அக்டோபர் 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

சுந்தர ராமசாமி கவிதையும் நவீனமும்

இல. பிரகாசம்

Mar 24, 2018

Siragu sundra ramasamy1

தமிழில் புதுக்கவிதையானது தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற காலமாக நாம் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியை குறிப்பிடலாம். சி.சு.செல்லப்பா நடத்திய இதழான ‘எழுத்து’ அத்தகைய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவ்விதழில் புதுக்கவிதைகளை அக்கால இளைஞர்கள் பலர் ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் தாங்களும் அவைகளை முயன்று பார்த்தனர். அவ்வகையில் புதுக்கவிதையின் மரபிற்கு பல குறிப்பிடத்தக்க கவிஞர்கள் தோன்றினர் என்பதில் மிகையல்ல.

புதுக்கவிதையானது இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதன் வளர்ச்சி 1950-60 களிலேயே உச்சத்தை தொட்டுவிட்டது என்று நாம் முன்னோடிகளின் பதிவுகளிலிருந்து தகவல்களை பெறுகிறோம். எனினும் சோதனை என்பது பிற்காலத்தில் மட்டுப்பட்டே காணப்பட்டது என்பதை ஆய்வுகளின் தரவுகள் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் தமிழுக்கு புதுக்கவிதையாளராக அறிமுகம் ஆனவர் சுந்தர ராமசாமி.

சுந்தர ராமசாமியின் கவிதைக் கூறு:

1970-80களில் தமிழ் கவிதையில் தொய்வு நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கவிதையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த பெருமைக்குரியவர் என்ற வகையில் சுந்தர ராமசாமியின் கவிதைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவைகளின் கூறுபாடுகள் பிற்காலத்தில் கவிதை எழுத வந்தவர்களுக்கு புதிய உத்வேகத்தையும் தெம்பையும் அளித்தது.

கவிதையைப் பற்றி சுந்தர ராமசாமி(சு.ரா) அவர்கள் “நான் உரைநடையின் சந்ததி. அதனால் எனது எழுத்துக்கள் உரைநடையில் அமைந்திருக்கின்றன. இதுவே நான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து வளர்ந்து எழுதியிருந்தால் அன்றைய சமகால வடிவமான கவிதையில் மட்டுமே எழுதியிருப்பேன்” என்று கவிதையானது தன் சமகாலத்தில் எந்தவடித்தை நோக்கியிருந்தது என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டிருந்திருக்கிறார்.

அவர் தனது கவிதையை பழைய யாப்பு மரபின் பின் செல்வதற்கோ அல்லது செய்வதற்கோ முயலவில்லை. அல்லது அதனை மீறி கட்டற்ற உரைநடைத் தன்மையை கவிதைப் பொருளில் செய்வது என்று எண்ணி இச்சோதனையில் ஈடுபட்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாக அவர் அளித்த பேட்டியில் “நான் உரைநடையின் சந்ததி” என்ற தன்னை அறிவித்துக் கொள்ள முடிகிறது.

முதல் கவிதையும், சர்ச்சையும்:

சு.ரா அவர்களின் முதல் கவிதையானது சி.சு.செல்லப்பா நடத்திய “எழுத்து”வில் 1959-ல் மூன்றாவது இதழில் வெளியானது. அது “உன் கை நகம்” என்ற தலைப்பில் வெளியானது. இத்தலைப்பில் எழுதப்பட்ட கவிதையானது அதுவரை உரைநடைக் கவிதையை ஏற்றுக் கொண்டவர்களில் சிலர் கூட எதிர்க்கும் நிலையில் இருந்ததே அதற்கு காரணம். அக்கவிதை குறித்து க.நா.சு அவர்களோ “உன் கை நகம் என்கிற கவிதை அவசியமான ஒரு இன்றைய சோதனை முயற்சி” என்று பாராட்டுகிறார். ஆனால் இதனை சி.சு.செல்லப்பா “இக்கவிதையை வாசகர்கள் பலரும் ஜீரணிக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார்.

வாசகர்களின் ஜீரணிக்க முடியாத அக்கவிதை அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இருந்து சற்று மீறிச் செயல்படுவதாக கருதப்பட்டது.

உன் கை நகம்:

அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இருந்து விலகி புதிய பாடுபொருளை கவிதையாக செய்யப்பட்டதனால் எற்பட்ட விளைவு கருதலாம். ஆனாலும் பிற்காலத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய திருப்பத்தை உண்டாக்கியது.
அக்கவிதையின் நீளம் கருதி அதன் சில பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

“நகத்தை வெட்டியெறி- அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி- அழுக்குச் சேரும்

அகிலமே சொந்தம் அழுக்குக்கு
நகக்கண்ணும் எதற்கு அழுக்குக்கு”

கவிதையின் தொடக்கநிலை இவ்வாறு உரைநடைத் தன்மையை ஏற்றுள்ளது. அதில் யாருக்கும் அதிர்ச்சியோ கிடையாது. அது தான் செயலாற்றவிருக்கின்ற பொருளில் ஏற்பட்ட சில சிக்கல்கள் கேள்வியை எழுப்பியது.

உரைநடை ஏன் கவிதைத் தன்மையை ஏற்று கவிதைக்கான அனுபவத்தை வாசகனுக்கு அளிக்க முடியாது? என்ற கேள்வியே புதுக்கவிதையின் அடிநாதம் எனலாம். அதன் தன்மையிலேயே மிகத் தீவிரமாக உரைநடையை புகுத்தியதாக இக்கவிதை சிலரால் கண்மூடித்தனமாக அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார் என்றும் நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. (பழமை வாதிகள்).

மேற்கண்ட கவிதையின் மற்ற அடிகளைப் பற்றிப் பார்ப்போம்,

“ஆரத் தழுவிய
அருமைக் கண்ணாளனின்
இடது தோளில்
ரத்தம் கசியும்
வலதுகை நகத்தை வெட்டியெறி- அல்லது
தாம்பத்ய பந்தத்தை விட்டுவிடு”
என்றும், இவ்வாறு மற்ற சிலவரிகளும் தொடர்கிறது. அவை,

“குறும்பை தோண்டலாம்
குறும்பைக்குக் குடியிருப்பு
குடலுக்குக் குடிமாற்றம்
குருதியிலும் கலந்துபோம்- உன்
குருதியிலும் கலந்துபோம்

நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்

என்று அதுவரை காதல், அழுகை, மனிதப் புறநிலை, வெளிப்பாடு ஆகியவற்றை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டிருந்த கவிதை அதன்நிலையிலிருந்து விலகி செயல்பட்டிருப்பதே அப்போது அது பலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. பின்னால் அதைப் பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சு.ரா.வின் கவிதையின் சாரம்:

சு.ரா.வின் கவிதையின் சாரம் பற்றி “சுந்தர ராமசாமியின் கவிதைகள் அனுபவத்தை முதன்மையாகக் கொண்டு அவற்றின் சாரங்களைக் குறித்து விவாதிப்பவை” என்று கவிஞர் சுகுமாரன் குறிப்பிடுகிறார். எந்தக் கவிதையும் புறநிலை அல்லது மனோநிலை பாதிப்பின் அடிப்படையிலேயே கருவாக வேண்டும். அப்படி அது தொந்தரவு செய்கிற நிலையில் படைப்பாளருக்கு கவிதை உருக்கொள்கிறது. அப்படித்தான் சு.ரா விற்கும் பொருந்தும். இதில் சு.ரா. மாறுபடும் நிலைதான் இங்கே முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டும். அதற்கு உதாரணமாக “பின் திண்ணைக் காட்சி” என்கிற கவிதையைப் பார்ப்போம்.

“துளசி
மகத்துவ இலைகளுடன்
தென்றலுக்குக் குலுங்குகிறது
மகத்துவமாய் கழியும் அதன் நாட்கள்

இரண்டு சொட்டு எண்ணெய்க்கு
இக்கிணற்றின் நாட்டு ராட்டு
எடுத்து வரும் ஓலம்
காற்றில் கரைகிறது”

மேற்கண்ட வரிகள் மிக இயல்பான உரை நடையில் அமைந்திருப்பது கண்கூடு. என்றாலும், படைப்பாளியின் மனத்தில் ஏற்படுத்திய பாதிப்பு வெளியீட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. “இரண்டு சொட்டு எண்ணெய்க்கு, இக்கிணற்றின் நாட்டு ராட்டு, எடுத்து வரும் ஓலம், காற்றில் கரைகிறது. இதில் அனுபவம் மேலோங்கியிருப்பதைக் காணலாம்.

அவரது மற்ற கவிதைகளான “பதிவுகள் அழியும் காலம்”, “வாழும் கணங்கள்” ஆகிய கவிதைகளில் அனுபவ முறையையும் அதனை வெளிப்படுத்தும் விதத்தையும் தனித்து அறிய முடிகிறது.

கவிதையை பல கோணத்தில் சோதித்தல்:

சு.ரா. அவர்கள் தன் கவிதை மீது மிக அதிக அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறார். அதன் அடிப்படையிலே அவரது கவிதைகள் சில அவ்வப்போது மாற்றம் பெற்று வந்திருப்பதை நாம் காணமுடிகிறது. இது கவிதை மீதான அவர் கொண்டிருந்த உயரிய நோக்கத்தையும், மதிப்பினையும் வெளிப்படுத்துகிறது.

சு.ராவின் கவிதைகளில் ஒன்றான “கன்னியாகுமரியில்” அவர் மெருகூட்டிய விதத்தைக் காணமுடியும். 1975-ல் ‘பிரக்ஞை’ இதழில் பிரசுமான இக்கவிதையின் கரு, சூரிய அஸத்தமனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆட்டினால் தான் அனுபவிக்க வேண்டிய அழகு மறைகிறது. பின் அது நகர்ந்தோடிய பொழுது அக்காட்சியை அதே நிலையில் அனுபவிக்க முடியாமல் போனதன் தவிப்பு முதன்மைப் படுத்தப்படுகிறது. அதனை முதல் பிரசுரத்தின் போது “எனது கோணத்தை, சற்றே நான் மாற்றிக் கொண்டால் லாபம் ஒரு சூரியன்” என்றிருக்கிறது. மற்றொரு இதழான ‘சதங்கை’1975-ல் “இன்று அபூர்வமாய் மேகமற்ற வானம்” என்று ஆரம்பித்து பின் “எங்கிருந்தோ வந்து என் பார்வையை மறைக்கிறது இந்த ஆட்டுக்குட்டி” என்று திருத்தப்படுகிறது.

பின் மீண்டும் ஒரு முறை ‘நடுநிசி நாய்கள்’ முதல் தொகுப்பிலும், ‘107’ கவிதைகள் தொகுப்பிலும் இக்கவிதை மாற்றம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டு அக்கவிதையை மேலும் செறிவாக்கியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
சு.ரா.வின் பிற கவிதைகள்:

“கவிதை மனிதத் தன்மையின் குரல், தர்க்கத்தின் குரலோ, விஞ்ஞானத்தின் குரலோ, வேதாந்தத்தின் குரலோ அல்ல. மனிதனின் உணர்வு ரீதியான எதிர்வினை உயிர்களின் மதிப்பைச் சார்ந்தும் நிகழ்வதில்லை. உயிர்களுடன் நாம் கொண்டிருக்கும் தொடர்பைச் சார்ந்தே நிகழ்கின்றன.” என்று குறிப்பிடுவதில் உள்ள முக்கிய காரணம் உயிர்களுடன் தான் நமக்கான (கவிதை) பினைப்பு ஏற்படுகிறது என்பது அவரது கருத்தின் சாரமாகக் கொள்ளத்தக்கது. இப்பாதிப்பை “நடுநிசி நாய்கள்”, “பூனைகள் பற்றி ஒரு குறிப்பு”, “ஆந்தைகள்”, “விருட்ச மனிதர்கள்” ஆகிய கவிதைகளில் பிற உயிர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் காணலாம்.

சு.ரா.வின் கவிதைகளில் எப்பொழுதும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறுவது “ரிஷி மீது கவிழ்ந்த ஜூவாலை”. அது ஏற்படுத்தும் தாக்கம் வாசகனுக்கு ஒரு இருளுக்கு ஏற்படுகிற கொடுமையும் இருளை உண்ட பின்னும் ஜூவாலைக்கு மேலும் ஏற்படுகிற அதீத பசியையும் உணரமுடியும். அதுவே இக்கவிதைக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றி. அக்கவிதை இங்கே,

“அந்தி மயங்க அந்தகாரம் சூழந்தது
குகை வாயிலில் தன் மூச்சால்
ஊதி ஊதி தீ வளர்த்தார் அந்த ரிஷி
ஹ ஹ ஹா என்றெழுந்தது ஜூவாலை

ஜூவாலையின் பேய்ப்பசிக்குப் பயந்து
குகைக்குள் சிதறி ஓடிய இருள்
போக்கிடமின்றி கற்சுவரில் மோதி
நெருப்பில் விழுந்து மடிந்தது

பரவசத்தில் களிநடம் புரிந்தார் ரிஷி
‘துளியும் மிச்சமின்றி
அந்தகாரத்தை உண்டு மகிழ்’ என்று
ஆர்ப்பரித்தார்.
ஜூவாலை ரிஷியின் மீது கவிழ்ந்தது”
(கொல்லிப்பாவை 1987)

‘ஓவியத்தில் எரியும் சுடர்’ என்ற கவிதையும் மிக நேர்த்தியாக படம்பிடிக்கப்பட்ட ஒரு கவிதையாகும். சிலர் இதனை வெறும் வருணனை என்ற அளவிலே மட்டுமே பார்க்கின்றனர். அது அவரது கவிதையை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைப் பொருத்தது. அதன் வரிகள் சில இங்கே,

“அந்தச் சுடர்
தன்னை எரித்துக் கொண்டே
ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அந்தச் சுடர்
உருவாகி வந்த போது
ஓவியரின் விரல்களை எரிக்காமல் இருந்த விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அழிக்காமல் எரியவும்
அழகாக நிற்கவும்
எப்படிக் கற்றுக் கொண்டது அது?”
(சுபமங்களா 1994)
இக்கவிதை வெறும் காட்சி விவரிப்பு என்று என்று சொன்னால் ஒரு நல்ல கவிதையை எப்படி அவர்களால் அதன் பாதிப்புடன் ஒன்றி அனுபவிக்க முடியும்?.

புதிய சோதனை:

இலக்கியத்தில் அவ்வப்பொழுது சோதனைகள் செய்ய வேண்டியது ஒரு தீவிர இலக்கியவாதியின் நோக்கத்தில் ஒன்றாக இருக்கும். அப்படி சு.ரா. அவர்கள் செய்த சோதனைகள் சில கவிதையின் காலமாற்றத்திற்கு வித்திட்டது என சொல்லலாம். ஆனால் அது எந்த வகையில் வெற்றியை தந்தது என்பது சற்று கேள்வி என்றே தோன்றுகிறது. எனினும் அவர் மேற்கொண்ட சோதனை குறிப்பிட வேண்டிய ஒன்றே.

‘மந்த்ரம்’ கவிதையானது புதுக்கவிதையில் நவீனத்துவத்தை ஏற்படுத்தியது. ‘மந்த்ரம்’ (இலக்கிய வட்டம்) வடிவத்தில் மட்டுமின்றி வாழ்வியல் சார்ந்த பல விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பக் கூடியது. புதிய சோதனை ரீதியில் எடுத்துக் கொண்டால் நிச்சம் இக்கவிதை விவாதிக்கத்தக்கது.

கவிதையை பிறருக்கு உணர்த்த முடியாது:

“கவிதையின் அனுபவ மையத்தைப் பிறருக்கு உணர்த்துவது நுட்பமான காரியம். நுட்பமும் மென்மையும் கூடிய உணர்ச்சி, கவிதையின் முதல் தளத்தை ஊன்றிப் பார்க்கும் ஆற்றல், கவிதை கேட்கும் விரிவுக்கு இடம் தரும் வாழ்க்கை அனுபவம், விவேகமான கற்பனை இவை இல்லாமல் ஒரு கவிதையையும் அனுபவிக்க முடியாது. சுய அனுபவம் பெறாமல் கவிதையை பிறருக்கு உணர்த்த முடியாது” என்று கூறுவதிலிருந்து கவிதை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடு நமக்கு புலப்படுகிறது.

சு.ரா தன் நாற்பத்தைந்தாண்டு கவிதை வாழ்வில் அவர் எழுதிய கவிதைகள் மிகமிகக் குறைவு. என்றாலும், அவரது கவிதை உலகம் நவீன கவிதையில் செய்த ஆளுமை மிக முக்கியமானது. அதனால் அவரால் தான் தன் கவிதையை பலமுறை மாற்றி செறிவாக்க முடிந்திருக்கிறது.

பிற்கால தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பிற மொழிகளிலிருந்து கவிஞர்களைக் கூட்டி மொழிபெயர்ப்பு பட்டறை நடத்தியது இவர் வாழ்வில் மிக முக்கியமான தருனம் என்றே சொல்லலாம். மொழிபெயர்ப்புகள் மூலமும் தமிழுக்கு நல்ல கவிதையையும் கொண்டுவந்தவர். அது மட்டுமல்ல தமிழ்க் கவிதைகளை பிறமொழிக்கு அறிமுகம் செய்து தமிழ்ப் புதுக்கவிதையை பிற பகுதிக்கு பரப்பியவர்களில் முதன்மையானவராக விளங்குகிறார்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுந்தர ராமசாமி கவிதையும் நவீனமும்”

அதிகம் படித்தது