மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிற்றில்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 21, 2018

siragu sitril2
ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்

வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேலியிலே குடிலிருக்கும்

கையளவு கதவிருக்கும் காற்று வர வழியிருக்கும்

வழிமேலே விழி இருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…..!

ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல். கண்ணதாசனின் வரிகள் இவை. இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் சிற்றில் அதாவது சிறிய மணல் வீடு என சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்பட்ட வரிகள் தான் நினைவிற்கு வரும். சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் இந்த மணல் வீடு பற்றியக் குறிப்புகள் உண்டு.

பிள்ளைத் தமிழ் இலக்கணத்தில் சிற்றில் பற்றியப் பாடல்கள் உண்டு. புலவர்கள் தாங்கள் விரும்பிய கடவுளையோ, அரசனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்களுக்கு மொத்தம் 100 பாடல்கள் பாடப்படும். இவ்விலக்கியம் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். இதில் பதினேழாவது மாதத்தில் பாடப்படும் பாடல்கள் சிற்றில் இடம்பெறும். இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

சங்கப் பாடல்களில் சிலவற்றில் இந்தச் சிற்றில் என்பது எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.

கடற்கரையில் சிறுமியர் சிற்றில் கட்டி விளையாடுவதை அம்மூவனார் எழுதிய இந்த குறுந்தொகைப் பாடலில் காணலாம்.

இங்கு தலைவி கூறுகின்றாள்,
துணைத்த கோதைப் பணைப் பெரும் தோளினர்
கடலாடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒரு நாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே (குறுந்தொகை 326)

தொடுத்த பூமாலையையும் மூங்கிலைப் போன்ற (பணை = மூங்கில்) பருத்த தோளையும் உடைய சிறுமிகள் கடலில் விளையாடியும் கடலோரச் சோலையில் (கானல் = கடற்கரைச் சோலை) சிற்றில் கட்டியும் விளையாடிய இடத்தில் தலைவனைக் கண்டு கூடிய நட்பு, அந்தத் துறைவன் ஒரு நாள் பிரிந்தாலும் பல நாட்களுக்கு எனக்கு துன்பத்தைத் தரும்.

தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்ற பின் அவளுடைய தாய் அவளை நினைத்து வருந்தி
அருகில் இருப்பவர்களிடம் கூறுகின்றாள்,

என் மகள்
செம்புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டீரோ கண் உடையீரே? (அகநானூறு 275, 17-19)

கண் உடையவர்களே! என்னுடைய மகள் தன் சிவந்த சிறு விரல்களால் இழைத்த சிறு வீட்டை நீங்கள் கண்டீர்களா? என்கின்றாள்.

siragu sitril3
இந்த கலித்தொகை பாடலில் தலைவி தன் தோழியிடம் தலைவனைப் பற்றிக் கூறுகின்றாள்.

அவனுடைய சிறு வயது குறும்பை இங்கு நாம் காணலாம்,
சுடர் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு (1-6)

ஒளியுடைய வளையல்களை அணிந்த தோழியே! இதை நீ கேட்பாயாக! நாம் தெருவில் விளையாடிய பொழுது, நம்முடைய சிறிய மணல் வீட்டை காலால் சிதைத்து, நாம் அணிந்த மலர் மாலையை பிடுங்கி, நம்முடைய வரிப் பந்தை எடுத்துக் கொண்டு ஓடிய அந்த குறும்புப் பையன், ஒரு நாள் அம்மாவும் நானும் வீட்டில் இருந்த பொழுது, அங்கு வந்து இல்லத்தில் உள்ளவர்களே! குடிக்க தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்டதாக அந்தப் பாடலின் பொருள் இருக்கும், நாம் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தில் பார்த்தது போன்றே ஆண் குழந்தை பெண் குழந்தைகள் கட்டிடும் மணல் வீடுகளை எவ்வாறு காலால் உதைத்து கலைத்து விட்டுப் போகும் என்பதை பார்த்தோம்.
இந்தச் சங்கத் தமிழின் அடிப்படை தான் ஆண்டாளின் நாச்சியார் பாடல்களில் கூட,

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில்
விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
அழித்தியாகிலும் உன் தன் மேல்
உள்ளம் ஓடி உருகலல்லால்
உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன்
முகத்தன கண்கள் அல்லவே (திவ்ய பிரபந்தம் 518)

வெள்ளை நுண் மணலைக் கொண்டு அனைவரும் வியக்கும்படி இழைத்த அழகிய சிறு வீட்டை நீ
அழித்தாலும், அதற்காக எங்கள் நெஞ்சானது உருகும். உன் மேல் வெறுப்பு கொள்ள மாட்டோம். உன்
முகத்தில் இருப்பவை அருள் கண்கள் அல்லவோ என்கின்றார்.

உரையாய்- வாழி, தோழி!- இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை,
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி,
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி,
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே.

எனும் நற்றிணைப் பாடலில் சிற்றில் கட்டி விளையாடி எனும் வரிகள் உண்டு; அதே போன்று

எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே?

எனும் அகப்பாடலிலும் மேலும் காணலாம்.

புலவர் துறை பொன்னுசாமி என்பவர் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய பிள்ளைத்தமிழில் சிற்றில் பருவத்தைக் குறிப்பிடும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

siragu sitril1

சிற்றில் பருவம்

ஊரூர் தோறும் நாடோறும்
உண்மை ஓங்கத் தளராமல்
உயர்வைக் காணத் தளராமல்
ஓயா தலைந்தாய் மணற்கேணி
நீரூற் றறிவுப் பெருமானே
நீசக் கொடியோர் சென்னக்கண்
நெருப்பை மூட்டிப் பலவீட்டை
நீறாய்ப் போக்கிப் பழியுற்றார்காரூர் மாடத் திருந்தாலும்
கயவர்க் கறிவோ பாதாளக்
கழிவைப் போலக் கீழோடக்
கண்டே கல்நார் வீடீந்தாய்
தேரூர் கச்சிப் பதியண்ணா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
பேரா சைக்கோர் வடிவாகிப்
பெருகுங் கந்து வட்டியெனும்
பேயை நாட்டிற் புகுவித்தே
பெரிதுங் குடியைக் கெடுக்கின்றார்
தீரா ஆசைப் பித்தேறித்
திருட்டுப் பணத்தை வெளியிட்டுத்
திறமாய் அரசை ஏமாற்றித்
தீங்கே புரிவார் பலருள்ளார்
தேரார் கல்விப் பயனொன்றும்
சிறுமைக் குணத்தால் இலஞ்சத்தால்
செல்வஞ் சேர்ப்பார் இவையெல்லாம்
தீர்த்தே நாட்டைக் காப்பாய்நீ
சீரார் கச்சிப் பதியண்ணா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் ராத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
பொருவா அருமை வணிகத்தைப்
பொருளே குறியாக் கைக்கொண்டார்
போலிப் பொருளை மிகுவித்தே
பொல்லாக் கலப்புச் செய்கின்றார்
மருவாக் கள்ள வாணிகத்தால்
மக்கள் பொருளை வஞ்சிப்பார்
மறைவாய்ச் செல்வம் குவிக்கின்றார்
வரியை அதனால் குறைக்கின்றார்
வெருவத் தக்கார் செயலெல்லாம்
விளையும் பயிரின் களையன்றோ?
வெம்மைத் தொழில்கள் இவையெல்லாம்
விளையா வ்ண்ணஞ் சிதைப்பாய்நீ
திருவார் பெருமைச் சிற்றடியால்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தீப்பற் றாத் வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
அன்னைத் தமிழின் மனமார
அருமைக் கதைகள் அணிவித்தாய்
அழியாப் புதினம் பலதந்தாய்
அருமைக் கூந்தும் வளர்த்தாய்நீ
முன்னைத் தமிழர் வீரத்தை
மொழியும் புறநூல் என்வந்தே
முழங்குஞ் செய்தித் தாள்மூலம்
மூடப் பகையின் முடிசாய்த்தாய்
பின்னைத் தமிழர் உனதாற்றல்
பேசிப் பேசிக் களிப்பெய்திப்
பெரிதும் போற்றிப் புகழ்பாடப்
பெருகுங் குணத்துன் சீரட்யால்
சென்னைப் பதியின்  முதல்வாநீ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!

ஈர்க்கும் அருமைக் குணமுள்ளாய்
எளியர்க் கருளும் மனமுள்ளாய்
எதிரிக் குதவும் பரிவுள்ளாய்
இறுமாப் பறியாச் செயல்வல்லாய்
ஆர்க்கும் மனத்தாற் தீங்கெண்ணாய்
அவலக் கண்ணீர் தரியாதாய்
ஆக்கப் பணியே புரிந்துள்ளாய்
அழிவுச் செயலை நினையாதாய்
ஆர்க்குந் தூக்குத் தண்டனையை
அடைந்தான் ஒருவன் உனைவேண்ட
அருளிக் கெடுவைப் பெயர்வித்தே
ஆயுள் தண்டம் பெற்றுய்யத்
தீர்ப்பை மாற்றச் செய்வித்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!

அறமே வடிவாய்க் கொண்டுள்ளாய்
அறிவுச் சுடராய் ஒளிர்கின்றாய்
அன்புத் தாயாய்க் காண்கின்றாய்
அன்னைத் த்மிழாய் இனிக்கின்றாய்
இறவாப் புகழாய் இருக்கின்றாய்
எழுத்திற் பேச்சில் நிறைந்துள்ளாய்
எளிமைக் குள்ளே சிரிக்கின்றாய்
என்றே என்றே நிற்போற்றும்
பிறவாத் தம்பி தங்கையர்கள்
பெற்றுக் கொள்ளா நன்மக்கள்
பேரன் பேத்திக் குளந்தந்தாய்
பேதைக் கருளக் கூடாதொ?
சிறந்தார் போற்றுஞ் சிற்றடியால்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
உய்யும் நெறியா லுயர்ந்தாரே
உலகின் தெய்வம் ஆனார்கள்
உண்மை ஓங்க அறம்வாழ
உயிர்கள் இன்பந் திளைத்தோங்க
வையம் வாழ வாழ்வீந்தார்
வானம் புகுந்தே வாழ்வுற்றார்
வையத் துள்ளே வாழ்வாங்கு
வாழ்வான் தெய்வம் எனப்போற்றும்
தெய்வப் புலவன் மறைதேர்ந்தோம்
செம்மைக் குணத்தோய் உன்வாழ்வைச்
செந்நாப் போதார் வழிநின்றே
சிந்தித் தக்கால் அண்ணாநீ
தெய்வம் என்றால் மிகையாமோ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!

மன்னா உலகில் நிலையாத
மற்றைப் பொருளை மதியாதே
மன்னும் புகழே செய்தாய்நீ
மதியாம் நுதிகூர் வாள்மூலம்
பொன்னா டுயரப் போர்செய்தாய்
புவியோர் புகழுந் தமிழ்காத்தாய்
பொய்யும் வழுவும் அறியாதாய்
பொறுமைக் கடலே அடலேறே!
இன்னா தனவே செய்தார்க்கும்
இனிதே செய்யுஞ் சால்புள்ளாய்
ஏழை அழுகத் தரியாதாய்
எளியர்க் கருளக் கூடாதோ
தென்னாடுடையாய் அண்ணாநீ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!

ஏரா ளர்க்கும் நெய்வார்க்கும்
இணையீ டில்லை என்பார்கள்
ஏற்றம் பெறநற் றொழில்செய்தும்
ஏழ்மைக் குள்ளே தவிக்கின்றார்
ஆரா உணவால் வயிறொட்டி
அரையிற் கந்தற் துணிகட்டி
அல்லும் பகலும் உழைக்கின்றார்
அந்தோ வாழ்வில் வளமில்லை
நேரா வளம்போ யிந்நாட்டில்
நிலைகெட் டுணவுக் கயல்நாட்டை
நேடிச் செல்லும் நிலைமாற்றி
நிகழும் பசுமைப் புரட்சியினால்
தீராப் பஞ்சம் தீர்ப்பாய்நீ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!

ஆர்வங் கொண்டே பலூன்வேண்டி
அழுதாய் என்றே அறைந்தோமா?
அதனாற் திருடன் கைப்பட்டே
அழுதாய் அதைத்தான் உரைத்தோமா?
தேர்விற் பொடிநீ உறிஞ்சியதைத்
தேர்வா ளர்க்குப் பகர்ந்தோமா?
சீட்டாட் டத்திற் சிறுபொழுதைச்
செலவிட் டாயென் றிகழ்ந்தோமா?
பேர்பெற் றுயர்ந்த நடிகையுடன்
பின்னிப் பிணைத்துப் பேசினமா?
பிள்ளைப் பருவப் பக்தியினைப்
பேசிப் பேசிச் சிரித்தோமா?
சீர்பெற் றுயரும் அண்ணாநீ
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!
தீப்பற் றாத வீடீந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!

என எழுதுகின்றார்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிற்றில்”

அதிகம் படித்தது