மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நகுலன் -புதுக்கவிதையில் தனித்த குரல்

இல. பிரகாசம்

Nov 4, 2017

Siragu nagulan1

தமிழ் நவீன இலக்கிய உலகில் கவிதையில் பெரிய நிகழ்வுகள் தொடங்கியிருந்த காலம் அது 1950முதல் 1970கள வரையிலான தொடக்க காலம். ந.பிச்சமூர்த்தி நிகழ்த்திக் கொண்டிருந்த சாதனைகள் பற்றி பேசத்தொடங்கிய காலம். சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழ் விமர்சனத்திற்காக தொடங்கப்பட்டாலும் தமிழில் நவீனத்தை முன்னெடுக்க ஒரு உத்தியை கையாண்டது. அது புதுக்கவிதையை வளர்தெடுப்பதென்று.

தமிழில் புதிய எழுத்தாளர்களை கவிஞர்களை ‘எழுத்து’இதழ் அறிமுகம் செய்தது. எழுத்து இதழ் 1960-61ம் ஆண்டுகளில் புதுக்கவிதைகளை வெளியிட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.. தருமு.சிவராமின் கவிதைகள் அவற்றில் குறிப்பிடத்தக்க கவனத்தை வாசர்களிடையே கொண்டிருந்தது. இதே காலகட்டத்தில் வல்லிக்கண்ணன், க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். இவற்றுக்கு மத்தியில் ஒரு புதிய குரல் ஒலிக்கத் தொடங்கியது. அக்குரல் மற்ற கவிஞர்களின் குரலின் தன்மையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அக்குரல் புரியாத புதிர்கள் என ஒன்றையும் மறைக்கவும் இல்லை. அதே சமயத்தில் எதையும் தனக்குச் சுயமாக ஒன்று இருப்பதாக எண்ணவும் இல்லை. அப்படியான குரல் ‘நகுலன்’என்ற நவீன சித்தர்.

பொதுவாக எல்லோரும் சித்தர்களைப் பற்றி இப்டிச் சொல்வதுண்டு ‘வெறும் புலம்பல்கள் தான் ஒன்றும் புரியாது’ என்று. ஆனால் ஒரு சித்தர் எப்போதும் ‘தான்’என்ற ஆணவ அலங்கார உடையை உரித்துவிட்டு வாழ்கிறவர்கள். தன்னை ஒழித்து வெளி நின்று அத்தனையையும் காண்கிறவர்கள். அவர்களது இலக்கியம் எப்போதும் தன் சுய வாழ்விலிருந்து வெளியே நின்று கொண்டு எல்லாவற்றையும் பார்ப்பது. அது போலவே புதுக்கவிதையில் தோன்றி நவீன சித்தர் மரபை ஒட்டிய வாழ்வை தனிமையிலிருந்து கொண்டு வாழ்ந்தவர் நகுலன்.

நகுலனின் கவிதைகள்:

நகுலன் அவரது கவிதைகள் அதிகம் வாசிக்கப்படவில்லை. ஆனால் அதிகம் பேசப்பட்ட ஒருவர். ஏன்?. ஏதனால்?. அப்படியென்ன அவரது கவிதைகள தனித்துவமிக்தாக இருக்கிறதா? என்று ஒருவர் கேட்பாரேயானால் அவர்களுக்காக,

      “தனியாக இருக்கத்

      தெரியாத -இயலாத

      ஒருவனும்

      ஒரு எழுத்தாளனாக

      இருக்க முடியாது”

நகுலன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தனிமையிலேயே கழித்தார். அதனுடைய வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தக் கவிதையை குறிப்பிடலாம். தனிமை அவருடைய வாழ்வில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவருடைய கடைசிக் கவிதை வரையிலும் நெடிய பயணத்தை காணமுடிகிறது.

      “யாருமில்லாத பிரதேசத்தில்

      என்ன நடந்து கொண்டிருக்கிறது?

      எல்லாம்.”

மேற்கண்ட கவிதையில் அவருடை தனிமையானது முற்றிலும் தான் வாழவிரும்பிய வாழ்வு வேறொன்று என்பதை அவர் எந்தவகையில் உணர்ந்தார்? என்று நமக்கு;த்தெரியவில்லை அல்லது உணர முடியாத ஒரு சித்தர் நிலையை முழுவதுமாக அடைய மேற்கொண்ட முயற்சியின் விளைவா? என்றும் நாம் உறுதியாக கூறவும் முடியாது.

கோட்-ஸ்டாண்ட் கவிதை:

தமிழில் புதுக்கவிதைக் கால கவிஞர்களில் சித்தர் என்று நகுலன் குறிப்பிடக் காரணம் அவர் எழுதிய ‘கோட்-ஸ்டாண்ட்’ என்ற கவிதையே அவரை அப்படிப் பார்க்கத் தூண்டியது. சித்தர் மரபு சார்ந்த எல்லா இலக்கியங்களிலும் அவர்களைக் காணமுடியாது. ஆனால் மனித வாழ்வின் அத்தனை துன்பங்களையும் இன்பங்களையும் புறந்தள்ளி வெறுமையானதுதான் இந்த ‘தான்’என்ற ஆணவ அலாங்கர உடை. அதனை அவர்கள் முற்றிலும் புறந்தள்ள சித்தத்தை மேற்கொண்டனர். அதை பிரதிபலிப்பது போலவே அமைந்திருக்கிறது நகுலனின் ‘கோட்-ஸ்டாண்ட்’கவிதை.

      “கண் பார்த்து

      மூளை சிந்தித்து

      மணம் அதையும் -இதையும்

      நினைத்து நினைத்து

      தேகத்தையே உரித்து

      கோட்- ஸ்டாண்டில்

      தொங்க விடுகிறான்”

மேற்கண்ட வரிகளே நகுலனை சித்தர் மரபை பின்பற்றிய கவிஞர் என்று கூறுவதற்கு பொருத்தமானதாக இருக்கும். அவரது வாழ்க்கையானது எத்தனை மிக ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்டிருந்தது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியாக எதைக் காட்டமுடியும்?. மேலும் அவரது வரிகள் கவிதைக்குள் ஏற்படுத்துகிற தாக்கம் மிக முக்கியமானது.

      “அவனை

      அது பரிதாபமாகப் பார்க்கிறது.”

சிலர் இப்போதும் கேட்கலாம் இது என்ன ஒன்றும் புரியாத ஒன்றும் விளங்காதது போல் இருக்கிறதே என்று. ஆம் அவரது கவிதைகள் பெரும்பாலும் உடனடியாக புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லை. என்றாலும் அதன் செறிவுத் தன்மை வாழ்வை பற்றிய கேள்விகளுக்கு விடை தேட முயல்கிறவர்களுக்கு நிச்சயம் இந்தவரிகள் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும்

      “நீ என்னை இப்படித்

      தூக்கி எறியலாமா?

      என்று”

மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிற போலவேதான் கவிதையும் தொடர்கிறது. எங்கேயாவது கோட்-ஸ்டாண்டில் தொங்கவிடப்பட்ட உடை உடுத்துகிறவனைப் பார்த்து கேள்வி கேட்குமா? என்று கேட்கலாம். அது கவிஞன் தன் ஆழ்சிந்தனையில் தன் மேல் தோலை உரித்துத் தொங்கவிட்ட பிறகு அவரது கேள்வி ‘நான் ஏன் உன்னுடை வெற்றுடலை தரித்தேன்?’என்று தோன்றக் கூடாதா என்ன?. அவரது தனிமை அவருக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடுகளில் ஏதுமற்ற வாழ்வை பற்றிய சிந்தனையே காரணமெனக் கொள்ளலாம். அதுவம் சரிதானா என்றால் ஆயிரம் கேள்விகள் மேலும் எழவே செய்கிறது.

      “அவன் சொல்கிறான்:

      ‘இல்லை நீ அங்கேயே

      தொங்கிக் கொண்டிரு

      உன்னைப் பிடித்துக் கொண்டு

      நான் தொங்குவதை விட

      நீ தனியாகத் தொங்கிக்

      கொண்டிருப்பதுதான்

      ரெண்டு பேருக்கும் நல்லது”

தன் தோலையே உரித்துத் தொங்கவிட்டு அதனைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிற மனிதனாக நகுலன் தெரியவில்லை அவரது அனுபவத்தின் வலிமை எத்தகையது என்பதை உணரலாம். அவரது அறை முழுக்கவும் நிகழ்கிற வாழ்வு எளிதில் அனுக முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

படைப்புகள் பற்றிய நகுலனின் கருத்து:

Siragu nagulan2

நகுலனின் கவிதைகள் யாருக்கானவை? ஏன்ற கேள்விக்கு ஒரு திடமான பதிலை எதிர்பார்க்காமல் இருப்பது ஒன்றே நல்லது. ஏனெனில் அவருடை வரிகள் இப்படிக் கொண்டிருக்கிறது. அது,

“உனக்கு உரியவை அனைத்தையும் கொடுப்பது-

இதுதான் படைப்பு”

என்று அவர் தனக்கான படைப்புச் சுதந்திரத்தை கொண்டுள்ளார். எனவே அவருடைய படைப்புகள் யாருக்கானவை என்ற கேள்விகள் எழுவதும் தேவையற்ற ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் அவர் எல்லாவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார். இது ஒரு வகையில் வாசகனுக்கு பலமும் கூட பலவீனமும் கூட. தொடர்ந்து வாசிக்கிற போது அவரை நாம் உணரமுடியுமே தவிர அவரது வாழ்க்கையை நெருங்கக் கூட முடியாதது ஒரு வகையில் பலவீனமே ஆகும். அத்தகைய இடைநிலையையே அவரது படைப்புகளும் அமைந்துள்ளது ஒரு காரணம்.

 “எவ்வளவு கேவலம்

எழுதுவதற்கு ஒன்றும் இல்லாமல் எழுதிக்குவிப்பது

அதன் பொருட்டு அனைவரும் பாராட்டுவது என்பது”

மேற்கண்ட வரிகளே அவர் படைப்புகள் மீது கொண்டுள்ள பார்வையைப் பற்றிய ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. படைப்புகள் பாராட்டுக்களுக்காக எழுதப்படுவதன்று அவர் சொல்லாமல் சொல்கிறார் என்று.

 நகுலனின் மற்ற கவிதைகள்:

       “கண்ணாடிகள சூழ

      நான் ஏன் பிறந்தேன்

      பகல் பொழுது

      என்னைச் சுற்றி வட்டமிடுகிறது

      ராத்திரியில்

      ஒவ்வொரு நட்சத்திரமும்

      என்னை பிரசவிக்கிறது”

அவர் தன் வாழ்வில் காண முற்பட்டது கண்ணாடிகள் காட்டுகின்றதைப் போல பிம்பமான வாழ்க்கையை அல்ல என்பது. அவர் நட்சத்திரங்களை ரசிக்கவும் இல்லை சூரியனையும் கண்டு ஆதாங்கப்படவும் இல்லை. அவரைப் பொருத்தவை எல்லாம் அப்படி அப்படியாகவே நடந்து கொள்கின்றன. பிம்பத்தால் கட்டமைக்கப்படுகிற இந்த உலகை அவர் விரும்பவில்லை.

       “நான் என்னைப்

      பார்த்துக் கொண்டிருந்து

      வாழ விரும்பவில்லை”

என்று அவர் தன் வாழ்வு மீதான பற்றற்ற நிலைக்கு அவர் செல்லத் துணிந்தார் என்பதையே இது காட்டுகிறது.

       இல்லாமல் இருப்பது:

      “இருப்பதற்கென்று தான்

      வருகிறோம்

      இல்லாமல்

      போகிறோம்”

Siragu nagulan3

நகுலனின் இந்தக் கவிதை எவர்க்கும் புரியாமல் போவதில்லை. ஆனாலும் எந்த ஒன்றையும் வழிந்து முன்னின்று காட்டவும் முற்படவில்லை. காரணம் இதில் உள்ள வார்த்தைகளில் பொதிந்துள்ள செறிவு இயல்பாகவே உணரவைக்க முயல்கிறது. மற்றொன்று

       “அலைகளைச் சொல்லி

      பிரயோஜனமில்லை

      கடல் இருக்கிற வரை”

ஒட்டுமொத்த கவிதையின் வரிகளே இவ்வளவுதான். என்றாலும் கடினமாக இருக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் உள்சென்று பார்க்கும் தைரியம் ஏற்படுமா என்பது சந்தேகமே. இவ்வரிகள் புரியவில்லை என்றால் ஹைகூக்களும் புரியக்கூடாது. அதுவே அதன் கட்டமைப்புக்கான வெற்றியாகும். உள்சென்று பார்ப்பவர்களுக்கே அதனை சுவைக்க முடியும்.

அங்கு:

      “நினைவு ஊர்ந்து செல்கிறது

      பார்க்கப் பயமாக இருக்கிறது

      பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை”

வாழ்க்கையின் நினைவுகள் அவ்வப்போது கண்முன் ஊர்ந்து செல்கிற போது சிலர் அதனை ரசிக்கலாம். சிலர் அதனை ஒதுக்கிவிட்டு கடந்து செல்ல எண்ணலாம். ஆனால் வெகு சிலரே அதனைக் கண்டு மீள முடியாமல் பரிதவிப்பார்கள். அப்படியொரு தாக்கம் சில நினைவுகளுக்கு உண்டு.

       “இப்பொழுதும்

      அங்குதான்

      இருக்கிறீர்களா?

      என்று

      கேட்டார்.

      எப்பொழுதும்

      அங்குதான் இருப்பேன்

      என்றேன்”.

இந்த உரையாலில் நகுலன் யாரிடம் உரையாடுகிறார்.? என்ற கேள்விக்கெல்லாம் விடையாக தனிமையின் நிழலோடுதான் அவர் உரையாடுவதாகவே அமைந்திருக்கிறது என்று கொள்ளலாமா? சந்தேகமே?

மொழிச் சிக்கல்:

நவீன தமிழ் இலக்கியத்தின் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகள் மொழிச் சிக்கல். அது என்ன மொழிச் சிக்கல்?. கவிதையில் படிமம் பயன்படுத்துவதை மொழிச் சிக்கல் என்று கருதுகிறார்களா? என்றால் அதற்கு விவாதம் நடத்த ஹைக்கூக்களை அழைக்க வேண்டும். காரணம் குறைந்த அடிகளைக் கொண்டிருந்தாலும் கவிதை நடை பாதிக்காது செறிவுகளை கொண்டதாக அவைகள் இருக்கின்றன. இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் கவிதையில் மொழிச் சிக்கல் பற்றிய விவாதம் தேவையா? வெற்று விமர்சிப்பதற்கு என்று தனக்கு பிடிபடாத ஒன்றை இழுத்துப் போட்டு மொழியறிவற்ற ஒருவர் நடத்துகிற விவாதம் ஏற்புடையதன்று. எனவே நகுலனின் கவிதையில் மொழிச் சிக்கலைப் பற்றிய விவாதம் தேவையற்றது.

      “பெண்ணின் ரூப சௌந்தர்யம்

      கலை எழுப்பும் ஏகாந்த நிலை

      சுவரில் ஒரு சிலந்தி”

இவ்வரிகள் ஒன்றுக்கொன்று எளிதில் தொடர்புடையன அல்ல என்று தோன்றலாம். ஆனால் ஹைக்கூ கவிதையின் வரிக்கட்டமைப்பைக் கொண்ட பொருட் செறிவு நிறைந்த இக்கவிதையை அனுபவிக்க ரசனை என்ற ஒரு மனம் இருக்க வேண்டாமா?

நவீன தமிழ் இலக்கியம் வளர்ந்து பல்வேறு கட்டங்களை தாண்டி வளர்ந்து கொண்டிருந்தாலும் இடையில் பல்வேறு கவிஞர்களின் செயல்பாடுகளைக் கொண்டு அவர்களின் கவிதையின் தன்மை, அவருக்கான இடம் என்ன என்பதைப் ஒருவாறாக நாம் அளவிடலாம். ஆனால், ஏறத்தாழ நாற்பது ஆண்டுகாலம் இலக்கிய பரப்பில் இயங்கியவர் நகுலன். அவருக்கு இந்த இலக்கிய உலகம் எந்த வகையான இடத்தை அளித்திருக்கிறது. அவை விவாதங்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனினும் நகுலனின் குரலை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.

நகுலன் என்ற குரல் வாசிக்கப்படவில்லை. ஒரு வகையில் இது நாம் செய்திருக்கிற தவறு என்று பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘கோட்-ஸ்டாண்ட்’கள் அவரை அடைக்கலப் படுத்திருக்கின்றன. அவருடைய குரல் புதுக்கவிதையில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் உரித்தெடுக்கப்பட்ட ‘தான்’என்ற அலங்காரம் அற்ற குரல்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகுலன் -புதுக்கவிதையில் தனித்த குரல்”

அதிகம் படித்தது