மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நற்பண்புகள்

முனைவர் மு.பழனியப்பன்

Dec 3, 2022

siragu narpanbugal1
நல்ல பண்புகள் என்று சொல்கிறோம். அந்த நல்ல பண்புகள் என்ன என்ன என்று சொல்லச் சொன்னால் சிலவற்றை மட்டுமே நம்மால் சொல்லமுடிகிறது. அன்பு,அறிவு, அடக்கம், பணிவு, துணிவு என்று சிலவற்றை மட்டுமே நம்மால் சொல்லமுடிகிறது. அப்படிச் சொன்னாலும் அன்பு என்பதற்கு அளவு, அடையாளம் எதுவும் நம்மால் தெளிவாகச் சொல்ல இயலவில்லை. அறிவு என்பதற்கு அளவு அடையாளம் இது வெனச் சொல்லமுடியவில்லை. எனவே நல்ல பண்புகள் எவை, அவற்றிற்கு என்ன அடையாளம், அவற்றை எவ்வாறு கைக்கொள்ளலாம் என்பதைச் சொன்னால் மட்டுமே நல்ல பண்புகள் இதுவென அறிந்து மனிதர்கள் அவற்றைச் செய்ய முன்வருவார்கள்.

மயில், குயில், செங்காலன்னம், வண்டு, கண்ணாடி, பன்றி,
அயில்எயிற்று அரவு, திங்கள், ஆதவன், ஆழி, கொக்கோடு,
உயரும் விண், கமலம் பன்மூன்றும் உருகுண முடையோர் தம்மை,
இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே
என்பது விவேக சிந்தாமணிப் பாடல்.

இதில் குணங்கள் சொல்லப்பட வில்லை. ஆனால் குணங்களுக்கு அடையாளமான பறவைகள் விலங்குகள் சொல்லப்படுகின்றன.

• மயில் போலும் அழகிய தோற்றத்தையும் சாயலையும் உடையது. வண்ணங்கள் அதிகம் உடையது. அழகான வடிவமைப்பினை உடையது. அதனைப் போன்று மனிதர்கள் அழகானவர்களாக என்றும் இருக்கவேண்டும.

• குயில் இனிமையாகப் பாடும். குயிலின் குரலைக் கேட்க இன்பம்பெருகும். குயில் போன்று இனிமை என்பதை இனிய சொற்கள் பேசுவது என்பதாகக் கொள்ளவேண்டும்.

• சிவந்த கால்களையுடைய அன்னம் போன்ற விவேகம் என்பது அன்னம் பாலையும் நீரையும் பகுத்துப் பாலைப் பருகும் தன்மையுடைதாகும். நல்ல சுவை மிகுந்த பாலை அறிந்து உண்ணும் அவ்வறிவுத் திறன்போல நல்லதன் பக்கம் அறிவு சார்தல் வேண்டும்.

• வண்டு போன்று நல்ல நல்ல மலர்களில் உள்ள தேனைத் தேடித் தேடி உண்ணுதல் நல்ல பண்பாகும்.

• கண்ணாடி போன்று உள்ளதை உள்ளவாறு காட்டுதல் கண்ணாடிக்குள் இருக்கும் பொருளின் தன்மையைக் கண்ணாடி மாறாது காட்டுவதுபோல் உண்மையை மறைக்காமல் காட்டும் தன்மை மனிதர்க்கு சிறந்த தன்மையாகும். உண்மையாக இருத்தல் என்பது நல்ல பண்பாகும்.

• பன்றி போன்று உறவுகளோடு கூடி வாழ்தல் ஒற்றுமையுடன் உறவினர்களுடன் இணைந்து வாழ்கிற பண்பும் மனிதர்களுக்கு நன்மை தரும் பண்பாகும். உயர்வு வந்தபோதும் சுற்றங்கள் மகிழும். தாழ்வு வந்தபோது அத்தாழ்விலிருந்து சுற்றத்தார் மீட்பர். இதனால் சுற்றத்தார் ஒரு மனிதனின் உயர்வுக்குத் தேவையானவர்கள் ஆவர். அவர்களைக் கண்போல் காப்பாற்ற வேண்டுவது நற்பண்புகளுள் ஒன்றாகும்.

• கூர்மையான பற்கள் உள்ள பாம்பு போன்று எதிரிகளுக்கு பயத்தைக் கொடுத்தல் என்பதும் நல்ல பண்பாகும். பாம்பு என்பது அடிப்படையில் தீமை செய்யும் என்ற கருத்து இருந்தாலும் பாம்பினைக் கண்டால் படையே நடுங்கும். இந்நிலையில் எதிரிகளிடத்தில் பாம்பு போல் சீறி நிற்கும் பண்பு சிறந்த பண்பாகிறது.

• சந்திரன் போன்ற குளிர்ந்த பார்வை – கண்ணோட்டம், ஒவ்வொரு மனிதருக்கும் தேவை. பார்க்கும் பார்வையிலேயே குளிர்மை ஒரு தன்மை தேவை. முறைத்துப் பார்த்தல் என்பது சண்டையை உண்டாக்கும். ஒன்றிப் பார்த்தல் என்பது ஒற்றுமையை வளர்க்கும். சூரியனிடம் இருந்து நிலவு ஒளியைப் பெற்றாலும் சூரியன் அளவிற்கு வெம்மையை அது வெளிப்படுத்துவதில்லை. குளிர்ச்சியையே அது தரும். இந்நிலையில் மனிதர்களுக்கும் குளிர்ச்சியான குணம் வேண்டும் என்பதை அறியமுடிகின்றது.

• சூரியன் போன்ற ஞானம் மனிதர்களுக்குத் தேவை. பிரகாசமான ஒளி, உலகிற்கு பரந்த நிலையில் ஒளி வழங்குதல் என்ற நிலையில் உலகிற்கே ஒளிதரும் பண்பில் மனிதர்கள் திகழ வேண்டும்.

• கடல் போன்ற ஆழ்ந்த அறிவு மனிதர்களுக்கு இருக்க வேண்டும். கடலின் ஆழத்தை யாரும் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியாது. அறிவின் ஆழமும் அப்படிப்பட்டதுதான்.

• கொக்கு போன்று ஒன்றின் மீது கருத்தூன்றல் என்பதும் மனிதர்க்குத் தேவையான பண்பாகும். ஒன்றையே குறிவைத்து அவ்வொன்றையே நடத்தி அவ்வொன்றில் வெற்றி பெறுவது என்பது மனிதருக்கு உரிய உயர்ந்த ஒன்றாகும். கொக்கு தனக்கான இரைக்காகக் காத்து நிற்கும் தன்மையது. அத்தன்மைபோல மனிதர்கள் ஒன்றையே நோக்க வேண்டும்.

• உயர்ந்த வானம் போன்று பரந்த மனம், அகன்ற சிந்தனை. வானத்தின் அளவினையும் அளக்கமுடியாது. பரந்து பட்டது. மனிதர்களும் பரந்து பட்ட சிந்தனை உடையவர்களாக விளங்கவேண்டும். குறுகிய எண்ணங்களை விடுத்துப் பரந்துபட்ட நிலையில் எண்ணங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

• தாமரை போன்று பற்றற்ற வாழ்க்கை, அதாவது ஒட்டியும் ஒட்டாத பற்றற்ற வாழ்க்கை மனிதர்களுக்குத் தேவை. மனிதர்கள் சுகங்களில் மட்டுமே நின்றுவிடாமல் அவற்றில் இருந்து விலகி பற்றற்று வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருகாலத்தில் உணவின் மீது பற்று ஏற்படும். சிறிது காலத்தில் அது மாறும். ஒருகாலத்தில் ஆடை அணிகலன்கள் மீது பற்று தோன்றும். அது விலகும். ஒரு காலத்தில் சொத்துகளின் மீது பற்று வரும். பின் அது நீங்கும். எனவே பற்றுகள் எல்லாம் நீங்கும் தன்மையன என்பதை உணர்ந்து அதில் இருந்து விலகி வாழவும் கற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு மனிதர்களுக்கு உரிய பதிமூன்று குணங்கள் நற்குணங்களின் பட்டியலில் அமைகின்றன. இவற்றைக் கைக்கொள்ளும் மனிதன் மனிதர்களுள் சிறந்தவனாகிறான். இப்பொருள்களைக் கடவுளர்களிடத்தில் அளித்து இவற்றின் மேன்மையை நம் முன்னவர்கள் உணர்த்தியுள்ளனர்.

நல்லோருடைய பண்புகள் பலவற்றைத் தனிப்பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.

ஞானம், பெருமை, நயம், கருணை, உண்மை, அபி
மானம், பொறுமை, வணக்கம், உயர் – தானமுடன்
சற்குணம் ஆசாரம் தகுகல்வி, நீதி நெறி
சற்குணருக்கு உண்டு என்றே சாற்று

என்பன நற்குணங்களின் பட்டியல் ஆகும். அறிவு, பெருமை, நயம் என்றால் நேர்மை, இரக்கம், உண்மை, பற்று, போறுமை, பணிவு, மேலான தானம், நல்ல தன்மை, ஒழுக்கம், தக்க படிப்பு, அறநெறி நிற்றல் போன்றனவற்றைப் பெற்றிருப்போர் உயர் பண்புகள் பெற்றவர்கள் ஆவர். இந்த உயர்பண்புகளைப் பெற்று மனிதர்கள் வாழ்வாங்கு வாழவேண்டும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நற்பண்புகள்”

அதிகம் படித்தது