சங்கப் பாடல்களை அறிவோம்- புறநானூறு-8
பேரா. ருக்மணிJan 23, 2016
சங்கப் புலவர்களிலே தனக்கெனத் தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் கபிலர். அருளும் அன்பும் உளத்தூய்மையும் வாய்மையும் பாட்டியற்றும் வன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர். அறவோராய், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய் விளங்கியவர். சங்கப் புலவர்களால் போற்றிப் புகழப்பட்டவர். பாரியின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவர். புறநானூற்றின் எட்டாவது பாடல் இவருடையது. சேரலாதனைப் போற்றிப் புகழும் பாடல். பாடாண்திணையைச் சார்ந்தது. பாடப்படும் தலைவனின் புகழும் ஆற்றலும் ஈகையும் அருளும் புகழ்ந்து உரைப்பதே பாடாண்திணை. அந்த வகையில் அமைந்த பாடலிது.
சேரலாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டு யாரோ ஒரு புலவர் பாடியிருக்கின்றார் போலும்! அதைக் கேட்ட கபிலர், கதிரவனிடமே கேட்கின்றார், “கதிரவனே! நீ எப்படி என் மன்னனோடு ஒப்பாவாய்” என்று!. அதற்கான காரணங்களையும் அடுக்கடுக்காக அடுக்குகின்றார் கபிலர்.
சேரலாதனைப் பிற அரசர்கள் வணங்கிச் செல்வர். ஆனால், சூரியனோ பிற கோள்களின் வழியே செல்கின்றான். உலகம் முழுவதும் தான் ஒருவனே ஆட்சி செய்யும் விருப்பத்தினை உடையவன் சேரலாதன். கதிரவனோ, பகல் பொழுது மட்டுமே ஆட்சி செய்கின்றான். சேரலாதன் போர் வெய்வதற்கு விருப்பமுடையவன். ஆனால் கதிரவனோ, நிலவுக்குப் புறங்கொடுத்து ஓடுகின்றான். கதிரவன் திசைகளில் மாறி மாறி வருபவன் மன்னனோ, என்றும் மாறாத் தன்மையன். சூரியன் தன் கதிர்களை மலையிடத்து மறைப்பான். ஆனால் சேரலாதனோ, தன்னுடைய பொருளை மறைக்காது வழங்கும் ஈகையுடையவன். இப்படி ஒவ்வொன்றாகப் பபட்டியலிட்டு சேரலாதனுக்குக் கதிரவன் ஒப்பாக முடியாது என்கின்றார் கபிலர். அவரின் வானவியல் அறிவும் இலக்கியப் புலமையும் ஒன்றொடொன்று கொஞ்சி விளையாடும் அழகிய பாடல் இது. இதோ பாடல்…
வையம் காவலர் வழி மொழிந்து ஒழுக,
போகம் வேண்டி, பொதுச்சொல் பொறாஅது,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துறப்ப,
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை
கடல் அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்!
பொழுது என வரைதி; புறங்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி;
அகல் இரு விசும்பினானும்
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.
-பாடாண்திணையில் அமைந்த பாடல்.
கருத்து:
விரைந்து செல்லும் கதிரவனே! நீ வருவது பகற்பொழுது என்று வரையறை வைத்துள்ளாய். நீ வந்தவுடன் புறங்காட்டி ஓடிவிடுகின்றாய். திசைகளில் மாறி மாறி வருகின்றாய். மலையிலே போய் ஒளிந்து கொள்கின்றாய். அகன்ற வானத்திலே பல்கதிர் பரப்பி ஒளி வீசினாலும் பகற்பொழுது மட்டும்தானே இருக்கின்றாய். ஆனால், எம் அரசனாகிய சேரலாதனோ, உலகத்து அரசர்கள் அனைவராலும் போற்றி வணங்கப்படுகின்றான். இந்நிலவுலகம் முழுவதும் தான் ஒருவனே ஆளவேண்டும் என்ற இன்பத்தை விரும்புகின்றான. இப்பூமி அனைத்து அரசர்களுக்கும் பொதுவானது என்ற சொல்லைக்கூட பொறுக்க முடியாதவன். தன் நாட்டைச் சிறிது என்று எண்ணி விரிவுபடுத்தும் முயற்சியுடையவன். சோம்பலில்லாத உள்ளம் படைத்தவன். பொருளைத் தனக்கென்று மறைத்து வைக்காத ஈகையுடையவன். என்கின்றார் கபிலர்.
“உலகிற்கே ஒளி கொடுக்கும் சூரியனையே விஞ்சி நிற்கின்றான் மன்னன் சேரலாதன்” என்று கூறும் கபிலரின் வாய்மொழி, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் கருப்பஞ்சாறாய் இனிக்கிறதன்றோ?
பேரா. ருக்மணி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கப் பாடல்களை அறிவோம்- புறநானூறு-8”