செட்டிநாட்டுக் கவிஞர்கள்
முனைவர் மு.பத்மாApr 8, 2017
செட்டிநாடு பற்பல கவிஞர்களால் பொலிவு பெற்று வருகிறது. சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றனார், ஒக்கூர் மசாத்தியார், பாரி மகளிர், கபிலர் போன்ற புலவர்கள் இவ்வகையில் எண்ணத்தக்கவர்கள். நாவுக்கரசர் திருப்புத்தூர் வருகைத் தந்துப் பதிகம் பாடியுள்ளார். ஞான சம்பந்தர் செட்டி நாட்டுத் தேவாரத் தலங்களைப் பாடியுள்ளார்.
பட்டினத்தார், பாடுவார் முத்தப்பர் போன்ற புலவர்கள் பக்தி இலக்கிய கால புலவர்களாக அமைகின்றனர். கம்பர் நாட்டரசன் கோட்டையில் தன் நிறைவுகால வாழ்வை வாழ்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிற்றிலக்கிய காலத்தில் பல புலவர்கள் சிற்றிலக்கிய வகைகளைப் பாடியுள்ளனர். குறிப்பாக குன்றக்குடி முருகன் மீது பல சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்றன.
வீரபத்திரக் கவிராயர் இயற்றிய குன்றக்குடிக் குறவஞ்சி, மதுரகவி ஆண்டவரின் போற்றி மடக்குப் பதிகம், பாம்பன் சுவாமிகளின் குன்றக்குடி பதிகம், பிச்சுவையரின் சண்முகநாதர் உலா போன்றன இவ்வகையில் அடங்கும். தொடர்ந்து குன்றக்குடி சார்ந்து கவிஞர்கள் வெளிப்பட்டனர். இதற்குக் குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் நிறுவிய திருப்பத்தூர் தமிழ்ச்சங்கம் ஒரு காரணம். அது நடத்திய பொற்கிழிக் கவிதைப் போட்டி மரபு சார்ந்த கவிஞர்களை உருவாக்கும் களமாக விளங்கியது.
சமுதாய மறுமலர்ச்சி காலத்தில் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் போன்றோர் செட்டிநாடு சார்ந்து இயங்கினர். பாவேந்தர் பல முறை செட்டிநாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்துள்ளார். இக்கவிஞர்களால் செட்டிநாட்டில் கவிஞர் பரம்பரை உருவாகத் தொடங்கியது. கவிஞர் பெரி. சிவனடியான், கவிஞர் அர. சிங்கார வடிவேலன், பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரனார், கவிஞர் ஜவகர்லால், கவிஞர் சொ. சொ. மீ. சுந்தரம் ஆகியோர்தம் ஒருங்கிணைப்பில் பல கவியரங்குகள் நடைபெற்றுக் கவிதை ஆர்வத்தைப் பெருக்கின. இவ்வரிசையில் பல கவிஞர்கள் தம் படைப்புகளைப் புத்தகங்களாகவும், அரங்க வெளிப்பாடுகளாகவும் தர முற்பட்டனர்.
அவர்களில் குறிக்கத்தக்கவர்கள் பின்வருமாறு. அண்ணாமலை, அழ. அமிர்தலிங்கனார், அருணன்.சொ, அருணாசலம். ஆத்தங்குடி, அருணாசலம். சபா., அருணாசலம். சேது, அழகுஅருணாசலம்.நா, அறிவுநம்பி, ஆண்டவர்.மெய், ஆனந்தன்.காசி, இராமலிங்கம்.சோம, இலக்குவன். குறள், இளங்கோவன். அருட்கவி; இளவரசு. சோம, கண்ணதாசன், கண்ணதாசன். பாகை, கண்ணப்பன்.மா., கண்ணம்மை, கணேசன். சா. (கம்பனடிப்பொடி), கணேசன்.கதி, கதிரவன், கதிரேசன்.கா(குன்றக்குடி ஆதீனப்புலவர்), கதிரேசன்.குழ, கதிரேசன்.சுப., கரும்பட்டி கவிராயர், கனவுதாசன், கஸ்தூரிநாதன்.வி.கே, கார்மேகம், தேவகோட்டை), கார்மேகம்.மரு.(காரைக்குடி), குமரப்பன் (தாலாட்டுக் கவிஞர்), சண்முக பாண்டியன், சண்முகசுந்தர மீனா, சண்முகஞ்செட்டியார் (புதுவயல்), சவகர்லால்.ச, சிங்காரம் சிவல்புரி, சிங்காரவடிவேலன்.அர, சிங்காரவேலு, சிதம்பரம்.சித, சிந்நயச் செட்டியார், சிவகாமி அருணாசலம், சிவப்பிரகாசம். சோம. சிவபாரதி. சிவனடியான். பெரி, சீனிவாசன்.ந. இலக்கியமேகம், சுத்தானந்த பாரதி, சுந்தரம். சொ.சொ.மீ., சுந்தரம்.மெ., சுந்தரம்.வெற்றியூர், செல்லப்பன்.புதுவயல், செல்வகணபதி. குழந்தைக்கவிஞர், சேதுபதி.சொ, சேவுகன் செட்டி, சொக்கலிங்கனார்.ராய.சொ, சொக்கு சுப்பிரமணியன், சோமசுந்தரம். அரு. பொற்கிழிக்கவிஞர், சோமு.பெங்களுர், சோலச்சி நாகப்பன், தேசிகன், தேவி நாச்சியப்பன், தேனப்பன்.வ., தேனம்மை லெட்சுமணன், நடராசன். பறம்பு, நடராசன்.பால, நாகப்பன்.அரு (மக்கள் கவிஞர்), நாகப்பன். அரு. ,நாகப்பன்.கா., நாகராசன்.இரா, நாரா. நாச்சியப்பன், நாவுக்கரசன், பரமகுரு.மரு, பழநி பாரதி, பழனி.ஆ.பாவலர்மணி, பழனியப்பன்.அரசி, பழனியப்பன்.சாமி., பழனியப்பன்.வெ., பாடுவார் முத்தப்பர், பாரதிதாசன், பாரதியார், பாரி.மு, பாலு.குன்றை, பொன்ராசன்.ரா, மணிபாரதி, மாணிக்கம். வ. சுப., மீரா, மீனா தமிழரசி, மீனாட்சி (ஆரோவில்), முடியரசன், முத்து மீனா, முத்துக்குமார்.அரசி, முத்துகணேசன்.ரெ., முத்துராமன்.மா. புலவர் மாமணி, முருகசாமி.தெ, முருகப்பன்.மெ, முருகு. சுப்பிரமணியன், மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், ராகவன் முத்து, ராமநாதன் கந்தனருள், ராமநாதன். தேவகோட்டை, ராமநாதன்.எம்.எஸ், வள்ளி முத்தையா, வள்ளியப்பன்..ரெங்க.லெ, வள்ளியப்பா.அழ. வள்ளியின் செல்வன்.பழ. வீரப்பன்.வா., வீரமுத்து, வேலப்பன்.பலவான்குடி, ஜனநேசன், ஜெயங்கொண்டான்.மெ., ஜெயமணி சிறுவயல், ஸ்டீபன் மிக்கேல் கேல்ராஜ் போன்ற பலர் தற்போது கவிதைகள் எழுதி வருகின்றனர். இவர்களின் படைப்புகளில் செட்டிநாடுசார் கருத்துகள் இடம் பெற்றுச் சிறக்கின்றன. அவற்றிற்கு ஒன்றிரண்டு சான்றுகளை இக்கட்டுரை வழங்குகிறது.
கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள் ‘‘தமிழ்த்தொண்டர் தொகை” என்ற ஒரு பாடற் தொகுப்பினைப் பாடியுள்ளார். இதில் தன் தந்தை, தாய், தன் ஆசிரியர் அரங்க வாத்தியார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்றோர்க்கு அடியவனாகத் தன்னை ஆக்கிக்கொள்கிறார்.
‘‘வழுத்து மென்தாய் உயர் நாச்சியம்மையார்க்கு அடியேன்
மதித்தந்தை திருசாமி நாதற்கும் அடியேன்
எழுத்தறிவு நல்குஅரங்க வாத்தியார்க்கும் அடியேன்
இலக்கியஞ்சொல் சிதம்பரப் பேர் ஏந்தலுக்கும் அடியேன்
பழுத்ததமிழ் நிறைசேதுப் பிள்ளைக்கும் அடியேன்
பலவழியில் ஊக்குவித்த ராஜாஜிக்கு அடியேன்
முழுத்தகுதிக் குருதேவர் தெ.பொ.மீக்கு அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே!’’
(தமி்ழ்த்தாய் பிரபந்தம் ப.34)
என்ற பாடலில் கம்பன் அடிப்பொடியாரின் நன்றியுணர்வு வெளிப்படுகிறது.
பொற்கிழிக் கவிஞர் சவகர்லால் அனுமனாகத் தன்னை அமைத்துக் கொண்டு பாடிய தமிழ்த்திறம் பின்வருமாறு,
‘‘கல்லுக்கே உயிரளித்தான் குகனாம் அன்புக்
கடலுக்கே நட்பளித்தான், தஞ்சம் என்ற
சொல்லுக்கே வாழ்வளித்தான் தம்பி என்ற
சுடருக்கே ஒளியளித்தான் போரில் அம்பாற்
கொல்லப்பட்டார்க்கெல்லாம் வீடளித்தான்
குவலயத்தில் என் தொண்டைப் போற்றித் தன்னை
அள்ளிக் கொள்வாயென்று தனையே தந்தான்
ஆரிந்த பரிசு பெற்றார் என்னை விட்டால்” (கம்பன் பொழில் ப. 42)
என்ற இப்பாடலில் இராமன் அனுமனை அணைந்து கொண்ட நிலையைக் காணமுடிகிறது.
கவிஞர் மரு. பரமகுரு அவர்கள் கம்பன் விழாவில் ஜீவா பேசிய காட்சியினைப் பாடலாகப் பதிவு செய்துள்ளார். அப்போது கம்பன் விழா பற்றி வரும் செய்தி பின்வருமாறு,
‘‘கம்பராமா யணக்கடலில் ஆழ்ந் தெழுந்து கருமுத்துக் கொணர்ந்து வந்தே
அம்பலத்தில் தர விளக்கும் பான்மையிலே அறிஞரெலாம் மெய்மறக்கும்
கம்பன்விழாக் காட்சிகளை எப்படித்தான் மறப்பேனோ தெய்வக் கம்பன்
உம்பருக்கே இன்றழைத்தான் போலும்இவனோடுஇருந்தங்கு குரையாடற்கே!
(மனச்சுவடுகள், ப.152)
என்ற பாடலில் கம்பனையும் காணமுடிகிறது. கம்ப விழாவின் ரசனையையும் பெறமுடிகிறது.
செட்டிநாட்டு உணவுச் சிறப்பினைப் பின்வரும் கவிதையாகப் படைக்கிறார் புதுவயல் செல்லப்பன்.
‘‘தஞ்சையிலே வாங்கிவந்த தாட்டிலையில் சாப்பாடு
புத்துருக்கு நெய்யூற்றிப் பொதினாத் துவையலிட்டு
வைத்திருக்கும் அன்மையெல்லாம் வடித்துவைத்த சாப்பாடு
இலையினிலே வெஞ்சனங்கள் ஏழோடு பதினாலு
பந்தியிலே வெஞ்சனங்கள் பத்தோடு பதிணொண்ணு
தேனோடு பால்கலந்து செய்தளித்த பாயாசமாம்
வெள்ளிளைப் பணியாரம் விதவிதமாய் இனிப்பு வகை
அள்ளக் குறையாமல் அளித்த பழவகைகள்
இன்னும் பலவாக இனிமை மிகு சாப்பாடு” ( எண்ணச் சிலைகள்,ப.188)
என்ற இந்தப் பாடலில் செட்டிநாட்டு உணவு வகையைப் பரிமாறுகிறார் புதுவயல் செல்லப்பன்.
ஆண்களே பிள்ளைத் தமிழ் பாடும் நிலையில் பெண் பாடிய பிள்ளைத் தமிழ் என்ற புதுமையைப் பெறுகிறது கவிஞர் வள்ளி முத்தையா படைத்த ரசிகமணி டி.கே.சி பிள்ளைத்தமிழ், இசையரசி எம். எஸ். பிள்ளைத்தமிழ்.
‘அருணகிரியின் திருப்புகழும் மாறா அன்பர் கல்கி இசையமுதும்
திருப்பாற்கடலில் துயில்பவனின் திவ்யநாமம் ஆயிரமும்
மருவே இல்லா மொழி பயின்று மக்கள் மனதில் பதிக்க வந்தாய்
குறையொன்றுமில்லை இதயம் ஏற்றிய குழந்தை கொட்டுக் சப்பாணி”
(எம்.எஸ். பிள்ளைத்தமிழ், ப. 13)
என்ற பாடல் எம்.எஸ் அவர்களின் சிறப்பை வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வகையில் செட்டிநாட்டுக் கவிஞர்கள் செட்டிநாட்டு மண்வளத்தை எடுத்துரைப்பவர்களாக உள்ளனர். இவர்களைப் பற்றிய ஆராய்ச்சி என்பது மிகப்பெரிய களமாகும். இதில் ஆய்வாளர்கள் நுழைய இக்கட்டுரை ஒரு அறிமுகமாக அமைகிறது.
முனைவர் மு.பத்மா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டுக் கவிஞர்கள்”