தலையாலங்கானம் போர்!! – சிறு குறிப்பு !!
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிMay 19, 2018
தமிழர் வரலாற்றில் போரும், விறலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. சங்க இலக்கியப் புறப் பாடல்களில் தமிழ் மன்னர்களின் போர் பற்றிய குறிப்புகள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது தலையானங்கானத்து மற்றும் வெண்ணிப் போர்கள் ஆகும்.
தலையாலங்கானம் திருவாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிரையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான், என்பதாக பல குறிப்புகள் புறநானுற்றுப் பாடல்கள், மதுரைக்காஞ்சி போன்ற பாடல் வரிகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். நற்றிணை, அகநானூறு போன்று அகப் பாடல்களிலும் இந்தப் போர் பற்றியக் குறிப்புகள் உண்டு.
புறநானூறு 19 இல் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்த ஏழு அரசர்களைத் தலையாலங்கானப் போரில் வென்றான் என்றும், அந்தப் போரில் என் கணவனும் புதல்வரும் மாண்டனர். இனி நமக்கு என்ன இருக்கிறது என்ற மகளிர் கசிந்து அழுவதைப் பார்த்துக் கூற்றுவனே இரங்கிய போர்க்களம் அது என்ற குறிப்புகள் உண்டு.
பாடல்
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை,
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து,
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்,
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய!
‘இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெருங் கல் அடாரும் போன்ம்’ என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல,
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத்
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து,
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள,
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்;
‘இன்ன விறலும் உளகொல், நமக்கு?’ என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி,
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?
திணை வாகை; துறை அரச வாகை.
பாடியவர் – குடபுலவியனார்
பாடல் பெற்றவர் – பாண்டியன் நெடுஞ்செழியன்
காலம் : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)
பாடல்
‘வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ,
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்;
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்;
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர்
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப,
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன்’ என,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக் கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே.
இந்தப் பாடலில் பகை நாடு சிதைவுண்டிருக்கும் விதத்தை புலவர் கல்லாடனார் காட்சியாகப் பாடுகின்றார்.
கொட்டகையில் (வெளிறு இல்லில்) கட்டப்பட்டிருப்பதை வெறுத்த யானை கலக்கிய நீர்த்துறையும், நெடுஞ்செழியனின் படை கடம்பு சூடிப் போரிட்ட முருகனின் கூளியர் படை போல பகைநாட்டில் வேண்டிய அளவு உண்டது போக வீசி எறிந்திருக்கும் நிலமும்; படை கோடாரியால் வெட்டிச் சாய்த்த காட்டரண், படை எரி ஊட்டிய நகர்ப்பகுதி, இவற்றையெல்லாம் அந்த நாட்டு அரசர்கள் பார்த்து நாணி, நம்மால் அவனை நெருங்க முடியாத மறவன் பாண்டியன், இன்னும் என்னவெல்லாம் செய்வானோ என்று அஞ்சி இருப்பதாக இந்தப் பாடலில் கூறியிருப்பார். அந்த நாட்டின் சீரழிவை ஆண்மான் புலிவாயில் பட்டதை எண்ணிப் பெண்மான் பூளாப் பூ நிறைந்த காட்டில் வேளைச் செடியின் வெள்ளைப் பூக்களைக் கறிக்கும் நாடாக இப்போது அவர்களின் நாடு உள்ளது எனும் உவமையால் புலவர் விளக்கியிருப்பர்.
புறநானூறு – 25. கூந்தலும் வேலும்!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை: அரசவாகை
மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல
ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ
துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்
குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணி
பிணியுறு முரசங் கொண்ட காலை
நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச்
சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய
முலைபொலி யாக முருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர
அவிரறல் கடுக்கு மம்மென்
குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே.
இந்தப் பாடலில் புலவர் நீ இரு பெரும் மன்னர்களை போரில் வென்று நிற்கிறாய். போர்க்களத்தில் திங்களும், ஞாயிறும் மறைவதுப் போல சேரன், சோழன் ஆகிய இரு பெரும் அரசர்களை நீ வீழ்த்தியபோது, அவர்களின் மனைவிமார்கள் தலைவிரி கோலத்துடன் தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுவதைக் கண்டு நீ உன் போரை நிறுத்திக்கொண்டதால் உன் வேல் தப்பித்தது.
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை :வாகை.
துறை: அரச வாகை.
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப்,
பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக,
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்,
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,
ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!
இந்தப் பாடலில் புலவர் ஒரு அரசன் போரிடும்போது இறப்பும், மாண்டு போதலும் இயல்பு என்றபோதிலும், ஒரே ஒருவனான பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு அரசர்களை அழித்தல் என்பது புதுமை. அதனை நான் இன்று கண்டேன். பாண்டியனின் விறல் தன்மையை அறியாது வந்து போரிட்ட எழுவரும் மாண்டு அவர்கள் கோட்டம் அடக்கப்பட்டது என்று கூறுகின்றார். வேப்பம்பூவும், உழிஞையும் தலையில் சேர்த்து சூடி, கிணைப்பறை முழங்க போரிட்டு பாண்டியன் வென்றதை மிக வியந்து பாடுகின்றார்.
மேலும், அகநானூறு 36, 175 and 209, நற்றிணை 387, மதுரைக்காஞ்சி 55, 127 பாடல்களில் இந்த தலையானங்கானத்து போரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலையாலங்கானம் போர்!! – சிறு குறிப்பு !!”