு உண்டு. டி.எஸ்.எலியட் பற்றிய விமரிசனப் போக்கிலும் ஈடுபாடு உண்டுதான்.”என்று க.நா.சு குறிப்பிடுகிறார்.

க.நா.சு-ன் முதல் கவிதை: மணப்பெண்.

Siragu ka.na.su2

தன் கவிதையை கல்லூரி நாட்களிலேயே தொடங்கினாலும் முதலில் அவர் எழுதியது ஆங்கிலத்தில் தான். பிறகு தமிழுக்கு மாறினார். 1939-ல் “சூறாவளி” என்ற பத்திரிக்கை க.நா.சு-வின் முதல் கவிதையான ‘மணப்பெண்’-ஐ பிரசுரம் செய்தது.

     “திரையிட்டு மறைத்த முகமும்

     பெண்மை ஏசும் பட்டாடையும்

     மறைத்து வைக்கும்

     உண்மை அழியாவண்ணம்

     அழகி என்று

     அவளை அழைப்ப தெப்படி?”

இப்படி அவரது முதல் கவிதையின் முதல் பகுதி தொடங்குகிறது. இயற்கையில் அழகாக இருப்பனவற்றுக்கு ஒப்பனை எதற்கு? அதனை அதன் உண்மை நிலையிலேயே உணரவேண்டும் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் ஒப்பனை செய்வதனால் அழகை வெளிக்கொணர முடியுமா? ஏன்ற கேள்வியை முன் வைக்கிறார்.

அதே கவிதையின் அடுத்த சில பகுதிகள்

     “மாலை வானத்திலே

     மின்னும் சுடரெனவே

     மணவறை சேருவாள்-

     அவன் கூடுவான்

     அழகுடன்

     அழகு பொருந்த”

மேற்கண்ட வரிகளில் இயற்கையின் அழகு எவ்வாறு இயல்பாக புணர்ச்சி கொள்கிறது, அவற்றை முன் சொன்னது போல ‘உண்மை நிலையில் உணரல்’என்ற நிலையை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

கவிதை பற்றி க.நா.சு

கவிதை எழுத வந்துவிட்ட பிறகு பெரும்பாலானோர் தனக்கு ஏதோ கவிதையோடு பிரிக்க முடியாத உறவு இருப்பதாக எண்ணிக் கொண்டு செய்கிற வேளையில் க.நா.சு-ன் பதில் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது. அதிலேயும் அவர் நேர்மையை கையாண்டிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவருடைய இக்குணம் மிக அரிது.

     “எனக்கும்;

     கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ

     எட்டுகள் எடுத்து வைத்துவிட்டான். இவற்றில்

     எத்தனை எட்டுக்கள் கவிதையில்

     சாத்திய மாயின?

     ————— பின்

     எதற்காத்தான் கவிதை தோன்றுகிறது?”

என்று கவிதையின் தேவைக்கான காரணம் என ஒன்று உண்மையில் உண்டா? என்ற முயற்சியல் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முயல்கிறார். மேலும் அதன் தொடர்ச்சியாக

     “மொழியின் மழலை அழகுதான்

     ஆனால் அது போதவே

     போதாது,

     போதுமானால் கவிதையைத் தவிர வேறு

     இலக்கியம் தோன்றியிராதே”

ஒரு மொழியில் “சிறந்த வார்த்தைகள் சிறந்த வரிசை முறையில் அமைவது கவிதை” என்று மேலை நாட்டுக் கவிஞன் சொன்னதாக நினைவு, சிறந்த முறையிலமைந்த வார்த்தைகள் கவிதைகள் ஆகிவிட முடியுமா? என்ற கேள்வியும் விமர்சகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

க.நா.சு-ன் கருத்துப்படி கவிதைக்கு ‘போதாமை’ எனும் நிலையே மீண்டும் கவிதைக்கு தூண்டுகோலாக இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்நிலைதான் ஒரு கவிஞனை கவிதையில் இருந்து வேறு துறைகளான நாடகம், நாவல், நீள் கதைகளை நோக்கி நகர்த்துவதாக தெரிவிக்கிறார். அவர் இந்திய இலக்கிய உலகில் நாவல் மற்றும் சிறு கதைகளில் முத்திரை பதித்தவர் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ளத்தக்கதது.

     “அதனால்

     தான் நானும் கவிதை எழுதுகிறேன்.

     மனிதர்க்குக் கலை எதுவும் திருப்திதராது

     மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத் தான்

     தரும்.” என்று தனக்கு கவிதையின் மூலம் தான் இலக்கியத்திற்கான தாகம் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்.

நிகழ்காலத்தில் நிகழ்வது:

Siragu ka.na.su4க.நா.சு-வின் கவிதைகள் பெரும்பாலும் அவரது காலத்தில் ஏற்பட்ட மாறுதல்களை நிகழ்வுகளை பதிவு செய்கின்றன. அவை கல்லூரி மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றனவாக இருக்கின்றன. அவற்றுள் உதாரணமாக அக்காலத்தில் இந்திய நகரங்களில் பயண்படுத்தப்பட்ட ‘ஜாட்கா’ எனும் குதிரை வண்டியைப் பற்றி குறிப்பிடுகிறார்.

மேலும் ‘ரிகார்டு’, ‘டேப்ரிகார்டு’, ‘க்யூ’, ‘ஏரோப்ளேன்’, ‘எக்ஸ்பிரஸ் ரயில்’ போன்ற சொற்களை பயன்படுத்தி வாசகன் தன்னுடைய எளிய சூழல் தன்மையோடு அக்கவிதையை அனுபவிக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார். இத்தகைய உத்தியை அவர் கையாள்வதற்குக் காரணமாக அக்காலகட்டத்தில் நிலவிய ஆங்கில மோகம் காரணமாக இருந்திருக்கிறது.

நடை:

கவிதையில் பழைய நடையை விட்டு மீறி புதிய கவிதை முறையை மேற்கொண்ட க.நா.சு- அதன் நடையிலும் புதிய முயற்சியை மேற்கொண்டு வெற்றியை பெற்றுள்ளார். அவரது ‘வைகுண்டம்’ ‘ஆ’ என்று முடியும் கவிதையில் இதைப் பார்க்க முடிகிறது. அவற்றில் இருந்து சில வரிகளை அதன் சுவை கெடாது தர முயற்சி செய்கிறேன்.

     “யாரோ-

     தெரு

     வெல்லாம்

     மூ

     ணு

     வ

     ரி

     சை” இது மிக நீண்ட வரிகளைக் கொண்டவையாக இருந்தாலும் புதுக்கவிதையை விரும்புவதற்குத் துணை செய்கிறது. பிடிப்பை ஏற்படுத்துவதற்கும் துணை செய்கிறது.

மேலும் வைகுண்டம் கவிதையின் மற்றொரு பகுதியில்

     “அவளை

     கை

     விட்டு விட்டேன்

     -நழுவி

  விட்டாள் -“போன்ற நடையினை கையாண்டுள்ளமை புதுக்கவிதையின் முயற்சியில் நுட்பமான பதிவாக கருதப்படுகிறது.

‘ஆ’என்று முடியும் கவிதை:

Siragu ka.na.su3

ஒரு அருவியில் இருந்து வரும் சாரல் மெல்ல மெல்ல மேனியில் பட்டுத் தெறித்து கீழே விழுகிற “சோ” என்கிற சப்தம் ஏற்படுத்துகிற குதூகலத்தைப் போல ‘ஆ’ என்று முடியும் கவிதை மாயத்தை ஏற்படுத்துகிறது. மிக நீண்ட வரிகளைக் கொண்ட கவிதையால் சில வரிகளை மட்டும் இங்கே தருகிறேன்.

     “ஒலி

     அகராதி

     அற்று

     ஒழிந்த

     சொல்

     கற்றுத்

     தெளிந்த

     குழப்பம்

     துயரத்தின்

    முடிவு

     எல்லைக்

     கோடிட்டுக்

     காட்டக்

  கூடியதும்” என்று இடையில் அக்கவிதையின் சுவை தன்மையை மெருகேற்றுகிறார். இடையிடையே இன்பம், கண்டது, வீடு, துன்பம், விண்டது, மிச்சம் போன்ற சொற்களை மற்றொரு வரியாகச் செய்து அக்கவிதையோடு படிப்பவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறார்.

மற்ற கவிதைகள்:

“எளிய பதங்கள் எளிய சந்தம்” என்று பாரதியார் புதுக்கவிதைக்கு இலக்கணமாகக் கொடுத்தார். க.நா.சு இதனை தன் கவிதைகளில் எளிய சொற்களோடு பயன்படுத்தியுள்ளார். “மதுரை மீனாட்சியின் கன்னிமை கழியும் போது” என்ற கவிதையில் அவற்றை முழுக்கப் பார்க்கமுடியும். மேலும் மின்னல் கீற்று, சிருஷ்டி, இனம் ஆகிய கவிதைகளில் காணலாம்.

     “தத்துவத்துக்கும்

     கல்வி இலாகாவிற்கும்

     நாமம் சாத்தத் தயாராக

     வேங்கடவன்

     வுடவெல்லை விட்டிறங்கி

     உறங்கிவிட்டுத்

     தெற்கே வந்திருப்பானோ?”போன்ற வரிகளில் கவிதையோடு கேலியை முதன்மைப்படுத்துகிறார்

க.நா.சு-வின் கவிதை நேர்மை:

பிறரால் ஏற்றுக் கொள்ள முடியாத சில பகுதிகள் நேர்மையை கொண்டிருப்பதை அறிந்து கொள்வது என்பது அரிது. அத்தகைய தன்மை உடையதாக ‘நினைவுப் பாதை’ எனும் கவிதை ஒன்று

     “இரவு சாப்பிட உட்கார்ந்ததும்

     ———————-

     பக்கத்தறையில் உரக்க

     முனகல் கேட்டு

     எழுந்து போய் பாhக்க

     செத்துக்கிடந்த தாய்

     உருவம் அடியோடு மறந்துவிட்டது.

     ஆனால்

     அழ வேண்டிய

     மாதிரியா நீ அழுதாய்

     என்று மறுநாள்

     பாட்டி

     கேட்டது மட்டும்

     பசுமையாய் நினைவில்

     பதிந்திருக்கிறது.”

தனது உறவுகளை ஒருவர் இழந்து வெகு நாட்களுக்குப் பின் அவர்களது பற்றிய நினைவுகளை வேறொருவர் கூறுகிறபோது ஒரு கேள்வி எழலாம் “என் நிலை அப்போது என்ன ஓட்டத்தில் இருந்தது?” என்று எண்ணிப் பார்க்கும் தருணத்தில். இத்தகைய நிலை அல்லது ஓட்டம் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.

க.நா. என்பது?

க.நா.சு-வின் பெயரில் அமைந்திருக்கிற ‘க’அவருக்கு தனித்த சிறப்பைத் தருகிறது. எவ்வகையில்?. தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வேதியர் குலத்தில் குறிப்பிடக் கூடிய ஒரு சொல் ‘கந்தாடை’. கந்தாடை என்பதற்கு தூண் என்று பொருள். எவ்வாறாயினும் பல விளக்கங்கள் பலரால் தரப்படுகின்றன.

எனினும் இவரது முன்னோர்கள் கந்தாடை என்று அழைக்கப்பட்ட தூணில் கட்டப்பட்ட பட்டாடையை பெறும் உரிமையுடையவர்கள் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவரது முன்னோர்கள் வைணவத்தைத் தழுவினார்கள் என்றும் ஸ்ரீராமானுசரின் சீடர்களில் முதன்மையானவர் முதலியாண்டான் என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவரைப் பற்றிய குறிப்புகள் சீரங்க நாயகர் ஊசலில் மணவாள தாசர் காட்டுகிறார் “கந்தாடைக் குலதீபன் முதலியாண்டான் கடல் ஞாலம் திருத்தியருள் கருணை பாட” என்று வருகிறது என்பதாகும். இவருக்கு பெருமையை அளிக்கும் விதாமாக ‘கந்தாடை’ நாராயணசுவாமி மகன் சுப்ரமணியன் என்பதின் சுருக்கமே க.நா.சு. அதனை மறக்காது தனது உயில் கவிதையிலும் பதிவு செய்திருக்கிறார்.

கந்தாடை முதலியாண்டானுக்குப் பிறகு தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர் கந்தாடை நாராணசுவாமி சுப்ரமணியம் என்ற க.நா.சு தான் என்பதில் யாரும் மறுத்துக் கூற இயலாது.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “க.நா.சு கவிதைகள் ஒரு பார்வை”

அதிகம் படித்தது