மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

சோழநாட்டின் பட்டினப் பெருவழி எது?

தேமொழி

Nov 9, 2019

siragu kalvettu4

பண்டைய தமிழக மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்ற அவை வணிகம், போர், வழிபாடு, உறவின் நிமித்தம் என எதுவாக இருப்பினும் அவை எளிதாக நடை பெற பல வகை சாலைகள் தமிழகத்தின் ஊர்களிலும், சிற்றூர்களுக்கு இடையிலும், பெருநகரங்களுக்கு இடையிலும் இருந்தன. ஊர்களுக்குள் இருக்கும் பெரிய வீதிகள் ‘பெருந்தெருக்கள்’ என அறியப்பட்டன(1). அக்காலத்தில் தேரோடும் வீதிகளான பெருந்தெருக்களைக் கொண்டவை பல ஊர்கள். இரு சிற்றூர்களை ஊர்களை இணைக்கும் சாலைகள் ‘வதிகள்’ என அறியப்பட்டன(2). ‘பெருவழிகள்’ என அறியப்பட்ட தடங்கள் பேரசுகளின் தலைநகரங்களையும், துறைமுகங்களையும், வணிக நகரங்களையும், பெருநகரங்களையும் இணைத்தன(3).

இத்தகைய பெருவழிகள் இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையானவை. இன்று போலவே இந்த பெருவழிகளைப் பராமரிக்க வரி வசூலிக்கப்பட்டு பெருவழிகள் பராமரிக்கப்பட்டன. அரசின் தடிவழி வாரியம் என்ற அமைப்பு மூலம் பராமரிப்பு வரிகள் வசூலிக்கப்பட்டன(4). வணிகர்களும், சரக்கு வண்டிகளும், சாத்துக் கூட்டத்தினரும், வழிப்போக்கர்களும், பொதுமக்களும் பயன்படுத்திய இத்தகைய பெருவழிகள் தமிழகத்தின் ஆற்றங்கரைகளை ஒட்டியே அமைந்தன. வழிப்போக்கர்களின் நீர்த்தேவைகளுக்கும் அவை உதவின. ஆற்றங்கரையோரம் மக்கள் குடியேறிய ஊர்களையும் அவை இணைத்ததால் பெருவழிகள் உருவானதைத் தேவைக்கேற்ற உருவாக்கம் என்றே கொள்ளலாம்.

சங்க காலம் முதற்கொண்டே பல பெருவழிகளின் பெயர்கள் கிடைக்கின்றன. பெருவழிகள் குறித்த தகவல் தமிழகத்தின் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. கோயில்களுக்காகக் கொடைகள் வழங்கப்படுகையில், அது நிலக்கொடையாக இருப்பின் வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடுகையில் பெருவழிகள் பற்றிய செய்திகள் சிலவும் கிடைக்கின்றன. வணிக மையமாக இருந்த கொங்குப்பகுதியில் 20 கும் மேற்பட்ட பெருவழிகள் இருந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அதியமான் பெருவழி, ஆதன் பெருவழி, கொற்கைப் பெருவழி, கொங்குப் பெருவழி, பட்டினப் பெருவழி, தஞ்சாவூர்ப் பெருவழி, இராசமகேந்திரன் பெருவழி, ராஜகேசரிப் பெருவழி, மகதேசன் பெருவழி, வீரநாராயணன் பெருவழி, சேரனை மேற்கொண்ட சோழன் பெருவழி, சோழமாதேவிப் பெருவழி, அரங்கம் நோக்கிய பெருவழி, இராசராசபுர பெருவழி, இராச இராசன் பெருவழி, இராசேந்திரன் பெருவழி, குலோத்துங்கன் பெருவழி, விளாங்குடையான் பெருவழி, கூழையானை போன பெருவழி, மேற்குநோக்கிப் போன பெருவழி, மேலைப் பெருவழி, வடுகப் பெருவழி, தடிகைப் பெருவழி, பட்டினப் பெருவழி என்று பல பெருவழிகளின் பெயர்கள் கிட்டியுள்ளன. அரசர், அரசியர் பெயர்களிலும் அந்தப் பெருவழிகளின் பெயர்கள் இருந்துள்ளன. செல்லும் ஊர்களின் பெயர்களிலும், திசைகள் குறித்தும் அவை பெயரிடப்பட்டுள்ளதைக் காணலாம்.

இராஜகேசரி பெருவழி என்பது கொங்குமண்டலத்தின் சிறப்பான பெருவழிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆதித்த சோழன் கி.பி. 871-907 கால கட்டத்தில் ராஜகேசரி பெருவழியை முப்பது அடி அகலத்திற்குச் செப்பனிடப்பட்டதாக கல்வெட்டுத் தகவல் கூறுகிறது (5). தமிழகத்தின் குணகடலையும் குடகடலையும் (இன்றைய வங்கக்கடல், அரபிக்கடல்) இணைக்கும் பெருவழி ஒன்று பாலக்காட்டுக் கணவாய் வழி இருந்துள்ளது. இது மேற்குத் துறைமுகமான முசிறியையும், கிழக்குத் துறைமுகமான பூம்புகாரையும் இணைத்திருக்க வாய்ப்புள்ளது.

நா. பார்த்தசாரதி எழுதிய ‘பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்’ என்ற நூலில் பூம்புகார் நகர் குறித்து எழுதுகையில் புகாருக்குச் செல்லும் பெருவழியாக பட்டினப்பெருவழியைக் குறிப்பிடுகிறார். “இந் நகரத்துக்குச் செல்லும் பிரதான சாலை சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் பட்டினப் பெருவழி” என்று குறிக்கப்பட்டுள்ளது என்று டி. வி. பண்டாரத்தார், எழுதிய காவிரிப்பூம்பட்டினம் நூலில் இருந்து மேற்கோள் கொடுக்கிறார் (6, 7). பூம்புகார் ‘முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ என்று கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் புகழப்பட்டு ‘பட்டினப்பாலை’ என்ற நூலும் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் (8). பட்டினம் என்றாலே அது பூம்புகார்ப் பட்டினம்தான் என அறியப்பட்ட நகர் இது. ஆகவே, பட்டினப் பெருவழி என்றால் அது பூம்புகாருக்குச் செல்லும் பெருவழி என்றே எண்ணப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை 1979 இல் வெளியிட்ட ‘நன்னிலம் கல்வெட்டுக்கள்’ (முதல் தொகுதி, ஆ. பத்மாவதி, பக்கம் – 12) நூலில் உள்ள கல்வெட்டொன்று நாகப்பட்டினம் செல்லும் பெருவழியைப் ‘பட்டனப் பெருவழி’ என்று குறிப்பிடுகிறது (9). இப்பெருவழி இன்றைய தேசியநெடுஞ்சாலை 67 (National Highway 67) ஆகும்.

siragu kalvettu3

கண் நோய் தீர்க்கும் திருத்தலமாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, ஆலத்தாங்குடி பகுதியில் உள்ள ‘கண்கொடுத்தவனிதம்’ என்ற ஊரின் கோயில் அறியப்படுகிறது. இத்திருக்கோயில், திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் வட்டத்தில் திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பாண்டவை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. தொன்மையான இந்த ஆலயத்தில் மூன்றாம் குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. அக்காலத்தில் இது அருமொழிதேவ வளநாட்டுப் பிரிவின் கீழ் இருந்திருக்கிறது.

siragu kalvettu1

முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 36 ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1298 ஆண்டில்) நயன வரதேஸ்வரர் கோயில் வடபுறதிலுள்ள பட்டிகையில் உள்ள கல்வெட்டில் இக்கோயில் நாச்சியாரான தேவதம்பிராட்டியாரின் சேவைக்காக நிலக்கொடை அளிக்கப்பட்டதைக் கூறுகிறது. ஆலத்தாங்குடியின் புகழாபரணீஸ்வரமுடையார் கோயில் தேவகன்மிகள் (கோயில் நிர்வாகத்தினர்) இந்த நிலக்கொடைக்காகப் பற்பலரிடம் நிலம் வாங்கியுள்ளதைக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. அந்த நிலங்களின் எல்லைகளைக் குறிக்கையில் ஆலத்தாங்குடி பாண்டிவாய் ஆற்றுக்கு வடகரை, இராஜராஜன் வாய்க்கால், மூவாயிரன் வாய்க்கால், வயிரவன் வாய்க்கால் என்ற குறிப்புகள் இடம் பெறுகின்றன. ஆலத்தாங்குடி ‘பாண்டிவாய் ஆறு’ இந்நாட்களில் ‘பாண்டவை ஆறு’ என்று மருவி உள்ளதும் தெரிகிறது.

இவ்வாறாக நிலங்களின் எல்லையைக் குறிப்பிடுகையில், கல்வெட்டின் 12 ஆவது வரி பட்டனப் பெருவழிக்கு (குறிப்பு: பட்டினப் பெருவழி என்று இல்லாமல் பட்டனப் பெருவழி என்றுள்ளது) தெற்கில் அமைந்துள்ள நிலமும் வாங்கப்பட்டதைக் குறிப்பிடுவதை கீழ்க்காணும் செய்தியின் மூலம் அறியலாம்.

siragu kalvettu2

12 ..ப்பற்றுக்கும் வினாயகப்பிள்ளையார் திருவிருப்புக்கும் மேற்கு தென்பாற்கெல்லை இந்நாயனார் திருநாமத்துக் காணிக்கு வடக்கு மேல்பாற்கெல்லை இந்நாயனார் திருநாமத்துக் காணிக்கு கிழக்கு வடபாற்கெல்லை பட்டனப் பெருவழிக்கு தெற்கு நடுவு குழி – ரு௰ சீராமன் ஆதித்தபட்டன் பிடவாரி தந்த காவதகுடியில் பவுத்திர மாணிக்கவதிக்கு கிழக்கு மூவாயிரவன் வாய்க்காலுக்கு வடக்கு ௩ கூ ம் ௪ ௯ ம் நிரவினி துண்டத்து வடக்கடைய திருவிடை யாட்டம் விட்டு தெற்கு ௹ ௬ இதில் இந்நாயனார்க்கு முன்னாள் நல்லூருடையா [ன்]

இன்றைய நாளில், தமிழ்நாட்டின் குறுக்காக 555 கி.மீ. தொலைவுக்கு, கோவையையும் நாகப்பட்டினத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாக இந்த நெடுஞ்சாலை NH 67 அறியப்படுகிறது. கரூரில் இருந்து காவிரி ஆற்றின் தென்கரையை ஒட்டி குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் நகர்களின் வழியே இந்த நெடுஞ்சாலை நாகப்பட்டினம் வரை செல்கிறது. ஆனால், இந்த தொலைவுள்ள நீண்ட பெருவழிக்கும் அக்காலத்தில் பட்டினப் பெருவழி என்ற பெயர் இருந்திருக்குமா என்பது ஐயமே. குறைந்தது தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வழியாக நாகப்பட்டினத்தை பட்டினப் பெருவழி இணைத்திருக்கக்கூடும் என்பதைக் கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில் முடிவெடுக்கலாம். மேலும் பட்டினப் பெருவழி என்பது 13 ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் செல்லும் பெருவழியைத்தான் குறிப்பிடுகிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

சான்றுகள்:

1. “தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள்”

2. பிற்கால சோழர் சரித்திரம்,3ஆம் பகுதி சதாசிவ பண்டாரத்தார், ப-107

3. இந்திய வரலாறு, சத்தியநாதய்யர், முதல்பாகம், ப-425

4. திருப்பாற்கடல் கல்வெட்டு, காவேரிப்பாக்கம் ஊர்மன்றம்

5. கா.சு.வேலாயுதன் (2017 சூன் 16). “தூர்ந்து கிடக்கும் ராஜகேசரி பெருவழி”செய்திக் கட்டுரை. தி இந்து.

6. பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும், நா. பார்த்தசாரதி, (1992)

7. டி. வி. பண்டாரத்தார், காவிரிப்பூம்பட்டினம். ப.42

8. பட்டினப்பாலை 218

9. நன்னிலம் கல்வெட்டுக்கள் – முதல் தொகுதி, ஆ. பத்மாவதி, பக்கம் – 12, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை, 1979 – http://www.tamildigitallibrary.com/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kut1&tag=நன்னிலம்%20கல்வெட்டுக்கள்# book1/


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சோழநாட்டின் பட்டினப் பெருவழி எது?”

அதிகம் படித்தது