தமிழவன் எழுதிய ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’
தேமொழிDec 11, 2021
இரயில் பயணங்களில், கைபேசியில் முகம் கவிழ்க்காமல் அருகில் உள்ளவர்களைக் கவனித்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வுமுறையையும் புரிந்து கொள்ளும் முறை என்பது கடந்த காலம். அந்தக் கடந்த காலக் கட்டமைப்பில் இரயில் பயணிகள் இருவரின் அறிமுகத்தைத் தருகிறது தமிழவன் எழுதிய ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள முதல் கதையான ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’ என்ற சிறுகதை.
தொடர்வண்டிப் பயணங்களில் பொழுதைக் கழிக்கும் இராமநாதன், முதிய வயதில் உறவுகள் யாரும் இன்றி, மனதில் தோன்றும் பொழுது கோவைக்கும் பாலக்காட்டுக்கும் எனக் காரணம் ஏதுமின்றி பயணித்து, இயற்கை அழகையும் மக்களையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மனம் போன போக்கில் வாழும் ஓர் ஓய்வுபெற்ற தத்துவப் பேராசிரியர்.
ஒரு பயணத்தில் அவருடன் பயணிக்கிறார் ஜார்ஜ் மேயர் என்ற ஒரு வெள்ளைக்காரப் பேராசிரியர். ஆய்வு செய்து எதையும் தெரிந்து கொள்வதில் தனக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறும் ஜார்ஜ் மேயரின் மனநிலையை, அவர் விவரிக்கும் அந்த மகிழ்ச்சியை, அப்பண்பில் தோய்ந்தவர்களால் மட்டுமே உணர முடியும். அவர் இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பவர்.
இருவருக்கும் நடக்கும் உரையாடலில் தமிழர்களின் முற்காலக் குடும்ப வரலாற்று அறிவு என்பது குறுகியது. அவர்களின் தந்தையார் பாட்டனார் தலைமுறைகளுக்கு மேல் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் குடும்ப வரலாற்று அறிவு அவ்வளவுதான் என்பதைப் புரிந்து கொள்கிறார் ஜார்ஜ் மேயர், “உங்கள் அறிவு மூன்று தலைமுறை வரை மட்டுமே விரிந்தது. அதற்கு முன்பும் யாரைப் பற்றியும் ஒன்றும் தெரியாது” என்று வியக்கிறார். அத்துடன், இந்தியாவின் பழமையான தொல் வரலாறாக அறியப்படுவது எல்லாம், மக்கள் நினைவில் கடத்தப்படும் ஓர் இனத்தின் கூட்டு வரலாறு, அதுவே வரலாறாக இலக்கியங்களில் பதியப்பட்ட வரலாறு என்பதையும் ஜார்ஜ் மேயர் புரிந்து கொள்கிறார்.
தனி மனித, குல வரலாறுகள் மூன்று தலைமுறைக்கு மேல் கடத்தப்படுவதற்கு ஒருவர் வாழ்க்கை தனித்துவமாக அறியப்படும் நிலையில் இருக்க வேண்டும் என்பதைத் தமிழர்கள் கருதுவார்கள் என்பதும், மாறாக வரலாறு என்று ஆவணப்படுத்துவதில் மேலை நாட்டவர்க்கு வேறு கோணம் உள்ளது என்பதையும் இருவரும் உணர்ந்து மௌனமானார்கள் என்பதை இருவரின் உரையாடல் முற்றுப்பெற்று மௌனம் குடிகொண்டதன் மூலம் உணரலாம்.
எவரும் தனது மூதாதையர் வாழ்வு முறை வரலாறு குறித்து ஆராய்ந்தாலே பாரம்பரிய வரலாறு என்பது உருவாகும். ஆனால் தமிழர்கள் தங்களின் நடைமுறை வாழ்விற்கு அத்தேடலில் மூலம் ஆதாயம் எதுவும் கிட்டாது என்றால், தங்கள் முன்னோர் வரலாற்றை அறிந்து கொள்வதில் அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள் என்பதுதான் உண்மை. எல்லோருக்கும் தங்கள் பரம்பரை எந்தவகையில் ‘ஆண்ட பரம்பரை’ என்று ஆய்வதில் உள்ள இன்றைய அக்கறை இத்தகைய ஆதாயம் தேடும் ஓர் ஆய்வே, அவர்கள் வரலாற்றுக்குத் தரும் மதிப்பின் இப்பின்னணியில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
‘தனிமனிதர்களின் வாழ்வை அணுகும் முறை’ இருபண்பாடுகளிலும் வேறு வேறு என்பதை உலகின் கிழக்கு மற்றும் மேற்கு என்ற இரு பண்பாட்டிலும் வாழ்ந்தவர்களால் தெளிவாக அறியமுடியும். இதுவே இச்சிறுகதையின் மையக்கருத்தாக எடுத்தாளப்பட்டுள்ளது என்று கருதலாம். ஆனால் நம் நாட்டிலோ தெளிவாகத் தெரிந்திராத அந்தப் பாரம்பரியம் என்பதன் மேல்தான் சாதிக் கட்டுப்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு நகைமுரண். இதை நேரடியாக சுட்டிக்காட்டாமல் மௌனம் காப்பது நல்லது என்று வரலாற்று ஆய்வாளர் ஜார்ஜ் மேயர் மௌனம் காக்க முடிவெடுத்தார் என்று வாசிப்பவர் கோணமாக எடுத்துக் கொள்ள நேர்வது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. கதை இறுதியில் உரையாடுபவர்கள் இடையே ஏற்படுவதாக சுட்டப்படும் அந்த மௌனம் உண்மையை வெளிப்படையாகச் சுட்டாத பொருள் பொதிந்த மௌனம். ஆகவே பாரம்பரியம் என்று நம் மக்கள் பேசுவது பேசுவது எத்தகைய வெற்றுப் பேச்சு என்பது கசப்பான ஓர் உண்மைதான்.
சாதாரண மக்கள் குறித்தும் அவர்கள் வாழ்வியல் முறைகள் குறித்தும் நமது இலக்கியங்களில் வரலாற்றில் வெற்றிடங்கள் மிகுதி ஏன் என்பதை நினைவுபடுத்தும் சிறுகதை இது.
தமிழவன் – உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?
http://tamizhavan.com/blog/?paged=5&author=1
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழவன் எழுதிய ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’”