மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி

தேமொழி

Dec 21, 2019

Siragu sembiyan cover

பெரும்பான்மையோர் கோயில்களுக்கு வழிபடுவதற்காகச் சென்றாலும், வரலாற்று நோக்கில் ஆராய்வதற்காக ஆய்வாளர்களும், கோயில்களின் கட்டிடக்கலையையும் சிற்ப அழகைக் கண்டு களிக்கச் செல்வோரும் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவர்களே நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுச் செல்வங்களின் விலை குறிக்க முடியாத மதிப்பையும் உணர்ந்தவர்களாகவும் இருப்பர். இக்காலத்தில் மரபுச் செல்வங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தோன்றியதுடன் அவற்றைக் குறித்து அறியவும் பாதுகாக்கவும் ஒரு சில குழுவினர் இயங்கி வருகிறார்கள். செம்பியன் மாதேவி என்ற வரலாற்று நூலை அண்மையில் வெளியிட்டுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற அமைப்பும் இத்தகையோரில் ஒருவர்.

தொல்லியல் ஆய்வாளர்களான முனைவர் பொ. இராசேந்திரன் மற்றும் முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோர் ‘செம்பியன் மாதேவி – வாழ்வும் பணியும்’ என்ற நூலின் ஆசிரியர்கள். பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் பாண்டிய நாட்டின் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை இதுகாறும் வெளியிட்டு வந்தது. பாண்டிய நாட்டை சோழர்களும் இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டு வந்ததால் அவர்கள் குறித்த வரலாறும் பாண்டிய வரலாற்றுடன் இணைந்திருக்கும் காரணத்தினால் செம்பியன் மாதேவியின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்தும் தமது கவனத்தைத் திருப்பி இந்த நூலை வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் 2019 வெளியீடு கண்டது இந்நூல். இதன் வெளியீட்டிற்கு உதவிய புரவலர் மேனாள் தமிழக கல்வி அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.

நூலின் முன்னுரையைத் தொடர்ந்து செம்பியன் மாதேவியை அறிமுகப்படுத்திய பின்னர், அவர் அறப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றுக்குச் சான்றுகளாகத் திகழும் 1. கோனேரிராஜபுரம், 2. திருக்கோடிக்காவல், 3. ஆடுதுறை, 4. குத்தாலம், 5. செம்பியன்மாதேவி, 6. ஆனாங்கூர், 7. திருவாரூர், 8. மயிலாடுதுறை, 9. திருவக்கரை, 10. திருமுல்லைவாயில், 11. திருமுதுகுன்றம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களையும் அவற்றின் கட்டமைப்பையும், சிலைகளையும், கல்வெட்டுகள் தரும் வரலாற்றுச் செய்திகளையும், அவற்றில் இணைந்துள்ள செம்பியன் மாதேவியின் அறப்பணிகளையும் கலைப்பணிகளையும் விரிவாக நூல் எடுத்துரைக்கிறது. இச்செய்திகள் நூலின் முதல் பாகமாக 50 பக்கங்களில் கொடுக்கப்பட்ட பிறகு, இரண்டாம் பகுதியில் செம்பியன்மாதேவியின் பிற கோயில் பணிகள், அன்னாரின் கலைப்பணி, அவர் வழங்கிய செப்புத் திருமேனிகள், சோழ அரசர்க்கும் அவர்தம் தேவியரும் குறித்து இரண்டாம் பாகத்தில் 25 பக்கங்களுக்கு விளக்கப்படுகிறது. மூன்றாம் பாகமாகச் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் இணைக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் எந்தெந்த பகுதியில் எந்தெந்த திருவுருவங்கள் அமைக்கப்பட்டன என்ற செய்திகளைத் தரும் அட்டவணை நூலின் இரண்டாம் பகுதியில் இணைத்திருப்பது சிறப்பு. சோழர்கால கோயில் கட்டுமான கலை வளர்ச்சியையும் மாற்றத்தையும் அறிய இப்பகுதி உதவுகிறது. இப்பகுதிக்கு உதவும் வகையில் அவை பற்றியும், சிலைகள் குறித்த படங்களும் கொடுக்கப்பட்டால் கோயில் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியையும் அறிந்து கொள்ள உதவும். செப்புச் சிலைகள் குறித்த பட்டியல் நூலின் இரண்டாம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதும் ஒரு சிறந்த இணைப்பு. செம்பியன் மாதேவியின் கவின்மிகு இச்செப்புச் சிலையே இந்த நூலின் அட்டையிலும் இடம்பெற்றுள்ளது.

Siragu Sembiyan Madevi Statue and Inscription

வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படுபவர் மதிக்கப்படுபவர் செம்பியன் மாதேவி. இவர் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் சில நூல்களும் முன்னரே வெளிவந்துள்ளன. நூலின் முன்னுரைச் செய்தியானது, இந்நூலை வெளியிட்ட பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் முன்னர் அவர்கள் வெளியிட்ட வரலாற்று நூல்கள் விரைவில் விற்றுத் தீர்ந்தன என்கிறது. அவ்வாறே இந்நூலும் வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படும் வகையிலேயே அமைந்துள்ளது, அதனால் மறுபதிப்பு வெளியிடும் தேவையும் ஏற்படலாம். மேற்கொண்டு அடுத்த பதிப்புக்கு எடுத்துச் செல்கையில் நூலில் சிற்சில மாற்றங்கள் செய்யலாம். முதலாவதாக நூலில் ஆங்காங்கே தலைகாட்டும் தட்டுப்பிழைகளைச் சீர் செய்யலாம். செம்பியன்மாதேவி வரலாற்றுக்கு எவ்வகையிலும் தொடர்பு இருப்பதாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் அமைந்திருக்கும், நூலின் மூன்றாம் பாகமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் பகுதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக நூலில் இடம் பெறும் கோயில்கள், அவற்றின் சிலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றின் படங்களை இணைக்கலாம். அவை நூலின் செய்தியை விளக்கமாக அறிந்து கொள்ளவும் களத்திற்குப் பார்வையிடச் செல்வோருக்கு ஒரு கையேடாகவும் துணைபுரியும்.

செம்பியன் மாதேவியாவார்

 “செம்பியன் மாதேவி” (கி.பி 910 – 1001) சிவஞான கண்டராதித்தரின் பட்டத்தரசி ஆவார். இவரது சமாதி இன்று சேவூர் என அறியப்படும் செம்பியன் கிழானடி நல்லூரில் அமைந்துள்ளது. ‘மழவரையர் மகளார் கண்டராதித்தர் தேவியார் உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த பராந்தகன் மாதேவடிகளார் செம்பியன் மாதேவியார்’ என்று கல்வெட்டுகளில் செம்பியன் மாதேவியார் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். மழவர் நாட்டின் திருக்கோயிலூரில் மழவர் குலப்பெண்ணாகப் பிறந்து, மிக இளம் வயதில் (முதலாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகனான) கண்டராதித்த சோழரின் இரண்டாவது மனைவியானவர் செம்பியன் மாதேவியார். இவர் குறித்த முதல் கல்வெட்டு 941 ஆம் ஆண்டில் பராந்தகச் சோழனின் காலத்தைய கல்வெட்டாகத் திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் கிடைத்துள்ளது. அதில் இவர் நந்தா விளக்கெரிக்க ஆடுகளைக் கொடையாக அளித்துள்ளார் என்ற செய்தி உள்ளது.

இவரை மணந்த கண்டராதித்தர் 949 ஆம் ஆண்டில் முடிசூடி எட்டு ஆண்டுகளே ஆட்சி செய்து 956 ஆம் ஆண்டில் மறைந்துவிடுகிறார். பதினைந்து ஆண்டுகளே நீடித்த இவரது திருமண வாழ்விற்குப் பிறகு சிறுவனான தமது மகன் மதுராந்தகன் என்ற உத்தமசோழனை வளர்த்து அவன் முடிசூட்டி ஆண்ட பொழுதும், அவனும் மறைந்து அவனுக்குப் பிறகு ராஜ ராஜ சோழன் முடி சூட்டி ஆளத் துவங்கிய பிறகும் என 60 ஆண்டுகள் இவர் இறைப்பணியில் ஈடுபட்டதைக் குறித்து ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தைய 1001 ஆம் ஆண்டின் கல்வெட்டும் கிடைத்துள்ளது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆக, இவர் முதலாம் பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், தமது மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன், இராஜ இராஜ சோழன் எனச் சோழ அரசர்கள் பலரின் அரசாட்சிக் காலங்களைக் கண்ட சோழ அரசகுல முதுபெரும் தேவியாவார்.  செம்பியன் மாதேவி என்பது இவருடைய பட்டப் பெயராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. பிற்காலத்தில் ‘மதுராந்தகன் மாதேவடிகள் ஆன செம்பியன் மாதேவியார்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர் ஆற்றிய இறைப்பணிகள்;

1. செம்பியன் மாதேவியார் புதியதாகக் கட்டிய கோயில்கள், முன்னர் செங்கல் தளிகளாக (கோயில்களாக) இருந்தவற்றை அவர் கற்றளிகளாக மாற்றியவை,

2. முன்னர் இருந்த கோயில்களில் செய்த திருப்பணிகள், அவற்றில் புதியதாக இணைத்த பகுதிகள் மற்றும் சிற்பங்கள்,

3. அவர் தான் எடுப்பித்த கோயில்களுக்கும் முன்னர் இருந்த கோயில்களுக்கும் வழங்கிய பொருட்கொடைகள்

என மூன்று வகையில் பிரித்தறியப்படுகிறது.

செங்கல் தளியிலிருந்து செம்பியன் மாதேவியரால் முதலில் கற்றளியாக மாற்றப்பட்ட கோயில் கோனேரிராஜபுரம் கோயில். அவரது மகன் உத்தம சோழனின் மூன்றாம் (கிபி 972 இல்) ஆட்சி யாண்டில் அவரது தந்தை கண்டராதித்தர் நினைவாகக் கட்டப்பட்டது. இக்கோயிலில் கண்டராதித்தரும் செம்பியன் மாதேவியும் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்புச் சிற்பமும் அதுகுறித்த கல்வெட்டும் உள்ளது. சிற்பத்தில் கண்டராதித்தர் லிங்கம் முன் அமர்ந்து வணங்க, அவருக்குப் பின்னர் இருவர் வெண்சாமரமும், வெண் கொற்றக்குடையும் ஏந்த, லிங்கத்தின் அருகாமையில் அதற்கு மாலை சூடும் வகையில் செம்பியன் மாதேவி வணங்கியபடி நிற்பார் (பார்க்க: பக்கம் 14). தரையில் அமர்ந்து வணங்கும் கண்டராதித்தரைத் தவிரச் சிற்பத்தில் இடம் பெற்றுள்ள மற்றவர் குறித்து அடையாளம் காணுவதில் வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். கல்வெட்டில் காணப்படும் செய்தி:

“ஸ்வஸ்தி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளார் ஸ்ரீ செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழன் திரு ராஜ்ஜியம் செய்தருளா நிற்கத் தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லம் உடையாற்கு திருக்கற்றளி எழுந்தருளுவித்து இத் திருக்கற்றளியிலேயே திருநல்லம் உடையாரை திருவடித் தொழுகின்றாராக எழுந்தருளுவித்த கண்டராதித்த தேவர் இவர்” என்று கல்வெட்டு கூறுகின்றது. திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் கோயிலின் கருவறையின் தென்சுவரில் இச்சிற்பத் தொகுதியும் கல்வெட்டும் காணப்படுகிறது. கோனேரிராஜபுரம் கோயில் கட்டிய சிற்பிக்கு ‘இராசகேசரி மூவேந்த வேளாண்’ என்ற பட்டமும் கொடுத்து கருவறைச் சுவரிலேயே சிற்பம் அமைத்தும் பெருமை செய்துள்ளார் செம்பியன் மாதேவி. செம்பியன் மாதேவியாரின் பணிகளைப் போற்றும் வகையில் நாகபட்டினம் அருகிருக்கும் ஊர் ஒன்றுக்கு செம்பியன்மாதேவி என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

சோழர் கால கட்டிடக்கலை முற்காலச் சோழர், இடைக்காலச் சோழர், பிற்காலச் சோழர் என மூன்று கட்டங்களில் அறியப்படுகிறது; இடைக்காலமான செம்பியன் மாதேவி காலத்தில் கருவறை அர்த்த மண்டபங்களில் உள்ள தேவகோட்டங்களின் (மாடங்கள்) எண்ணிக்கை அதிகரிக்கும் முறை துவங்கியது. பத்தாம் நூற்றாண்டில் தமிழக கோயில் கட்டிடக்கலையில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் செம்பியன் மாதேவி. உயர்ந்த எண்ணிக்கையில், 16 தேவகோட்டங்கள் வரை விரிவாக்கப்பட்டுள்ளது. உத்தம சோழர் காலத்திற்குப் பிறகு கோயில் சிற்பங்களின் எண்ணிக்கையும் வகைகளும் அதிகரித்தாலும், அவற்றின் எழிலும் நளினமும் முந்தைய கால சிலைகளின் தோற்றத்துடன் ஒப்பிடுகையில் குறைந்து விட்டது என்பதும் சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இதற்குக் கற்களைத் தேர்வு செய்த முறையில் குறைபாடு இருந்திருக்கலாம் என்றும் ஐயுறுகிறார்கள்.

சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இவர் காலத்தில் செப்புத் திருமேனிகள் வடிக்கும் கலை மிதமிஞ்சிய வேகத்தில் வளர்ச்சியடைந்தது. பலவகை தெய்வங்களின் உருவங்களும் செப்பு வடிவம் பெற்றனர். கோயிலில் மூலவர் சிற்பங்கள் கருங்கற்களால் ஆன நிலையான சிற்பங்கள் என்பதால், விழாக் காலங்களில் இறைவனைப் பல்லக்கிலும், வீதியுலாவிற்காகக் கொண்டு செல்ல பஞ்சமூர்த்திகள் (ஐந்து இறைவர்கள் – சிவன், உமை, பிள்ளையார், முருகன், சண்டிகேசுவரர் என்று குடும்பமாக) தனித்தனியாகத் தேர்களிலும் எடுத்துச் செல்லும் வழக்கம் தோன்றியதால் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம் ஆகிய ஐம்பொன்களின் உலோகக் கலவைகளில் சிலைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கோயிலும் குறைந்த அளவு இந்த ஐவர் செப்புச் சிலைகளையாவது கொண்டிருப்பது வழக்கம். நெடிய ஒடிசலான உருவத்துடன், குறைந்த அணிகலன்களும், இடையில் மட்டும் உடையணிந்து திறந்த மார்புடன், தலையில் உயர்த்தி முடியப்பட்ட கொண்டையுடன், நீண்ட துளையுள்ள காதுகளுடன் கையில் தாமரை மலர் பிடிப்பது போன்ற முத்திரையுடன் உடைய புகழ் பெற்ற செப்புச் சிலை செம்பியன் மாதேவிக்கும் உண்டு. அது அவரது மகன் உத்தமசோழனால் தனது தாய் பிறந்த சித்திரைத் திங்கள் கேட்டை நட்சத்திர நாள் விழாவில் வீதியுலா செல்ல உருவாக்கப்பட்ட சிலை எனப்படுகிறது. இச்சிலையின் அமைப்பில்தான் இறைவி பார்வதியின் சிலைகளும் வடிக்கப்படுவது வழக்கம். இறைவிக்கு இணையாக இவர் கருதப்பட்டிருப்பதை இதனால் அறிய முடிகிறது. சோழர்கால செப்புத் திருமேனிகள் என்றாலே நினைவுக்கு வருபவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார் என்றும் கருதப்படுகிறது.

siragu SembiyanMahadevi-from wikipedia

கோயில்களைப் புதிதாகக் கட்டுவதையும் புதுப்பித்துக் கட்டுவதையும் கடந்து, அக்கோயில்களில் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கவும், விழாக்கள் நடக்கவும், விளக்குகள் தொடர்ந்து எறியவும் என எண்ணிறைந்த கொடைகளையும், செல்வங்களையும், பொற்கழஞ்சுகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும், செப்புச் சிலைகளையும், அணிமணிகளையும் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார் செம்பியன் மாதேவி. மங்கலநாண் அல்லது தாலி அணிவது தமிழர் மரபிலிருந்ததா என்ற வினா சென்ற நூற்றாண்டில் ம.பொ.சி., மற்றும் மா. இராசமாணிக்கனார் போன்ற பெரும் தமிழறிஞர்களை இரு பிரிவுகளாக விவாதத்தில் இறக்கியது. மா. இராசமாணிக்கனார் பிரிவினர் தாலி திருமணத்தில் மரபு வழக்கானது பிற்காலமே என்ற கருத்தை முன்வைத்தனர். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோனேரிராஜபுரம் கோயிலின் துர்கை சிலையில் கழுத்தில் மங்கலநாண் அணிந்துள்ளவராகக் காட்டப்படுகிறார். அதுமட்டுமின்றி, விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றத்தின் பழமலைநாதர் கோயிலின் இறைவிக்கு அரைகழஞ்சு எடையுள்ள பொற்றாலி, மூன்று குண்டுமணிகள் ஆகியவற்றைக் கூரைப்புடவையுடன் செம்பியன் மாதேவி கொடையளித்த கல்வெட்டுச் செய்தியும் கிடைக்கிறது. இதிலிருந்து நாம் உறுதியாக 10 ஆம் நூற்றாண்டில் திருமணமான பெண்கள் தாலி அணிந்தனர் எனவும் அறிய முடிகிறது.

சோழர் காலத்தில் அரச மகளிரின் ஆளுமை, கொடைத்தன்மை, செல்வ நிலை ஆகியன எந்த அளவு உயர்ந்த நிலையிலிருந்தது என்பதற்குச் சான்று செம்பியன் மாதேவியின் வாழ்வு. அறப்பணி மற்றும் கலைப்பணிகளுடன், செம்பியன் மாதேவியின் சிறப்பாக நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டியது அவருடைய வரலாறு காக்கும் செயல்கள். அதன் காரணமாகவே இவர் ஒரு வரலாற்று நாயகி என அழைக்கப்பட வேண்டியவர். இவர் தாம் புதுப்பித்த செங்கற் கோயில்களின் பழைய கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றைப் புதுப்பிக்கப்பட்ட கற்றளிகளின் கட்டுமானங்களில் இடம் பெறச் செய்தார். அவ்வாறு (26 கல்வெட்டுப் படிகள்) பொறிக்கப்படுகையில் இது ‘ஒரு பழங்கல்படி’ என்ற வரியையும் அவற்றில் வெட்டுவித்தார். அவ்வாறு பழங்கல்படி எடுக்கையில் ஆடுதுறைக் கோயிலிலிருந்த வரகுணபாண்டியனின் கல்வெட்டையும், அவர் ஓர் எதிரி நாட்டு அரசனான பாண்டியனாக இருந்தாலும் கூட அவரது கல்வெட்டையும் படியெடுத்துப் பாதுகாத்து வரலாற்றை ஆவணப்படுத்துவதில் அவர் காட்டிய அக்கறைக்காகவே செம்பியன் மாதேவி போற்றப்படவேண்டிய ஒரு வரலாற்று ஆளுமை என்றால் அது மிகையல்ல.

நூல் விவரம்:

செம்பியன் மாதேவி (வாழ்வும் பணியும்)

பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம்

பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் வெளியீடு

செப்டெம்பர் 2019

பக்கங்கள்:120

விலை: ரூ. 100/-

ISBN: 978-93-89146-75-2

நன்றி: கண்டராதித்தர் சிற்பம் – கல்வெட்டு பட உதவி, திரு. மாரிராஜன், சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி”

அதிகம் படித்தது