மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசின் வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 56

கி.ஆறுமுகம்

Apr 11, 2015

subaash newஇரண்டு விசாரணைக் குழுக்களும் தனது அறிக்கையை, இந்திய அரசு என்ன நினைத்து குழுவை அமைத்ததோ அந்த பணியை மிக அழகாக செய்தது. போசு விமான விபத்தில் இறந்தார் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனை மக்களிடம் அரசு தெரிவித்ததும், அரசு எதிர்பார்த்தது என்னவென்றால் மக்கள் போசு விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று நம்பிவிடுவார்கள் என்று. ஆனால் மக்களின் சந்தேகங்கள் அரசுக்கு எதிராக அமைந்தது. இதனால் இந்திய அரசு மூன்றாவதாக 1999-ல் மீண்டும் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க நேர்ந்தது. இந்த விசாரணை குழு ஓய்வுபெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி முகர்ஜியை (Justice mukherjee) கொண்ட ஒரு நபர் விசாரணை.

bose1இந்தக் குழு அமைத்ததின் நோக்கம்:

  1. நேதாஜி சுபாசு சந்திர போசு இறந்துவிட்டாரா? அல்லது உயிருடன் இருக்கிறாரா?
  2. அவர் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று கூறுவது உண்மையா?
  3. ஜப்பான் கோவிலில் இருப்பது நேதாஜியின் சாம்பலா?
  4. வேறு எந்த இடத்தில் வேறு எந்த முறையில் இறந்தார் மற்றும் அவ்வாறாயின் எப்போது, எப்படி?
  5. அவர் இறக்கவில்லை எனில் எங்கு உள்ளார்?

இந்த மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கொடுப்பது என்.சி.முகர்ஜி அவர்களின் கடமையாக அமைந்தது. அவர் விசாரணையைத் தொடங்கியதும் இவருக்கு முன் அமைந்த இரண்டு விசாரணைக் குழுவின் அறிக்கையையும் பரிசீலனை செய்தார். பின்னர் இந்தியாவில் இருந்த சாட்சியங்கள் அனைத்தையும் விசாரித்து பின்னர் இந்தியாவில் இருந்து புறப்பட்டு ஜப்பான், தைவான், ரசியா என்று போசின் உடன் சார்ந்த அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து சுமார் 131 நபர்களிடம் சாட்சியாக விசாரணை செய்தார்.

இந்தியாவில் விசாரணையைத் தொடங்கியதும் ஒவ்வொரு சாட்சியாக அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அப்போது அனைவரும் தெரிவித்த ஒட்டுமொத்த கருத்து என்னவென்றால் நான் அவரிடம் கேட்டது, நான் பேசியது, என்னிடம் ஆதாரங்கள் இல்லை என்று பலரும் எந்தவித அதிகாரப்பூர்வமான ஆதாரங்களும் இல்லாமல் பதில் தெரிவித்தனர். இன்னும் சிலர் முன்பாக அமைந்த தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்த குழுவை கைக்காட்டினார்கள். இந்த சாட்சிகளின் வரிசையில் அப்போது முன்னால் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி விசாரிக்கப்பட்டார். அவர் கூறிய பதில்,

bose5குழு: நீங்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பொழுது, ஜப்பானின் டோக்கியோவில் ரெங்கோஜி கோவிலில் இருந்த நேதாஜியின் அஸ்தி என்று கூறப்படும் சாம்பலை இந்தியா கொண்டுவரும் பணி நடைபெற்றது அல்லவா?

பிரணாப் முகர்ஜி: ஆமாம்.

குழு: அது போசின் சாம்பல்தான் என்று இந்திய அரசு நம்பியதா?

பிரணாப் முகர்ஜி: ஆமாம் நம்பியது.

குழு: எதன் அடிப்படையில் இந்திய அரசு அது நேதாஜியின் சாம்பல் என்று நம்பியது உறுதிப்படுத்தியது?

பிரணாப் முகர்ஜி: முந்தைய இரண்டு குழுக்களும் அது நேதாஜியின் சாம்பல் என்று அறிக்கை வழங்கியது. அதன் அடிப்படையில் தான் இந்திய அரசு நம்பியது.

குழு: அந்த குழுக்களின் அறிக்கையைத் தவிர வேறு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா?, சாட்சிகள் உண்டா?.

பிரணாப் முகர்ஜி: இல்லை

பின்னர் முகர்ஜி குழு உத்திர பிரதேசத்தில் போசு வாழ்ந்தார், அவர் பகவான் ஜி என்று பெயர் கொண்டிருந்தார் என்று மக்களால் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பகவான் ஜி இறந்து சில ஆண்டுகள் சென்றிருந்தது. இவர் தான் போசு என்று மக்கள் நம்பினார்கள். எனவே குழு பகவான் ஜி வாழ்ந்த இடத்திற்குச் சென்றது. அங்கு அவர் பயன்படுத்திய பொருட்களை சோதனை செய்தது. சிறு பகவத்கீதை புத்தகம், ஒரு ஜபமாலை, ஒரு வட்டவடிவமான மூக்குக் கண்ணாடி இவைகள்தான் அவரின் பொருட்கள். இந்தப் பொருட்கள் போசிடம் எப்போதும் உடன் இருப்பவை. எனவே மக்கள் இவர்தான் போசு, பகவான்ஜி என்று சன்னியாசியாக உள்ளார் என்றனர். குழு அவர் எழுதிய கடிதங்களை எடுத்து போசு எழுதிய கடிதங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. பின்னர் சிறிதளவு ஒற்றுமை உள்ளது ஆனால் இந்த கடிதங்களின் ஆய்வைக் கொண்டு இவர் போசு என்று கூற இயலாது. இவர் போசு இல்லை என்று தெரிவித்துவிட்டது. பின்னர், ஜப்பான் சென்றது அங்கு டோக்கியோவில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் சாம்பல் என்று கூறப்பட்ட கண்ணாடியினால் மூடி பாதுகாக்கப்பட்ட பெட்டியைத் திறக்க வேண்டும் என்றது. அதற்கு அந்த கோவிலின் உயர் சன்னியாசி ஒப்புக்கொள்ளவில்லை.

bose3பின்னர் குழு இந்திய அரசிடம் தெரிவித்து, ஜப்பானில் இருந்த நமது தூதரகத்திற்கு தொடர்பு கொண்டு ஜப்பான் அரசிடம் பேசியது. பிறகு கண்ணாடி பெட்டி திறக்கப்பட்டது. அதில் இருந்து சிறு எலும்புகளை எடுத்து சன்னியாசி குழுவிடம் ஒப்படைத்தார். அது ஐதராபாத்தில் உள்ள DNA ஆராய்ச்சி துறைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அந்த எலும்புத் துண்டை ஆராய்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் இந்த எலும்புத் துண்டு முற்றிலும் எரிந்துவிட்டது, இதனைக் கொண்டு DNA ஆராய்ச்சி செய்வது கடினம். மேலும் மிக நுட்பமான DNA ஆராய்ச்சி செய்வதற்கு நமது நாட்டில் போதிய வசதி இல்லை. எனவே இதனை நீங்கள் வெளிநாடுகளில் முயற்சி செய்யுங்கள் என்று ஐதராபாத்தில் இருந்து முகர்ஜி குழுவுக்கு கடிதம் அனுப்பினார். உடனே குழு DNA ஆய்வுக்கு சிறந்தவர்களைத் தேடி கண்டுபிடித்தது.

ஆய்வுகளை செய்தது பலநாட்கள் நடந்த இந்த ஆய்வின் முடிவில் DNA ஆராய்ச்சிக்கு தகுந்த எலும்பாக அது அமையவில்லை. எனவே மீண்டும் மற்றொரு எலும்பு தேவைப்பட்டது. இதற்கு 6 மாத காலம் ஆனது. எனவே குழு மீண்டும் கோவிலுக்குச் சென்றது.

bose4மீண்டும் டோக்கியோ கோவிலுக்குச் சென்று DNA ஆய்வுக்கு உட்படக்கூடிய சிறந்த எலும்புத் துண்டை எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டபோது மீண்டும் கோவிலில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் ஜப்பான் அரசைத் தொடர்பு கொண்டு எலும்பைப் பெற்ற குழு, ரசியா சென்றது. அங்கு மிகவும் முக்கிய சாட்சிகள் என்று முகர்ஜி குழுவினால் கருத்தப்பட்ட 6 நபர்களில் 4 நபர்களிடம் மட்டுமே விசாரணை நடத்த முடிந்தது. மீதி இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இதற்கு ரசியா அரசு ஒத்துழைக்கவில்லை. இந்திய அரசிடம் தொடர்பு கொண்ட போது, இந்தியாவிடம் இருந்தும் சரியான ஒத்துழைப்பு குழுவுக்கு வழங்கப்படவில்லை. குழு மீண்டும் ஜப்பான் நாட்டுக்கு வந்தது. அங்கும் சாட்சிகளை விசாரணை செய்வதற்கு ஜப்பான் அரசு ஒத்துழைக்கவில்லை. இது போன்று முகர்ஜி குழு சென்ற இடத்தில் எல்லாம் போதுமான ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசின் வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 56”

அதிகம் படித்தது