மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவ சமயத் தொன்மை – பாகம்-2

முனைவர் மு.பழனியப்பன்

Jan 23, 2021

siragu manimegalai2

வைசேடிக சமயக் கருத்துகள்

வைசேடிகம் பௌதீகப் பாங்குடையது. உலகப் பொருள்களை பதார்த்தம் என்று வைசேடிகர் அழைப்பர். இப்பதாரத்தங்கள் ஏழு ஆகும். அவை திரவியம், குணம், கருமம், சாமானியம், விஷேசம், சமவாயம், அபாவம் என்பனவாகும்.

திரவியம் ஒன்பது வகைப்படும். அவை மண், நீர்,தீ, காற்று, ஆகாயம், காலம், திசை, ஆன்மா, மனம் ஆகியன என்பது முன்னரே குறிக்கப்பட்டது.
குணங்கள் என்பன பதினேழு ஆகும். உருவம், சுவை, மணம், ஊறு, எண், பரிமாணம், தனித்துவம், சமயோகம், விபாகம், பரத்துவம், அபரத்துவம், புத்தி, சுகம், துக்கம், பற்று, வெறுப்பு, முயற்சி என்பனவாகும்.

கருமம் என்பது, மேலெழுதல், கீழேவிழல், சுருங்குதல், விரிதல், கமனம் என்பனவாகும். சாமானியம் என்பது மரம் போன்ற பொதுமைப் பண்பு குறித்தது. விஷேசம் என்பது முன் சொன்ன பொதுமைக்கு எதிரானது. சிறப்பான இத்தத்துவமே வைசேடிகம் என்ற பெயரை இம்மதம் பெறக் காரணமாகியது.

சமவாயம் என்பது தொடர்பு பற்றியது. பொருள்களுக்கு இடையேயான தொடர்பு இழைகளைப் பல நிலைகளில் காண்கிறது வைசேடிகம். ஆடைக்கும் நூலுக்கும் உள்ள தொடர்பு, நீருக்கும் குளிர்மைக்கும் உள்ள தொடர்பு, பூமிக்கும் பூமிச் சுழற்சிக்கும் உள்ள தொடர்பு, பசுமந்தைக்கும் தனிப்பசுவிற்கும் உள்ள தொடர்பு, பரமாணு ஆகாயம் ஆகியவற்றுக்கான தொடர்பு என்று வைசேடிகர் காட்டுகின்றனர்.

அபாவம் என்ற பதார்த்தம் இன்மை பற்றியதாகும். இது பிராகபாவம், பிரத்வம்சாபாவம், அத்தியன்தா பாவம், அன்னயோன்யா பாவம், சாமயிகா பாவம் என்ற ஐவகைப்படுகிறது. இவற்றை முறையே முன் இன்மை, அழிவுபாட்டின்மை, முற்றிலுமின்மை, வேறுபாட்டுறவின்மை, காலத்து இன்மை என்பதாகக் கொள்ளலாம்.

இன்ப துன்பம் அற்ற பேரின்பத்தை அடைவதே வைசேடிகரின் நோக்கமாகும். நலமும் வீடுபேறும் தருவது தருமம் என்று அது வீடுபேற்றின் இயல்பினைக் குறிப்பிடுகிறது

தமிழகச் சூழலில் வைசேடிகம்

திருக்குறளில் வைசேடிகக் கருத்துகள் இருப்பதாக பரிமேலழகர் குறிக்கிறார். வைசேடிகக் கருத்து பின்வரும் குறளில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையாது அற்று
என்ற குறளுக்குப் பொருள் தரவந்த பரிமேலழகர்

“சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு – சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கட் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல், நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – நிலத்தின்கண் அறைந்தவன் கை அந்நிலத்தை உறுதல் தப்பாதவாறு போலத் தப்பாது என்று பொருள் விளக்கம் செய்கிறார்.

மேலும் குணம் என்பதைப் பொருளாக எவ்வாறு கொள்ள இயலும் என்ற வினா எழும் என்பதால் அதற்கு விடை தரும் நிலையில் குணம் என்பதற்கு வைசேடிகர் கொண்ட பொருளைக் காட்டுகிறார். “வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பனவற்றை அறுவகைப் பொருள் என்றாற் போல ஈண்டுக் ‘குணம்’ ‘பொருள்’ எனப்பட்டது” என்று சொற் பொருள் விளக்கம் செய்கிறார். “.விசேஷம் என்னும் பதார்த்தத்தை (கணாதரது நியாய மதத்தை)அங்கீகரித்தவர் வைசேடிகர்” என்ற குறிப்பும் இக்குறளுக்கு அளிக்கப்பெற்றுள்ள நிலையில் திருக்குறள் காலத்தில் வைசேடிக சமயக் கருத்துகள் இருந்தன என்பதை அறியமுடிகிறது. இதற்கு அடுத்த நிலையில் மணிமேகலையில் வைசேடிகம் பற்றிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. .

பிரமவாதம்

மணிமேகலைக் காப்பியத்திற்கு முன்பாக ஓரளவே அறியப்பெற்ற சமயமாக விளங்கியது பிரமவாதம் ஆகும். இவ்வுலகம் பிரம்மன் ஈன்ற முட்டை என்ற கருத்தை உடையது பிரமவாத மதம் என்கிறார் சீத்தலைச் சாத்தனார். கீரீடாப் பிரமவாதம், சத்தப்பிரம வாதம் என இது இரு பிரிவுகள் உடையதாக அறியப்படுகிறது. குறிப்பாக இம்மதம் வேதாந்தத்தின் கிளை மதாமாகக் கொள்ளத்தக்கதாகும்.

சங்க இலக்கியங்களில் பிரம வாதம் சார்ந்த கருத்துகள் காணப்படுகின்றன. “தெய்வ பிரமம் செய்குவோரும்” என்ற குறிப்பு கலித்தொகையில் கிடைக்கிறது. இதனை பிரமவீணை என்று உரையாசிரியர்கள் குறிக்கின்றனர். இக்குறிப்பு சமயம்சார் குறிப்பாகவும் கொள்ளத்தக்கதாகும்.  இவ்வகையில் மெல்லிய நிலையில் பிரம்மம் என்ற சமயம் மணிமேகலை காப்பிய காலத்திற்குமுன்பு விளங்கியது என்பது தெளிவாகின்றது.
இவ்வாறு வேதச்சார்புடைய நெறிகள் மணிமேகலை காப்பியகாலத்திற்கு முன்பு வளர்ந்திருந்தன என்பதை உணரமுடிகின்றது.

வேதங்களைப் புறக்கணித்த நெறி

வேத நெறிகளை மறுத்த, வேத மரபுகளை விவாதத்திற்கு உள்ளாக்கிய, வேதக் கருத்துகளைப் புறக்கணித்த இந்தியத் தத்துவ மரபு ஒன்றும் காலந்தோறும் நிலவி வந்துள்ளது. சிந்துவெளி நாகரீக காலத்திலும், வேத காலத்திலும் வேதத்தை மறுத்த சிந்தனைகள் இருந்துவந்துள்ளன. இச்சிந்தனைகளை சாருவாகம், உலகாயதம் என்ற பெயரால் அழைத்தனர். பொருளே முதல் என்ற கொள்கையினை உடையவர்கள் சாருவாகர் ஆவர். வேத நெறி கடவுள் என்ற கருத்தையே முதலாகக் கொண்டது. அஜிதகேச கம்பலின், பாயாசி, பாகுதி, சாந்திரஷிதா ஆகியோர் சாருவாகக் கொள்கையின் முன்னோடிகளாகக் கொள்ளத்தக்கவர்கள் ஆவர்.

சாருவாகத்திற்குப் பல பெயர்கள் உண்டு. பார்ஹஸ்பத்யம், உலகாயதம், நாத்திக மதம், விதண்டாவாதம், பூதவாதம் என்பன அவற்றில் குறிக்கத்தக்கனவாகும். மணிமேகலை குறிக்கும் பூதவாதம் இதுவோயாகும்.

பிரகஸ்பதி என்பவரால் எழுதப்பெற்ற நூல் பிகற்பதி சூத்திரம் என்பதாகும். இது உலகாயதக் கருத்துக்களை உள்ளடக்கியது. பிரகஸ்பதி ஏற்படுத்தியதால் இவ்வகை பார்ஹஸ்பத்யம் எனப்படுகிறது. கி.மு 300 அளவில் பாகுரீ என்பவர் இயற்றிய உலகாயத சரித்திரம் என்பது மக்களால் நன்கு அறியப்பெற்றிருந்தது. மக்களால் நன்கு அறியப்பெற்றது என்பதே உலகாயதத்தின் பொருள். பிரகற்பதியின் சீடர் சார்வாகன் என்பவர் பரப்பியதால் இம்மதத்திற்கு சார்வாகம் என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கருதப்பெறுகிற்து. கடவுள் இல்லை என்ற கருத்தினை இம்மதம் காட்டுவதால் இது நாத்திக மதம் எனப்படுகிறது. காகம் வெள்ளை என்று சாதிக்கும் நிலையில் இதனை விதண்டாவாதம் என்றும் குறிக்கலாம். உலகத் தோற்றத்திற்குக் காரணமான நான்கு பூத இயல்புகளை விளக்கும் கொள்கை இதுவானதால் இதனைப் பூதவாதம் என்றும் குறிக்கலாம்.

மேலும் இக்கொள்கை சார்ந்தோரைத் தேகாத்துமவாதிகள், இந்திரியாத்துமவாதிகள், மனோ ஆத்துமவாதிகள், அந்தக் கரண ஆத்துமவாதிகள் என்றும் குறிப்பிடும் முறைமையும் இருந்துள்ளது.

பொருள்முதல் வாதத்தை மையப்படுத்துவதாகச் சாருவாகம் அமைந்துள்ளது. இச்சிந்தனையின் அடிப்படையில் சமணம், பௌத்தம், அசீவகம் ஆகியன ஊக்கம் பெற்றன. கி.மு மூன்றாம் நூற்றாண்டு அளவில் மக்களால் அறியப்பெற்ற நெறியாக உலகாயுதம் விளங்கியது என்றால் அதற்கு முன்னதாகவே அதனுடைய தோற்றமும் வளர்ச்சியும் அமைந்திருக்கவேண்டும் என்ற நிலையில் வேத காலத்திற்கு இணையாக வேதத்திற்கு முரணான கருத்துகளின் ஊற்றாக சாருவாகம் விளங்கியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகின்றது.

இதுவரை இந்திய அளவிலான உலகாயத வளர்ச்சி எடுத்துரைக்கப்பெற்றது. இனி தமிழகம் சார்ந்த மணிமேகலை காப்பிய காலத்திற்கு முன்னதான உலகாயத வளர்ச்சி நுண்மையாக எடுத்துக்காட்டப்பெறுகிறது.

தமிழ்ச்சமுதாயத்தில் உலகாயுத கருத்துகள் தொல்காப்பியம் முதலாக இக்கால இலக்கியங்கள் வரை பயின்று வந்துள்ளன. இது குறித்து சோ. ந. கந்தசாமி இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலில் விரிவாக உரைத்துள்ளார்.
“நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
என்ற நூற்பாவில் பூத இயல்பு சுட்டப்பெறுகிறது. இந்தப் பூதச்சேர்க்கை பற்றிய கருத்து உலகாயுதச்சார்புடையது என்று கொள்ளத்தக்கது. சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில் உலகாயத கருத்துகள் காணப்படுகிறது.

“நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துடன் இயற்றிய‘‘
என்ற பாடலடிகளில் படைப்புக் கோட்பாடு காட்டப்பெற்றுள்ளது.
புறநானுற்றுப் பாடலொன்றில் வேதநெறி திரியினும் என்ற குறிப்பும், ஐம்பூத இயற்கையும் ஒருங்கே சுட்டப்பெற்றுள்ளது. இதன் காணரமாக வேதநெறிக்கு மாற்றான நெறி உண்டு என்பதையும், ஐம்பூத இயற்கையை நாடும் உலகாயத உள்ளமும் சங்க இலக்கியத்தில் இருப்பதை உணரமுடிகின்றது,

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங்
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலு மளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல்புளிப்பினும் பகலிருளினும்
நாஅல்வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே‘‘
என்ற இப்பாடலில் வேதச்சார்புடைய மகாபாரதம், அந்தணர், முத்தி ஆகியன சுட்டப்பட்டபோதும் அதற்கு எதிரான பூத இயற்கை, வேதநெறி திரிதல் ஆகியவற்றிற்கும் இடமளித்திருப்பது வைதிக அவைதிக நெறிகள் சங்ககாலத்தில் இருந்தன என்பதைத் தெரிவிப்பனவாக உள்ளன.

திருமுருகாற்றுப்படையில் “முரணினர் உட்க” என்ற பகுதி உலகாயதர் பற்றிக் குறிப்பிடும் குறிப்பு ஆகும். இவ்வாறு உலகாயதர் பற்றிய சான்றுகள் பல்வேறு நிலையில் கிடைக்கின்றன. வேதமரபுகளை மறுக்கும் கருத்துகைள் உடைய சங்கப்பாடல்கள் பல படைக்கப்பெற்றுள்ளன. பின்வரும் பாடல் அதற்கு ஒரு சான்று
‘ நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,
ஆறு உணர்ந்த ஒரு முது நூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக! ‘‘
இப்பாடலைப் பொருள் உணர்ந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. இப்பாடல் வேத மரபை ஏற்றி உரைப்பதுபோன்று தோன்றும். ஆனால் வேதநெறியின் பொய்த்தன்மைகளை வெளிப்படுத்தி நிற்கிறது.

சிவபெருமானின் வாய்விட்டு நீங்காத ஆறு அங்கங்களை உடைய வேதங்களின் பொய்யை உணர்ந்து மெய் சொன்னவன் கௌணியன் விண்ணந்தாயன் என்னும் பார்ப்பான் ஆவான். இவன் வேதநெறியின் பொய்ம்மையை எடுத்துரைத்து மெய்யான தமிழ்நெறியை ஏற்றவன் என்று இப்பாடல் பொருள் தருகிறது. வேதமரபிற்கு எதிர் நிலையில் அமைந்த பாடல் இது என்பது கருதத்தக்கது.
பரிபாடலில் உள்ள செவ்வேள் பற்றிய பாடல் ஒன்றில் வேத மரபு மறுக்கப் பெற்றுள்ளது.

‘ நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது;
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி:
புலத்தலின் சிறந்தது, கற்பே அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே;
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;
சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே.
அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்‘‘
என்று தமிழின் சிறப்பை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
நான்குமறை வல்லவர்களே! களவு, கற்பு போன்ற அகம் சார்ந்த இலக்கண, இலக்கிய, வாழ்வியல் கூறுகளைப் பெற்றது தமிழ் என்று அதன் பெருமையை எடுத்துரைக்கின்றார் குன்றம்பூதனார் என்ற புலவர்.

வேதநெறி சார்ந்து இயங்கும் பார்ப்பனர்களை விமர்சிக்கும் சில பாடல்களும் சங்க இலக்கியங்களில்உண்டு.

‘அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகன் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலைநாடன் ஊர்ந்த மாவே”
என்ற பாடல் அந்தணச்சிறுவனின் குடுமியைப்போல குதிரையின் முடியும் இருந்தது என்று குறிப்பிட்டிருப்பது அந்தணர்களுக்கு சங்கச் சமுதாயத்தில் தரப் பெற்றிருந்த இடத்தை உணர்த்தும்.
சங்க காலத்தில வேத மரபு கலந்திருந்தாலும் பல்யாகங்களைச் செய்யச் சொல்லிப் புலவர்களே அரசர்களை வற்புறுத்தி இருந்தாலும் இவற்றுக்கு ஈடாக தமிழர் கொள்கையும் நடைபெற்றுவந்துள்ளது.
‘’உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது
எனத் தமியர் உண்டலும் இலரே
முனிவு இலர் துஞ்சலும் இலர்
பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகொடு பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’

என்ற இப்பாடலில் இந்திரர் என்ற ஆரியர் கருதும் புராணச் செய்தி இடம் பெற்றிருந்தாலும் தனியாக உண்ணாத தமிழ் மரபு எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. இந்த உலகம் தனக்கென வாழாத தகைமையாளர்களால் இன்னும் இருப்பதாக உள்ளது என்ற கொள்கை தமிழரின் கொள்கை எனக் கொள்வது இங்குப் பொருந்துவதாகும். எனவே மணிமேகலை காப்பியத்திற்கு முன்பும் உலகாயதர் கொள்கை இருந்தது என்பது உறுதி.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவ சமயத் தொன்மை – பாகம்-2”

அதிகம் படித்தது