மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறுகதை: குறை நிறை மதிப்பிடும் முறை

தேமொழி

Oct 30, 2021

siragu sirugadhai1

சிறுகதை ஒன்றை மதிப்பீடு செய்வதை அக்கதையைப் படிப்பவர் எவரும் செய்யலாம். கதை பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற ஒற்றைச் சொல் கருத்துக்கும் மேற்பட்டு, அது ஏன் எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று விவரித்தால் அது விமர்சனம் ஆகிவிடும். படிப்பதைக் குறித்து ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டவர் எவருமே விமர்சிப்பவர்தான், அதைச் செய்யும் தகுதி உடையவர்தான். அதற்குத் தனிப்பட்ட தகுதி என்ற ஒன்று கிடையாது. ஒவ்வொருவர் கருத்துக்கும் மதிப்புண்டு. இருப்பினும், பரந்துபட்ட வாசிப்பும், ஒருதுறையின் வல்லுநரான ஒருவர் தனது துறைசார்ந்து பின்புலத்துடன் ஒப்பீட்டு அளவில் தனது மதிப்பீட்டை முன்வைக்கும் பொழுது அக்கருத்துக்கு மதிப்பு அதிகம். திரைப்படம் ஒன்றைப் பார்த்து அது குறித்து கருத்து பகிரத் தெரிந்த எவரும் சிறுகதையையும் அவ்வாறே விமர்சிக்கலாம். திரைப்படத்தில் பங்குபெறும் நடிகர், இசையமைப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர், இயக்குநர் என்று பலரையும் தனித்தனியே பாராட்டி விமர்சிக்க இயலும். ஆனால் எழுத்திலக்கியத்தில் கதாசிரியர் ஒருவரின் செயல்பாட்டை மட்டுமே மதிப்பீடு செய்யமுடியும் என்பதே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

சிறுகதை திறனாய்வு என்பது ஆசிரியர் கூறிய கதையை நாமும் அப்படியே சுருக்கமாக திருப்பிச் சொல்வதல்ல. கதையை அலசுவதற்குத் தேவையான அளவில் கதையைப் படிப்பவருக்குச் சுருக்கமாக அறிமுகப்படுத்திவிட்டு கதையை ஆசிரியர் கையாண்ட விதம் குறித்து நம் கருத்தை முன்வைப்பது சிறுகதை மதிப்பீட்டிற்கான அடிப்படை. விமர்சனம் என்பதும் திறனாய்வு என்பதும் ஒன்றா? என்பது பலரின் மனதில் எழும் கேள்வி. மேலோட்டமாக தன் மதிப்பீட்டைச் சொல்லிச் செல்வது விமர்சனம் என்றும், அதையும் தாண்டி நுணுகிப் பலபிரிவுகளில் ஓர் ஆய்வுக் கட்டமைப்பிற்கு உட்பட்டு ஆராய்வது திறனாய்வு என்றும் மக்களிடம் கருத்து நிலவுகிறது என்பதும் தெரிகிறது. பொதுவாக இலக்கிய உலகில் ‘திறனாய்வு’ மற்றும் ‘விமர்சனம்’ என்ற இரு சொற்களும் ஒரே பொருளையே தருவதாகவும்; ‘திறனாய்வு’ என்ற சொல் கல்வியாளர்கள் மத்தியிலும், விமர்சனம் என்ற சொல் கல்வியாளர்கள் அல்லாத பிற நவீன எழுத்தாளர்கள் மத்தியிலும் அதிகமாக வழங்குகின்றன’ என்பது தெ.மதுசூதனன் அவர்களின் கருத்து (பார்க்க: ‘இலக்கிய திறனாய்வுக் கோட்பாடுகள், பேரா. முனைவர் சபா. ஜெயராசா – நூலின் முன்னுரை).

பொதுவாக விமர்சனம் என்று வழக்கத்தில் இருக்கும் ஒரு மதிப்பீட்டில் அக்கதை நமக்கு ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது என்ற நமது சொந்தக் கருத்து முதன்மை என்றாலும், அச்சிறுகதை மதிப்பீட்டில் பின்வருவன எவையும் அவற்றுக்கான தேவை இருப்பின் இடம் பெறலாம்: ஆசிரியர் கவனிக்கத் தவறிய சில முரண்களை, குறிப்பாக; கதைக்குள்ளேயே கருத்து முரண்பாடு, காலக்கோட்டில் வழுவிச் செல்வது, அல்லது கதை மாந்தரின் இயல்பின் கட்டுக்கோப்பைச் சிதைத்துவிடுவது, தொய்வான அயர்ச்சி ஏற்படுத்தும் மொழிநடை, சொல்லப்படும் கருத்து சமூகத்தில் பிற்போக்குத் தனத்திற்குத் துணை சென்று பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கை என இவை போன்று கதையைப் படித்துக் கொண்டே இருக்கும்பொழுது மனதில் நிழலாடும் எண்ணங்களைப் பதிவிடுவது மதிப்பீடு செய்பவரின் இன்றியமையாத சமூகப் பொறுப்பு.

இந்த மதிப்பீட்டையே (Criticism, Feedback and Comments) திறனாய்வு என்ற நோக்கில் வழங்கும் பொழுது பின்வரும் கட்டமைப்பில் மதிப்பிடுவது வழக்கமாக உள்ளது.

— கரு: கதையின் கரு என்ன? அது சொல்லப்படும் கதைக்களம் என்ன? (Overview of the Plot)

— படிப்பினை: ஆசிரியர் அந்த கதையின் மூலம் சொல்ல விரும்புவது என்ன? (Author’s Viewpoint)

— கதை மாந்தர்கள்: கதை மாந்தர்கள் யார் யார்? அவர்களின் செயல்பாடுகள் கதையின் நோக்கத்திற்கு உதவுகிறதா? (Characters and their Performance)

— கதை சொல்லும் பாணி: கதை விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளதா? அல்லது விவரிப்புகள் கண்முன்னே காட்சியை விரிய வைக்கும் கதைக்குத் தேவையான விவரிப்பு என்ற எல்லையைத் தாண்டி எங்கேனும் திசை திரும்புகிறதா ? (Handling Theme)

— மொழிநடை: ஆசிரியரின் கதை சொல்லும் முறை, எழுதும் பாணியின் சிறப்பு என்ன? (Quotes and Figurative Language, etc.,)

— சமூகத் தாக்கம், மாற்றம்: ஆசிரியர் கருத்தின் தேர்வும், அதைக் கையாண்ட முறையும் எந்தவகையில் சமூகத் தொலைநோக்கு கொண்டுள்ளது? எவ்வாறு பயன் அல்லது பாதிப்பை உண்டாக்கக் கூடியது? (Impact and Implication)

கதையின் கரு என்ன என்பதைச் சுருக்கமாக குறிப்பிடுவதை விட; அதாவது இராமன் பெண்டாட்டியை இராவணன் தூக்கிப் போனான், அனுமன் அவளை மீட்க உதவினான் என்று நகைச்சுவையுடன் குறிப்பிடும் வழக்கத்திற்கு ஒப்ப; காதலர்கள் தடைகளை மீறி இறுதியில் இணையும் வழக்கமான காதல் கதை என்றோ, தங்கள் குடும்பத்தைக் குலைத்த கயவனை நாயகன் பழிக்குப் பழிவாங்கி தாயின் ஆணையை நிறைவேற்றிய பழைய மசாலா கதைதான் என்றோ, அண்ணன்-தங்கை பாசம் குறித்து சொல்லும் அழுமூஞ்சிக் கதை வரிசையில் மற்றும் ஒரு கதை என்றோ ஒரே வரியில் சொல்லாமல் அந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதை ஒரு 100 சொற்களுக்குப் படிப்பவருக்கு அறிமுகம் செய்யலாம்.

படிப்பவர் முன்னரே கதையைத் தெரிந்தவர் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, கதை தெரியாத ஒருவருக்குச் சொல்வதாக இருந்தால் எப்படிச் சொல்வோமோ அதைப் போன்ற முறையில், இந்தத் தலைப்பில், இவர் எழுதிய கதை, இதைக் குறித்துப் பேசுகிறது, இதில் இவர்களுக்கு இடையே ஏற்படும் போராட்டங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று விவரிப்பது படிப்பவரை நாம் வழங்கவிருக்கும் மதிப்பீட்டுக் கருத்தை உள்வாங்க ஆயத்தப்படுத்தும். படிப்பவர் மனதைத் தொடக்கூடிய வகையில் அமைந்த ஒரு கதையின் மையக்கருத்துக்கு கதையின் தலைப்பும் அதற்குப் பொருத்தமாக இருக்கவேண்டும். தலைப்பு பொருத்தமாக இல்லாவிடில் அது நினைவில் நிலைத்து நிற்கும் தன்மையை இழந்துவிடும். தலைப்பு குறித்து எங்கும் கதையில் சொல்ல வேண்டிய தேவை இல்லை, ஆனால் படிப்பவர் கதையைப் படித்து முடித்ததும் அவருக்கும் ஏறக்குறைய கதையின் தலைப்பே மனதில் எழுவது போல இருக்கும் பொழுது நல்லதொரு கதை அதன் இலக்கியத் தரத்தில் உயர்ந்து விடும். அத்துடன் அது இலக்கியவாதிகளின் தொடர்ந்த மீளாய்வுக்கு உட்படும் நிலையை எட்டிவிடும். ஆகவே, கதையின் கரு, அதன் தலைப்பு, கதை சொல்லும் படிப்பினை, கதை மாந்தர்கள் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து மதிப்பீட்டாளர் தங்கள் பார்வையை அறியத் தரலாம்.

அடுத்து, கதையின் ஆசிரியர் மனதைக் கவரும் வண்ணம் கதையை செவ்வனே எழுதியுள்ளாரா, கதையைப் படிக்கும் பொழுது அது நம் மனதில் ஏற்படுத்திய உணர்ச்சி என்ன என்பதை விவரிக்கலாம். சிறப்பான கவனத்தைக் கவரும் வண்ணம் ஆசிரியர் கையாண்ட உத்திக்குப் பாராட்டு, இவ்வாறு பிழைகளைச் செப்பம் செய்தால் இன்னமும் கூட சிறப்பாக இருக்கலாம் என்ற வகையில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் சொல்லுதல் திறனாய்வின் சில தேவையான கூறுகள். அதாவது பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று சொல்லாமல், கதையின் இந்த குறிப்பிடப்படும் ஒன்று ஏன் பிடிக்கிறது அல்லது ஏன் சரியில்லை என்பதைக் காரணத்துடன் குறிப்பிடுதல் மதிப்பீடு செய்பவர் பார்வையைப் படிப்பவர் புரிந்து கொள்ள உதவும்.

கதையின் நடை எளிமையாக கதையோட்டத்திற்கு உதவும் வகையில் இருப்பதும், எழுத்தாளருக்கே உரிய தனித்து அடையாளம் காட்டக்கூடிய பாணியில் இருப்பதும் படிப்பவரைக் கதையின் எழுத்தாளருடன் ஒன்ற வைக்கும் என்பதால் கதை ஆசிரியரின் மொழிநடை குறித்தும் நிறை குறைகளை முன்வைக்கலாம். தனித்தமிழ் நடையோ இலக்கிய நடையோ சிறுகதைக்கு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையல்ல. பழகுதமிழை தேவையானால் வட்டாரத் தமிழைக் கையாண்டிருந்தால் சிறப்பு. அக்கதை அப்பொழுது வரலாற்றில் அக்கால கட்டத்தினை ஆவணப்படுத்தும் விதத்தில் அமைந்துவிடும். கதைமாந்தரின் பின்புலத்தைக் காட்ட கதையின் மொழிநடை சிறப்பாகப் பயன்படும். அதை ஆசிரியர் தக்க முறையில் கையாண்டிருந்தால் அது கதைக்கு மெருகு சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. பொழுது போக்கு, இலக்கியம், வாழ்வியல் பதிவு என்பதையும் கடந்து மனித மனத்தை வளப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு தகவலை விட்டுச் செல்லும் கதை சிறப்பானது. அது கதையில் எழுத்தாளரின் கருத்தாக, நோக்கமாக இருக்கும்பொழுது அதைச் சுட்டிக் காட்டி, படிப்பவர் கவனத்திற்குக் கொண்டு வந்து பாராட்டி எழுதப்படும் திறனாய்வும் சிறப்பானது.

இது போன்ற வகைக் கதைகளுடன் ஒப்பீட்டளவில் இக்கதை எவ்வாறு அமைகிறது, இது ஆசிரியரின் வழக்கமான பாணியா? இன்றைய சமுதாயத்தில் இக்கதையினால் என்ன தாக்கம் ஏற்படலாம் என்பன போன்றவற்றையும் எழுதுவது சிறுகதைகளின் போக்கின் வளர்ச்சிக்கும் எழுத்தாளர்களுக்கும் உதவும் வகையில் அமையும். இது கட்டாயம் ஒருமுறையாவது படிக்க வேண்டிய கதை, இது இவரிவருக்கு இந்த வகையில் பயன்படலாம், அல்லது பத்தோடு பதினொன்று என்ற வகையில் இது ஒரு பொழுதுபோக்கு கதை, அல்லது கால விரயம் என்ற வகையில் இடம் பிடிக்கக் கூடிய ஒரு கதை இது போன்ற குறிப்புகள் படிப்பவருக்கு உதவும் வகையில் அமையும். விமர்சனம் அல்லது திறனாய்வு செய்பவர் ஒரு வழிகாட்டி. எழுத்தாளருக்கும் அவர் சொல்வது வழிகாட்டும், படிப்பவருக்கும் அவர் சொல்வது வழிகாட்டும். அவர்கள் இருவருக்குமே அவர்கள் போக வேண்டிய இடம் எது என்று காட்டும் வகையில் எழுதப்படும் மதிப்பீடு ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்டது.

ஒரு பத்து ஆண்டுகள் கழித்து நாம் எழுதிய மதிப்பீட்டை நாமே எடுத்துப் படித்தாலும் எதைப் பற்றி என்ற விவரம் தெளிவாக விளங்கும் வண்ணம் தேவையான குறிப்புகளுடன் அது இருக்குமானால் எழுதிய நமக்கே குழப்பம் வராத வகையில் அமையும். படித்த கதை குறித்து ஒரு 250-300 சொற்களுக்கு, அதாவது பொதுவாக தாளின் ஒரு பக்க அளவில் இருப்பது போன்ற அளவில் எழுதுவது நன்று. இதை அடுத்தவர் படித்தாலும் நாம் எழுதிய கோணத்தை அவர் புரிந்து கொள்கிறாரா என்ற அளவில் எழுதுவது சிறப்பாக இருக்கும். ஒருவர் தரும் மதிப்பீடு சில காலம் கழித்து மீண்டும் படிக்கப்படும் பொழுது அது காலத்தைக் கடந்தும் நிற்கலாம், நிற்காமல் பொருத்தமின்றியும் இருக்கலாம். ஆனால் இந்தக் கதை குறித்து இது போன்ற ஒரு கருத்து ஒருவர் மனதில் எழுந்தது என்பதுதான் முக்கியம். கதை குறித்து மதிப்பிடுபவர் குறிப்பிடும் கருத்துகள், மேற்கோள்கள், எடுத்துக்காட்டுகள் போன்றவை மதிப்பீட்டின் தரத்தை வேறுபடுத்திக் காட்டுவதுடன் அது படிப்பவருக்கு உதவும் வகையில் தனித்து நிற்கும்.

ஒருவர் செய்யும் மதிப்பீடு நேர்மறையாகவோ அல்லது எதிர் மறையாகவோ இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் அதற்குத் தனி மதிப்பளிக்கப்படும். மதிப்பிடுபவருக்கு அவரது கருத்து காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற வகையில் தனித்துவமாக இருக்கலாம், ஆனால் அவரது மதிப்பீட்டையோ, கோணத்தையோ, கருத்தையோ மற்றவரும் ஏற்க வேண்டும் என்ற தேவையில்லை. எழுத்தாளரும் அந்த மதிப்பீட்டைக் கவனத்தில் கொள்ளலாம். ஆனால் எந்தத் திறனாய்வையும் யார் சொன்னாலும் ஏற்கவேண்டிய கட்டாயம் எழுத்தாளருக்கும் இல்லவே இல்லை. அதுவும் தனிமனிதத் தாக்குதல் நோக்கில், வெறுப்பாளர்கள் சார்பு நிலையுடன் சொல்லும் கருத்தை எழுத்தாளர்கள் கடந்துவிடுவதே நல்லது. ஏனெனில் மதிப்பீட்டாளரின் பார்வையில் அவர் வளர்ந்த, வாழ்ந்த சூழ்நிலைத் தாக்கம் இருப்பது இயல்பு.

தனிமனிதத் தாக்குதலோ, உள்நோக்கமோ அற்ற வகையில், சார்பற்ற ஆய்வாளர் நடுநிலையுடன் எழுதும் திறனாய்வு ஏற்புடையது. இருப்பினும், அந்த மதிப்பீடு தனிப்பட்ட ஒருவர் பார்வையில் அமைவது என்பதும் உண்மை. எனவே மதிப்பீடு செய்பவர் அவர் புரிதலில் சொல்கிறார் என்பதை மட்டும் எழுத்தாளரும் படிப்பவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஏன் என்றால், படிப்பது என்னவோ ராமாயணம்தான் என்றாலும் படிப்பவர்களில் வால்மீகியை ஒரு கோணத்தில் பார்த்துப் படித்து புண்ணியம் சேர்க்க எண்ணுபவர்களும் உண்டு, அதில் கவனத்திற்கு வரவேண்டிய மற்றொரு சமூகநீதி மீறல்களை மற்றொரு கோணத்தில் சுட்டிக் காட்டி நூலை எரிக்கும் பெரியாரும் உண்டு என்பதை மறந்துவிடலாகாது.

மேலும் எந்த ஒரு எழுத்தாளரும் கதையை எழுதுகையில் மதிப்பீடு பெறும் நோக்கில் கதையை எழுதத் துவங்குவதும் இல்லை. எழுத்தாளர்கள் பொதுவாகவே சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பவர்கள். அவர்கள் கொண்டிருக்கும் இத்தகைய மனப்பான்மை அவர்கள் தங்களின் சுற்றுப்புறத்தை, சமூக நடவடிக்கைகளை எப்பொழுதும் அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் அக்கறை. ஒரு நிகழ்ச்சி தந்த தாக்கத்தை மையமாகக் கொண்டு, தங்கள் கற்பனையால் அதனை விரிவுபடுத்தி, தங்களுக்கு உருவான கருத்தை எழுத்துகள் மூலம் சமுதாயத்திற்குக் கடத்த விரும்புகிறார்கள் என்பதே அவர்களுடைய எழுத்துக்கான உந்துதல். நல்ல சிறுகதை மதிப்பீடுகள் இலக்கிய வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கு உதவும். பரந்துபட்ட படிப்பாளராகவும், சிறந்த இலக்கிய நுகர்ச்சி உள்ளவராகவும் இருப்பவர் விமர்சனங்களும் திறனாய்வுகளும் செய்ய முற்படவேண்டும். அவ்வாறு செய்வதும் ஓர் இலக்கியப்பணியே.

————————-


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறுகதை: குறை நிறை மதிப்பிடும் முறை”

அதிகம் படித்தது