மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்கப் பாடல்களை அறிவோம் : குறுந்தொகை-130

பேரா. ருக்மணி

Dec 7, 2015

sangappaadalgal2மணம் பேசி வரவேண்டிய காதலன் வரவில்லை. அவன் எங்கு போனான் என்பதும் தெரியவி்ல்லை, அவனை எப்படித் தேடுவது என்று தெரியாமல் அல்லல்படும் பெண்ணை ஆற்றுவிக்கும் தோழியின் எண்ண அலைகளே இப்பாடல். இந்தப் பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர்.

நிலம்தொட்டுப் புகார் வானம் ஏறார்

விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரின்

கெடுநரும் உளரோ நம் காதலோரே.

சாதாரணமாக, நாம் பேசிக்கொள்ளும் பேச்சு வழக்கிலே இப்பாடலின் மொழிநடையும் அமைந்துள்ளது.

அவர் எங்கே போகப் போகிறார்? நிலத்திற்குள் புகப் போவதில்லை, வானத்திற்கு மேலேயும் ஏறவும் முடியாது, கடலுக்குள் சென்றிருக்கவும் மாட்டார், நாடு நாடாக, ஊர் ஊராக, குடியிருப்பு குடியிருப்பாகத் தேடினால் நம்மிடம் அகப்படாது போய்விடுவாரோ நம் காதலர்! என்கின்றாள் தோழி.

sangappaadalgal1காதலன் வாராமல் இருப்பதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் தலைவிக்கு எளிமையான சொற்களில் இனிமையாக நம்பிக்கைக் கொடுக்கின்றாள் தோழி!

பெண் தன் மன உணர்வுகளைத் தானே வெளியிடும் பாடல் என்பதால் இப்படி எளிமையும் இனிமையும் கருத்துத் தெளிவும் போட்டி போட்டுக்கொண்டு சொற்களாக வந்து விழுந்தனவோ?

எப்படியும் காதலனைக் கண்டுபிடித்தற்கு முனையும் தமிழ் பெண்ணின் துடிப்பினை எள்ளவும் குறையாமல் இயம்பிய பாடல் இது.


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கப் பாடல்களை அறிவோம் : குறுந்தொகை-130”

அதிகம் படித்தது