மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தோழமையுடன் தோழர் பெரியார்

தேமொழி

Mar 11, 2023

Siragu Naan kanda periyar book

‘நான் கண்ட பெரியார்’ என்ற தலைப்பில் கோவை அ. அய்யாமுத்து எழுதிய நூல் சென்னையின் தமிழகம் பதிப்பகத்தின் நண்பர் வரிசை -1 என்ற பிரிவில், முதற்பதிப்பாக 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 52 பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய நூல், அப்பொழுது அதன் விலை 75 நயா பைசா.

பெரியார் ஈ.வெ.ரா. வின் 44 வயது முதற்கொண்டு, அதாவது 1923 ஆம் ஆண்டு தொடங்கி ஒரு பத்தாண்டுகளுக்குப் பெரியார் ஈ. வெ. ரா. வும், அய்யாமுத்துவும் மிகவும் நெருங்கிப் பழகிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். 1924ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்திலும் பெரியார் ஈ.வெ.ரா. வும் அய்யாமுத்துவும் இணைந்து போராடியுள்ளார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர்ச்சிக்கும் கதர் விற்பனைக்கும் இணைந்த வகையில் இருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். அப்பொழுது பெரியார் தமிழ்நாடு கதர் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்த காலம். இருவரும் கதர் விற்பனைக்காகப் பல ஊர்களுக்கு ஒன்றாகவே பயணம் செய்துள்ளார்கள். கோவை அ. அய்யாமுத்து அதனால் கதர் அய்யாமுத்து என்றும் அறியப்பட்டார். அய்யாமுத்து பெரியாருடன் இருந்தது போன்றே இராஜாஜி, காந்தி ஆகியோருடனும் நெருக்கமான உறவுடன் இருந்தார். மனதில் தோன்றுவதை மறைக்காமல், நேரடியாகப் பேசும் துணிவு கொண்டவர். வாய்மை, நேர்மை, உண்மை போன்ற நற்பண்புகளின் உறைவிடம் என்று பாராட்டப்பட்டவர்.

பிறகு 1932 ஆண்டு போராட்டக் காலத்தில் கைதாகி அய்யாமுத்து சிறை செல்கிறார். அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு அவர்களுக்குள் தொடர்பு விட்டுப் போயிற்று. தன்னால் என்றுமே மறக்கமுடியாத நண்பர் என்று பெரியார் ஈ.வெ.ராமசாமி குறித்துக் கூறும் அய்யாமுத்து, மீண்டும் 1957 இல் அவரை சந்தித்த பிறகு, தங்கள் நட்பைக் குறித்து நினைவுகளைப் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். அப்பொழுது பெரியாருக்கு 77 வயது. தான் பெரியாரைத் தாக்கிப் பேசியது போல எவரையும் அந்த அளவு தாக்கிப் பேசியதில்லை என்கிறார் அய்யாமுத்து. இருந்தும் இருவருக்கம் இடையே அன்பும் நட்பும் தொடர்ந்துள்ளது. தன்னைத் தாக்கிப் பேசுபவர்களுடனும் தொடர்ந்து நட்புடன் இருப்பது பெரியாரின் இயல்புதான் என்பது பெரியார் குறித்து அறிந்தவர்களுக்குத் தெரியும்.

1957 இல் நிகழ்ந்த அந்த சந்திப்பின் பொழுது தமிழ்நாட்டில் காமராஜர் முதல்வராக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். காமராஜ் காங்கிரசு கக்கன் என்று அவர்கள் உரையாடல் தொடர்கிறது. அந்த உரையாடலில் தான் காமராஜரைச் சந்திப்பதோ கடிதப் போக்குவரத்து வைத்திருப்பதோ இல்லை என்றும், வெகு காலமாக இருந்த இராஜாஜியின் ஆட்சியை நீக்கி ஒரு தமிழர் என்ற வகையில் காமராஜர் ஆட்சிக்கு வந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அதற்காகவே அவருக்குத் தேர்தல் பிரச்சாரங்கள் செய்ததாகவும் பெரியார் கூறுகிறார்(பக்கம் -5). ஆனால் இராஜாஜியைக் கவிழ்த்ததில் காமராஜரைவிட தனக்குப் பெரும்பங்கு உண்டு என்று அய்யாமுத்து கூறுகிறார். 1940 மற்றும் 1950 காங்கிரசு தலைவர் தேர்தல்களில் தலைவர் பதவிக்கு இராஜாஜி விரும்பிய வேட்பாளர்களுக்கு எதிராக இயங்கி, காமராஜர் தலைவர் பதவியைப் பெறத்தான் உறுதுணையாக இருந்ததாகக் கூறும் அய்யாமுத்து, அப்பதவிக்கு ‘ஆமாம் சாமி’ போடும் பண்புள்ள ஒருவரைத்தான் தலைவராக்க இராஜாஜி விரும்புவார் என்கிறார். ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை ஆச்சாரியார் சொன்னதற்குத் தலையாட்டிக் கொண்டிருந்ததால்தான் என்னை அப்பொழுது காங்கிரசு கட்சியின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் வைத்திருந்தார்கள் என்று கூறி பெரியார் கலகல வென்று சிரித்திருக்கிறார்.

நூலில் பலமுறை பெரியாரின் மிதமிஞ்சிய சிக்கனத்தையும், எவரையும் நம்பாத மனப்பான்மையையும் குறிப்பிட்டவாறே உள்ளார் அய்யாமுத்து. பெரியாருடன் கதர் விற்ற காலத்திலேயே 500 ரூபாய்க்குக் கதர் கடனாகத் தரச் சொல்லிக் கேட்டபொழுது பெரியார் மறுத்துள்ளார். புரோ நோட்டு எழுதித் தருவதாகச் சொன்னபொழுதும் பெரியார் மசியவில்லை. இறுதியில் கையில் ரொக்கம் கொடுத்த பிறகே இவருக்குக் கதர் கொடுத்துள்ளார் பெரியார். பெரியாரின் தாய், தந்தை, அண்ணன், மனைவி நாகம்மாள், மணியம்மையார், பெரியாரின் நண்பர்கள் இராஜாஜி, ஜி.டி.நாயுடு ஆகியோர் குறித்த தகவல்களும் நூலில் ஆங்காங்கே இடம் பெறுகிறது.

சென்ற நூற்றாண்டில் நடந்த அரசியல் போராட்டங்கள், வரலாற்று நிகழ்வுகள், அவற்றில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்கள் பெரியார், இராஜாஜி போன்றவர்களின் நடவடிக்கைகளையும், அவற்றுக்கான காரணங்கள் என்று பலவற்றை அய்யாமுத்து தனது பார்வையில் பதிவு செய்துள்ளார். நிகழ்வுகள் பல நாம் அறிந்தவையாக இருந்தாலும் அதை ஒட்டி அவர் வழங்கும் தகவல்கள் சில பெரும்பாலும் பொதுவெளியில் பரவலாக அறியப்படாதவை. குறிப்பாக, அது போன்று பெரியாருக்கும் அவர் தோழர் அய்யாமுத்து அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த கவனத்தைக் கவரும் நிகழ்ச்சிகள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.

வைக்கம் போராட்டக் காலத்தில் (1924) பெரியார், கோவை அ. அய்யாமுத்து, சிட்டேடத்து சங்குப்பிள்ளை, கோட்டார் டாக்டர் எம்பெருமாள் நாயுடு ஆகியோர் திருவாங்கூர் முழுவதும் பல இடங்களுக்குச் சேர்ந்தே சென்று பரப்புரை செய்துள்ளார்கள். அப்பொழுது மோட்டாரில் பயணம் செய்யும்பொழுது பெரியார் கையில் எப்பொழுதும் பாரதியாரின் கவிதை நூல் இருக்குமாம். வந்தேமாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு, முரசுப்பாட்டு ஆகிய பாடல்களைப் பெரியார் உறக்கப் பாடிக் கொண்டே இருப்பார் என்று தங்களின் வைக்கம் போராட்ட காலத்தை நினைவு கூர்கிறார் கோவை அய்யாமுத்து (அப்பொழுது பாரதி மறைந்து இரண்டாண்டுகள் கடந்திருந்தது).

சேர்மாதேவி பள்ளியில் மாணவர்களிடம் பேதம் காட்டி பார்ப்பன மாணவர்களையும், பார்ப்பனர் அல்லாத மாணவர்களையும் பிரித்து உணவு வழங்கியதில் பாகுபாடு காட்டிய நிகழ்ச்சி அதைத் தொடர்ந்த சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் பிறவியிலே உயர்வு தாழ்வு இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. உடனே காங்கிரசில் தனக்கு ஆதரவாக இருந்த பார்ப்பனர்களையும் மற்றவர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு இராஜாஜி வெளியேறிவிட்டதாகவும், பின்னர் 1942 இல் மறுபடியும் விலகியதாகவும், அவ்வாறு உள்ளே வெளியே என்ற போக்கைக் கடைப்பிடித்த இராஜாஜி பின்னர் காமராஜர் கை தமிழகத்தில் ஓங்கிய பின்னர் முற்றிலும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.

பெரியார் காங்கிரசில் இருந்தபொழுதும் சரி, பின்னர் காங்கிரசின் மேல் நம்பிக்கை இழந்து அதிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கமும், குடி அரசு இதழ் தொடங்கி சமநீதி கொள்கைக்காக முழுமூச்சுடன் செயல்பட்ட பொழுதும் சரி தன்னலம் பாராது, கடினமான உழைப்பை மேற்கொள்பவராக இருந்தார் எனப் பாராட்டும் அய்யாமுத்து 50 ஆண்டுகளில் செய்யக்கூடிய பணியை 5 ஆண்டுகளில் சாதித்துக் காட்டி சாதி அமைப்பை ஆட்டம் காணச் செய்ததாகப் பெரியார் ஈ.வெ.ரா.வைப் பாராட்டுகிறார்.

“கிடைத்ததை உண்டு, சுகத்தைத் துறந்து, போகம் மறந்து, அயர்வறியாது அல்லும் பகலும் காங்கிரசில் உழைத்தது போலவே, ‘குடி அரசு’ தொடங்கி சுயமரியாதைப் பிரசாரம் செய்த காலத்தும் நாயக்கர், அன்பும், அறிவும், ஆவேச உணர்வும். பொங்கிட உழைத்தார் என்பது மிகையாகாது. ஐம்பதாண்டுகளில் செயற்கரிய காரியத்தை அவர் ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்தது கண்டு வியப்படையாதவர் இலர். தமிழ் நாடெங்கும் ஒரே கிளர்ச்சி, ஒரே ஊக்கப் பிரவாகம். சாதிகள் பெயர்ந்தன. சடங்குகள் சரிந்தன. பார்ப்பனீயக் கோட்டைகள் கலகலத்தன. பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று கவிச்சக்கரவர்த்தி சுப்ரமணிய பாரதியார் பாடியதை நாயக்கர் மெய்ப்பித்துக் காட்டினார். மட்டுமரியாதையின்றி மற்றவரைப் பேசும் பார்ப்பனரின் நாத்துடுக்கை நாயக்கர் துண்டித்தெறிந்தார்.””(பக்கம் – 23)

என்று குறிப்பிடுகிறார். சுயமரியாதை இயக்கத்திற்கு வழிகாட்டி என்று சொல்லும் அளவிற்கு கோவை அய்யாமுத்து உழைத்ததாகப் பெரியார் அய்யாமுத்துவைப் பாராட்டி உள்ளார். கோவை அ. அய்யாமுத்து எழுதிய ‘மேயோ கூற்று மெய்யா – பொய்யா?’(1935), ‘பஞ்சமா பாதகங்கள்’(1942) ஆகிய நூல்கள் பெரியாரின் குடி அரசு பதிப்பக வெளியீடுகளாகவும் வெளியிடப்பட்டன. இவை குடி அரசு இதழ்களில் கோவை அய்யாமுத்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். எவரையுமே நம்பாதவர் என்று நையாண்டியாக அய்யாமுத்துவால் நூலில் பலமுறைக் குறிப்பிடப்படும் பெரியார், தனது குடி அரசு பத்திரிக்கையை இழப்பின் காரணமாக நடத்தமுடியாமல் போன காலத்தில் அய்யாமுத்துவை மிகவும் நம்பி குடி அரசு இதழைத் தொடர்ந்து நடத்துமாறு அவரிடம் ஒப்படைத்தார் என்பது ஒரு நகைமுரண். அவர் பொறுப்பேற்காவிட்டால் இதழை நிறுத்திவிடப் போவதாகவும் கூறியுள்ளார். பெரியார் நிர்வாகத்தில் எந்த வகையிலும் தலையிடக்கூடாது, பத்திரிக்கை அலுவலகம் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு மாற்றப்படும், ஊழியர்களைத் தேர்வு செய்வது, அவர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பது எல்லாம் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும், பெரியாருக்கு மாதம் 500 ரூபாய் கொடுக்கப்படும் என்று அய்யாமுத்து முன்வைத்த பல விதிகளை வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு குடி அரசு பத்திரிக்கை பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார் பெரியார்.

அய்யாமுத்து பொறுப்பில் சென்னையில் இருந்து வெளியான குடி அரசு பத்திரிக்கை மிக நல்ல முறையில் விற்பனையில் அதிகரிக்கிறது. ஒரு முறை சென்னை வரும் பெரியார் மதிய உணவு சாப்பிடுகையில் அய்யாமுத்து தனது தகுதிக்கு மீறிய வகையில் உணவு உட்கொள்கிறார் என்று பெரியார் உணவருந்திக் கொண்டே சொல்கிறார். இதைத் தனது நேர்மையில் குறை காணும் செயல் என்று வெகுண்டு அலுவலகச் சாவியை பெரியார் மீது விட்டெறிந்துவிட்டு அன்றே ஊருக்கு தன் குடும்பத்துடன் வண்டியேறி விடுகிறார் அய்யாமுத்து. பெரியாரும் அவர் நண்பர்களும் தொடர்வண்டி நிலையம் வரை வந்து சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைகிறது. ஆனால் பிற்பாடு தனது இச்செய்கை சரியல்ல என்று வருந்தியதாகவும் குறிப்பிடுகிறார் அய்யாமுத்து. இருப்பினும் இதைப் பெரியார் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மீண்டும் பின்னொருமுறை மாநாட்டின் நுழைவுச் சீட்டின் விற்பனைப் பொறுப்பை அய்யாமுத்துவை நம்பியே பெரியார் ஒப்படைத்துள்ளார். பொதுவாகவே நூலில் இருக்கும் தகவலின் அடிப்படையில் அய்யாமுத்து பெரியாருடன் உள்ள நட்பின் உரிமையில் அவரை தான் பகடி செய்யலாம் என்று எண்ணுகிறார் என்பதையும், அதே முறையில் பெரியார் வேடிக்கையாகப் பேசி நடந்து கொள்வதை ஏற்கமுடியாத மனப்பான்மை கொண்டவராகவும், முன்கோபம் உள்ளவராகவும் இருப்பதை அவரது எழுத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சென்ற நூற்றாண்டின் சமூகநீதிக்குப் போராடிய தலைவர்கள் முன்னெடுத்த அரசியல் போராட்ட நிகழ்வுகள் நடந்த சூழ்நிலைகளையும், தனிப்பட்ட வாழ்வில் அவர்களின் செயல்பாடுகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் படிக்க சுவையான முறையில் கோவை அ. அய்யாமுத்து அவர்களால் எழுதப்பட்டுள்ளது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தோழமையுடன் தோழர் பெரியார்”

அதிகம் படித்தது