மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் இலக்கியங்களில் முதலைகள் — ஓர் மீளாய்வு

தேமொழி

Feb 11, 2023

siragu wiki crocodile

இயற்கையையும் அது சார்ந்த செய்திகளையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்யும் பழந்தொகை நூல்களில் முதலைகளை இடங்கர், கராம், முதலை என்று பல பெயர்களில் இலக்கியப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, வளைந்த கால்களைக் கொண்ட முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும் என்ற பொருள் தரும் “கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்” (குறிஞ்சிப்பாட்டு-257) என்ற குறிஞ்சிப்பாட்டு வரியானது பொதுவாக இச்சொற்கள் முதலையைக் குறிப்பதாக இன்று அறியப்பட்டாலும் இவை வெவ்வேறு முதலை இனத்தைக் குறிக்கும் சொற்கள் என்று காட்டி, ஒவ்வொன்றும் வெவ்வேறு வகை என்று தெளிவுபடுத்துகிறது. இலக்கியம் தரும் முதலை குறித்த தரவுகளை மீள்பார்வை செய்ததில், முதலை என்பதை பொதுவான சொல்லாக ஏற்கும் முறை காலம் செல்லச் செல்ல பிற்காலத்தில் அதிகரித்துள்ளது தெரிகிறது. siragu Types of Indian Crocodiles

— கடற்கரையோரமும், கழிமுகப் பகுதிகளிலும் உப்புநீர் பகுதிகளில் வாழ்வனவற்றை முதலை (Crocodylus porosus) என்றும்,

— ஆறு, குளம் போன்ற நன்னீர் பகுதிகளில் வாழ்வன கராம் (Crocodylus palustris) இன முதலைகள் என்றும்,

— நன்னீர் பகுதிகளில் வாழும் நீண்ட கூம்பு போன்ற முகம் கொண்ட முதலை இனம் இடங்கர் (Gavialis gangeticus) என்றும் குறிப்பிடும் வழக்கம் இருந்ததை இலக்கிய ஆய்வின் மூலமும் அறியலாம். [1]

நிகண்டுகளிலும் அகராதிகளிலும் முதலை:

கராம் இன முதலைகள் வடமொழியில் மகரம் (मकर — makara) என்று அழைக்கப்படுவதை சமற்கிருத அகராதி காட்டுகிறது [2]. தமிழ் இலக்கியங்களில் மகரம் என்பது சுறா (Shark) மீனைக் குறிக்கும் என்பதைத் தமிழ் நிகண்டுகள் மூலம் அறிய முடிகிறது.

ஆக, மகரம் என்பது வடமொழி வழக்காற்றில் முதலையையும், தமிழர் வழக்காற்றில் மகரம் என்பது கடலில் வாழும் சுறா மீனைக் குறிப்பதும் தெளிவாகிறது. கராம் இன முதலையை ஆங்கிலத்தில் பொது வழக்கில் குறிப்பிடுகையில் ‘Mugger Crocodile’ என்று குறிப்பிடுகிறார்கள். முக்கர் என்பது மகரம் என்பதில் இருந்து பெறப்பட்ட பெயர் என்றும் கூறப்படுகிறது (The Mugger Crocodile got its name from Indian mythology, where crocodile-like animal called ‘Magara‘. So the names Mugger and Magar are interchangeably used). [3]

‘தமிழ் இலக்கிய அகராதி’ என்ற அகராதி நூலும் மகரம் என்ற சொல்லுக்கு முதலை என்ற பொருளைக் காட்டுகிறது.[4] இவ்வாறு குழப்பம் தரும் வகையில் மகரம் என்ற சொல் முதலையையும் சுறாவையும் குறிப்பிடும் சொல்லாக ஒருசேரக் காட்டப்படுவதால் தமிழ் நிகண்டுகளிலும், தமிழ் இலக்கியங்களில் பலவற்றிலும் முதலை குறித்த ஆழ்ந்த தேடல் ஒன்று தேவையாகிறது.

சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி நிகண்டுகளில் முதலை:

முதலையின்‌ பெயர்‌ — சேந்தன் திவாகரம் நிகண்டு;
கிஞ்சுமாரமும்‌, இடங்கரும்‌, கராமும்‌, வன்‌ மீனும்‌, முதலை (ஆகும்‌) – 196
ஆண்‌ முதலையின்‌ பெயர்‌ கராம்‌, அவற்று ஆண்‌ (எனக்‌ கருதல்‌ வேண்டும்‌)-197
முதலையின்‌ பெயர்‌ — பிங்கல நிகண்டு;
சிஞ்சுமாரம்‌, இடங்கர்‌, வன்‌ மீன்‌, கராவே, கராமும்‌, முதலை – 318
கரா, அதன்‌ ஆண்‌ (எனக்‌ கருதல்‌ வேண்டும்‌) – 319
முதலையின்‌ பெயர்‌ — சூடாமணி நிகண்டு;
முதலை, செங்கிடையும்‌, முருந்தும்‌, இடங்கரும்‌. – 942
அதாவது, கிஞ்சுமாரம்/சிஞ்சுமாரம்‌, இடங்கர்‌, கராம்‌, வன்‌ மீன்‌, செங்கிடை, முருந்து, முதலை ஆகிய பெயர்கள் முதலையைக் குறிக்கும் என்றும், ஆண்‌ முதலையின்‌ பெயர்‌ கராம்‌ அல்லது கரா என்றும் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன[5].

நிகண்டுகள் கூறும் கரா = ஆண் முதலை என்ற பொருளை, “கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்” என்ற குறிஞ்சிப்பாட்டு வரியுடன் ஒப்பிட்டால், ஆண்‌ முதலையின்‌ பெயர்‌ கராம்‌ அல்லது கரா எனப் பொருள் கொள்வது சரியல்ல என்பதும், இந்தியாவில் தொன்று தொட்டு இன்று முதல் காணப்படும் மூன்று முதலை வகைகளையே குறிஞ்சிப்பாட்டு வரி தெளிவாகக் காட்டுகிறது என்றும் அறியலாம்.

மகரம்‌, சுறா மீன்‌ (ஆக வைப்பர்‌) என சேந்தன் திவாகரம் நிகண்டு-198 [5]
என்று குறிப்பிடுகிறது. இந்த ‘மகரம்’ என்ற சொல்லுக்கு மகர மீன்‌, பெரு மீன்‌, யானை விழுங்கும்‌ மீன்‌, திமிங்கிலம் என்ற விளக்கங்களும் நிகண்டில் காணப்படுகிறது. எனவே, மகரம் என்பது மிகப் பெரிய சுறாமீன், யானையை விழுங்கக் கூடிய தன்மையில் அளவில் பெரியது என்பதுடன் திமிங்கிலம் என்பதாகவும் காட்டப்படுகிறது. மகரம் கடலில் வாழ்வதாக மட்டுமே நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, ‘முதலையை நிகண்டுகள் மகரம் என்று குறிப்பிடவில்லை’ என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
மலரின்‌ தாதுவான மகரந்தத்தைக் குறிக்கவும், மகரக் குறுக்கம் போன்ற இலக்கண விளக்கங்களிலும் மகரம் என்ற சொல் வேறு பொருள் கொண்டு பயின்று வருகிறது என்பதைக் கடந்துவிடலாம். காமனின் மகரக் கொடியில் மகரம் இருப்பதுடன் பலவகை அணிகலன்களும், இசைக்கருவிகளும் தோரணவாயில்களும் மகர என்ற சொல்லுடன் இணைத்துக் காட்டப்பட்டிருப்பதை மகரக்குழை, மகர வலயம், மகர குண்டலம், மகர வாசிகை, மகர யாழ், மகர வீணை, மகரக் கொடி, மகர தோரண வாயில், மகர ராசி என்ற பொருள் தரும் சொற்கள் மூலம் அறிய முடிகிறது.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் முதலை:

siragu lit review on crocodiles

“கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்” என்ற குறிஞ்சிப்பாட்டு வரியை முதலை குறித்த ஆய்வுக்கு அடிப்படையாக இக்கட்டுரை எடுத்துக் கொள்கிறது. முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் உருவாக்கிய இலக்கியத் தொடரடைவுகள் இணையதளம் (tamilconcordance.in) இந்த ஆய்வுக்கு மிகவும் இன்றியமையாத உதவியாக அமைந்தது (பார்க்க – படம்).

தமிழிலக்கியங்கள் மகரம் முதலையைக் குறிக்கவில்லை என்பது ஆய்விற்குப் பின்னர் தெளிவானதால், குழப்பம் தவிர்க்கும் நோக்கில் படத்தில் கொடுக்கப்பட்ட அட்டவணையில் மகரம் குறித்துச் சேகரித்த இலக்கியத் தரவுகள் காட்டப்படவில்லை. அவ்வாறே முதலை என்பது இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளதாகக் குறிக்கப்பட்டாலும், அது பரம்பொருளை/முதல்வனைக் குறிப்பதாக வேறு பொருளில் இடம் பெற்றிருந்தால் எண்ணின் அருகில் கேள்விக்குறி இடப்பட்டுள்ளது.

1. தொல்காப்பியம், 2. இறையனார் அகப்பொருள், 3. புறப்பொருள் வெண்பாமாலை, 4. நன்னூல், 5. நேமிநாதம், 6. சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை 18 நூல்கள்), 7. பதினெண்கீழ்க்கணக்கு(18 நூல்கள்), 8. சிலப்பதிகாரம், 9. மணிமேகலை, 10. சீவக சிந்தாமணி, 11. வளையாபதி, 12. குண்டலகேசி, 13. முத்தொள்ளாயிரம், 14. ஐஞ்சிறுகாப்பியங்கள், 15. கம்பராமாயணம், 16. நளவெண்பா, 17. பெருங்கதை, 18. கலிங்கத்துப்பரணி, 19. வில்லி பாரதம், 20. மூவர் தேவாரம் (திருமுறை 1 – 7), 21. திருவாசகம்(திருமுறை 8(1)), 22. திருக்கோவையார்(திருமுறை 8(2)), 23. திருமந்திரம் (திருமுறை 10), 24. பெரியபுராணம் (திருமுறை 12), 25. நாலாயிரத் திவ்விய பிரபந்தம், 26. திருப்புகழ், 27. தேம்பாவணி, 28. சீறாப்புராணம், 29. திருவருட்பா, 30. தாயுமானவர் பாடல்கள், 31. இரட்சணிய யாத்திரிகம் — என 65 நூல்களின் தொடரடைவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இந்த நூல்களில் இடங்கர், கராம்/கராஅம், மகரம், முதலை ஆகிய சொற்கள் இடம் பெரும் வரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் கண்டறியப்பட்டவை பின்வருவன:

1. இடங்கர்: இடங்கர் குறித்த தமிழிலக்கியக் குறிப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலைபடுகடாம் 211
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறிஞ்சிப்பாட்டு 257
என்று சங்க இலக்கியங்களில் 2 முறை மட்டும் காணக்கிடைக்கிறது. இடங்கர் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தியவர் பிற்காலத்தில், 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர். கம்பராமாயணத்தில் 12 முறை இடங்கர் குறிப்பிடப்படுகிறது.

எடுத்துக்காட்டாக: பொய்கையின் இடங்கர் கவ்வ புராதனா போற்றி என்று – யுத்1:8 16/3
கம்பராமாயணப் பாடல்களில் இடங்கர் வாழுமிடங்களாகப் பொய்கை (யுத்1:8 16/3), கயம் (யுத்1-மிகை:3 18/1), அகழி (யுத்2:15 4/3), ஆகிய இடங்கள் காட்டப்படுகிறது.

அதற்குப் பிற்காலத்தில் எழுதப்பட்ட வில்லிபாரதம் (1 முறை), திருப்புகழ்(1 முறை), தேம்பாவணி(1 முறை), திருவருட்பா (2 முறை) போன்ற இலக்கியங்களில் இடங்கர் இடம் பெறுகின்றது. ஆனால் இடங்கர்=கராம்= முதலை என்ற பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது. இடங்கர் குறித்த இக்குறிப்புகள் கம்பராமாயணம் கொடுத்த தாக்கம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

2. கராம்: தமிழின் முதல் நூலாக அறியப்படும் தொல்காப்பியத்தில் கராம் குறிப்பிடப்படுகிறது.

‘கராஅம்’ கலித்த கண் அகன் ‘பொய்கை’ – பட்டினப்பாலை 242 (பொய்கை)
‘கான்யாற்று’ ‘கராஅம்’ துஞ்சும் – அகநானூறு 18/3 (காட்டாறு)
‘கராஅம்’ கலித்த குண்டு கண் ‘அகழி’ – புறநானூறு 37/7 (அகழி)
‘கய’த்திடை கயமும் வெம் ‘கராமும்’ – வில்லிபாரதம்:1 36/3 (கயம்)
கராம் பொய்கை, காட்டாறு, அகழி, குளம் போன்ற பகுதிகளில் இருப்பதாக மேலே காட்டப்பட்ட பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

3. முதலை:

முதலை உப்புநீர் கொண்ட கடற்கரை கழிகளில் இருப்பதாகக் காட்டப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக சில பாடல்கள்:
கொடும் ‘கழி’ பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் நாம ‘முதலை’ – நற்றிணை 287/6 (கழி)
இரும் ‘கழி’ ‘முதலை’ மேஎந்தோல் அன்ன – அகநானூறு 3/1 (கழி)
கொடும் தாள் ‘முதலை’ கோள் வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் ‘கானல்’ அம் பெரும் துறை – குறுந்தொகை 324/1 (கடற்கரை கானல்)

முதலை நன்னீர் வாழ்வனவாகவும் காட்டப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக சில பாடல்கள்:

கோள் வல் ‘முதலை’ய குண்டு கண் ‘அகழி’ – பதிற்றுப்பத்து 53/8
கடு முரண் ‘முதலை’ய நெடு நீர் ‘இலஞ்சி’ – புறநானூறு 37/10
‘ஆறே’ அருமர பினவே; யாறே சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை ‘முதலை’ – அகநானூறு 72/7-9

இடங்கரும் கராமும் முதலையும் வாழுமிடங்கள்:

நற்றிணை பாடல்களில்;
கராம் காட்டாற்றில் இருப்பதாக – நற்றிணைப் பாடல் 292 குறிஞ்சித்திணைப் பாடலும்
முதலை கழியில் இருப்பதாக – நற்றிணைப் பாடல் 287 நெய்தற்திணைப் பாடலும் காட்டுகின்றது
இவை தெளிவான வாழிட வேறுபாடுகளைக் காட்டும் பாடல்களாக உள்ளன.

மாறாக, ஒரே பாடலில் அகழியில் கராமும் முதலையும் இருப்பதாகப் புறநானூறு பாடல் (பாடல் 37) கூறுகிறது. இப்பாடலில் ஒரே அகழியில் உள்ள முதலையைக் குறிக்க கராம் முதலை ஆகிய இரு சொற்களும் அடுத்தடுத்து வருகிறது. இந்த அகழி வஞ்சி மாநகரின் சேரன் கோட்டையினைச் சுற்றியுள்ள அகழி. அதைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போரிட்டு வென்றதைப் பாராட்டி மாறோக்கத்து நப்பசலையார் சில பாடல்களைப் பாடியுள்ளார்.
‘கராஅம்’ செருக்கித்திரியும் ஆழமான இடத்தையுடைய அகழியினையும், கரிய இடமாகிய ஆழத்தில், ஒன்று சேர்ந்து ஓடி யாமத்தை அறிவிப்பவரின் விளக்கின் நிழலினைக் கவ்விப்பிடிக்க முயலும் கடும் பகைமையுணர்வு கொண்ட ‘முதலை’களையுடைய ஆழமான நீரையுடைய நீர்நிலைகளையும் செம்பினால் ஆக்கப்பட்டது போன்ற மதிலையும் உடைய தலைமைப் பண்புள்ள பழமையான வஞ்சி மாநகரை வென்றவன் என்ற பொருள் தரும் கீழ்க்காணும் பாடலை மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார்.

சினம் கெழு தானை செம்பியன் மருக
‘கராஅம்’ கலித்த குண்டு கண் அகழி
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் ‘முதலை’ய நெடு நீர் இலஞ்சி
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர்
புறநானூறு பாடல்: 37/10 – மாறோக்கத்து நப்பசலையார்

இதிலிருந்து சங்க இலக்கியங்களிலேயே நன்னீர் வாழும் கராம் முதலை ஆகியவற்றை ஒரே பொருளில் பயன் கொண்டது தெரிகிறது. இதனால்தான் நிகண்டுகளும் கராம் என்பதை ஆண் முதலை எனக் குறிப்பிடுகின்றன எனக் கருத வேண்டியுள்ளது. ஆனால் முதலை இனத்தில் தோற்றத்தைக் கொண்டு ஆண் பெண் பிரித்தறிவது கடினம் என்று இன்றைய அறிவியல் தரவுகள் காட்டுகின்றன. இடங்கர் இன முதலை வகையில் மட்டுமே தோற்றத்தில் வெளிப்படையான வேறுபாடு காண இயலும்.

இது போன்றே மணிமேகலை பாடல் ஒன்றும் அகழியில் கராமும் இடங்கரும் ஒருசேர இருந்ததாகக் காட்டுகிறது.

கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் – மணிமேகலை:28/18

காஞ்சியின் அகழியில் புகும் பல்வேறு வகையான மணம் பரப்பும் நன்னீர் வகைகள் கலத்தலின் அந்நறுமணம் அங்குள்ள கராம், இடங்கர், மீன்கள் ஆகியவற்றையும் மணம் பெறச் செய்கின்றன என்று சாத்தனார் கூறுகிறார்.

4. முதலைகள் குறித்து செறிவுமிகுந்த தகவல் தரும் பழந்தொகை நூல்கள்:

ஆண் முதலையானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும் (ஐங்குறுநூறு – 5/4);
தான் ஈன்ற குட்டியையே தானே தின்னும் முதலை (ஐங்குறுநூறு – 24/2; ஐங்குறுநூறு – 41/1,2);
முழங்கால் அளவேயான சிறிது நீரில் யானையைக் கொன்று வீழ்த்த இழுக்கும் ஆற்றலையுடைய முதலை (புறநானூறு 104, வரி 3-4);

இரையைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி மெதுவாக ஊர்ந்து நகரும் வளைந்த காலையுடைய முதலை (மலைபடுகடாம் – 90,91)
போன்று முதலையின் பண்புகளை ஆவணப்படுத்தியுள்ளதுடன்,

நன்னீரில் வாழும் கராம் இன முதலை பொய்கை, அகழி, ஏரி, குளம், ஆறு, மடு, குண்டு, வாவி, சுனை, கடற்கரைப் பகுதி சதுப்புநிலங்கள், கழிகள் எனப் பல இடங்களில் வாழ்ந்ததாக இலக்கியப் பதிவுகளும் கொண்டு சங்க இலக்கிய நூல்கள் விலங்கின் வாழிடம், தோற்றம், பண்பு போன்றவற்றைக் குறித்த குறித்த செறிவான தகவலைக் கொடுக்கின்றன.

5. புராணக் கதைகள் கூறும் பிற்கால இலக்கியங்கள்:

பிற்கால இலக்கியங்களில், குறிப்பாக வைதீக மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு உள்ள பெரும்பாலான நூல்களில் முதலையின் பண்பு தோற்றம் போன்ற தகவல்களை ஆவணப்படுத்தும் வழக்கம் ஒழிந்துவிடுகிறது. மாறாக, முதலை குறித்த இரண்டே புராணக் கதைகள் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் பொழுதுதான் முதலை பற்றிய குறிப்புகள் பிற்கால இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவை முதலை குறித்த பயனுள்ள செய்திகளைக் கொண்டிருக்கவில்லை.

(i) சுந்தரர் முதலை வாயில் இருந்து சிறுவனை மீட்டதைக் குறிக்கும் கதை:

siragu myth

திருப்புக்கொளியூர் என்று முற்காலத்தில் போற்றப்பட்ட ‘அவிநாசி’ பகுதிக்கு வரும் சுந்தரர் ஒரு இல்லத்தில் சிறுவனுக்கு உபநயனம் (பூணூல் அணிவித்தல்) நடக்கும் பொழுது அருகில் மற்றொரு வீட்டில் அழுகை ஒலி கேட்டு காரணம் வினவுகிறார். பூணூல் அணிவிக்கப்படும் சிறுவனும் அவனது தோழனுமான அண்டை வீட்டுச் சிறுவனும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் குளத்தில் விளையாடுகையில் தோழனை அங்குள்ள முதலை விழுங்கிவிடுகிறது. இன்று இவனுக்கு உபநயனம் நடப்பதைப் பார்க்கும் மகனைப் பறிகொடுத்த பெற்றோர், நம் மகனும் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவனுக்கும் உபநயனம் நடந்திருக்குமே என்று ஏங்கி அழுவதைச் சுந்தரர் தெரிந்து கொள்கிறார். சிறுவன் மறைந்த குளத்திற்குச் சென்று சிறுவனை மீட்க விரும்பி சிவனிடம் வேண்டி “புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே” என்று பாடுகிறார் [7] . இவ்வாறாகச் சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடி, இரண்டு வருடங்களுக்கு முன் முதலை விழுங்கிய குழந்தையைத் திரும்பப் பெற்றார் என்ற கதை பக்தி இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் வள்ளலார் காலம் வரை குறிப்பிடப்படுகிறது.

புரை காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே
கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே
- தேவாரம் -சுந்:936/3, 4 [8-ஆம் நூற்றாண்டு]
பெரு வாய் ‘முதலை’ கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை
- பெரியபுராணம் – 13.வெள்ளானைச் சருக்கம்:1 12/1 [12-ஆம் நூற்றாண்டு]
வெம் ‘கரா’ வாய்-நின்று பிள்ளை வர பாடும் வன் தொண்டர்க்காய் – திருவருட்பா -திருமுறை2:89 2/2,3 [19-ஆம் நூற்றாண்டு]

(ii) முதலை வாய்ப் பட்ட களிறு கஜேந்திரன்:

காட்டிலுள்ள யானைக் கூட்டத்திற்குத் தலைவனாக விளங்கிய ‘கஜேந்திரன்’ என்ற யானை நாள்தோறும் குளத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்து திருமாலுக்குச் சாற்றி வழிபட்டு வருகிறது. ஒருநாள் குளத்திலிருந்த முதலை யானையின் காலைக் கவ்வி குளத்திற்குள் இழுக்கிறது. போராட்டத்தில் இறுதியாகத் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பிய கஜேந்திரன், “ஆதிமூலமே!” என்று அலறி திருமாலை அழைக்க, கருட வாகனத்தில் திருமால் விரைந்து வந்து, தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையைத் துண்டித்து யானையைக் காப்பாற்றுகிறார் [8]. இக்கதை பக்தி இலக்கியங்களில் திருமாலின் புகழ் பாட மீண்டும் மீண்டும் பல நூல்களில் இடம்பெறுகின்றது.

‘முதலை’ வாய் பட்ட களிறு – நாலாயிரத் திவ்விய பிரபந்தம்:126/1[7- 9ஆம் நூற்றாண்டு]
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற ‘கரா’ அதன் காலினை கதுவ
- நாலாயிரத் திவ்விய பிரபந்தம்:1076/2 [7- 9ஆம் நூற்றாண்டு]
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு ‘இடங்கர்’ பாழ் படவே எறிந்த
- திருப்புகழ் :82/13 [15-ஆம் நூற்றாண்டு]
(குறிப்பு: மேலே காட்டப்பட்ட பாடல்களில் ஒரே தொன்மக் கதைக்கு, முதலை கராஅம், இடங்கர் ஆகிய சொற்கள் மாற்றி மாற்றி எடுத்தாளப்பட்டுள்ளதைக் காண்க)

6. மகரம்: மகரம் என்ற குறிப்பு தமிழிலக்கியங்களில் பலமுறை தோன்றுகிறது. இருப்பினும், இவை முதலையைக் குறிப்பன அல்ல. நிகண்டுகளில் கண்டது போல தமிழிலக்கியத்தில் காணப்படும் ‘மகரம்’ என்ற சொல் சுறாமீனுடன் தொடர்பு கொண்டவை மட்டுமே. இது மாறுபடும் ஒரே ஒரு இடம் தேவாரத்தில் இடம் பெறுகிறது. சுந்தரர் தேவாரப் பாடல் வரி ஒன்றில் மகரமும் சுறாவும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றன.

“மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.” (தேவாரம் 7.71 திருமறைக்காடு)
கடல் அலைகள் மகர மீனையும், சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காட்டின் கடற்கரை என்று மறைக்காடு பற்றிய சுந்தரரின் 7 ஆம் திருமுறை 71 ஆம் பதிகம் குறிப்பிடுகிறது.

உரை எழுதியவர்கள் பெரும்பாலும் மகர மீனையும், சுறா மீனையும் கடல் அலைகள் கரையில் எறிகின்றன என்று குறிப்பிடுகிறார்கள். நிகண்டுகளின் அடிப்படையில் பொருள் கொண்டால் அந்த மகர மீன் என்பது பெருமீன் திமிங்கிலமாகவும் இருக்கக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. இராம.கி அவர்கள் தரும் விளக்கத்தில் மகரம் = முதலை எனப் பொருள் கொள்கிறார் [9].

மகரம் என்பது இலக்கியங்களில் கடலுடன் தொடர்பு கொண்ட உயிரினமாகவே வருகிறது.

எடுத்துக்காட்டு: பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – கம்பராமாயணம், சுந்:10 8/1
நெரிஞ்சுற, கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம் நுங்க – கம்பராமாயணம்: சுந்-மிகை:1 3/4
என்ற பாடலில் சுறா = மகரம் மீன் என்ற பொருள் படவும் கூறப்படுகிறது.

ஆகவே, ஆற்றில், குளத்தில், பொய்கையில், ஏரியில் வாழும் முதலைகளை மகரம் என்ற சொல் குறிப்பதாக இக்காலத்தில் கூறப்படும் விளக்கங்கள் பொருத்தமற்றவை என்பதை அறியலாம்.

முடிவுரை:

முதலையும் இடங்கரும் கராமும் (குறிஞ்சிப்பாட்டு-257) என்ற குறிஞ்சிப்பாட்டு தனித்தனியே முதலை இனங்களைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டினாலும் பிற்காலத்தில் முதலை, இடங்கர், கராம் ஆகியன முதலையைக் குறிக்கும் ஒரே சொல் என்ற ஒரு பொருட் பன்மொழி (பல சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பிடும்) வழக்கு ஏற்பட்டுவிட்டது. சங்க இலக்கியங்கள் முதலைகளைக் குறித்துச் செறிவான செய்திகளைப் பதிவு செய்துள்ளன. பிற்கால இலக்கியங்களில் காணப்படும் முதலை குறித்த தகவல்கள் கஜேந்திரமோட்சம், முதலை வாயிலிருந்த சிறுவனை மீட்ட கதை ஆக்கியவற்றுடன் மட்டுமே தொடர்புடையனவாகக் காணமுடிகிறது. மகரம் என்று முதலையைக் குறிப்பிடுவது வடமொழி வழக்காறு. தமிழ் இலக்கியங்கள் காட்டும் மகரம் சுறாமீனை மட்டுமே குறிக்கிறது எனவும் என்று இலக்கிய மீள்பார்வை மூலம் அறிய முடிகிறது.

சான்றாதாரங்கள்:

[1] இந்தியாவின் முதலை இனங்கள், தேமொழி. தமிழணங்கு (பிப்ரவரி 2023)

https://archive.org/details/2023_20230130/page/19/mode/2up

[2] Spokensanskrit – An English – Sanskrit dictionary

https://www.learnsanskrit.cc/translate?search=makara&dir=au

[3] Types of Crocodiles & Differences Between Crocodiles and Alligators and Gharials – Bio Explorer.

https://www.bioexplorer.net/animals/reptiles/crocodiles/

[4] தமிழ் இலக்கிய அகராதி, பாலூர் கண்ணப்ப முதலியார், மார்ச்சு 1957, பக்கம்: 314

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl3kZMy.TVA_BOK_0003568/page/314/mode/2up

[5] சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, சாந்தி சாதனா பதிப்பு, 2004.
[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZUy.TVA_BOK_0002448]

[6] தமிழ் இலக்கியத் தொடரடைவு

http://tamilconcordance.in/

[7] முதலை வாயினின்று மீண்ட மதலை

http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=3205&id1=52&id2=0&issue=20160416

[8] கஜேந்திரனுக்கு மோட்சம்

http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5111&id1=50&id2=18&issue=20190416

[9] மறைக்காடு – 8

https://valavu.blogspot.com/2018/10/8.html

—————


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் இலக்கியங்களில் முதலைகள் — ஓர் மீளாய்வு”

அதிகம் படித்தது