தந்தையும்- தளபதியும்
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிOct 5, 2019
செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா இருபெரும் தலைவர்களின் பிறந்த நாட்கள். திராவிடர் இயக்கங்களின் தொடர் வெற்றிகளுக்கு சமூகத்திலும் – அரசியலிலும் வித்திட்டவர்கள். எவ்வாறு பிப்ரவரி மாதம் முழுவதும் அமெரிக்காவில் கறுப்பின வரலாற்று மாதமாக கொண்டாடுகின்றார்களோ, அதே போன்று செப்டம்பர் மாதம் முழுவதும் திராவிடர் வரலாற்று மாதமாக கொண்டாட வேண்டும் என்று தொடர் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கான வரலாற்று தேவை இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கின்றது.
தந்தை பெரியார் அவர்களை பொறுத்தவரை சுயமரியாதை இயக்கத்தை 1925 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் எதிர்ப்புகளில் வளர்த்து – எதிர்ப்புகளையே உரமாக்கிக் கொண்டு தமிழ் மண்ணில் வேர் கொண்ட இயக்கம். அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களிடத்தில் இயல்பாக இருந்த அச்சமற்ற – கொள்கையில் சமரசமற்ற தன்மை.
எதிர்ப்பு என்றால் சிலருக்கு அச்சம் வரும் ஆனால் பெரியாரை பொறுத்தவரை அதை மிகத் தீரத்தோடு எதிர்கொள்வார். எடுத்துக்காட்டுக்கு ஒரு நிகழ்ச்சி, கடலூரில் பெரியார் உரையாற்றிவிட்டு விரைவாகத் தொடர் வண்டி நிலையத்திற்கு ஆள் இழுக்கும் ஒரு ரிக்ஷாவில் ஏறிச் சென்றார். செல்லும் வழியில் ஒருவன் மறைந்து நின்று கொண்டு கால் செருப்பொன்றை எடுத்துப் பெரியார் மீது வீசுகின்றான். செருப்பு வண்டியில் வந்து வேகமாக விழுகின்றது. பெரியார் இடத்தில் யார் இருந்தாலும் சீற்றத்தோடு கத்தி இருப்பார்கள் அல்லது அச்சத்தோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்பார்கள். ஆனால் பெரியார் என்ன செய்தார் என்பது தான் வரலாற்றுச் சிறப்பு.
முன்னோக்கிச் சென்ற வண்டியை பின்நோக்கித் தள்ளச் செய்தார். “அடே! ஒரு செருப்பை என் மீது எறிந்து விட்டாய்! இந்த ஒரு செருப்பால் எனக்கு பயனில்லை.” என்றார், இன்னொரு செருப்பையும் போடு என்று கேட்பது போல. அதனால் தான் அவர் பெரியார் !
கடலூரில் பெரியார் மீது செருப்பு வீசிய அதே இடத்தில் பெரியாருக்குச் சிலை வைத்துள்ளார்கள். கவிஞர் கருணானந்தம் ‘செருப்பொன்று வீசினால், சிலையொன்று முளைக்கும்’ என்று கவிதை எழுதி உள்ளார்கள்.
அதே போன்று அவரிடம் தயாராகிய முதன்மை தளபதி அறிஞர் அண்ணா அவர்களும் சிறந்த ஆளுமை மிக்க தலைவர். அண்ணா சிறந்த பேச்சாளர், அரசியலுக்கு வந்த பின்பும் கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றுவதை அண்ணா அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தார்கள் என்பதை அறிவோம். அண்ணா அவர்களின் பேச்சாற்றலை பொருத்த வரை ஒரே நாளில் பல கூட்டங்களில் உரையாற்றுவார்; ஆனால் ஒரு கூட்டத்தில் பேசியதை மற்றொரு கூட்டத்தில் பேச மாட்டார்கள்.
1943 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் நாள் சென்னை சட்டக் கல்லூரியில், “ கம்ப இராமாயணத்தை எரிக்கலாமா? எரிக்கக்கூடாதா?:” என்ற தலைப்பில் விவாதம். இரா. பி. சேதுப்பிள்ளை கம்பனின் இலக்கிய நயத்தையும்- காவியச் சிறப்பையும் பற்றி பேசினார். அதற்கு பதில் கூற முடியாமல் அண்ணா திணறுவார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் “கடவுளின் தன்மை பற்றிக் கூறப்புகுந்த நூலில் காமவெறியைத் தூண்டும் கற்பனைகள் இடம் பெறலாமா? என்று தொடங்கி காவியத்தில் ஆபாசங்கள் கவிநயத்தால் மறைக்கப்பட்டிருப்பதை பதவுரை, பொருளுரையுடன் விளக்கிக் கூறவும் கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். இறுதியில் கூட்டத் தலைவர் முடிவைப் பின்னர் அறிவிப்பதாக கூறி முடித்தார். அண்ணா அவர்களும் தன் கருத்தை எடுத்து வைப்பதில் எந்தவித அச்சமும் இல்லாமல் நேர்மையாக எடுத்து வைக்கும் மனத்திண்மை கொண்டவர்.
இப்படி தங்கள் வாழ் நாள் எல்லாம் இரு தலைவர்களும் தங்கள் கருத்துகளை எந்தவித அச்சமும் இன்றி முன்னெடுத்து ஒரு பெரும் சமூக மாற்றத்தை – அரசியல் மாற்றத்தை நடத்திக் காட்டினார்கள். அடுத்த தலைமுறையினருக்கு இந்தச் செய்திகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தந்தையும்- தளபதியும்”