மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருவாடானை வட்டார விடுதலைப் போராட்டங்களும், அதன் விளைவுகளும் – இறுதி பகுதி

ம. முத்து பாலகிருஷ்ணன்

Sep 24, 2022

siragu poraattam2தேசியவாதிகள் பட்ட துயரங்கள்

1942 ஆம் ஆண்டு திருவாடானை போராட்ட நிகழ்வில் தேவக்கோட்டை, திருவாடானை, திருவேகம்பத்தூர், முப்பையூர், கற்களத்தூர் ஆகிய ஊர்களைச் சார்ந்த விடுதலை வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளாயினர். அவர்களில் ஓரளவிற்குக் கிடைத்த தகவல்களின்படி இன்னார் இன்னார் என்று அறியமுடிகிறது. அப்போராட்டத்தில் கலந்து கொண்ட பலரை அறிய இயலவில்லை. அறிந்தவர்கள் பற்றிய விபரம் பின்வருமாறு.

தேவகோட்டையைச் சார்ந்தோர்
1. திரு. அழ. சுப. திருநாவுக்கரசு செட்டியார்
2. பி. ஆர். ராமசாமி
3. சித.மு.மாரியப்பா
4. ஆர். எம். அண்ணாமலை
5. எஸ். சோமசுந்தரம்
6. மீனாட்சி சுந்தரம்
7. சின்ன அண்ணாமலை
8. இராமநாதன்
9. எம். விஸ்வநாதன்
10. குழந்தைவேல்

முதலிய தேவகோட்டைக்காரர்கள் முக்கியபங்கு கொண்டு திருவாடானைப் புரட்சியை நடத்தினர். இப்போராட்டத்தில் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தேவகோட்டையைச் சார்ந்த தியாகிகளின் விபரம் பின்வருமாறு.
1. வி. தர்மராஜன்
2. மணிவண்ணன்
3. பால்கார நடேசன்
4. கிருஷ்ணன்
5. சாவல்கட்டு
6. மணியன்
7. சிவனாண்டி செட்டியாரின் தாயார்
இவர்கள் இன்னுயிர் நீத்தவர்கள் ஆவர். மற்றும் பலர் கடுமையாக குண்டு காயங்கள் அடைந்தார்கள். போலீஸாரும் பொதுமக்களும் இறந்த சிலரது உடல்களை சிதைத்து விட்டதனால் சரியான புள்ளி விபரம் தரமுடியவில்லை.
இந்நிகழ்வில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருந்தோர்

திருவாடானை தேசியப் போரட்டத்தில் கலந்து கொண்டு காவலர்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்த போராட்டக்காரர்களும் பலர் உண்டு. அவர்களைப் பற்றிய செய்திகள் பின்வருமாறு.
1. சோம. சிதம்பரம் -தேவக்கோட்டை
2. என். ஜெயராம் ஐயர்-திருவேகம்புத்தூர்
3. சிறைப்பட்டோர்
4. அழ. சுப. திருநாவுக்கரசு செட்டியார்- தேவக்கோட்டை
5. எம் . கிருஷ்ணன் -தேவக்கோட்டை
6. கே. எல். அழகர்சாமி-தேவக்கோட்டை
7. ஏ. முனியாண்டி நாயுடு-தேவக்கோட்டை
8. எம். சண்முகம் பிள்ளை –தேவக்கோட்டை
9. எம். பி. சின்னத்துரை-தேவக்கோட்டை
10. எஸ்.பி. நடராஜன்-தேவக்கோட்டை
11. எம். விஸ்வநாதன்-தேவக்கோட்டை
இவ்வாறு தேவகோட்டையைச் சார்ந்தவர்கள் தேவகோட்டையில் இருந்து திருவாடானை வரை நடந்துவந்து அதன்பின் போராட்டத்தில் கலந்து கொண்டு அப்போராட்டங்களின் எதிரொலியாகத் தம் வாழ்வைத் துறந்தவர்களாக விளங்குகின்றனர்.

திருமணவயல் கிராமத்தைச் சார்ந்தோர்.

தேவகோட்டையை அடுத்தமைந்த ஊர்களிலும் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவு இருந்தது. திருமணவயல் என்ற ஊரைச் சார்ந்த பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
• பெரி. நீலமேகம் சேர்வை
• சி. முத்தையா அம்பலம்
• கரு. பெரியய்யா சேர்வை
• கே. ஆர். சுப்பையா சேர்வை
ஆகிய நால்வர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலேய அரசால் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.
கோட்டூர் கிராமத்தைச் சார்ந்தோர்

கோட்டூர் என்ற கிராமத்தினைச் சார்ந்த தியாகிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளனர்.
1. டி. அண்ணாமலை
2. எஸ். கார்மேகம் சேர்வை
3. மாயழகு சேர்வை
ஆகிய மூவர் இவ்வகையில் குறிக்கத்தக்கவர்கள் ஆவர்.

அடசிவயல் கிராமத்தைச் சார்ந்த தேசியவாதிகள்

அடசிவயல் என்ற ஊரைச் சார்ந்த தேசியவாதிகள் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
• கு. மாயழகு சேர்வை
• சிறுமடை
• முத்தையா சேர்வை
என்போர் இவ்வகையில் அறியத்தக்கவர்கள் ஆவர்.

கொல்லங்குடி

சிவகங்கைக்கு அருகில் உள்ள கொல்லங்குடி சார்ந்த தேசப்பற்றாளர்களும் இப்போரில் கலந்து கொண்டனர்.
1. பி. ராமசாமி சேர்வை
2. சுப்பையா அம்பலம்
3. தச்சவயல்-வீ. முத்தன்
4. வெங்களுர்-வி. ராமசாமி, வி. வீரப்பன்
5. பரம்பக்குடி –சுப்பிரமணியன். பெ. காளிமுத்து சேர்வை
6. காரைக்குடி –நா.அழகர்சாமி அம்பலம்
என்போர் இவ்வகையில் அறியப்பெறுகின்றனர்.

எழுவங்கோட்டை

திருவாடானைப் புரட்சியில் எழுவங்கோட்டையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
1. திரு. ராமசாமி அம்பலம்
2. செல்லையா
3. ஆறுமுகம்
ஆகியோர்கள் இவ்வகையில் எண்ணத்தக்கவர்கள் ஆவர்.

ஆக மொத்தத்தில் திருவாடானைப் புரட்சி என்பது தேவகோட்டையிலிருந்து திருவாடானை வரை சுற்றியிருந்த அனைத்து கிராமங்களில் வாழ்ந்த தேச பக்தர்களின் தியாகத்தால் நிறைவேறியது என்பது எண்ணத்தக்கது.அவர்களின் கூட்டமைப்பு பின்வரும் நிலையில் கட்டமைக்கப் பெற்றிருந்தது.

புரட்சித் தலைவர்
பால பாரதி சர்தார் பொ. செல்லத்துரை

துணைத் தலைவர்கள்
• செ. முனியப்பதேவர்
• சுப. சிவஞான தேவர்
• மு. வேதத்தேவர்
• தொண்டர் முத்தையா
• பொ. சின்னத்துரை

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட போரட்டவீரர்கள்
• செ. முனியப்ப தேவர்
• சுப. சிவஞான தேவர்
• முத்திருளப்பன் சேர்வை
• குண்டுக் காயமடைந்தவர்கள்
• பாலையப்ப தேவர்-பனைக்குளம்
• கருப்பன் ஹரிஜன்-ஆந்தக்குடி

சிறைப்பட்டோர்
• எஸ் ராமகிருஷ்ணன் தேவர் -வலமாவூர்
• தலைமறைவாக வாழ்ந்தோர்
• பொ. செல்லத்துரை-திருவேகம்பத்தூர்
• வெ. சொக்கலிங்கம் செட்டியார்-குமாரவேலூர்

1921 -1942 வரை புரட்சி காரணமாக தண்டனைப்பெற்றும் , விசாரணைக் கைதிகளாகவும் சிறைப்பட்டோர்.

கல்லூர்

• பெ. அழகர் நாடார்-
• உ. மாரிமுத்து நாடார்-
• காயம்பு
• சுப்பைய்யா
• மாரிமுத்து பண்டிதர்

திருவாடானை

• எஸ். சண்முகபிள்ளை
• கே. ஆவுடையபிள்ளை
• கே. ராமசாமி பிள்ளை
• சி. முத்து தேவர்
• எம் மாரிமுத்து
• ஆர் ராமன் ஆசாரி
• எம் முனியாண்டி தேவர்
• வி. முத்துக்காமாட்சி பிள்ளை
• மா. முத்தையா பிள்ளை
• கே. காளிமுத்து
• நாகசாமி பிள்ளை
• கதிரேசன்
• வேலாயுதம் பிள்ளை
• காளி, அழகி ஆகியோர் மகன் பூச்சி

பண்ணவயல் (திருவாடானை)

• ஏ. முனியன்
• கே. முத்து
• சி. அழகன்
• கே. பிடாரன்
• உ. கருப்பன்
• கே. முத்து
• ஆ. மங்கான்
• கா. பூச்சி
• உ. சோனையன்
• து. மங்காளை
• கே. குப்புசாமி
• அப்பாவுக்கோன்
• ரா. சின்னப்பயல்
• தி.குமரன்
• கா. வெள்ளையன்
• வேலான்
• ந. வெள்ளையன்
• சுப்பம்மாள்
• ராமுக்கோன்
• ரெத்தினக்கோன்
• நாகன்
• சின்னக்குடும்பன்
• வீரன்
• சின்னப்பன்
• சின்னக் கருப்பன்
• வெள்ளையன்
• மங்கான்
என்ற நிலையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

திருவாடானை பகுதி சார்ந்த பழங்குடியினரும் திருவாடானை சிறை உடைப்புப் போரட்டத்தில் கலந்து கொண்டு, தன் இன்னுயிர் இழந்தனர். அவர்கள் பற்றிய குறிப்பு கீற்று இணைய இதழில் கிடைக்கிறது.

1888 ல் பிறந்த ஆறுமுககுறவனார், இவர் தந்தையின் பெயர் குப்பையாண்டி குறவனார், இராமநாதபுரம் திருவாடனைப் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்பட்டதால் அவசரச் சட்டம் 6-வது பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டும் இபிகோ 147 – வது பிரிவு மற்றும் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (38)5 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு. மதுரை மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வீர மரணம் அடைந்தார்.

திருவாடனை அதே புரட்சியில் பங்கு கொண்ட முனியாண்டி குறவனாரின் மகன் காளிமுத்து குறவனார் 1915 யில் பிறந்த இவர் துப்பாக்கி காயங்களுடன் இபிகோ 147 வது பிரிவு மற்றும் இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

கண்ணப்பகுறவனார் மகன் கொட்டயகுறவனார் 1906 ஆம் ஆண்டு பிறந்த இவர். சிறு வயதிலிருந்து சுதந்திர வேட்கையை உயிர்மூச்சாக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது திருவாடனையில் நடந்த கிளர்ச்சியில் தீவிரம் காட்டிய கொட்டயகுறவனார் மீது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து 7 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மற்றும் அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தும்.தூக்குதண்டனை பெற்றும் வீரமரணம் எய்தினார்.

உதயன் குறவனாரின் மகன் ரங்ககுறவனார் கிளர்ச்சி செய்த காரணத்தால் இபிகோ147 -வதுபிரிவின் கீழ் கைது செய்து 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை துப்பாக்கி காயங்களோடு மதுரை மத்தியச் சிறையில் தண்டனை அனுபவிக்கப்பட்டு. தூக்கலிடப்பட்டார்.

இவ்வாறு இந்திய தேச விடுதலை என்பது பல்லோரின் உயிர் துறப்பால் கிடைத்த பெரு வெற்றியாகும். இப்போரட்டத்திற்குச் சார்பாக நீதி மன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

நீதிமன்ற விசாரணை

தேவக்கோட்டை, திருவாடானை பகுதிகளில் 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் பங்கு எடுத்துக்கொண்ட பெண்களையும் ஆண்களையும் போலீசார் கொடுமைப்படுத்தியதை கண்டித்து 1943- பாரத தேவி என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் என். இராமரெத்தினம் பூட்டை உடையுங்கள் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினார். அது ஆட்சேபகரமானது என்று கூறி ஆசிரியர் இராமரெத்தினத்தையும் பதிப்பு ஆசிரியர் எஸ். எ. சாமி ஆகியோர் மீது; 124 எண் பிரிவின் படி போலீசார் வழக்கு தொடந்தனர். இவ்வழக்கு சென்னை பிரதம மாகாண மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தது.

பிரபல வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் பாரததேவி பத்திரிக்கைக்கும் என். இராமரெத்தினத்திற்கும் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் திருவாடனை பகுதியில் பாதிக்கபட்ட பெண்களும் ஆண்களும் சாட்சி கூறினார்கள் விசாரணை முடிவில் இராமரெத்தினம் எஸ்.எ. சாமி இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

மற்றொரு நீதி மன்ற வழக்கு;

தேவக்கோட்டை, திருவாடானை தியாகிகளின வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்தது. தொண்டர் முத்தையா , சின்னதுரை தேவர் உள்பட 142 பேர் மீது வழக்கு! தொடர்ந்து 129 பேர்களை கைது செய்யமுடியவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் மதுரையில் 9 மாதம் ரிமெண்ட் கைதிகளாக இருந்தனர். மதுரை நீதிமன்றத்தில் 6 மாதங்கள் விசாரணை நடைபெற்றது.

2வது எதிரி தொண்டர் முத்தையாவிற்கு நூறுஆண்டுகடுங்காவல் தண்டனை, 63 பேருக்கு ஏழு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் கருங்காவல் தண்டனை. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான வலமாவூர் ராமகிருஷ்ணதேவர் மீண்டும் கைது செய்யபட்டு பாதுகாப்பு கைதியாக சிறை வைக்கப்பட்டார். சின்ன அண்ணாமலை, டி.எஸ். இராமநாதன் தங்கள் பொருட்டு உறவினர்கள் துன்புறுத்தபடுவதை கேள்விபட்டு இருவரும் காசியிலிருந்து வந்த போலீஸில் சரண் அடைந்தனர். போலீஸார் தனியாக இருவர்மீதும் வழக்க தொடர்ந்தனர். மதுரை செசன்ஸ்கோர்டில் நடந்த அந்த வழக்கில் சின்ன அண்ணாமலைக்கும், டி.எஸ். இராமநாதனுக்கும் சென்னை வழக்கறிஞர் கே. பாஷ்யம் ஆஜராகி வாதாடினார். வழக்கறிஞர் கே. பாஷ்யம் திருவாடானை சப்-ஜெயிலில் இருந்து சின்ன அண்ணாமலையும், டி.எஸ். இராமநாதனும் தாமாக முயற்சி செய்து தப்பி ஓடவில்லை. ஜெயில் கதவை மக்கள் தான் உடைத்தனர். பின்னர் ஜெயிலுக்கு மக்கள் தீ வைத்து கொளுத்தினர்.

ஜெயிலில் இருந்த சின்ன அண்ணாமலை, டி.எஸ். இராமநாதன் மற்றவர்கள் தப்பி ஓடாமல் ஜெயிலிலே இருந்தால் தீயில்வெந்து சாம்பலாகி இருப்பார்கள். அந்த நிலையில் யாராக இருந்தாலும் தப்பி ஓடத்தானே செய்திருப்பார்கள். அது எப்படி குற்றமாகும் என்று கேட்ட வாதாடினார். வாதத்தை மறுக்க இயலாத நீதிபதி இருவரையும் விடுதலை செய்தார். இந்திய தேசிய அரசு அமைந்த பின்பு பாலபாரதி செல்லத்துரை மீதிருந்த வாரண்டு நீக்கபட்டது. பின்பு தமிழகம் திரும்பினார் அந்த புரட்சி தலைவர்.

திருவாடானை –தேவக்கோட்டைகாக வழக்கு

இரண்டாம் பகுதியில் (விசாரணை ஆரம்பம் பூர்வாங்க ஆட்சேபணைக்கு சர்க்கார் தரப்பு பதில் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சாட்சியம் (செய்தி தினமணி)

மதுரை நவம்பர் 2 தேவகோட்டையில் சென்ற 17.8.42 ல் நடைபெற்ற கலவரத்தையொட்டி தேவக்கோட்டை போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தேவக்கோட்டை போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தேவகோட்டை ராமன் அம்பலம் முதலான 112 மீதான பேர்கள் மீதுள்ள இரண்டாவது பகுதி வழக்கு விசாரணை நேற்று மதுரையில் உள்ள செஷன்ஸ் ஸ்பெஷல் கோர்ட் ஜட்ஜ் ராவ் சாகிப். பி.எம். ஸ்ரீ நிவாச ஐயங்கார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.

எதிரிகளும் 27 பேர்கள் தலைமறைவாக இருந்ததில் முத்தையா சேர்வை, கே. ஆர். எஸ்.முத்து செல்வம், எஸ்.டி. நடராஜன், கருப்பையா சேர்வை ஆகிய ஐவர் நேற்று கோர்ட்டில் சரணடைந்தனர். வாதி தரப்பு வழக்கின் சாரமாவது எதிரிகள் சென்ற 17.8.42 தேதி முற்பகல் பத்துமுப்பது மணி சுமாருக்கு சம்பந்தமாக பிரிட்டிஸ் இந்தியாவில் ஸ்தாபிக்கபட்டுள்ள சர்க்காரை பயமுறுத்தல். பலவந்தமாக கவிழ்த்தல், தேவகோட்டை சிவில்கோர்டுக்களில் வேலைகளுக்க விகனம் செய்தல் ஆகியவைகளை பொது நோக்கமாக கொண்டு கம்பு, அரிவாள், கல், வேல்கம்பு, வில் அம்பு முதலிய ஆயுதபாணிகளாய் தேவகோட்டை ஆர்ச்சுக்கு அருகே சட்ட விரோதமான கூட்டமாக சேர்ந்தனர்.

மேற்படி பொதுநோக்கத்தின் நிறைவேற்றுவதற்காக 3000 முதல் 4000 பேர்களுடன் எதிரிகள் கலகம் செய்தும் கோரட் கட்டித்திற்கு தீவைத்து எரித்தும் மற்றும் நிகழ்த்திய பல்வேறு காரியங்களில் கோர்ட் கட்டிடம் மீது கற்களை வீசியும் கட்டிடத்திற்குள் அக்கிரமாமாக பிரவேசித்தும் அதிலிருந்த மரச்சாமான்களையும் தஸ்தாவேர்க்களையும் அகற்றியும் அவைகளை வீதிகளில் வீசி நெருப்பு வைத்தும் கலகத்தை ஒடுக்கும் வேலையில் இருந்த போலீஸ் உத்யோகஸ்தர்கள் மீது கற்களை எறிந்தும், சர்க்கார் ஊழியர்கள் என்னும் முறையில் வேலை பார்த்து வந்த 104 நெ. 438 நெ. போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு காயங்களை உண்டு பண்ணியும் இதர போலீஸ் உத்யோகஸ்தர்களை தாக்கியும் சட்டபூர்வமாக கலையுமாறு உத்தரவிட்டும் சட்டவிரோதமான கூட்ட உறுப்பினர்களாயிருக்க முரண்டும் செய்தது சில வகையாகும்.

9.8.42 ல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யபட்டதன் விளைவாக ஏற்பட்ட ராஜீய நிலையையும். அமைதியின்மையும் அனுகிதமாக எதிரிகளை கொண்டு மேற்கொண்ட குற்றங்களையும் புரிந்தனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளபட்டதும் இந்த விஷேச கோர்ட் நியமனத்தை பற்றியும் வழக்கு விசாரிப்பதற்காக அதிகாரம் உண்டா இல்லையா என்பதை பற்றியும் பூர்வாங்கமாக ஒன்றை 69 வது எதரி எஸ். திருநாவுக்கரசு செட்டியார், சென்னை அட்வகேட் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுப்பி விவாதித்தார். இந்த விஷேச கோர்ட்டை நியமிக்க பிறப்பித்துள்ள அறிக்கையாவது சடட் வரம்பிற்கு மீறினதும் சட்டவிரோதமானதென்றும் அவர் இந்த ஆட்சேபணைக்கு சர்க்கார் வக்கீல் ஸ்ரீ . எம் துரைச்சாமி பிள்ளை பதிலளித்தபின் வழக்கு விசாரணை ஆரம்பமாயிற்று

போக்குவரத்துதடை

படிக்கல் முதலியவைகளை கொண்டு ரஸ்தா போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. தென்பக்கம் கீழே ரஸ்தாவில் பள்ளம் வெட்டப்பட்டது. கூட்டத்தினர் எங்களை பயமுறுத்தி வைத்தனர். அவ்விடத்தை விட்டு நகர எங்களால் சாத்தியமில்லாமலிருந்தது. கோர்ட் காம்பவுண்டற்கும் சென்ற கூட்டத்தில் ஒரு பகுதியினர் மரச்சாமான்கள், பேப்பர்கள், ரிகார்டுகள் ஆகியவற்றை வெளியில் போட்டனர்.

சிலர் காம்பவுண்டு சுவர் மீது ஏறினர். சிலர் அவர்களுக்கு ஒத்தாசை செய்தனர். யார் யார் ஏறினர் என்பது எனக்கு தெரியாது. எஸ்.பி. நடராஜன் திருநாவுக்கரசு செட்டியார் மற்றம் சிலர் ஒத்தாசை புரிந்தவர்களாவர்.

துப்பாக்கி பிரயோகம்

கோரட்டில் நுழைவதை தடுக்க ரிசர்வ் போலீஸார் சிலரை நான் முன்கூட்டி அனுப்பி சுட உத்தரவிட்டேன். சிலர் விழுந்தது தெரிந்தது. கூட்டத்தினர் ஓடாமலிருக்கவே அவர்கள் திரும்பினர். விழுந்த நபர்களை கூட்டத்தினர் அப்புறப்படுத்தினர். கோர்ட்டிலிருந்து வெளியில் எறியபட்ட சாமான்களை கூட்டத்தினர் நடுரோட்டில் குவித்து எரித்தனர். சாமான்களை சேகரித்தவர்கள் திருநாவுக்கரசு, நடராஜனுமாவார். தீ கட்டிடத்தை பிடித்துவிட்டது. மேலும் கூட்டம் வரவர ஜாஸ்தியாகிவிட்டது மேலும் நம்மை மிரட்டி கேலியும் பண்ணியது. கல்லெறிந்து சிலர் முன்னேறி வந்தனர்.

அவர்களை பார்த்து சுடபட்டது. சிலர் விழுந்தனர். பின்னர் கூட்டம் ஏறிவரவில்லை.இத்தகைய நிலை பகல் 1.30 மணிவரை இருந்து வந்தது. அப்பால் வடபுறாக சுடும்சத்தம் கேட்டது. போலீஸ் படையினர் தனது பொது கூட்டத்தை கலைப்பதற்காக சுடுவதாக நாங்கள் அனுமானித்துக்கொண்டோம்”

இவ்வாறு நீதி மன்றத்தில் நடந்த விசாரணை நாளேடுகளில் பிரசுரமானது. இவ்வாறு திருவாடானையில் நடைபெற்ற புரட்சி இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இருப்பினும் இந்தப் போராட்டம் பற்றிய சரியாக தகவல்கள் பொதுமக்களிடம் சென்று சேரவில்லை. மேலும் வரலாற்று ஆசிரியர்களும் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகளைக் கூட தரவில்லை. எஸ்.எம் கமால் இந்நிகழ்ச்சி பற்றி தன்னுடைய இராமநாதபுர மாவட்டக் குறிப்புகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுகள்

தேவகோட்டை சின்ன அண்ணாமலை, இராமநாதன் ஆகியோர்கள் திருவாடானை சிறையில் அடைக்கப்பெற்றதன் வாயிலாக எழுந்த எதிர்ப்பு பெரும் போராட்டமாக பாலபாரதி செல்லையா என்பவரால் வடிவமைக்கப்பெற்றது. அவரின் தலைமையின் கீழ் பலரும் திருவாடானை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுமார் இரண்டாயிரம் பேர் திருவேகம்பத்து வழியாக திருவாடானையை அடைந்தனர். தொண்டியில் இருந்து. இன்னும் சிலரும் அவர்களுடன் இணைந்து கொள்ள, இப்போராட்டம் பெரும் போராட்டம் ஆகியது.

சிறை உடைக்கப்பெற்று சின்ன அண்ணாமலை இராமநாதன் ஆகியோர் விடுவிக்கப்பெற்றனர். யுனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, இந்திய தேசியக் கொடி ஏற்றப்பெற்று விடுதலை கொண்டாடப் பெற்றது.

இதன் பின் ஆங்கிலேய அதிகாரிகளின் அடக்கு முறை அரங்கேறியது. பெண்கள், ஆண்கள் குழந்தைகள் அவதிப்பட்டனர். பலர் சிறைதண்டனை பெற்றனர். பலர் மரணதண்டனை பெற்றனர். பலர் தூக்கு தண்டனை பெற்றனர்.
இவ்வாறு திருவாடானைப் போராட்டம் வரலாற்றின் மிக முக்கியமான போராட்டமாக விளங்கியது. இதனை இன்னும் பதிவு செய்து பலருக்கும் இந்தச்செய்தியை பரப்பவேண்டும்.

முடிவுகள்

திருவாடானை விடுதலைப் போராட்டமும் தேசியவாதிகளும் என்ற தலைப்பிலான இவ்வாய்வின் வழியாகக் கண்டறியப் பெற்ற முடிவுகள் பின்வருமாறு.

இந்திய தேச விடுதலைக்குத் திருவாடானை வட்டாரம் சார்ந்த பல தேசத்தொண்டர்கள் செயலாற்றியுள்ளனர். தேவகோட்டையைச் சார்ந்த திருவாளர்கள் சின்ன அண்ணாமலை, இராமநாதன் ஆகியோர் திருவாடானைச் சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக அவர்களை மீட்கும் நிலையில் மிகப்பெரும் போராட்டம் திருவாடானைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து காரைக்குடி.,தேவகோட்டை பகுதிகளில் சுதந்திரத்திற்கான விடுதலைப்போர் நடைபெற்று வந்துகொண்டே இருந்தது. ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற பல குறிக்கத்தக்க விடுதலைப் போராட்டங்களில் தேசத் தொண்டர்கள் கலந்து கொண்டு இந்திய விடுதலைக்கு வழி வகுத்தனர்.

காந்தியாரின் வருகை தேவகோட்டையில் நிகழ்ந்ததை ஒட்டி மிகப்பெரும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முழுவீச்சில் இந்தியாவில் அரங்கேற்றம் ஆனது.

இவ்வியக்கம் தேவகோட்டையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சின்ன அண்ணாமலை, இராமநாதன் ஆகியோர் சிறையில்அடைக்கப்பட அதனை உடைக்கும் வண்ணம் பெரும் அறப்போர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லையா தலைமையில் திட்டமிடப்பெற்றது.

ஏறக்குறைய மூவாயிரம் பேர் கலந்து கொண்டு இப்போராட்டத்தில் சிறை உடைக்கப்பெற்று சின்ன அண்ணாமலை, இராமநாதன் ஆகியோர் மக்களால் விடுதலை செய்யப்பெற்றனர். அவர்கள் ஊர்வலமாக வந்து வெற்றிப் பெருமிதம் அடைந்தனர்.

இப்போராட்டத்தில் திருவாடானை வட்டாரம் சார்ந்த திருமணவயல், திருவேகம்பத்தூர், பண்ணைவயல், திருவாடானை, போன்ற பல ஊரினர் கலந்து கொண்டனர். இவர்கள சிறை, மரணதண்டனை, ஆயுள்தண்டனை போன்றவற்றை அனுபவித்தனர். பழங்குடியின மக்களும் இப்போராட்டங்களில் கலந்து கொண்டு பல தண்டனைகளைப் பெற்றனர்.

பெண்கள் தங்கள் மானத்தையும், பாலியல் வன்கொடுமையையும் அனுபவித்தனர. இப்போராட்டங்கள் குறித்து நீதிமன்றங்களிலும் விசாரணைகள் நடைபெற்றன.

இவ்வாறு பெரிய அளவில் எழுச்சியை ஏற்படுத்திய இப்போராட்டம் தக்க அளவில் வரலாற்று அறிஞர்களாலும், இந்திய அரசாலும் கண்டு கொள்ளப்பட வேண்டும் என்பது தேவையாகும்.


ம. முத்து பாலகிருஷ்ணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருவாடானை வட்டார விடுதலைப் போராட்டங்களும், அதன் விளைவுகளும் – இறுதி பகுதி”

அதிகம் படித்தது