மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 28 ஆவது பாடல்

பேரா. ருக்மணி

Jan 30, 2016

sangappaadalgal fiகாதலனைப் பிரிந்திருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே பாடலில் படம்பிடித்துக் காட்டமுடியுமா? என்றால், முடியும் என்கின்றார் நம் ஔவைப் பாட்டி.

தலைவனைப் பிரிந்திருக்கின்றாள் தலைவி. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கும் இங்கும் அலைபாய்கிறது மனம். ஆற்றொணாத் துயரிலிருக்கும் தலைவி, தோழியிடம் சொல்கிறாள் இப்படி!

முட்டுவேன்கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் எனக் கூவுவென் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவுநோய் அறியாது, துஞ்சும் இவ்ஊர்க்கே.

குறுந்தொகையின் 28 ஆவது பாடல். தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தோழியிடம் சொல்வதாக அமைந்த பாலைத்திணைப் பாடல்.

பொருள்:

நான் என் காதலன் வரவில்லை என்ற வருத்தத்தின் காரணமாக முட்டிக் கொள்ளவா ? (தலையைச் சுவற்றில் மோதுதல்), என்னையே நான் அடித்துக் கொள்ளவா? என்ன செய்வதென்றே புரியவில்லை. ‘ஆ’ என்றும் ‘ஒல்’ எனறும் குரல் எழுப்பிக் கூவவா? பெரும் காற்று வீசுவதுபோல என் மனமும் அலைபாய்கிறது. என் மனதின் துன்பத்தை அறியாது இந்த ஊரானது உறங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு புறம் பிரிவுத் துயர்; மற்றொரு புறம், தன் வேதனையைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள் என்று தன் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்திருக்கின்றாள் தலைவி.

எளிமையான சொற்கள்; எண்ணத்தில் இருப்பதை அப்படியே எழுத்தில் வடித்திருக்கும் பான்மை; உணர்ச்சியைக் கொட்டி வைத்திருக்கும் தகைமை; இத்தனையும் உண்டென்றால் அது இப்பாடலாகத்தான் இருக்க முடியும். பெண்ணின் மனவுணர்வை இதனினும் எளிமையாகச் சொல்ல முடியுமா? ஒரு பெண்ணே எழுதிய பாடலாயிற்றே? அதுவும் நம் ஔவையே பாடிய பாடல் அல்லவா?


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 28 ஆவது பாடல்”

அதிகம் படித்தது