மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவசமயத் தொன்மை – பாகம்-3

முனைவர் மு.பழனியப்பன்

Jan 30, 2021

siragu samana madham1

சமணம்

இந்திய மெய்ப்பொருள் வரலாற்றில் மிகப் பழமையான மெய்ப்பொருள் சார் தத்துவங்களில் ஒன்றாகக் கொள்ளத்தக்கது சமண சமயம் ஆகும். வேதகாலத்திற்கு முன்னதாகவே சமணம் நிலைபெற்றிருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுவும் வேத மரபிற்கு எதிரானது. வேதம் சாராத மரபினைச் சார்ந்ததாக சமணம் நிறுவப்பட்டது.

“ஜைனமரபு 24 தீர்த்தங்கரர்களைக் குறிக்கிறது. அவர்களுள் முதல்வர் ரிஷபதேவர். அஹிம்சா தர்மத்தை வெளியிட்டவர். தீர்த்தங்கரர்களுள் கடைசியாகத் தோன்றியவர் மஹாவீரர். இவர் புத்தருக்கு மூத்தவர். ஆனால் இருவரும் ஒத்த காலத்தவர்களே. ஜைனம் பௌத்தத்தைவிடத் தொன்மை வாய்ந்தது. மஹாவீரர் கி.மு. 599 முதல் கி.மு. 527 வரையில் வாழ்ந்தவர். அவர் ஜைனத்தைத் தோற்றுவித்தவர் அல்லர். மஹாவீரருக்கு 250 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பார்சவரும் மஹாவீரரும் வரலாற்றின்படி உண்மையாக வாழ்ந்தவர்களே.” என்று சமணத்தின் வரலாறு பதிவு செய்யப்பெற்றுள்ளது.

சமண மதத்தில் காட்டப்பெறும் 24 தீர்த்தங்கரர் வரிசை பின்வருமாறு.

1.விருஷபர், 2.அஜிதநாதர், 3.சம்பவநாதர், 4.அபிநந்தனர், 5.சுமதிநாதர் 6. பதுமநாபர், 7.சுபார்சவநாதர், 8.சந்திரப்பிரபர், 9.புஷ்பநந்தர், 10.சீதளநாதர், 11.சிறீயாம்சநாதர், 12. வாசுபூஜ்யர், 13.விமலநாதர், 14.அநந்தநாதர், 15.தருமநாதர், 16. சாந்திநாதர், 17.குந்துநாதர், 18. அரநாதர், 19. மல்லிநாதர் 20. முனிசுவர்த்தர், 21. நமிநாதர், 22. நேமிநாதர், 23. பார்சுவநாதர், 24.மகாவீரர்

இவ்வரிசையில் நிறைவில் உள்ள ஐவர் வரலாற்று காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர். இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் காலம் கி.மு. 817 முதல் கி.மு. 717 என்று கருதப்படுகிறது. மற்ற தீர்த்தங்கரர்கள் அவருக்கு முன்னவர்கள் ஆவர். இதன் காரணமாக சமணசமயம் தொன்மைக் கால சமயம் என்பது தெரியவருகிறது.

சமண சமயத்தின் அடிப்படை பின்வருமாறு. “இந்த உலகம் சீவன், அசீவன் ஆகிய இரண்டனால் ஆயது. சீவனது உண்மையியல்பு முற்றறிவு: பரிபூரண ஞானம். அது தனக்கு நேர்மாறான அசீவத் தொடர்பால் முற்றறிவு கெட்டுச் சிற்றறிவுற்று அல்லற்படுகின்றது. எனவே, சீவன் முயல வேண்டியது முற்றறிவை மீண்டும் எய்துதற்கு. அதனை எய்தின் அல்லல் நீங்கும். சீவனுக்கு அசீவத்தொடர்பு ஏற்படுவதற்கும், அதனால் அறிவு மழுங்குவதற்கும் நேர் காரணம் கன்மம். எனவே, அசீவத் தொடர்பை நீக்கி அறிவே மயமாக வேண்டுமாயின், கன்மத் தளையை நீக்கவேண்டும். இவை தாம் சாதாரணமாகத் தத்துவ ஞானிகள் பலரும் கூறுவதன் சுருக்கமும் சாரமும் ஆகும். சமணத் தத்துவத்தின் சாரமும் இதுவே”. என்று சமணத்தின் தத்துவ அடிப்படை விளக்கப்படுகிறது.

“சரியான நம்பிக்கை, சரியான அறிவு, சரியான நடத்தை ஆகிவற்றின் மூலம் மனிதர்கள் விடுதலை பெற்ற ஆன்மாக்களாகி ஆனந்தமாக வாழலாம். அவர்களுக்கு மறுபிறவி கிடையாது. ஓர் உயிரினம் தனது பல்வேறு பிறவிகளில் செய்த செயல்களின் கர்ம விளைவாகவே பல்வேறு உடல்களில் பிறந்து உழல்கிறது. கர்ம பந்தங்களில் இருந்து விடுதலை பெற்று ஆனந்தப் பெருவெளியில் மற்ற சுதந்திர ஆன்மாக்களுடன் சேருவதே வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். எனச் சமணம் கூறுகிறது” என்ற சமண சமயத்தின் நிறைநிலையான ஆனந்த நிலை விளக்கப்படுகிறது. இவ்வானந்த நிலையைப் பெற பதினான்கு கட்டங்களைக் கடக்கவேண்டியுள்ளது என்றும் சமணம் குறிக்கிறது.

மகாவீரர் சித்தாந்தம், ஆகமம் என்பதை அருளினார். இவரின் வாய்மொழி அருளுரைகளை இவரின் உத்தம சீடர்களான கணதரர் என்றழைக்கப்பெறும் பதினொருவர் தொகுத்தளித்துள்ளனர்.
அவ்வகையில் சமணத்தின் மூலமாக அமைவன
• அங்கம் 12,
• உபாங்கம்-12,
• பிரகீரணம் 10,
• சேதசூத்திரம் 6,
• மூல சூத்திரம் 4,
• நந்தி,
• அனுபோகதாரம்
ஆகியனவாகும்.
இவற்றில் ஆகமம் என்பது புராதனப் பனுவல்கள் எனப்படும். அங்கம் எனப்படுவன முதல் நிலை விதிகளாகும். உபாங்கம் என்பன இரண்டாம் நிலை விதிகள் ஆகும். பலவகைப்பட்டவை ஒன்று சேர்ந்து அமைவது பிகரினகங்கள். சேத சூத்திரம் என்பது ஒழுக்க விதிகள் ஆகும். மூலச் சூத்திரங்கள் என்பவை அடிப்படைச்சட்டங்கள் ஆகும். சமண நூல்கள் முதலில் பிராகிருத மொழியில் எழுதப்பெற்றன. பின்பே வடமொழி உட்பட்ட பிற மொழிகளுக்கு ஆக்கம் செய்யப் பெற்றன.

சமணத்தில் பன்னிரு பனுவல்கள் (அங்கம்) முக்கியமானவை. ஆசாரங்கம், சூத்ர கிருதாங்கம், சமவாயங்கம், வியாக்யா பிரக்ஞாப்தி, ஞாதா தர்ம கதா, உபாசக தாசா, அந்தக்ரித்தசா, அன்னுத்தர உபபாதிக தசா, பிரச்ன வியாகரணா, விபாக சூத்திரம், கிரஸ்திவாதம் ஆகியன அப்பன்னிரு பனுவல்கள் ஆகும்.

உபாங்கமும் பன்னிரண்டு ஆகும். ஒளபாதிக சூத்திரம், இராஜப்பிரஸ்னியா, ஜீவாபிகம சூத்திரம், பிரக்ஞாபனா சூத்திரம், சூரிய பிரக்ஞப்தி, ஜம்புத்வீப பிரக்ஞபதி, சந்திர பிரக்ஞபதி, நிரயாவலிகா, கல்பாவதம்சிகா, புஷ்பிகா, புஷ்பகலிகா, விருஷ்ணிதசா ஆகியன அப்பன்னிரண்டும் ஆகும்.

ஆதுரப்ரத்யாக்யானம், பக்த பரிக்ஞா, சம்தாரா, தண்டுல வைசாரிகா, சந்திரவேத்யகம், தேவேந்திர ஸ்தவம், கணித வித்யா, மகாப் பிரத்யாக்யானம், வீரஸ்தவம் போன்றன பிரகிரணங்கள் ஆகும்.

உத்ராத்யயனம், தசவைகாலிக சூத்திரம், ஆவஸ்யக சூத்திரம், அனுயோகத்வார சூத்திரம், நந்தி சூத்திரம், பிரதமானு யோகம், கரணானுயோகம், சரணானுயோகம், திரவியானுயோகம் போன்றன மூல சூத்திரங்கள் ஆகும்.

ஆசாரதசா, தசாஸ்ருதங்கந்தா, பர்யூஷனகல்பம், பிருகத் கல்பம், வியவகாரா, நிசிம், மகாநிசிதம், பஞ்சகல்பம், ஜிதகல்ப சூத்திரம் ஆகியன சேத சூத்திரங்கள் ஆகும். இவ்வகையில் பெருமளவில் பனுவல்களைக் கொண்ட சமயமாக சமண சமயம் விளங்குகின்றது.

மகாவீரர் முக்திப்பேறடைந்த பின்பு, இந்திரபூதி, சுதர்மர், சம்புசுவாமி, விட்ணுநந்தி, நந்தி மித்திரர், அபராசிதர், கோவர்த்தனர், பத்திரபாகு என்பவர்கள் சமண சமயத்தை வளர்த்தனர். பத்திரபாகு காலத்தில்தான் தமிழகத்திற்குச் சமணம் பரவ ஆரம்பித்தது, இதனை “பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமண சமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி.மு.317 முதல் கி.மு.297 வரையில் சமண சமயத் தலைவராக இருந்தவர். இவர், சமண சமயத் தலைவராக இருந்ததோடல்லாமல், பேர்பெற்ற சந்திரகுப்தன் (கி.மு.322-298) என்னும் மௌரிய அரசனுக்கு மத குருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சாந்தர் காலத்தவன். இந்தியாவை அரசாண்ட அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்” (மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், ப. 50) என்று மயிலை சீனி வேங்கடசாமி வரையறுக்கிறார். இக்குறிப்பில் அசோகர் பின்னாளில் பௌத்த சமய சார்பாளராக மாறியதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சங்க இலக்கியங்களான மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை ஆகியவற்றில் சமணப் பள்ளிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மதுரையில் உள்ள அருகதேவன் கோயில் நல்ல நிழலுடையதாக அமைந்திருந்தது. பள்ளியின் சுவர்கள் பெரிதாக அழகான ஓவியங்கள் தீட்டப்பெற்றதாக அமைந்திருந்தன. பூவும், புகையும் கொண்டு சமணர்களை மக்கள் வழிபட்டனர். முக்காலம் உணர்ந்து உலகத்தாருக்கு அதனைச் சொல்ல சமண முனிவர்கள் நோற்கின்றனர் என்று மதுரைக்காஞ்சி குறிக்கிறது.

“வண்டுபடப் பழகிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமும் நிலனுள் தாமுழுதுணரும்
சான்ற கொள்கைச் சாயா வாழ்க்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார் ‘‘
என்ற பகுதியும்,
‘‘……………….. வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற‘‘
என்ற அடிகளும் மதுரைக்காஞ்சி காலத்தில் இருந்த சமண சமய நிலையை விளக்குவனவாகும்.

பட்டினப்பாலையில் அமண் பள்ளி இருந்த குறிப்பு காணப்படுகிறது. ‘‘தவப்பள்ளி‘‘ என்ற குறிப்பு அதனுள் இடம்பெற்றுள்ளது. இக்குறிப்பு அமண் பள்ளியைக் குறிப்பதாகும்.

மேலும் உலோச்சனார், நிக்கண்டன் கலைக்கோட்டு தண்டனார் போன்ற சங்க காலப் புலவர் பெயர்கள் சமணச் சார்புடையன. இவை தவிர சமணர்களின் வினைக்கோட்பாடு, நிலையாமைத் தத்துவம், வடக்கு இறுத்தல் போன்றவற்றைக் காட்டும் சங்க இலக்கியப் பாடல்கள் பல உள்ளன. இவ்வகையில் மணிமேகலைக் காப்பியத்திற்கு முன்னான சங்க காலத்தில் சமண சமயம் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றிருந்தமை தெரியவருகிறது.

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சமணம், பௌத்தம், உலகாயதம் போன்றவற்றின் கூறுகள் சுட்டப்பெற்றுள்ளன. “திருக்குறளில் சமண மும்மணிகளான நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகியவற்றின் செயன்மை நெறிகள் அமைந்துள்ளதாக” சு.மாதவன் குறிக்கிறார். வள்ளுவம் பிறப்பறுத்தல் என்ற சமணக் கோட்பாட்டையும் எடுத்தியம்புகிறது. நாலடியாரில் உடலின் அளவைப் பொறுத்து உயிரின் அளவு அமையும் என்ற கருத்தும், பழமொழி நானூறில் பிச்சை ஓடு தானம் செய்யும் அறங்கள் செய்யும் முறை பற்றியும், நான்மணிக்கடிகையில் ஆயுள் முடிவடைந்த பிறகு ஏற்படும் இயல்பு மரணம் பற்றியும், சிறுபஞ்ச மூலத்தில் யாக்கை நிலையாமை பற்றியும் ஆன பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய நூல்களின் கடவுள்வாழ்த்துப் பாடல்கள் தீர்த்தங்கரர் வணக்கமாக அமைந்துள்ளன. இக்குறிப்புகள் சமண சமய வளர்ச்சியில் எண்ணத்தக்கனவாகும். நாலடியார் சமண சமயம் சார்ந்த பலரால் எழுதப் பெற்றது. இதன் கடவுள் வாழ்த்துப்பகுதியில், இடம்பெறும் பாடல் பின்வருமாறு.

‘‘வான்ஈடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை- யாம் நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று”
என்ற இப்பாடல் அருக வணக்கமாக அமைகின்றது.

வானவில்லின் வரவையும் போக்கினையும் அறிய இயலாது. அதுபோன்று உயிர்களின் பிறப்பு இறப்பு ஆகியன பற்றியும் எது, எப்போது, ஏன் என்ற நிலைகளில் அறிந்துகொள்ள இயலாது. பாதம் புவியில் பாடாத அளவு பெருமை உடைய அருகக்கடவுளை வணங்கி நாம் எண்ணியதை முடிக்க வேண்டுவோம் என்பது நாலடியாரின் தெய்வ வணக்கம் ஆகும். இந்த அருக வணக்கம் என்பது, தீர்த்தங்கரர்களை வணங்கும் நிலையது ஆகும்.

மேலும் நாலடியாரில் நிலையாமை கருத்துக்கள் பெரிதும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியனவும் வலியுறுத்தப்பெற்றுள்ளன. இவற்றின் வழி சமண சமயக் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
பழமொழி நானூறில் வரும் கடவுள் வாழ்த்து பின்வருமாறு

“அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண் மாஞாலத்து
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது‘‘
என்ற பாடல் பழமொழி நானூற்றின் முன்பகுதியில் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இதில் பெரியதன் ஆவி பெரிது என்று ஒரு பழமொழி எடுத்தாளப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. எனவே இக்கடவுள் வாழ்த்தும் பிறி்தொரு புலவரால் எழுதப்படாது முன்றுறையரையனாராலேயே எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

பெரியதன் ஆவி பெரிது என்ற இந்த உவமை சமணசமயம் சார்ந்த உவமையாகும். சமண சமயத்தில் உடல் பெரியதாக இருந்தால் அதனுள் இருக்கும் உயிரும் பெரியதாக இருக்கும் என்ற கருத்து விளங்குகின்றது. சீவன் அல்லது உயிருக்குப் பருமனும் அளவும் குறிக்கின்றது.

‘‘சமணரது தத்துவம். உயிர் எந்த உடலை தனக்கு உறைவிடமாகக் கொள்கின்றதோ அந்த உடலின் பருமனுக்கு ஏற்பத் தன்னைக் கூட்டவும் குறைக்கவும் விரிக்கவும் சுருக்கவும் வல்லது‘‘ என்ற கருத்தினை மேற்கொண்டு பார்க்கையில் பழமொழிநானூற்றின் கடவுள் வாழ்த்து சமண சமயக் கொள்கைக்கு இடம் தருவதாக இருப்பதை அறியமுடிகின்றது.

பரந்த கடல் சூழ்ந்த உலகில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களையும் கெடுத்துக், குற்றமற்றவராக விளங்கும் இறைவனின் திருவடிகளை அறிந்தவர்களின் உயர்வு பெரிதாகும். அது பெரிய உடலின் ஆவி பெரியதாக அமைவதுபோல் அமையும் என்பது இப்பாடலின் கருத்தாகும். இந்நூலுக்கு ஒரு தற்சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது. இதிலும் இந்நூல் சமணம் சார்ந்தது என்பது தெரிவிக்கப்பெற்றுள்ளது.

“பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப்பழமொழி நானூறும் கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை‘‘
என்ற இப்பாடலில் அசோக மரத்தின் நிழலில் இருக்கும் பெருமான் என்று அருகப் பெருமான் வாழ்த்தப் பெறுகிறார். இவற்றின் வாயிலாகப் பழமொழி நானூறு சமண சமயம் சார்ந்தது என்பது தெளிவாகின்றது. இந்நூல் எழுந்த காலத்தில் சமண சமயத்தின் பரவல் இருந்தது என்பது உறுதியாகின்றது.

சிறுபஞ்சமூலமும் சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்து பின்வருமாறு.

‘முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து – முழுதேத்தி
மண்பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா
வெண்பா உரைப்பான் சில‘‘
என்ற கடவுள் வாழ்த்து காரியாசான் படைத்த, சிறுபஞ்சமூலத்தின் முன்பகுதியில் இடம்பெறுகின்றது.

காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றினையும் ஒழித்து, முழுதுணர்ந்து, முதுமை பெறாத இறைவனின் பாதத்தைக் குற்றமின்றி வணங்கி அப்பெருமானின் குணங்களைப் போற்றி இவ்வுலகத்திற்கு நன்மை உண்டாகும் வண்ணம் சிறுபஞ்சமூலம் என்ற நூலை நான் உரைப்பேன் என்ற ஆசிரியர் கூற்றாகக் கடவுள் வாழ்த்து அமைகின்றது. இதன்வழி இந்நூலின் காலத்திலும் சமணசமயத்தின் பரவல் இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது. ஏலாதி என்ற நூலும் சமண சமயச் சார்புடைய நூலாகும்.

‘‘அறுநால்வர் ஆய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநாலவர் பேணி வழங்கிப் பெறுநூல்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு
இறைபுரிந்து வாழ்தலியல்பு‘‘
என்ற இப்பாடலில் சமண சமய அடிப்படைகள் பல கூறப்பெற்றுள்ளன.

சமண சமயத்தில்தீர்த்தங்கரர்கள்- 24, அவதராங்கள்-24, தேவராசி -4, சக்கரவர்த்திகள் -12, பலதேவர்-9, வாசுதேவர் -9 என்ற கூறுபாடுகள் ஏற்கப்படுகின்றன. இவர்கள் கொல்லாமை முதலான அறங்களை உலகில் பரவச் செய்தவர்கள் ஆவர்., புண்ணிய நூல்களால் உணர்த்தப்படுகின்ற உயர்ந்தோரை எப்போதும் துதி செய்து வாழுங்கள். இறந்தபின் இதற்கு வாய்ப்பில்லை. தேவர்களுக்கு அரசனும் இதனையே செய்து பெரும்பதவி பெற்றான் என்கிறது இப்பாடல்.

ஏலாதி நூலின் ஆசிரியராக விளங்கும் கணிமேதாவியார் பாடிய அகத்துறைப் பாடல் திணைமாலை நூற்றைம்பது ஆகும். இந்நூலும் சமண சமயத்தவரால் எழுதப்பெற்றது என்பதற்கு ஏலாதி சான்றாக அமைகின்றது.

இவ்வாறு சமண சமய நூல்களின் கடவுள் வாழ்த்துகள் அக்கடவுளின் தன்மைகளை, இயல்புகளை, அவர்களின் சுற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது. இதன் காரணமாக பதினெண் கீழ்க்கணக்கு காலத்தில் சமணத்திற்கு உயரிய இடம் இருந்ததை உணரமுடிகின்றது. அதாவது ஏறக்குறைய ஐந்து நூல்கள் என்ற பெரிய எண்ணிக்கை சமண சமயத்தின் ஆளுமை உயர்வை இக்காலத்தில் காட்டுவதாக உள்ளது. இவ்வகையில் சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியம் ஆகிய காலங்களில் தமிழகத்தில் சமணம் பரவலாக மக்களின் புழங்கு சமயமாக இருந்தது என்பதை உணரமுடிகின்றது.

இதனைத் தொடர்ந்து எழுந்த காப்பிய காலத்திலும் சமணச் சார்புடைய பல காப்பியங்கள் படைக்கப்பெற்றன. முத்தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரத்தில் சமண சமயம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. புறநிலைக்கோட்டம் என்ற நிலையில் சமண ஸ்ரீகோயில் இருந்ததைச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது.

“அறவோர் பள்ளியும் அறனோம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத்தானமும்
திறவோர் உரைக்கும் செயல் சிறந் தொருபால்”
என்ற நிலையில் இப்புறநிலைக்கோட்டம், கோயில், சமணத் துறவியர் தங்குமிடம் ஆகியன கொண்டு விளங்கியது. இக்கோட்டத்தில் கவுந்தியடிகளின் தவப்பள்ளி அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. திருவரங்கத்திலும், உறையூரிலும், மதுரையிலும் புறநிலைக் கோட்டங்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிக்கின்றது.

சாரணர் ஒருவர் அருகதேவனின் புகழை அடுக்கி மொழிகிறார். இப்பகுதியில் பலபேர் சொல்லி அருகனை வாழ்த்துகிறார் இளங்கோவடிகள்.
“அறிவன், அறவோன், அறிவு வரம்பு இகந்தோன்,
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்,
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்,
பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்,
தத்துவன், சாதுவன், சாரணன், காரணன்,
சித்தன், பெரியவன், செம்மல், திகழ் ஒளி
இறைவன், குரவன், இயல் குணன், எம் கோன்,
குறைவு இல் புகழோன், குணப் பெரும் கோமான்,
சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன்,
அங்கம் பயந்தோன், அருகன், அருள் முனி,
பண்ணவன், எண் குணன், பாத்து இல் பழம் பொருள்,
விண்ணவன், வேத முதல்வன், விளங்கு ஒளி”
என்ற பாராட்டு மொழிகள் அருகதேவனை வணங்கும் பாமாலையாகும். அடுத்தநிலையில் அருகக் கடவுளின் இயல்பினை ஏறக்குறைய இருபது அடிகளில் இளங்கோ பாடியுள்ளார். இவை தவிர கவுந்தியடிகள் சமண நெறிப் பரப்புநராகவும் விளங்குகிறார். சமணரின் அங்காகமங்கள், சாதகக் கதைகள், மெய்ப்பாட்டியற்கை முதலானவற்றைப் பற்றியும் குறித்துள்ளார். இதன் காணரமாக மணமேகலைக் காப்பியத்திற்கு முன்னதான சிலப்பதிகார காலத்தில் சமண சமயம் எழுச்சி நிலையில் விளங்கியது என்பது தெரியவருகிறது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவசமயத் தொன்மை – பாகம்-3”

அதிகம் படித்தது