மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தாலாட்டுப் பாடல்கள்

பி. பிரதீபா

Nov 6, 2021

siragu thaalaattu1

நாட்டுப்புறப் பாடல்களில் முதலாவதாகக் கொள்ளத்தக்க வகை தாலாட்டு ஆகும். குழந்தையின் பிறப்பு என்பது மனிதப் பிறப்பின் தொடக்க நிலை என்பதால் இதுவே தாலாட்டுப் பாடல்களிலும் தொடக்கமாக அமைகிறது.

“தாலாட்டு என்ற சொல் தால் மற்றும் ஆட்டு என்ற சொற் சேர்க்கையால் பிறந்திருக்கலாம். தால் என்றால் நாக்கு என்றும் பொருள் உண்டு. நாவை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு எனப்பெயர் பெற்றிருக்க வேண்டும்”. என்று தாலாட்டுக்கான பெயர்க்காரணத்தை எடுத்துரைக்கிறார் சு.சண்முக சுந்தரம். “தாலாட்டுத் தாராட்டு, தாலேலோ, ஓராட்டு, ரேராட்டு, ராராட்டு, தொட்டில் பாட்டு, ஓலாட்டு, திருத்தாலாட்டு என்று பலவாறு தமிழில் இலக்கிய வழக்கிலும், உலக வழக்கிலும் வழங்கி வருகின்றன” என்று தாலாட்டின் பிற பெயர்களைக் காட்டுகின்றார் சு.சண்முகசுந்தரம்.

தாலாட்டு பாடும் சூழல்

பொதுவாக தாலாட்டு என்பது குழந்தையின் அழுகையை நிறுத்தவும், அக்குழந்தையை தூங்க வைக்கவும், பாடும் பாட்டாகும். குழந்தையைப் பற்றிய தன் கனவுகளைச் சொல்லவும், தான் பட்ட இன்னல்களைச் சொல்லவும், குலப்பெருமையைச் சொல்லவும் தாய் தன் நினைவோடையில் சிதறும் முத்துக்களாக தாலாட்டைப் படைக்கிறாள்.

தாலாட்டுப்பாடல்களின் வடிவம்

தாலாட்டுப்பாடல்கள் பாடும் தாயின் மனநிலைக்கேற்ப பாடல்கள் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்கும். தாலாட்டின் பண் நீலாம்பரி ஆகும். தாலாட்டுப் பாடல்கள் பொதுவாக நாவசைகளின் ஒலிகளிலே தொடங்கும். தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் ஆராரோ, ஆரிராரோ, ரேரேரே என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தாலாட்டுப்பாடல்கள் இனிமையான இசையை உடையன. இன்ப உணர்வு உடையது. எப்படியெல்லாம் வாழவேண்டும் என வரையறை செய்வது தாலாட்டு ஆகும். எதுகை, மோனை நயங்கள் காணப்படும். சில நேரங்களில் நீண்டும் சில நேரங்களில் சுருங்கியும் வரும். ஐம்பது அடிகளும் இருக்கலாம். பத்து அடிகளும் இருக்கலாம். இதற்கு அடிவரையறை கிடையாது.

பாண்டுகுடி பஞ்சாயத்து சார்ந்த பகுதிகளில் இருந்து பத்து தாலாட்டுப்பாடல்கள் கிடைத்துள்ளன. அவற்றின் பொருள் நலமும் கவி நலமும் இங்கு ஆராயப்பெறுகின்றன.

பொருள் நலம்

முதலாவதாக பாண்டுகுடி பஞ்சாயத்து சார்ந்த ஊர்களில் இருந்து கிடைத்த பத்துத் தாலாட்டுப் பாடல்களின் பொருள் பகுதி எடுத்துரைக்கப்பெறுகிறது.

பாடல் ஒன்று

பாண்டுகுடி பகுதியில் கிடைத்த முதல் தாலாட்டுப் பாடலில் முருகன், வள்ளி, தருமர் போன்ற பாத்திரங்கள் உவமை நிலையில் இடம்பெறுகின்றன. முருகனைப் பார்த்த வள்ளி விளையாட்டாக மலைச்செருவின் பின்னால் ஒளிந்துக்கொள்கிறாள். வள்ளியைத் தேடி முருகன் காணத் துடிக்கிறார். இவ்வாறு முதலில் கந்தன், வள்ளி இருவரின் விளையாட்டை வைத்து தாலாட்டுப் பாடலாகப் பாடுகிறாள் தாய்.

அடுத்து இத்தாலாட்டில் தாய்மாமனின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தருமன் எனப் பாராட்டப் படுகிறான். மேலும் தாயானவள் நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் மதுரை வைகையில் நீராடியதன் பொருட்டே குழந்தைச் செல்வம் கிடைத்தது என்றும் இத்தாய் பாடுகிறாள்.

பாடல் இரண்டு

பாண்டுகுடி பஞ்சாய்த்து சார்ந்து ஆ;யவாளருக்குக் கிடைத்த இரண்டாம் தாலாட்டுப் பாடலின் பொருள்: நெடுங்காலமாக குழந்தை இல்லாத தாய் ஒருத்தி தனக்கு தாலாட்ட ஒரு குழந்தை வேண்டும் என்று கோவில் கோவிலாக சுற்றியதை எடுத்துரைக்கிறது. அவள் மாயவரம், தில்லை வனம் போன்ற கோயில்களுக்குச் சென்று குழந்தை வேண்டி நிற்கிறாள். அவளின் வேண்டுதலின் பலனாக குழந்தையும் கிடைத்தது. கோபுரத்து மேலிருந்து அவள் வேண்டியமையால் கோவலன் பிள்ளையாக வந்தான் என்று இத்தாலாட்டு குறிப்பிடுகிறது.

பாடல் மூன்று

ஆய்வாளருக்குக் கிடைத்த மூன்றாவது தாலாட்டில் தெற்கில் உள்ள திருநெல்வேலி, தென் கிழக்கே உள்ள இராமேசுவரம் போன்ற ஊர்களில் கும்புட கோயில் கட்டி, மடம் கட்டி இதன்வழியாகக் குழந்தை பிறந்ததாம். மேலும் நல்ல தண்ணீர் தரும் குளம் வெட்டி, வையை ஆற்றை சரி செய்து குழந்தை பிறந்ததாக இப்பாடலில் குறிக்கப்படுகிறது. குழந்தை இல்லாத நிலையில் நாட்டுப்புற மக்கள் சென்ற ஊர்களின் செய்த தருமங்களின் பட்டியலாக இத்தாலாட்டுப் பாடல் விளங்குகிறது.

பாடல் நான்கு

நான்காம் பாடல் கடல் சார்ந்த தாலாட்டாக அமைகிறது. கடலில் பூ பூக்கும் மரம் நிற்கிறதாம். அதில் ஐந்து தலை செந்நாகம் வாழ்கிறதாம். அப்படி வாழ்ந்தாலும் அந்த மரத்தில் இருந்து பூவெடுக்கும் அர்ச்சுணன் போன்ற வலிமை மிகுந்தவராம் குழந்தையின் தாய்மாமன். அவர் அதிசயமான சீர்களைக் கொண்டுவருவதாகத் தாய் தாலாட்டில் பாடுகிறாள். மேலும் தங்கக்கொடி முறுக்கி தலவாசல் தொட்டில் கட்டுபவராகவும், வெள்ளிக் கொடி முறுக்கி வெளிவாசல் தொட்டில் கட்டுபவராகவும் செல்வம் மிக்கவராக தாய்மாமன் விளங்குகிறார்.

மேலும் இத்தாலாட்டில் தாயை அல்லியாகவும், சீதையாகவும், தந்தையை சீமானாகவும், பீமனாகவும், மாமனை அருச்சுனராகவும், தருமராகவும் எண்ணி உயர்த்தப்படுகிறது. இவர்களின் அரவணைப்பால் குழந்தை கவலையின்றித் தூக்கட்டும் என்றுத் தாலாட்டுப் பாடுகிறாள் தாய்.

பாடல் ஐந்து

ஆய்வாளருக்குக் கிடைத்த ஐந்தாம் பாடலில் குழந்தையின் தந்தை அறத்தின் வழி நடக்கும் அருச்சுணர் என்றும், தருமர் என்றும், பீமர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். மேலும் வைகையில் மீன்கள் துள்ளிவர, வாலை மீன் துள்ளி வர அவற்றிற்கும் உணவளித்த கருணையை உடையவர் குழந்தையின் தந்தை என்று இப்பாடல் கருணையை வெளிப்படுத்தி நிற்கிறது.

பாடல் ஆறு

இப்பாடலிலும் குழந்தையின் தந்தையின் சிறப்பு குறித்தே பாடப்பெற்றுள்ளது. வேப்பிலை, செங்கல்லாக உள்ள தெய்வத்திற்கு நூற்றில் ஒரு பூ கொண்டு பூசை செய்தவர் குழந்தையின் தந்தை. அரும்பு எடுத்து பூசை செய்யும் அர்ச்சுணராகக் கொள்ளத்தக்கவர் குழந்தையின் தந்தை. இவ்வாறு தந்தை சிறப்பினைப் பாடுவதாக இவ்வாறாம் பாடல் அமைகிறது.

பாடல் ஏழு

ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. அவ்வாற்றில் அயிர மீன்கள் அதிகம் துள்ளிக் குதிக்கின்றன. அம்மீன்களை அள்ளிக் கொண்டு வருகிறானாம் அந்தக் குழந்தை. மேலும் மதுரை மீன்களை மறிச்சு அள்ளி வருகிறானாம் அக்குழந்தை. இவ்வாறு குழந்தை பிறந்ததால் இனி உணவிற்குத் தடையில்லை என்பதாக இத்தாலாட்டுப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

பாடல் எட்டு

பாண்டுகுடி பஞ்சாயத்தில் கிடைத்த எட்டாம் தாலாட்டுப் பாடலில் தாய்மாமன் பெருமையை முதலில் கூறி, குழந்தையிற் சிறப்பை இரண்டாவதாக கூறி இறுதியில் குழந்தையின் தந்தையின் சிறப்பானது பாடப்படுகிறது.

பாடல் ஒன்பது

அழும் குழந்தையை உறங்க வைப்பதற்கு பாடும் பாடலே தாலாட்டு. அவ்வாறு இங்கு குழந்தை அழுகிறது. அழும் குழந்தையிடம் யார் அடிச்சு அழுகிறாய் – பாட்டி அடிச்சாளோ? என வினா எழுப்பும் பாடலாய் இப்பாடல் அமைகிறது. மேலும் அத்தை அடிச்சாலோ, மாமன் அடிச்சானோ என்று குழந்தையிடம் பாடும் பாடல் ஒன்றை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் இப்பாடலிலோ பாட்டி அடிச்சாலோ என்று புதுவிதப் பாடலாய் அமைவதை இங்கு காணமுடிகிறது.

பாடல் பத்து

தாலாட்டு, தாய், பாட்டி, அத்தை என பெண்களே தாலாட்டுப் படாலைப் பாடுவர். இங்கு ஓர் சிறுமி தன் தம்பியை தூங்க வைப்பதற்கு தாலாட்டைப் பாடுகிறாள். தன் தாயை இழந்த அந்த சிறுமி இரண்டாவது அம்மாவான சின்னம்மாவின் குழந்தையை தாலாட்டுகிறாள். அவ்வாறு தாலாட்டும் பொழுது தன்னுடைய சின்னம்மா தனக்கு செய்யும் கொடுமைகளைப் பாடலாகப் படிக்கிறாள். வயல்களில் பிடித்த ஆரா மீனை சித்தியிடம் கொடுக்க அவள் அதனை சமைத்து தனது தாயார் குடும்பத்திற்கு அனுப்பிட சிறுமிக்கு குழம்பு இல்லை என கூற கவலை அடைந்த சிறுமி தன் கவலைகளை பாட்டாக நினைத்துப்பாடுகிறாள்.

இவ்வாறு பாண்டுகுடி வட்டாரப் பகுதியிலிருந்துச் சேகரிக்கப்பெற்ற பத்துப்பாடல்களும் பொருள் நலம் மிக்கனவாக உள்ளன. இனி ஆய்வுக்களத்தில் கிடைத்த பாடல்களின் ஓசை நலம், கற்பனைத் திறம், இலக்கிய நலம் போன்றன எடுத்துரைக்கப்பெறுகின்றன

தாலாட்டுப் பாடல் -ஒன்று

ஒசை நலம்

ஆய்வுக்களத்தில் கிடைத்துத் தொகுக்கப் பெற்ற முதல் பாடல், ஓசை நலம் மிக்கதாக உள்ளது. இத்தாலாட்டுப் பாடலில் ராராரோ, ராரிரரோ, ராரேரேரோ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. பாடலின் இடையிடையே “என் கண்ணே” என்ற விளியும் பயன்படுத்தப்படுகிறது. பாடல் பாடுவதற்கு முன்பாக அழும் குழந்தையின் கவனத்தை ஈர்க்கும் விதமாக “ரேரேரேரேய்…..”; என்ற ஓசை எழுப்பப்படுகிறது.

தொன்மம்

இப்பாடலில் முருகனைப் பற்றிய புராணச் செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும் தருமரைப் பற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளது. முருகன் வள்ளியைத் தேடி வரும் காட்சியையும் தாலாட்டுப் பாடும் தாய் இணைத்துப் பாடியுள்ளாள். இதன்மூலம் நாட்டுப்புற மக்கள், கந்தபுராணச் செய்தியையும், மகாபாரதக் கதையையும் அறிந்து அவற்றைத் தம் வழியில் எடுத்துப் பாடியுள்ளனர் என்பதை உணரமுடிகின்றது.

உவமை

இலக்கியங்களில் உவமைகள் எடுத்தாளப் பெறுவதுபோல நாட்டுப்புறப் பாடல்களிலும் நாட்டுப்புற மக்களால் உவமைகள் எடுத்தாளப் பெற்று அழகு கூட்டப்பெற்றுள்ளன. முதல் தாலாட்டுப் பாடலில் தாய்மாமனைக் குணத்தில் செல்வச் செழிப்பில் தருமாராகக் காண்கிறாள் தாலாட்டுப் பாடும் தாய்.

தாலாட்டுப் பாடல்- இரண்டு

ஓசை நலம்

தாலாட்டுப் பாடலாகத் தொகுக்கப்பட்ட இரண்டாம் பாடலிலும் ஓசைநலம் கொண்டு ஒரு தாய் பாடியுள்ளார்.

ஆராரோ ஆராரோ
என் கண்ணே நீ
ஆராரோ ஆராரோ

என்று இப்பாடல் ஓசை நலம் கொண்டுள்ளது. மேலும் இப்பாடல் மூன்றடுக்கி அமைகின்றது. ஒரு கருத்தை மூன்று முறை அடுக்கிச் சொல்லும் மரபு நாட்டுப்புறப்பாடல்களில் உண்டு. இம்மரபு இங்குப் பின்பற்றப்பெற்றுள்ளது. ராராட்ட என்ற ஓசைச்சொல் மூன்றடுக்கி வந்துள்ளது. மேலும் தில்லைவனம், மாயவரம், கோவரம் போன்ற இடங்களும் மூன்றடுக்கி வந்துள்ளன. இவ்வாறு இப்பாடல் மூன்று முறை அடுக்கி நின்று ஓசைநலம் பெறுக்குகிறது.

ஏன் புள்ள யில்லன்னு சொல்லி
கண்ணே தில்லை வனம் போயி வந்தோம்
ஏன் பூக்கொடுத்தா வாடுமின்னு
கண்ணே புள்ள தந்தா ராராட்ட
ஏன் மஞ்சனிலே இன்னு சொல்லி
கண்ணே மயாவரம் போயி வந்தோம்
ஏன் மாலதந்தா உதிருமின்னு
கண்ணே மஞ்சம் தந்தா ராராட்ட
ஏன் கொழந்தையில்ல இன்னு சொல்லி
கண்ணே கோவி(பு)ரத்து மேலருந்தேன்
ஏன் கோடமழை குளிருமின்னு
கண்ணே கோவலன் தந்தா ராராட்ட
தொன்ம வரலாற்றுச் செய்திகள்

இப்பாடலில் குழந்தை வரம் வேண்டி தில்லை நடராஜர் கோவிலுக்கும் மாயவரம் மயூரநாதர் கோவிலுக்கும் சென்று அதன் பயனாகவே, குழந்தை பிறந்தது என்று அத்தாய் தாலாட்டு பாடுகிறாள்.

அடுத்து மதுரையுடன் தொடர்புடைய கோவலன் பற்றிய குறிப்பும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகாரக் கதையும் நாட்டுப்புற மக்களிடன் நினைவில் இருந்துள்ளது என்பதை இப்பாடலில் இடம்பெற்றுள்ள கண்ணே கோவலன் தந்தா ராராட்ட என்ற அடி காட்டுகிறது.

தாலாட்டுப் பாடல்-மூன்று

ஓசை நலம்

தொகுக்கப் பெற்ற மூன்றாம் எண்ணுடைய பாடலில் “என் ராராரோ, ராரிரரோ , ராரேரேரோ ராராரே” என்ற ஓசை பயன்படுத்தப்பெற்றுள்ளது. மேலும் இப்பாடல் முழுவதும் “ என்” என்ற சொல் அமைந்த அது ஒருவகையான இசையைத் தருவதாக உள்ளது.

தொன்மம் சார்ந்த இடக் குறிப்புகள்

இத்தாலாட்டுப் பாடலில் புராண காலச் சிறப்புடைய இடங்கள் குறிக்கப்பெற்றுள்ளன. திருநெல்வேலி, இராமேசுவரம் போன்ற இடங்களில் கோயில், குளம், மண்டபம் கட்டி அதனால் பிறந்த பிள்ளை பற்றித் தாய் குறிப்பிடுகிறாள்.

இங்கு இராமேசுவரம் என்று குறிப்பது வட்டாரத் தன்மை வாய்ந்ததாகும். இராமநாதபுர மாவட்டத்தின் முக்கியமான திருத்தலம் இராமேசுவரம். எனவே இத்தலத்தைக் குறிப்பதன் வாயிலாகத் இத்தாலாட்டுப் பாடல் இராமநாதபுர எல்லையைச் சார்ந்தது என்ற வட்டாரத் தன்மையைப் பெறுகிறது. இராமேசுவரம் செல்லும் பாதை என்று குறித்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது. மேலும் இத்தாய் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவளாக இத்தாய் விளங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் அறம் செய்யும் அளவிற்குக் குடும்பத்திற்குச் செல்வச் செழிப்பு இருந்த நிலையில் இந்தத் தாலாட்டு கோயில் குளம் கட்டி அறஞ் செய்வதைப் பற்றிப் பாடுகின்றது.

தாலாட்டுப் பாடல் நான்கு

ஓசை நலம்

தாலாட்டுப் பாடலில் நான்காவதாக அமைக்கப்பெற்ற பாடல் நீண்டதாகவும், பொருள் செறிவு மிக்கதாகவும் அமைந்துள்ளது. இப்பாடலிலும் என் என்ற முன்னொட்டு அமைத்துப் பாடப்பெற்றுள்ளது. மேலும் ராராரோ, ராரிரரோ என்ற ஓசைக் குறிப்பு பயன்படுத்தப்பெற்றுள்ளது.

இப்பாடலில் அடுக்கிப் பாடும் முறைமையும் காணப்படுகிறது. தங்கக்கொடி முறுக்கி தலைவாசல் தொட்டி கட்டி என்றும், வெள்ளிக்கொடி முறுக்கி வெளிவாசல் தொட்டி கட்டி என்றும் அடுக்கிப் பாடும் முறை இத்தாலாட்டுப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

என் தங்க கொடி முறுக்கி
என் கண்ணே தலவாச தொட்டிகட்டி
என் தங்க கொடி அசற
என் கண்ணே நீ தருமர்மகன் கண்ணசற
என் வெள்ளி கொடி முறுக்கி
என் கண்ணே வெளிவாச தொட்டிகட்டி
என் வெள்ளி கொடி அசற
என் கண்ணே நீ வீமர்மகன் கண்ணசற
என்பது அடுக்கி நிற்கும் முறையாகும்.

தொன்மம்

இத்தாலட்டுப் பாடலில் சீதை, அர்ச்சுணர், அர்ச்சுணனின் மனைவி அல்லி, பீமர், தருமர் போன்ற புராணப்பாத்திரங்கள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. இராமாயண, மகாபாரத கதைகள் அறிந்து நாட்டுப்புற மக்கள் அதனைத் தம் நாட்டுப்புறப் படைப்புகளில் எடுத்தாண்டுள்ளனர் என்பதை உணர முடிகின்றது.

மேலும் இப்பாடலில் ஆவுடையார் கோயில் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது. திருவாசகத்தில் அதிகம் பாடப்பெற்றுள்ள இடம் ஆவுடையார் கோயிலாகும். திருப்பெருந்துறை என அழைக்கப்படும் இக்கோயில் பற்றியும் நாட்டுப்புற மக்கள் அறிந்துள்ளனர். குறிப்பாக ஆவுடையார் கோயில் திருவாடானைப் பகுதிக்கு அருகில்தான் அமைந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் ஆவுடையார் கோயிலையும் இணைத்துத் தம் நாட்டுப்புறப் படைப்புகளில் படைத்துள்ளனர்.

“என் ஆத்து மணலுக்கும்
என் நம்மஆவுடையார் சந்நதிக்கும்
என் அடியளந்து பூசசெய்யும்
என் கண்ணே அரி(ரு)ச்சுணரோ உங்க அப்பா
என் பிள்ளையாரு கோவிலிலே
என் கண்ணே நீ பூசபன்ன வந்தவனோ!”

என்ற பாடலடிகளில் ஆவுடையார் கோயில் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.

சிறப்புச் செய்தி

இப்பாடலில் கடலில் உள்ள புன்னை மரம், அப்புன்னை மரத்தில் அடைகாக்கும் அஞ்சுதல செந்நாகம் என்று கதையொன்றும் இணைத்தப் பாடப்பெற்றுள்ளது. இந்த நாகத்தைப் பார்த்து அஞ்சாத அர்ச்சுணர் தன் மாமன் என்ற குறிப்பும் இப்பாடலில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது. அர்ச்சுணர் தீர்த்த யாத்திரை செய்தமையை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

தாலாட்டுப் பாடல்-ஐந்து

நாட்டுப்புறப்பாடல்களில் ஐந்தாவதாகத் தொகுக்கப்பெற்ற பாடல் ஆறு சார்ந்த பாடலாக விளங்குகிறது. இப்பாடலில் மீன்களுக்கு இரை போடும் கருணை நிலைப்பாடு காட்டப்படுகிறது.

ஓசை நயம்

ராராரோ, ராரேரிரோ, என் கண்ணே என்ற தாலாட்டு ஓசை தரும் சொற்கள்; முதலிலும், இடையிலும், கடையிலும் கலந்து பாடப்பெற்றுள்ளது.

தொன்மம்

ஐந்தாம் பாடலில் அருச்சுணர் என்ற தொன்மம் குழந்தையின் அப்பாவிற்குக் காட்டப்படுகிறது.

வைகை தேரி வர
என் கண்ணே வாலைமீனோ துள்ளிவர
துள்ளி வந்த மீனுக்குடோய்
என் கண்ணே தூக்கியெற (இரை) போட்டவரோ
மத்த மீனு துள்ளிவர
என் கண்ணே மறுச்சி யெற (இரை) போட்டவரோ
என் அதிலே வழி நடப்பார்
என் கண்ணே அரிச்சுணரோ(அருச்சுணரோ) உங்கப்பா

என்று மீன்களுக்கு இரை போட்டு அவைவாழ்வதற்கு வசதி அளிக்கும் கருணையை இப்பாடல் காட்டி நிற்கிறது.

தாலாட்டுப் பாடல் ஆறு

ஓசை நயம்

ஆய்வுக் களத்தில் கிடைத்த தாலாட்டுப் பாடல்களில் சிறிய அளவிலானது ஆறாவது பாடல் ஆகும். இது முடிவு பெறாமல் உள்ளதாகத் தெரிகிறது. இப்பாடலைப் பாடியவருக்கு இதற்குப் பின் நினைவில்லா நிலையால் இவ்வாறு பாடல் சிறிதாக கிடைக்கப்பெற்றிருக்கலாம்.

ராராரோ ராராரோ, ராரிரரோ ராராரோ என்ற ஓசைக் குறிப்புகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன. இப்பாடலில் அடுக்கிப் பாடும் முறையும் காணப்படுகிறது. பூவெடுத்துப் பூசை செய்ய அரும்பெடுத்துப் பூசை செய்ய என்ற அடுக்கு முறை இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

தொன்மம்

இப்பாடலிலும் முன்பாடல்கள் போல அர்ச்சுணர் என்ற தொன்மம் பயன்படுத்தப்பெற்றுள்ளது. வேப்பிலை, செங்கல் ஆகியன கிராமமக்கள் வணங்கும் தெய்வ வடிவங்கள் என்பதும் இப்பாடலில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. மேலும் நூற்றிலொரு பூ என்ற எண்ணிக்கையும் குறிக்கப்பெற்றுள்ளது. இதன்வழி புராண அறிவும் எண்ணல் அறிவும், இயற்கையை வணங்கும் நிலைப்பாடும் தெரியவருகின்றன.

தாலாட்டுப் பாடல்- ஏழு

ஓசை நயம்

ஏழாவதாகத் தொகுக்கப்பெற்ற தாலாட்டுப் பாடல் ராராரோ, ராராரோ என்ற ஓசையுடன் பாடப்பெற்றுள்ளது. பாடலின் முடிவிலும் இந்த ஓசையே பாடப்பெற்றுள்ளது. மேலும் பாடலின் இடையிடையே நல்ல கண்ணே என்ற விளியும் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தாலாட்டு ஓசை ஒழுங்கு இப்பாடலுக்கு அமைகிறது.

இப்பாடலில் அயிர மீன், மதுர மீன், மறுமீன் என மீன்வகைகள் இப்பாடலில் எடுத்துரைக்கப் பெறுகின்றன. மதுர மீன் என்ற குறிப்பில் மதுரை என்ற தொன்மம் இடம்பெற்றுள்ளதை உணரமுடிகின்றது.

தாலாட்டுப் படல் -எட்டு

ஓசை நயம்

என் என்ற ஓசையுடன் தொடங்கி “என் கண்ணே” என்ற பதத்துடன் இப்பாடல் பாடப்படுகிறது. இது ஒருவகையான ஓசைநயத்தைத் தருவதாக உள்ளது.

தொன்மம்

அடியளந்த மாயவர் என்று தாய்மாமனை பாடுகின்றனர். இங்கு அடியளந்த மாயவர் என்பவர் திருமால் ஆவார். திருமால் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண்ணினைக் கேட்ட செய்தியை நாட்டுப்புற மக்கள் அறிந்து பாடியுள்ளனர் என்பதற்கு இப்பாடல் சிறந்த சான்றாகும். திருமாலின் மருமகன் என்று இப்பாடல் குறிப்பதால் முருகனைப் பற்றிய தொன்மச் செய்தியும் இதனுள் அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

சிறப்புச் செய்தி

விளைந்த நெல்லை வணிகத்திற்காக வாங்கும் செட்டி இன மக்கள் பற்றிய குறிப்பும் இதனுள் உள்ளது. நெல் அளக்கும் செட்டி என்ற குறிப்பு குறிப்பிட்ட இனக்குழுவைக் குறிக்கும் தொடராகும். பாண்டுகுடியில் செட்டி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் நெல் வியாபாரம் செய்துவருகின்றனர்; என்பதை இப்பாடல் ப்திவு செய்கிறது.

இவ்வாறு நெல் எடுத்துச் சென்று அளக்க குழந்தையின் தந்தை செல்வதை மகிழ்ச்சியாக இப்பாடல் பதிவு செய்துள்ளது.

தாலாட்டுப் பாடல் ஒன்பது

ஓசைநயம்

ராராரோ, ராரேரேரோ எனற் ஓசை இப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலின் இடை இடையே நல்ல தம்பியே என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்பாடலில் அடித்தவரைச் சொல்லி அழச் சொல்லி தாய் குழந்தையிடம் கேட்கிறாள். பாட்டி அடித்தாரா என்று அவள் கேட்கும் நிலையில் பாட்டியுடனான உறவு சற்று கடுமையாக இருந்திருக்கவேண்டும் என்று தெரியவருகிறது.

தாலாட்டுப் பாடல் – பத்து

ஓசைநயம்

ஆராரோ, ஆராரோ என்ற பதத்தில் இப்பாடலை பாடி ஆரம்பிக்கின்றனர். பாடலின் முதலில் ராராரோ, ராராரோ, ஆரிரிரோ, ஆராரோ என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகிறது. பாடலில் இடையிடையே நல்ல கண்ணே என்ற வார்த்தையையும் சேர்த்துப் பாடியுள்ளனர்.

மூன்றடுக்கிப் பாடும் முறைமை இப்பாடலில் காணப்படுகிறது. வள்ளியை முருகன் தேடும் நிலை, பழங்களை மூன்றாக அடுக்குதல் போன்றன மூன்றடுக்கலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

தொன்மம்

முருகனும், குறவர் குலப்பெண்ணான வள்ளியும் காதல் கொண்டு விளையாடிய விளையாட்டைத் தொன்மமாக இப்பாடலைப் பாடிய தாய் பதிவு செய்துள்ளாள்.

“என் வாழை நெழலாகுமோ
நல்ல கண்ணே வன்னிமரம் தோப்பாகுமோ
என் எருவு பசுவாகுமோ”

என்று முரண் தொடை அமைய இத்தாலாட்டுப்பாடல் பாடப்பெற்றுள்ளது. எருமைமாடு பசுமாடாக எக்காலத்தும் ஆகாது. வாழைமர நிழலில் நிற்க இயலாது. ஒரு வன்னிமரம் தோப்பாகாது. இவை போன்ற முரண்களை அடுக்கி தன் சின்னம்மாவின் பிள்ளையைத் தாலாட்டுகிறாள் ஒரு பெண். அவளின் வாழ்க்கை முரணானது என்பதை இதன்வழி குறிப்பாக அறியமுடிகின்றது.

இவ்வாறு தாலாட்டுப்பாடல்கள் அனைத்தும் ஓசைநயமும், கருத்துச் செறிவும், புராண நலமும், சிறப்புச் செய்திகளும் கொண்டு விளங்குகின்றன.

தொகுப்புரை

பாண்டுகுடிப் பகுதியில் கள ஆய்வினபோது கிடைத்த பத்துத் தாலாட்டுப்பாடல்கள் பொது நிலையில் தாய்மாமன், தந்தை போன்றோரைப் போற்றி உரைக்கின்றது. மேலும் மூன்றடுக்கிப் பாடும் முறை காணப்படுகிறது. இராமேசுவரம் என்ற ஊரைக் குறிப்பதன் வாயிலாக தாலாட்டுப் பாடல்களில் வட்டாரத் தன்மை உள்ளதை அறியமுடிகின்றது.

தாலாட்டுப்பாடல்கள் ஓசைநலம் மிக்கனவாக, தொன்மக் கூறுகள் அடங்கினவாகக் காணப்படுகின்றன. கோவலன், அர்ச்சுணர், பீமன், முருகன், வள்ளி போன்ற புராணத்தொன்மங்கள் எடுத்தாளப்பெற்றுள்ளன. மோனை, எதுகை, இயைபு, முரண் போன்ற தொடை நலங்கள் அமையப் பாடப்பெற்றுள்ளன.

பத்தாம் பாடல் ஒரு சிறுமி தன் சின்னம்மாவின் குழந்தையைத் தாலாட்டும் நிலையில் அவளுள் கிடக்கும் முரண்கள் முரண்தொடைகளாக வெளிப்பட்டுள்ளன. நாட்டுப்புற இலக்கிய வடிவமான தாலட்டுப்பாடல்கள் அதற்கேற்ற வரையறையுடன் விளங்குகின்றன.

சான்றாதரங்கள்

1. சு. சண்முக சுந்தரம், தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள், ப. 52
2. மேலது ப. 53
3. சு. சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு, ப. 98


பி. பிரதீபா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாலாட்டுப் பாடல்கள்”

அதிகம் படித்தது