மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவ சமயத் தொன்மை

முனைவர் மு.பழனியப்பன்

Jan 9, 2021

siragu uyiriyal5
தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் தமிழின் பழமையான பனுவல்கள் ஆகும். இவற்றில் பல இடங்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் கடவுள் என்ற சொல் காணப்படுகிறது.

‘‘காமப்பகுதி கடவுளும் வரையார்’’ என்று தொல்காப்பியர் கருதும் கடவுள் முழு முதற் கடவுள் என்று கொண்டால் அவர் சிவபெருமான் என்று கொள்வது பொருத்தமானதாகும்.

‘கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே’

என்ற தொல்காப்பிய நூற்பாவிலும் கடவுள் என்ற சொல் பயின்று வந்துள்ளது. இவை அனைத்தும் சிவபெருமானைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மற்றொரு இடத்தில்,

‘வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப
பழிதீர் செல்வமொடு வழி வழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே’

என்ற நூற்பா இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள வழிபடு தெய்வம் என்ற சொல் வழிபடக் கூடிய தெய்வம் உண்டென்று சொல்வதன் காரணமாக அது சிவபெருமானைக் குறித்தது என்று கொள்ளமுடிகின்றது.

இவ்வாறு தொல்காப்பிய காலத்தில் தெய்வம், கடவுள் என்ற பொதுப்பெயர்கள் அக்காலத்தில் வழிபடு தெய்வமாக இருந்த சிவபெருமானைக் குறித்தது என்று முடிவு கொள்ளவேண்டியுள்ளது.

சங்க இலக்கியங்களில் சிவன் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு.

“நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக‘‘
என்ற சங்க இலக்கியப் பகுதியில், நெடியோன் என்று சிவபெருமான் குறிப்பிடப் பெறுகிறார்.

‘‘இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல…….’’.

என்று கலித்தொகையில் இராவணனை வென்ற புராணச் செய்தி குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு பல நிலைகளில் சிவன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.‘‘ நீல மணி மிடற்று ஒருவன் போல ’’ என்று புறநானூற்றில் ஆலகால விடம் உண்டதன் வாயிலாக மிடறு நீல நிறமானதைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

சிலப்பதிகாரத்தில் அதிக அளவில் சைவ சமயம் பற்றியும் சிவ பெருமான் பற்றியும் ஆன குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ‘‘பிறவா யாக்கைப் பெரியோன்’’ என்று சிவபிரானைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. சிவ வழிபாடு பற்றிய செய்திகளும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. சிவ வழிபாட்டின் வழியாகப் பெறப்பெற்ற வில்வத்தினைத் தன் தலையில் சூடினான் சேரன் செங்குட்டுவன் என்று குறிக்கிறார் இளங்கோவடிகள்,

‘நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு’

என்ற சிலப்பதிகார அடிகள் சிவ வழிபாட்டு முறையை எடுத்துரைப்பதாக உள்ளது. சிவபிரான் ஆடிய கொடிகட்டிக் கூத்து பற்றிய செய்திகளும் சிலப்பதிகாரத்தில் காட்டப்பெற்றுள்ளன.

‘‘சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,’’

என்ற நிலையில் திரிபுரம் எரித்த கடவுள் தேவர்கள் வேண்ட, உமையவள் தாளம் இசைக்கக் கொடிகட்டி என்ற வகையான ஆடலை ஆடினான் என்பது இவ்வடிகள் தரும் செய்தியாகும். மற்றொரு இடத்தில் இவ்வாடலின் திறத்தை வியக்கிறார் இளங்கோவடிகள்.

‘‘திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;
பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்’’

என்று சிவன் ஆடிய கூத்தின் திறம் வியக்கப்பெறுகிறது. மேலும் சிவபெருமானின் மகன் முருகன் என்ற குறிப்பும் சிலப்பதிகாரத்தில் காட்டப்பெறுகிறது. அப்பகுதி பின்வருமாறு.

‘கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்
அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே’’

இவ்வாறு சிவபிரான் பற்றியும் அவனை வழிபடும் முறை பற்றியும் அவனின் ஆடல் பற்றியும், அவனின் மகன் பற்றியுமான பல செய்திகளைச் சிலப்பதிகாரம் வழங்குகிறது.

இதன் காரணமாக சிலப்பதிகார காலத்தில் சைவ சமயமும் உயர்நிலையில் இருந்தது என்பது தெரியவருகிறது. இருப்பினும் சைவ சமயம் சார் தத்துவங்கள், கொள்கைகள் ஆகியன மணிமேகலைக் காப்பிய காலத்திற்குப் பின்புதான் எழுந்தன என்பதும் இங்குக் குறிக்கத்தக்கது.

வைணவம்

வேதங்கள், இதிகாசங்கள், பகவத்கீதை ஆகியவற்றில் முழுக்க முழுக்க திருமாலை முன்வைத்த வைணவ சமயச் செய்திகள் காணப்படுகின்றன. வைணவத் தத்துவ வளர்ச்சியில் மிகவும் அண்மைக் காலத்தில் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்பன உருவாக்கப்பெற்றன. என்றாலும் தொடக்க காலத்தில் மூன்று வைணவ தத்துவங்கள் இருந்துள்ளன. அவை தத்துவம், இதம், புருஷார்த்தம் என்பனவாகும்.

இவற்றுள் தத்துவம் என்பது மூன்றாக அமைவது. சித்து. அசித்து, ஈசுவரன் ஆகியன கொண்டது. இதனைத் தத்துவத்திரயம் என்பர். இதம் என்பது வீடுபேற்றிற்காக கடைபிடிக்கப்படும் வழியாகும். இது இருவகைப்படும். பக்தி, பிரபக்தி என்பன அவையிரண்டும் ஆகும்.

பக்தி நெறி என்பது கடினமானது. வீடுபேறு அடையும் வரை கடைபிடிக்கப்பட வேண்டியதுபக்தி நெறியாகும். பிரபக்தி நெறி என்பது ஆண்டவனித்தில் தன்னைச் சரணாகதி அடைவித்துக் கொள்வதாகும். இந்நிலை உயிர்களுக்குக் கடைபிடிக்க எளிமையானது. உயிர்கள் தம்மைத் திருமாலிடம் அடைக்கலப்படுத்திய பிறகு அனைத்தும் அவன் செயல், அவன் இயக்கம் என்று செயல்பட இயலும். புருஷார்த்தம் என்பது பரமபதநாதனுக்கு அடிமைத் தொழில் புரிவது, அதன் காரணமாக எம்பெருமான் மகிழ்தல் ஆகியன கொண்டதாகும். இவ்வாறு வைணவத் தத்துவங்கள் முளைவிடும் நிலையில் மணிமேகலை காப்பியகாலத்திற்கு முன்பாக வைணவ வளர்ச்சி இருந்தது.

தமிழகச் சூழலில் வைணவம்

தொல்காப்பியம் முல்லை நிலத் தெய்வமாக வைணவக் கடவுளாக ஏற்றப்பெறும் திருமாலைக் காட்டுகிறது. “மாயோன் மேய காடுறை உலகம்” “மாயோன் மேய மண்பெருஞ்சிறப்பில்’’ என்று தொல்காப்பியத்தில் மயோனாகிய திருமால் பற்றிய குறிப்புகள் உள்ளன.

சங்க இலக்கியங்களில் முல்லைத் திணை சார்ந்த பாடல்களில் பல வைணவக் கருத்துகள் பரவிக்கிடக்கின்றன. திருமாலின் நீல நிறம் பற்றிய குறிப்புகள் பதினாறு இடங்களில் இருப்பதாக கு.சுந்தரமூர்த்தி காட்டுகிறார். பரிபாடலில் திருமால் பற்றிய பாடல்கள் பல அமைந்துள்ளன. பரிபாடலின் முதற்பாடல் திருமாலின் உருவ அழகை விவரிக்கிறது.

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை-
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

என்பது திருமாலின் உருவ அழகைச் சிறப்பிக்கும் பாடலாகும்.

பரிபாடலில் பதிமூன்றாம் பாடலிலும் திருமால் உருவ அழகு காட்டப்பெற்றுள்ளது. வைணவத்தில் அவதாரம் என்பது முக்கியமானதாகும். திருமால் பத்து அவதாரங்களை எடுத்து உலகைக் காத்தார் என்ற கருத்து வைணவத்தின் உயிர்க்கருத்தாகும். ஒன்பது அவதாரங்களைப் பற்றிய செய்திகள் பரிபாடல், கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவற்றில் குறிக்கப்படுகின்றன. இராமாவதாரம் பற்றிய செய்திகள் பல சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.

‘கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு’
என்று இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது விட்டெறிந்த அணிகலன்களைக் குரங்குகள் அணிந்த நிலையைப் பாடுகிறார் ஊண்பொதி பசுங்குடையார்.

இராமனின் மந்திராலோசனை நடைபெற்ற நிலையைப் பின்வரும் அகநானூற்றுப் பாடல் காட்டுகிறது. பின்வரும் அப்பாடலைப் பாடியவர் கடுவன் மள்ளனார் ஆவார்.

“ ‘வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே’
இவ்வாறு இராமாயணச் செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கருடக்கொடி, சக்கர ஆயுதம் துளசி மாலை போன்ற பல திருமால் பற்றி குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. மகாபாரதச் செய்திகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. முல்லைக் கலியில் பாரதப் போர்க்களம் உவமையாக்கப்பெற்றுள்ளது. மேலும் வீமன் வீரம், துச்சாதனின் அடாத செயல், பரசுராமன் பற்றிய குறிப்பு போன்றனவும் குறிக்கப்பெற்றுள்ளன.

அம் சீர் அசைஇயல் கூந்தற் கைநீட்டியான்
நெஞ்சம் பிளந்துஇட்டு நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்’’
என்ற பாவடிகளில் பாஞ்சாலி கூந்தல் கைநீட்டி இழுக்கப்பெற்ற வரலாறு காட்டப்பெறுகிறது. இவ்வாறு சங்க இலக்கிய காலத்தில் திருமால் திணைத் தெய்வமாகப் போற்றப்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி அவரின் அவதாரங்கள் பற்றிய குறிப்பும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பது குறிக்கத்தக்க செய்தியாகும்.

அற இலக்கியங்களில் அகம் சார் முல்லைப்பாடல்களில் திருமால் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. பழமொழி நானூறில் இராமாயணச் செய்தி உள்ளது. இலங்கை அரசன் இராவணனின் தம்பி வீடணன். இவன் இராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.

‘‘பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல் “
என்ற பாடலில் இராமயணக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

அற இலக்கியங்களில் குறிக்கதக்கதான திருக்குறளில் பல இடங்களில் திருமால் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தாமரைக்கண்ணான் உலகு (1103) என்று திருமாலின் கண்ணழகு குறிக்கப்படுகிறது.

‘‘மடியிலா மன்னவன் எய்தும், அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு’’

என்ற குறளில் அடியளந்த திருமாலின் வாமன அவதாரம் காட்டப்பெறுகிறது. தொடர்ந்து சிலப்பதிகாரத்தில் திருமால் பற்றியும், அவர் சோ அழித்தது பற்றியும் பாற்கடல் கடைந்தது பற்றியும் ஆன குறிப்புகள் கிடைக்கின்றன. ஆய்ச்சியர் குரவையில் திருமால் பற்றிய பல செய்திகள் குறிக்கப்பெற்றுள்ளன. மாபாரதச் செய்திகளும் இதனில் இடம்பெற்றுள்ளன.

கதிர் திகிரியான் மறைத்த கடல்வண்ணன் இடத்துளான்
மதிபுரையும் நறுமேனித் தம்முளோன் வலத்துளான்

இப்பகுதியில் மகாபாரதத்தில் கண்ணன் சூரியனைச் சக்கரத்தால் மறைத்த கதை கூறப்படுகிறது.

‘‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருவன் கடல் வயிறு கலக்கினையே‘‘
என்பதும்,
‘‘மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடிய
தாவிய சேவடி செப்பத் தம்பியுடன் கான்புகுந்து
சோவரணம் போய் மடியத் தொல்லிலங்கை கட்ழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே ‘‘
என்பதும்
‘‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னாத நாவென்ன நாவே‘‘

என்பதும் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் திருமால் பற்றிய குறிப்புகள் ஆகும். இவ்வாறு வைணவம், மணிமேகலைக் காப்பியம் எழுவதற்கு முந்தைய கால நிலையில் சமய அளவில் மிகப்பெரும் இடத்தைப் பெற்றிருந்தது என்பது மேற்கண்ட சான்றுகளின் வழியாகத் தெரியவருகிறது

சாங்கியம்

சாங்கிய சமயம் பற்றிய கருத்துகள் உபநிடதங்களில் உள்ளன என்பதால் அச்சமயம் பழமை வாய்ந்தது என்பது அறிஞர்களின் பொதுமுடிவு. பகவத்கீதையில் சாங்கியம், யோகம் ஆகியன பற்றிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. சாங்கியத்தை ஷட் தரிசனங்கள் ஆறனுள் ஒன்றாகக் கருதுவது இந்திய மரபாகும். சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வமீமாம்சை, உத்தர மீமாம்சை என்ற ஆறும் ஷட் தரிசனங்கள் ஆகும். கால அளவில் புத்தருக்கும், கீதைக்கும் முந்தையதாக சாங்கியம் கருதப்பெறுகின்றது.

சாங்கியத்தை நிறுவியவர்

சாங்கியத்தை நிறுவியவர் கபில முனிவர் ஆவார். இவரின் காலம் கி.மு. 72 என்று கணக்கிடப்பெறுகிறது. இவர் சாங்கிய சூத்திரம் என்பதனைப் படைத்தார். கபிலரின் சீடர்களாகக் கருதப்பெறுபவர்கள் ஆசூரி, பஞ்சசீகர் ஆகியோர் ஆவர். பஞ்சசீகர் தன் சீடர்களான கார்க்கிக்கும், உலுகருக்கும் சாங்கியக் கொள்கைகளை அறிவித்தார். இவ்வாறு வழி வழியாக வந்த சீட மரபினரும் சாங்கிய தத்துவங்களை விவரித்து நூல்கள் படைத்தனர். ஆனால் அவை தற்போது கிடைக்கவில்லை.

ஈஸ்வர கிருஷ்ணர் என்பவர் எழுதிய சாங்கிய காரிகை என்ற நூல் மட்டுமே தற்போது சாங்கியத்தைப் பற்றி அறியக் கிடைக்கும் பனுவல் ஆகும். இவை தவிர சாங்கியத் தத்துவ கௌமுகி என்பதை வாசஸ்பதி என்பவர் எழுதியுள்ளார். யுக்தி தீபிகை என்றொரு நூலும் சாங்கியத்தைப் பற்றி அறிவிக்கிறது. சாங்கிய பிரவசன சூத்திரம் என்ற நூலும் அதற்கு விஞ்ஞான பிட்சு என்பவர் எழுதிய பாஷ்யமும் சாங்கியக் கருத்து வளர்ச்சிகளை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவுகின்றன.

சாங்கிய தத்துவங்கள்.

சாங்கியம் இருபத்து ஐந்து தத்துவங்களைக் குறிப்பிடுகிறது. இத்தத்துவங்களின் அடிப்படை இரண்டு ஆகும். ஒன்று பிரகிருதி, மற்றொன்று புருடன். பிரகிருதியைப் பிரபஞ்சத் தோற்றத்தின் முதற் காரணம், மூல காரணம் எனக் கொள்கிறது சாங்கியம். புருடன் என்பது மாறாத நிலை பெறுகின்ற ஆன்மா என்று கொள்கிறது சாங்கியம். ஆன்மா என்பது ஓர் அகக்காட்சிப் பொருள். மஹத் (புத்தி), அகங்காரம், மனம், ஞானேந்திரியங்கள் (5), கர்மேந்திரியங்கள் (5), தன்மாத்திரைகள்(5), பஞ்ச பூதங்கள்(5) என்ற நிலையில் இருபத்தைந்து தத்துவங்கள் அமைகின்றன. இவை தற்போது சைவ சித்தாந்தத் தத்துவங்களுக்குள் கொள்ளப்பெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

சாங்கியத்தின் மற்றொரு முக்கியமான கொள்கை சத்காரியவாதம் என்பதாகும். “ஒரு பொருள் உருவாகி பல மாற்றங்களோடு அளவிலும் அமைப்பிலும் வேறுபாடுகளோடு தோற்றமளிக்கின்றன. குடம்,மரம், சேலை, நாற்காலி போல பல பொருள்கள் நாம ரூபங்களோடு காட்சி தருகின்றன. நாம் காணும் இப்பொருள்கள் உருவாகவும் அதன் பண்புகள் வெளிப்படுவதும் மூல காரணத்திலேயே அடங்கிக்கிடக்கிறது” என்பது சத்காரிய வாதமாகும்.

தமிழகத்தில் சாங்கிய சமயம்

தொல்காப்பியத்தில் காணப்படும் உயிர்க்கொள்கை சாங்கிய வயப்பட்டதாகும்.
“ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே,
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே!
நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினர்‘‘
என்ற தொல்காப்பிய நூற்பா தன்மாத்திரைகள், ஞானேந்திரியங்கள் ஆகியவற்றை முறைமைப் படுத்தி மனம் என்ற ஒன்றைக் காட்டுகிறது. இது சாங்கிய வயப்பட்டது ஆகும். சங்க இலக்கியங்களிலும் இக்கூறுகள் பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. சாங்கியரின் பரிணாமக் கோட்பாடு பரிபாடலில் பயின்று வந்துள்ளது.

“பாழ் எனக் கால் எனப் பாகு என ஒன்றென
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்துஎன
ஆறு என ஏழ் என எட்டு எனத் தொண்டு என
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை”
என்ற பாடலில் சாங்கிய எண் திறம் காட்டபெற்றுள்ளது. சாங்கியம் என்றால் எண்ணுதல் என்று பொருள்படும். அவ்வகையில் ஒன்று முதல் தொண்டு (ஒன்பது என்பதின் மறுவடிவம்) வரை இப்பாடலில் எண்ணப்பெற்றுள்ளது. மேலும் பாழ், கால், பாகு, ஒன்று முதல் ஒன்பது வரை ஆகிய பன்னிரு சொற்களும் சாங்கியத் தத்துவ நிலையில் உள்ள இருபத்தைந்து தத்துவங்களின் முன்னை நிலையினவாகக் கருதப்பெறும். பாழ் என்ற சொல்லும் தொண்டு என்ற சொல்லும் மூலப் பிரகிருதிக்கு உரியனவாகும். மற்ற பத்தும் இருபத்து மூன்று தத்துவநிலைகளின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதாகும்.

இப்பாடலில் குறிக்கப்பெற்ற பாழ் என்பது மூலப் பிரகிருதி என்று கொள்ளத்தக்கது. கால் என்பது ஐம்பெரும் பூதங்கள் பற்றியது. பாகு என்பது தொழில் கருவிகளான கன்மேந்திரியங்களைப் பற்றியதாகும். ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்கள்; ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்ற தன்மாத்திரைகளை உணர்த்தும் எண் குறியீடாகும். இவ்வாறு சாங்கியத் தன்மை பரிபாடலில் அமைந்துள்ளது.

பரிபாடலில் அமைந்துள்ள பதிமூன்றாம் பாடலில் சாங்கிய எண்திறம் உரைக்கப்பெறுகிறது. இப்பாடலைப் பாடியவர் நல்லெழுநியார் ஆவார். இவரும் எண்ணும் திறம் சாங்கிய வயப்பட்டது.
‘‘சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்!
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே:
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்‘‘
என்ற பகுதியில் சுவை,ஒலி, ஒளி, ஊறு, நாற்றம் ஆகிய தன்மாத்திரைகள் நீயே, அவற்றை அறிந்து கொள்ளும் அறிகருவிகள் (ஞானேந்திரியங்கள்) நீயே, ஐம்பூதங்களும் நீயே என்று சாங்கியத் தத்துவ அடிப்படை இப்பாடலில் காட்டப்பெறுகிறது.

இவ்வகையில் சங்க இலக்கியத்தில் சாங்கியக் கருத்துகள் பரவியிருப்பதை உணரமுடிகின்றது. தொடர்ந்து எழுந்த அற இலக்கிய வகைமைகளிலும் சாங்கியக் கூறுகள் காணப்பெறுகின்றன. அறநூல்களில் ஒன்றான திருக்குறளில் சாங்கியக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

“சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு”

என்ற குறளில் தன்மாத்திரைகளின் வகை தெரிந்தவன் உலக இயல்பு அறிந்தவன் என்கிறார் வள்ளுவர். இதற்கு உரை வரைந்த பரிமேலழகர் சாங்கிய நிலையில் இதற்கு உரைவிளக்கம் செய்துள்ளார்.

“சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை – சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு – ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்.

அவற்றின் கூறுபாடு ஆவன பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். ‘வகைதெரிவான் கட்டு’ என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவி ஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ்விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.” என்ற பகுதியில் சாங்கிய நூலுள் ஓதியவற்றால் எனக் குறிக்கிறார் பரிமேலழகர்.

இவ்வுரையில் இருபத்தைந்து தத்துவங்களும், புருடன் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக திருக்குறள் படைத்த காலம் முதல் பரிமேலழகர் உரை எழுதிய காலம்வரை சாங்கியம் உயிர்ப்புடன் தமிழகத்தில் விளங்கியது என்று அறியமுடிகிறது.

சிலப்பதிகாரத்தில் சாங்கிய சாயல் மிக்க கருத்துக்கள் இடம்பெற்றள்ளன. கோவலன் கண்ணகியைப் பாராட்டும் முறைமை சாங்கிய வயப்பட்டதாக உள்ளது. மாசறு பொன்னே (ஒளி) வலம்புரி முத்து (ஊறு), காசறு விரையே (நாற்றம்) கரும்பே(சுவை), தேனே (ஒலி) என்பன தன்மாத்திரைகளின் அடிப்பபடையில் பாரட்டும் பாரட்டுமுறை உடையதாகும். இவ்வாறு மணிமேகலை காலத்திற்கு முன்பாக சாங்கிய சமயம் தமிழகத்தில் பரவியிருந்தமையை இச்சான்றுகள் காட்டுகின்றன.

வைசேடிகம்

வைசேடிகம் இருவகை கால எல்லையை உடையதாக உள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டு அளவில் எழுந்த வைசேடிகத்தை முன்னையது என்றும், கி.பி. 12 ஆம் நூற்றாண்டளவில் எழுந்த வைசேடிகத்தை பிந்தையது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கொள்கின்றனர். முந்தைய வைசேடிகத்தை வளப்படுத்தியவர்கள் கௌதமர், கணாதர் ஆகியோர் ஆவர். பின்னைய வைசேடிகத்தை வளப்படுத்தியவர் காங்கேசர் ஆவார்.
“வைசேடிகம் பௌதிகத்தையும், புலன் இறந்த மெய்ப்பொருள் இயல் ஆய்வையும் தலைமையாகக் கொண்டதாகும்” என்பது வைசேகடி சமய மரபை உணர்த்தும் கருத்தாகும்.

வைசேடிக நூல்கள்

வைசேடிகத்தின் அடிப்படை நூல் கணாதர் எழுதிய வைசேடிக சூத்திரம் ஆகும். இராவணன் இந்நூலுக்கு உரையெழுதியதாக ஒரு குறிப்பு கிடைக்கிறது. ஆனால் அவ்வுரை தற்போது கிடைக்கவில்லை. பிரஸாஸ்த பாதர் என்பவர் இந்நூலுக்கு எழுதிய “பதார்த்த தர்ம சங்கிரகம்” என்பது குறிக்கத்தக்கதாகும். இது ஓர் உரைநூல் என்ற கருதப் பெற்றாலும் தனி நூல் போன்று வைசேடி நெறிகளை எடுத்துரைக்கிறது. இந்நூலை விரித்து உரைக்கும் நி்லையில் மூன்று நூல்கள் எழுந்தன.
1. வியோம சிவம் எழுதிய வியோமவதி,
2. ஸ்ரீதரதர் எழுதிய நிய்ய கந்தலி,
3. உதயணர் எழுதிய தீரணாவலி
ஆகியன அவையாகும். இதனைத் தொடர்ந்து எழுந்த, சிவாதித்தரது சப்தபதார்த்தமும், வல்லபாச்சாரி எழுதிய நியாய லீலாவதியும் இச்சமய நூல்களில் குறிக்கத்தக்கனவாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவ சமயத் தொன்மை”

அதிகம் படித்தது