மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 4

முனைவர் மு.பழனியப்பன்

Oct 31, 2020

siragu kathiresa chettiyar1
இல்லறம்

கதிரேசனாருக்கு அவரின் முப்பத்தியிரண்டாம் வயதில் திருமணம் நடைபெற்றது. அதாவது 1912 ஆம் ஆண்டில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அவரின் அத்தையின் இரண்டாம் மகள் மீனாட்சியை அவர் திருமணம் செய்து கொண்டார். அத்தையின் முதல் மகள் கல்யாணியைத் இவருக்குத் திருமணம் செய்ய இவரின் அத்தை குடும்பம் முன்வந்தும் அது தவறியது. கதிரேசனாரின் பொருளாதாரச் சூழல், உடல்குறை ஆகியன கருதி இது தவறியது. இருப்பினும் கல்யாணியின் கணவர் திருமணமான சில நாட்களில் இறந்துபோக கதிரேசனாருக்குப் பெண் தராமையால்தான் கல்யாணிக்கு இது நேர்ந்தது எனக் கருதி இரண்டாம் பெண்ணான மீனாட்சியைக் கதிரேசனாருக்கு மணம் முடிக்க அவர்கள் ஒப்பினர். இவரின் பின் பிறந்த தம்பியர் இருவருக்கும் தானே முன்னின்று இளம் வயதில் திருமணத்தைக் கதிரேசனார் முடித்துத் தன் மணத்தை மெதுவாக நடத்திக்கொண்டார் என்பது இவரின் பெருந்தன்மைக்கும், குடும்பப்பொறுப்பிற்கும் சான்றாகும்.

கதிரேசனார், மீனாட்சி ஆகியோரின் இல்லறம் இனிதே நடைபெற்றது. மீனாட்சியார் விருந்தினர்களைப் புரக்கும் பண்பினர்; குடும்பத்தின் தரம், வருவாள் அளவு அறிந்துக் குடும்பத்தைப் புரந்தவர். இவர்களின் இல்லறப் பயனாக ஆண்மக்கள் நால்வரும், பெண்மக்கள் மூவரும் பிறந்தனர். சுப்பிரமணியன், கனகசபாபதி, மாணிக்கவாசகன், தியாகராசன், மங்கையர்க்கரசி, மீனாட்சி, சகுந்தலை ஆகியோர் இவரின் மக்களாவர்.

இதனிடையில் சன்மார்க்க சபையின் ஐந்தாம் ஆண்டு விழா ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினான்காம் ஆண்டில் கொண்டாடப் பெற்றது. இவ்விழாவிற்குத் தமிழ்த்தாத்தா உ,வே.சாமிநாதையர் வருகை தந்துச் சிறப்பித்தார். சாமிநாதையரின் ஏடு தேடும் பணிக்கும், பதிப்புப் பணிக்கும் கதிரேசனார் பெரிதும் உதவினார். இருவரின் நட்பும் பெருகியது. உ.வே.சாமிநாதரைத் தன் இல்லத்தில் சில நாட்கள் விருந்தினராகக் கதிரேசனார் பெற்று மகிழ்ந்தார்.

தொடர்ந்துச் சபையின் துணை அமைப்பான கணேசர் செந்தமிழ்க் கல்லூரியின் கல்விப் பணியில் அதனை முன்னேற்றும் நோக்கில் பல செயல்களைக் கதிரேசனார் செய்தார். தமிழ்பிரவேச, பால பண்டித, பண்டித வகுப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் சற்று உயர்ந்து, மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வுகளுக்கு மாணவர்களை அனுப்பும் நிலைக்கு இந்நிறுவனம் உயர்ந்தது.

தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று இக்கல்லூரி நடைபெற உதவியவரும் கதிரேசனார் ஆவார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக்குழுவில் ஓர் உறுப்பினராக விளங்கியதால் சென்னைப் பல்கலைக்கழகத்தினரோடு இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கணேசர் செந்தமிழ்க் கல்லூரியைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறிந்தேர்ப்புப் பெறச் செய்து அதனைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியாகக் கதிரேசனார் வளர்த்தெடுத்தார்.

ஆண்டுதோறும் சபையின் ஆண்டுவிழாக்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றுவந்தன. இதன் பதினாறாம் ஆண்டுவிழா குறிக்கத்தக்க ஒன்றாகும். இவ்விழாவில் கதிரேசனார் அறியாவண்ணம் அவருக்குப் பெருமை சேர்க்க தமிழறிஞர்கள் முயன்றனர். தூத்துக்குடி சிவகுருநாதப் பிள்ளை, ஔவை துரைசாமிப்பிள்ளை, தஞ்சையைச் சார்ந்த தமிழவேள் உமா மகேசுவரனார் போன்ற பல புலவர்கள் இணைந்துப் பேசி முடிவு செய்து ‘‘பண்டிதமணி’’ என்ற பட்டத்தைக் கதிரேசனாருக்கு வழங்குவது எனத் தீர்மானித்து அதனை அவ்வாண்டுவிழாவில் அறிவித்தனர். சபையாரும், வந்திருந்த கல்வியாளர்களும் அதற்கு இசைவளிக்கக் கதிரேசனார் பண்டிதமணி என்னும் பட்டத்திற்கு உரியவரானார். இத்தகுதியைப் பின்பு மதுரைத் தமிழ்ச்சங்கமும், கரந்தைத் தமிழ்ச்சங்கமும் ஏற்றுக் கதிரேசனாரைப் பண்டிதமணி என அழைத்து உறுதிசெய்தன. இவ்வளவில் சபை தந்த பண்டிதமணி பட்டமே கதிரேசனாரின் இயற்பெயர் மறைந்து நிலைத்திருப்பதாயிற்று.

சன்மார்க்க சபையின் இருபத்து மூன்றாம் ஆண்டுவிழா ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தியிரண்டாம் ஆண்டில் நடைபெற்றது. இந்நேரத்தில் தமிழ் மொழியை வளர்க்க பற்பல யோசனைகளைத் தெரிவித்து இச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானங்கள் தமிழ் உயர வழிவகுப்பனவாகும். இத்தீர்மானங்களை இயற்றியதில் முதலாமவர் பண்டிதமணி என்றால் அது மிகையாகாது.

இதனிடையே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டு பண்டிதமணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அங்குப் பொழிவுகள் ஆற்றி அறிஞர்களைச் சந்தித்து மகிழ்ந்தார்.

இதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்துப் பண்டிதமணியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியப் பணியாற்றச் சென்றார். அவரது வாழ்வின் திருப்புமுனைக்குரிய பகுதி இதுவாகும்.

அண்ணாமலையில் ஆய்வுப் பணி

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி வளர்க்கும் கலைக்கழகம் ஆகும். இங்குள்ள தமிழ்த்துறை தனித்தன்மை வாய்ந்தது. முதுபெரும் புலவர்களால் தகுதியும் சான்றாண்மையும் பெற்ற துறை; பெற்றுவரும் துறை. இத்துறைக்கு உரியவர்களை விரும்பி அழைத்து வரும் வழக்கம் அண்ணாமலை அரசரின் தனி்ப்பெருஞ் சிறப்பு ஆகும்.

அவ்வழியில் பண்டிதமணியாரின் இருமொழிப் புலமை, சமய அறிவு, இலக்கிய ஆராய்ச்சி ஆகியன கருதி அண்ணாமலை அரசர் அவரை தமிழ் ஆய்வுகள் செய்ய அழைத்தார். முதலில் தன்னிலை கருதி மறுத்தார் பண்டிதமணி. திண்ணைப்பள்ளிப்படிப்பு மட்டுமே தன் படிப்பு என்ற எண்ணமும், தன் உடல் நிலை வண்ணமும் கருதி பண்டிதமணியார் இப்பணியில் இணைய மறுத்தார். இருப்பினும் விடாது பற்றி அண்ணாமலை அரசர் பண்டிதமணியாரைத் தம் நிறுவனத்திற்கு வரவழைத்துக்கொண்டார்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு முதல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தாறாம் ஆண்டுவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியராக விளங்கி அத்துறைக்குப் பெருமை சேர்த்தார் பண்டிதமணியார். இருப்பினும் பழமை மறவாமல் ஆண்டுதோறும் மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையின் ஆண்டுவிழாக்களில் அவர் தம் புலமை மிகு நண்பர்களுடன் கலந்து கொள்வார்.

பேராசிரியர், துறைத்தலைவர், ஆராய்ச்சிப் புலத் தலைவர் என்று பல பொறுப்புகளை இனிமையுடன் செய்து தமிழுக்கும், தமிழ்ச்சமுதாயத்திற்கும் அண்ணாமலை நகரில் பண்டிதமணியார் தொண்டாற்றி வந்தார். தில்லைத் தமிழ்க் கழகம், மணிவாசக மன்றம் ஆகிய இரு அமைப்புகளை அண்ணாமலை நகரில் தோற்றுவித்து அவ்வமைப்புகளில் திருவாசகம் குறித்த பொழிவுகளைப் பண்டிதமணியார் ஆற்றிவந்தார்.

பண்டிதமணியாரின் வீட்டில் எப்போதும் மாணவர்கள், பேச்சுரை கேட்போர் கூட்டம் நிறைந்து காணப்படும். அவ்வில்லம் ஒரு இலக்கியச் சங்கமமாகத் திகழும். இதனைக் காண்போர் தமிழின் திருவோலக்கக்காட்சி பண்டிதமணியார் வீடு என்றே குறிப்பர். பண்டிதமணியாரிடம் நற்சாட்சிப் பத்திரம் பெற வந்த கூட்டத்தார் ஒரு புறம், அவரிடம் பயிலும் மாணவர் கூட்டம் ஒருபுறம், அலுவலகப் பணிகளைச் சொல்லி ஆணைபெறும் அலுவலர்கள் கூட்டம் ஒருபுறம், அவரிடம் சந்தேகம் கேட்க வந்தோர், அவரின் பேச்சமுதைக் கேட்க வந்தோர் இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு புறம் இருக்க நடு நாயகமாகப் பண்டிதமணி இருந்து அனைத்துப்பணிகளையும் குறைவற நிறைவேற்றும் அழகு தமிழின் தனியாட்சியே ஆகும்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தொன்றாம் ஆண்டு பண்டிதமணியாரின் மணிவிழா வந்தது. இவ்விழா இலக்கிய விழாவாக் கொண்டாடப்பெற்றது. இதன் தொடக்கமாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டு ஜுலை மாதம் ஏழாம் தேதி அன்று மேலைச்சிவபுரியில் பண்டிதமணியார் உருவப்படம் திறந்து வைக்கப்பெற்றது. இவ்விழாவில் அண்ணாமலை அரசர் தலைமை தாங்கினார். உயிருடன் இருக்கும்போதே ஒருவரின் படத்தை திறப்பது என்பது அக்காலத்தில் ஏற்கப்படாத ஒன்று. அதிலும் படமாக இருப்பவர் அன்றைய விழாவில் கலந்து கொள்வது என்பதும் சற்றும் நடவாதது. ஆனால் பண்டிதமணியார் திருவுருவப்படம் அவரின் முன்னிலையிலேயே திறந்து வைக்கப்பெற்றது. அவ்விழாவிற்குப் பண்டிதமணியார் வந்து தன் நன்றிப்பெருக்கையும் தெரிவித்து உரையாற்றினார் என்பது எதைக்காட்டுகிறது என்றால் பண்டிதமயி இல்லாமல் ஒரு நிகழ்வும் சபையில் நடக்காது என்பதையே காட்டுகின்றது.

இன்னமும் சபையின் முக்கியப் பகுதியில் அப்படம் நிலை நிறுத்தப்பெற்றுள்ளது. பண்டிதமணியார் சபைக்குச் செய்த தொண்டினுக்கு நன்றியாக இப்படத்திறப்பு அமைந்தது.

இப்படத்திறப்பின்போது பண்டிதமணியார் சில சொற்கள் பேசவும் செய்தார். ‘‘என் சிறு தொண்டுக்கு உருவப்படம் அமைப்பது, சபைக்கு என் மீதுள்ள அன்பைக் காட்டுகின்றது. எனக்கு இவ்வளவு சிறப்பு செய்த அளவு யான் சங்கத்துக்குத் தொண்டு செய்ததாக நினைவுக்கு வரவில்லை. யான் படித்தது எங்கே எங்கே யென்று பல அன்பர்கள் கேட்டார்கள். இங்கேதான், யான்தான் இச்சங்கத்தின் முதல் மாணாக்கன். சன்மார்க்க சபையினால் தான் எனக்கு மேன்மை ஏற்பட்டது. பொருட்பயனை எதிர்பார்த்து யான் கற்கவில்லை. சொற்பொருட் சுவைகளை விரும்பிக் கற்றேன். இப்பொழுது பல்லாற்றானும் பெரிதும் பயன்படுகிறது. என் சிறுமையை யான் அறிவேன். ஆனால் யான் உயர்ந்தவனென்று பிறர் உணரும்படி செய்த பெருமை, கனம் ராஜா அவர்களைச் சார்ந்தது. நிகரற்ற செல்வமும், அறிவும், ஆட்சித்திறனும் அமைந்த பெருங்கொடை வள்ளலாகிய கனம் செட்டிநாட்டு ராஜா அவர்கள் தம் உள்ளத்தில் எனக்கு இடமளித்துச் சிறப்பித்து வரும் பெருமையே யான் அடைந்து வரும் சிறப்புகள் எல்லாவற்றிலும் தலை சிறந்ததாகும்.’’ (சோம.லெ. பண்டிதமணி,ப.70)

என்ற பண்டிதமணியாரின் உரை அவர் சபை மீதும், அண்ணாமலை அரசர் மீதும் கொண்டிருந்த அளவற்ற அன்பினையும், கைமாறு செய்ய முடியாத நன்றி வெளிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

பண்டிதமணியாருக்கு வேறு பல சிறப்புகளும் வந்து சேர்ந்தன. மகாமகோபாத்தியாய என்ற பட்டத்தை இந்தியாவின் அரசியலாளர் அவருக்கு வழங்கினர். பல்கலைக்கழகப் பட்டமளிப்புவிழாவில் இதற்கான நற்சான்று ஆளுநர் அவர்களால் பண்டிதமணியாருக்கு வழங்கப்பெற்றது.

குன்றக்குடி ஆதீனம் இவருக்குச் சைவ சித்தாந்த வித்தகர் என்ற பட்டததை அளித்துச் சிறப்பித்தது. முதுபெரும் புலவர் என்றும் இவருக்குப் பட்டம் வழங்கப்பெற்றது. எனினும் சபை தந்த பண்டிதமணி என்ற பட்டமே அவரின் விருப்பத்திற்கும் தமிழ்ப்புலவர்களிடையில் அடையாளப் படுத்துவதற்கும் பயன்பட்டது.

பண்டிதமணியார்தம் இலக்கியத்தொண்டு மொழிபெயர்ப்பு, கவிதைகள்,கட்டுரைகள், உரைகள், பதிப்புகள் என்ற அளவில் பல்கிப் பெருகி விளைந்தன. அவற்றின் திறத்தை இந்நூலின் அடுத்த பகுதி விளக்கி நிற்கின்றது.

அவ்வப்போது சொற்பெருக்காற்றியும் நூல்கள், உரைகள் படைத்தும் சிறந்த பண்டிதமணியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணியில் இருந்து உடல்நலம் கருதி விடைபெற எண்ணினார்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டு இவரது மனைவியார் மீனாட்சியார் இறைவனடி கலந்தார். இவரின் இறப்பு பண்டிதமணியாருக்கு மேலும் கவலையைச் சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தாறாம் ஆண்டு பண்டிதமணியார் அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியில் இருந்து விடைபெற்று ஓய்வினை நாடினார்.

உடல் பிணி வேறு அவரை வருத்தியது. இரத்தக்கொதிப்பு நோயால் பாதிக்கப்பெற்ற அவர், வாத நோய் கண்டு மிக வருந்தினார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபத்து நான்காம்நாள் அன்றைய நாள்பணிகளைச் செய்துவந்தார். மாலை மூன்று மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருவைந்தெழுத்தினை ஓதியபடியே இறைநிழல் அடைந்தார் பண்டிதமணியார்.

அவரின் வாழ்வு நிறைவுப் பயணம் மகிபாலன்பட்டியில் நடைபெற்றது. சன்மார்க்க சபையின் சார்பில் பட்டும், பூமாலையும் அவர் உடலுக்குச் சூட்டப்பெற்றன. அவரின் மாணவர்கள் அவருடலைச் சுமந்தனர். குன்றக்குடி ஆதீனத்தின் சார்பில் பட்டு சார்த்தப்பெற்றது. அவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பெற்று அவரின் உடல் சிதையில் வைக்கப்பெற்றது.

இவரின் பெருமையை மகிபாலன்பட்டியில் நிலைநிறுத்த 3.4.1974 ஆம் நாளன்று திருவுருவச் சிலை நிறுவப்பெற்றது. அவ்விழா நினைவாக மலர் ஒன்றும் வெளியிடப்பெற்றது.

மனிதப் பிறவி என்பது மகத்தானது. அதனை ஒரு கருவியாகக் கொண்டு, ஆன்மாவை ஆண்டவனிடத்தில் இளைப்பாறச்செய்வதே வாழ்வின் நோக்கமாகும். இந்நோக்கத்திற்குத் தக்க வகையில் தமிழை வளர்த்தும், சைவத்தை வளர்த்தும் திருவாசகத்தையே தினம் துதித்தும் அவர் தன் இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்தார்.

ஆனால் வாழ்வில் இவ்வரிய நோக்கம் பலரால் பாழ்படுதலைப், பாழ்படுத்தப்படுதலைப் பண்டிதமணியார் கண்டுக் கவலை கொண்டு அக்கவலையைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘நம் வாழ்க்கையின் நோக்கமாக ‘யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதுவும் உறங்குவதுமாக முடியும்’ என்று நம் பெரியாரொருவர் உலகஞ் செல்லும் கீழ் நிலை நோக்கி இரங்கிக் கூறிய பரிவுரையை அக்கருத்துணராமற் கடைபிடிப்பேமென்பார் செயல் மிகவம் இழிந்ததொன்றாகும். பசி தீர உண்டலும், வேட்கை தீரக் காமவின்பம் துய்த்தலும் நம்மினும் இழிந்த பிறப்பினவாகிய புள், விலங்கு முதலியவற்றிற்கும் குறைவறக் கிடைத்தலான், பகுப்புணர்வினாற் சிறந்த மக்கட் பகுதியினருக்கு அச்செயல்களால் அவற்றினும் விழுமிய பெருமை யாதுளது? இறைவன் நமக்கு மனவுணர்வையும் நூலுணர்வையும் சிறப்பாக அமைதர உதவியதன் நோக்கங்தான் யாதோ? அவ்வுணர்வு பெற்றதனால் நம் நோக்கம் அதற்குத் தக விழுமியதாக இருத்தல் வேண்டுமேன்றோ?’’ ( உரைநடைக்கோவை,பகுதி.1.ப.72) என்ற பண்டிதமணியாரின் கருத்து வாழ்க்கையின் உயரிய நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

உண்பதும், உறங்குவதும் ஆன உயிர்களின் இயல்பான செயல்களினைச் செய்வது மட்டும் மனித வாழ்க்கையின் பயன் இல்லை என்பதை அறிவுறுத்தும் வண்ணமாக உடற்குறையிருந்தாலும் தளர்வுறாமல் நிறைவாழ்க்கை வாழ்ந்து தமிழ் உலகில் நிலைத்த இடத்தைப் பெற்றவராக விளங்குகிறார் பண்டிதமணி.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 4”

அதிகம் படித்தது