பட்டறிவும் விதிகளும்
தேமொழிMay 30, 2015
அறிவியல் மூலம் நாம் பெறும் அறிவு நமக்குக் கூறுவது, ஏரணவியல் (logic) முறையில் ஒன்று நிகழ்வதற்கு மற்றொன்று காரணம் என்ற அடிப்படை உண்மையை. நிகழ்வுகளின் காரணம் யூகிக்கப்பட்டு, அந்தக் காரணம் நிகழ்வை ஏற்படுத்துகிறதா என்று பல சோதனைகள் செய்யப்படுகிறது. அந்த நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் அதன் காரணி மூலம்தான் நிகழ்கிறது என்பது ஆய்வுகள் முறையில் உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் ஆய்வறிஞர் குழுவால் “இதற்குக் காரணம் இது என்பது சரியே” என உறுதிப் படுத்தப்பட்ட பின்னர் அவற்றை அறிவியல் தரும் விதிகளாக உலகம் ஒப்புக்கொள்கிறது. இந்த அறிவியல் விதிகளை முறியடிக்கும் மாற்றுவிளக்கம் எழும்வரை இந்த விதிகளே ஒரு நிகழ்வுக்கு விளக்கம் தரப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மரத்தில் உள்ள பழம் நிலத்தில் விழுவதற்குக் காரணம் புவியின் புவிஈர்ப்புவிசை என்பது யாவரும் அறிந்த ஒரு அறிவியல் விதியின் விளக்கம்.
அறிவியல் பாடத்தில், குறிப்பாக இயற்பியலில் நாம் படித்த நியூட்டனின் விதிகள், கெப்ளரின் விதிகள், ஃபிளம்மிங்கின் விதிகள் போன்ற அடிப்படை அறிவியல் விதிகள் யாவும் இவ்வாறு அறிவியல் சோதனைகள் மூலம் ஆராயப்பட்டு, ஆதாரப்பூர்வமான முடிவுகளால் அறிவியல் விதிகள் என ஒப்புக்கொள்ளப்பட்டவை. இவை அறிவியல் கோட்பாடுகளை காரண காரியத்துடன் ஏன் விளைவுகள் நிகழ்கின்றன எனத் தெளிவாக விளக்குபவை. ஒவ்வொருமுறையும் இந்த விதிகள் கூறுவது போலவே விளைவுகளும் மாறாது நிகழும்.
ஆனால், நடைமுறை வாழ்க்கையில் மக்களால் அறியப்படும் சில விதிகள் அடிப்படை அறிவியல் விதிகள் போன்றவை அல்ல. அறிவியல் விதிகள் போலவே கவனத்தைக் கவர்ந்த கோட்பாடுகள் விதிகளாக முன்மொழியப்பட்டாலும், அந்த விதிகள் முன்வைக்கும் கோட்பாடுகள் அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்படாதவை. மேலும் இந்த விதிகளை சோதனைகளுக்கு உட்படுத்தவும் நடைமுறையில் வழியில்லை என்பதே உண்மை. தான் கண்டுணர்ந்ததை யூகத்தின் அடிப்படையில் விளக்குவது என்பது அறிவியல் முறையில் சோதனைகள் மூலம் நிரூபிக்கப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எனவே இதுபோன்ற அறிவியல் அடிப்படையற்ற விதிகளை யூக அறிவியல் (Speculative Science) என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்துவர். சுருங்கச் சொல்வோமானால் யூக அறிவியல் முறையில் வழங்கப்படும் விதிகளுக்கும், நடைமுறையில் நாம் தொன்று தொட்ட காலம் முதல் பயன்படுத்தும் பழமொழிகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என்றே கூறலாம்.
இது போன்ற அறிவியல் அடிப்படையற்ற விதிகள், ஆனால் மக்களால் பரவலாக அறியப்படும், நடைமுறை வாழ்க்கையில் மேற்கோள்களாகக் குறிப்பிடப்படும் விதிகள் சிலவற்றை இங்கு காண்போம்.
மர்ஃபியின் விதி (Murphy’s law):
ஆங்கிலத்தில் “Anything that can go wrong, will go wrong” என்று கூறப்படுவது, தமிழில் “தவறு நிகழக்கூடும் என்றால் நிகழ்ந்தே தீரும்” அல்லது “தவறக் கூடியது அனைத்தும் தவறும்” என்று கூறப்படுகிறது. இதனை பேச்சு வழக்கில் “சொதப்பக் கூடியது அனைத்தும் சொதப்பும்” என்றும் கூறுவது உண்டு. இந்தக் கூற்று “மர்ஃபியின் விதி” என்று அழைக்கப்படுகிறது. எட்வர்ட் மர்ஃபி (Edward Murphy) என்ற அமெரிக்க வான்படை பொறியியலாளர், 1950 களில் தனது பணியில் எதிர்கொண்ட தடங்கல்களினால் வெறுப்புற்று தனது பட்டறிவால் உணர்ந்ததைச் சொன்னது பழமொழியாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் மட்டுமே இவ்வாறு நடைமுறையில் எதிர்பாராக் குளறுபடிகள் நிகழ்வதை உணர்ந்தவர் என்று கூறிவிட முடியாது. உலகில் பலருக்கும் இந்தப் பட்டறிவு இருந்திருக்கும். “நடப்பது நடந்தே தீரும்” என்று நாமும் சொல்வதுண்டு. இவர் கூறியது போன்று முன்னர் யாரேனும் சொல்லியுள்ளார்களா என்ற ஆய்வு மேற்கொண்டதில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் சிலர் கூறிய தகவல்கள் கிடைத்தன. இருந்தும் இன்றுவரை இது “மர்ஃபியின் விதி” என்றே அழைக்கப்படுகிறது.
மர்ஃபியின் விதியையும் அறிவியல் முறை அடிப்படையில் சோதனைகள் மூலம் புள்ளியியல் துணைகொண்டு நிரூபிக்க வழியுண்டா என்று சிலர் முயல்வதுண்டு. சுண்டிவிடப்படும் நாணயம் எப்பக்கமாக விழும் என்பதை அறிய வழியில்லாதது போலவே முக்கியமான நேரத்தில் எதிர்பாராத இடர்கள் தோன்றிவிடுவதை நாம் வழக்கத்தில் பார்த்திருந்தாலும் இதை நிரூபிக்க வழியில்லை. காட்டாக, என்றுமே வழக்கமாக நேரத்துடன் பணிக்குச் சென்றுவிடும் ஒருவர், ஒரு முக்கியமான நாளில் பெருஞ்சாலையில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்தினால் போக்குவரத்து தடைப்பட்ட காரணத்தினால், அலுவலகத்தில் முக்கியமான நபரைச் சந்திக்க முடியாது போவதும், அதன் விளைவாக அலுவலகத்தில் குறை கூறப்படும் சூழ்நிலை உருவாவது, பதவி உயர்வு கைநழுவிப் போவது ஆகியவை நிகழ்ந்தால் அதற்கு யாரைக் குறை கூற இயலும். இதுவரை நேரத்துடன் வந்து பணிகளை செவ்வனேதானே செய்தேன் என்று மனம் நொந்துகொள்ள மட்டுமே முடியும். இது போன்று தனது கட்டுப்பாட்டில் இல்லாத செயல்களால், மனமறிந்து செய்யாத தவறுக்காகப் பாதிக்கப்படும் இடர்களில் “விதி வலியது” என்று சொல்லி ஆறுதல் அடைவது பெரும்பாலோர் வழக்கம்.
மாஸ்லோவின் விதி (Maslow’s law):
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றிய “ஆப்ரஹாம் மாஸ்லோ” (Abraham Maslow) என்ற அறிஞரால் 1943ல் அறிமுகப்படுத்தப்பட்டது “மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு” (Maslow’s hierarchy of needs). உளவியல், நிர்வாகயியல், சமூகவியல் துறைக் கல்வியில் முக்கிய பாடமாகவும் கற்பிக்கப்படுவது மாஸ்லோவின் தேவை படியமைப்பு விதி. தொழிலாளரை ஊக்கப்படுத்தும் வழிமுறைகளைக் கற்பிக்க மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு உதவுகிறது. மாஸ்லோ உலக நடைமுறையை ஆழ்ந்து கவனித்து மனித இயல்புகளையும் நடவடிக்கைகளையும் இக்கோட்பாட்டின் மூலம் விளக்கினார்.
வாழ்வின் தேவைகளை “அடிப்படைத் தேவைகள்” எனவும், “உயர்நிலைத் தேவைகள்” எனவும் பிரித்து, இந்த இரு பிரிவுகளையும் மேலும் சில உட்பிரிவுகளாகப் பகுத்தார். உயிர்வாழ இன்றியமையாத அடிப்படைத் தேவைகளான மூச்சுக்காற்று, உணவு, நீர், தட்பவெப்பநிலையில் இருந்து காக்க உறைவிடம், உடை ஆகியவற்றை அடிப்படைத் தேவை நிலை எனக் குறிப்பிட்டார். தன் வாழ்வின் உச்சக்கட்ட விருப்பமாக சாதனை செய்ய விரும்பும் மனநிலையை உயர்நிலைத் தேவை எனவும் குறிப்பிட்டார். மனிதனின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறினாலே உயர்நிலைத் தேவை பற்றிய எண்ணம் தோன்றும் என்பது இவரது கோட்பாடு கூறும் வரையறை. இவை யாவற்றையும் பிரமிட் வடிவில் சித்தரித்தார். அவரது கோட்பாடுகளை சற்றே விரிவாகக் காணலாம்.
உடலியற் தேவைகள் (Physiological needs):
பிரமிட் அமைப்பின் அடிப்பகுதியில் காட்டப்படுவது, உயிர்வாழ இன்றியமையா அடிப்படை உடலியற் தேவைகளான காற்று, நீர், உணவு, உடை, உறைவிடம் ஆகியன. இவையின்றி உயிர்வாழ்வது இயலாது. எனவே இத்தேவைகள் நிறைவேறினால் மட்டுமே மனிதர்களால் அடுத்த நிலையைப் பற்றி எண்ணுவதற்கு இயலும்.
பாதுகாப்புத் தேவைகள் (Safety needs):
அடிப்படை உடலியற் தேவைகள் நிறைவேறினால், மனித மனம் அடுத்தபடியாக உயிர்வாழ பாதுகாப்பான இடம், உடமைக்கு, வருவாய்க்கு ஊறுகள் ஏற்படாத பாதுகாப்பான நிலை போன்றவற்றை அடைய விரும்பும்.
சமூகத் தேவைகள் (Love/Belonging needs):
உடலியற் தேவைகளும், வாழ்வாதார தேவைகளும் நிறைவேறிய பின்னர் மனிதர் சமூகத் தேவைகளைப் பற்றி எண்ணுவர். உளவியல் அடிப்படையில் இந்த உணர்வுத் தேவையை உறவுகள் மூலம் பெற விழைவர். வாழ்க்கைத்துணை, தனக்கென்ற ஒரு குடும்பம், உற்றார், உறவினர், நண்பர், சுற்றம் சூழ ஆதரவாளர்களுடன் வாழ விரும்பும் நிலையை எட்டுவர்.
தன்மதிப்பு தேவைகள் (Esteem needs):
உறவுகள் பெற்று சமூகத் தேவை நிறைவேறியதும், தான் வாழும் அந்தச் சமூகத்தில் மதிப்பு மரியாதையுடன், அனைவரும் போற்றிப் புகழ வாழும் நிலையை அடைய மனித மனம் விரும்பும். பதவி, பணம், பகட்டு, அதிகாரம் ஆகியவை வாழ்க்கையில் முக்கியம் பெறும் நிலையை மனித மனம் அடையும்.
தன்நிலை உயர்வுத் தேவைகள் (Self-actualization):
உடலியற் தேவைகளும், உணர்வியல் தேவைகளும் நிறைவேறிய பின்னர் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட மனநிலையை மனிதர் அடைவர். இருக்கும் பொழுதும், இறந்த பின்னரும் புகழ் நிலைக்கும் வண்ணம் வாழ்வில் ஒரு முத்திரை பதிக்கும் நிலையை சாதனை மூலம் மனிதமனம் நிறைவேற்ற எத்தனிக்கும். இந்தக் குறிக்கோளை எட்டிய நிலைக்குப் பிறகு மனிதர்களுக்கு வாழ்க்கைத் தேவைகள் இருக்காது என்பது மாஸ்லோ விளக்கும் வாழ்க்கைத் தேவை கோட்பாட்டின் வரையறை.
மாஸ்லோவின் விதி என்று அழைக்கப்படும் இக்கோட்பாடுகள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியது. தேவைகள் வரிசைப்படிதான் நடக்கும் என்பதில்லை, ஒவ்வொரு வயதிலும் மனிதர்களின் தேவைகள் மாறுபடும், மக்கள் மாறுபட்டவர்கள் அவர்கள் இத்தேவைகளின் அடிப்படியில்தான் வாழ விரும்புவார்கள் என்பது பொருந்தாது. காட்டாக உறவு, வாழ்க்கைத்துணை ஆகியவற்றை விரும்பாதவர்கள், செல்வம் இருந்தாலும் படாடோப பகட்டு வாழ்க்கையை விரும்பாதவர்கள் எனப் பலரை நாம் காண முடியும்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார் (நீதிநெறி விளக்கம் – 53)
தாம் தொடங்கிய காரியத்தை முடிப்பதிலேயே கருத்துக்கொண்டவர், தம் உடம்பின் வருத்தத்தை, பசியை, உறக்கத்தை கருத்தில் கொள்ளாதவர். யார் செய்யும் தீங்கையும் பொருட்படுத்தார், காலத்தின் அருமையையும் நோக்கார், பிறர் செய்யும் அவமதிப்பைப் பொருட்படுத்த மாட்டார் என்று நீதிநெறிவிளக்கம் பாடல் கூறுகிறது. கருமமே கண்ணாயினாராக இருப்பவர் உடலியற் தேவைகளையும், உணர்வியல் தேவைகளையும் பொருட்படுத்தாமலே உச்சநிலையான தன்நிலை உயர்வுத் தேவைகள் நோக்கி உழைப்பவர் என்று குறிப்பிடுகிறது. கருமமே கண்ணாயினாருக்கு அடிப்படைத் தேவைகள் ஒரு பொருட்டில்லை. எனவே மாஸ்லோவின் கோட்பாடுகள் கலாச்சார அடிப்படையில் இங்கு பொருந்தாமல் போகிறது.
இது போன்ற விமர்சனங்களைச் சந்திக்கும் மாஸ்லோவின் விதி, முக்கியமாக எதிர்கொள்வது இந்த விதிக்கு அறிவியல் அடிப்படை இல்லை, அறிவியல் ஆய்வுகள் மூலம் இக்கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை என்பதை. மாஸ்லோவின் கோட்பாடுகள் கவனிப்புகளின் அடிப்படையில், மனித செயல்களின் காரணத்தை யூகத்தின் துணையுடன் விளக்க முற்படுகிறது. எனினும், மாஸ்லோவின் விதி பரவலாக அறியப்படும், கல்விநிலையங்களிலும் எடுத்தாளப்படும் ஒரு விதியாகவே இருந்து வருகிறது.
மூரின் விதி (Moore’s law):
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப உலகில் “கார்டன் மூர்”(Gordon Moore) வகுத்த மூரின் விதியை அறியாதவரே இருக்க இயலாது. இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை அறிவியலாரும் ஆன மூர், 1965 ஆம் ஆண்டு கணினியின் “நுண்செயலி” (microprocessor)களின் செயல்திறன் “ஆண்டுக்கு இருமடங்காகும்” எனக் கணித்தார். அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் கணினி நுண்செயலிகளின் வளர்ச்சி, ‘ஒருங்கிணைந்த மின் சுற்று கொண்ட சில்லு’ (integrated circuit chip), மற்றும் அவற்றின் செயல்திறன் (processing power) ஆகியவற்றை ஆராய்ந்து இந்தக் கணிப்பை ஓர் ஆய்வறிக்கையாக வெளியிட்டார்.
பின்னர் 1975 ஆம் ஆண்டு மீண்டும் மறுகணிப்பு செய்து, “சிலிக்கான் சில்லு” (silicon chip) களில் பதியப்படும் “மின்மப்பெருக்கி” (transistor) களின் எண்ணிக்கை “ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் இருமடங்காகும்” எனவும், இதன் மூலம் நுண்செயலிகளின் செயல்திறன் வளர்ச்சி இருமடங்காகும், அத்துடன் நுண்செயலிகளைத் தயாரிக்கும் விலை இருமடங்காக் குறையும் என்றும் கணித்தார். இந்த ஆண்டுடன் இந்த விதி முன்வைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொன்விழா காணும் மூர் விதி இன்றுவரை பொய்க்கவில்லை. நாளுக்கு நாள் கணினி நுண்செயலிகளும் உருவத்தில் குறைந்து, செயல்திறன் அதிகரித்து, தயாரிக்கப்படும் விலையும் குறைந்து வருவது மூர் குறிப்பிட்டது போல மாறாமல் நிகழ்ந்து வருகிறது.
ஆனாலும் கணினித் துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாகக் கருதப்படும், புகழ் பெற்ற இந்த மூர் விதியும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று. கணினித் துறையில் காணும் வளர்ச்சியைக் கவனித்து முன்வைக்கப்பட்ட விதி என்பதால் அறிவியல்விதிகளில் ஒன்றாகக் கருதப்படும் தகுதியை மூர் விதி இழக்கிறது.
அறிவியல் அடிப்படையற்ற விதிகள் இவ்வாறு நடைமுறையில் விதிகளாக மதிக்கப் படும் தகுதி பெற்றுவிடுவதை விதி என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது.
_________________________________________________________________
மேலும் தகவலுக்கு:
[1] SPECULATIVE SCIENCE: Is there any scientific basis for a belief in Murphy’s Law, i.e. that if something can go wrong, it will?
http://www.theguardian.com/notesandqueries/query/0,5753,-1631,00.html
[2] Hoffman, E. (1999). The right to be human: a biography of Abraham Maslow (2nd ed.). New York: McGraw-Hill.
“Abraham Maslow’s Life and Unfinished Legacy”
http://jaas.jpn.org/doc/pdf/journal/17_3/01.pdf
[3] The Origin, Nature, and Implications of “MOORE’S LAW”, The Benchmark of Progress in Semiconductor Electronics
http://research.microsoft.com/en-us/um/people/gray/moore_law.html
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பட்டறிவும் விதிகளும்”