“பழையன கழிதலும் புதியன புகுதலும்”!
ராஜ் குணநாயகம்May 28, 2022
இன்று பல கூட்டுப்பொறுப்பாளிகள் #GoHomeGota2022/#Gohomerajapaksha க்குள் ஒளிந்துகொண்டு தாங்கள் தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றனர். நம் தாய் நாட்டின் இன்றைய வரலாறு காணாத அரசியல், பொருளாதார வங்குரோத்து நிலைக்கு இவர்கள் மாத்திரமே காரணமானவர்கள் போல் ஓர் பொய்யான பிம்பத்தை உருவாக்குவதற்கான முயற்சியாகவே இப்பத்தியாளர் பார்க்கிறேன். இப்பின்னணியில் நாட்டின் தற்போதய நிலைமைக்கான காரணம் வெறும் ஓரிரு வருடங்களில் நடைபெற்ற தவறான கொள்கைகள், முடவுகள், அணுகுமுறைகள், மூலோபாய திட்டங்கள், அரச பொறிமுறைகள், மற்றும் வினைத்திறனற்ற அரச இயந்திரத்தின் செயற்பாடுகள் மாத்திரம்தான் என்று கூறி பல கூட்டுப்பொறுப்பாளிகளும் தப்பிக்க முடியாது!
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான 74 வருட காலமாக நாட்டை மாறி மாறி ஆட்சி செய்துவருகின்ற வினைத்திறனற்ற, ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள்.
“தனிச்சிங்கள சட்டத்தை” கொண்டுவந்தோர், மலையக மக்களின் பிரஜா உரிமையை பறித்தெடுத்தோர்;
ஒரே நாட்டு மக்களை இனவாத நச்சு விதை விதைத்து அவர்களை பிரித்து ஒரவருக்கொருவர் எதிரிகளாக்கி அரசியல் இலாபம் அடைந்தோர்;
பண்டா-செல்வா மற்றும் டட்லிசெல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தோர்;
அரசியல் யாப்பிலிருந்து சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியோர்;
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிகளுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கை உயர்த்தியோர், உயர்த்திக்கொண்டிருப்போர்;
கோடி, கோடியாய் கடன்பட்டு 30 வருடங்கள் உள்நாட்டிலேயே போர் புரிந்து, வடக்கு-கிழக்கு பகுதிகளை அழித்து நாட்டின் பொருளாதாரத்தையும் அழித்தோர்;
பாரளுமன்றத்தில் இனப்பிரச்சினைக்கான இடைக்கால் தீர்வுகள் முன்வைத்தபோது அதை பாராளுமன்றத்திலேயே கிழித்தெறிந்து தீயிட்டோர்;
2009ம் ஆண்டு போர் நிறைவுற்றபோதும், நாட்டின் அனைத்துப்பகுதிகளையும் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஏதுமின்றி மீண்டும் மீண்டும் இனவாத, மதவாத அரசியல் செய்தோர், அதற்கு ஆதரவாக இருந்தோர்;
இதே ராஜபக்சேக்களை ஆட்சிபீடமேற்றியோர்;
இவர்களது கொள்கைகளை ஏற்று இவர்களோடிணைந்து அரசியல் பயணம் செய்வோர்;
20ம் சட்ட திருத்தத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல் குற்றவாளிகள், ஊழல்வாதிகள் தண்டனைகளிலிருந்து விடுவிக்கப்படும்போதும் ஆதரவாக இருந்தோர் என பலரும்;
இத்தனை காலமும் இந்த போலி அரிசியல்வாதிகளுக்கு வாக்களித்துக்கொண்டிருக்கும் நானும் நீங்களும் கூட்டுப்பொறுப்பாளிகள்தான்!
“பழைய மொந்தையில் புதிய கள்”: ஆக, தற்போது நாட்டில் நடைபெற்றுவருகின்ற போராட்டங்களின் விளைவாக அமைச்சரவை மாற்றம் மட்டுமே நிகழுமாயின் அது ஒரு கண்துடைப்பு நாடகமாகவே இருக்கும். இதனால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை. அது போன்றே சர்வ கட்சிகள் கொண்ட காபந்து அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுமாயின் அதன் மூலம் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடிக்கு ஓர் தற்காலிக தீர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமேயொழிய வேறொன்றையுமே சாதித்துவிடப் போவதுமில்லை.
“பழையன கழிதலும் புதியன புகுதலும்”: எனவே இதுவே நல்லதொரு சந்தர்ப்பம் கூட, நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தற்போதய அரசுக்கெதிராக நடைபெற்றுவரும் போராட்டங்கள், ஒருவேளை, எவ்வித அரசியல் கட்சிகளினதும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் உட்படாதவாறு தன்னெழுச்சியாக இன, மத பேதமின்றி பெரு மக்கள் புரட்சியாக வெடித்து தற்போதய அரசியல் பரப்பிலுள்ள அனைத்து இனவாத, ஊழல் மற்றும் உருப்படாத அரசியல்வாதிகள் அனைவருமே விரட்டியடிக்கப்படுவார்களாக இருந்தால் அதன்மூலம் அரசியலுக்கு புதியவர்கள் உள்வாங்கப்படுவதற்கான சந்தர்பங்கள் உருவாகலாம். இது ஊழலற்ற, மக்கள் நலன்சார்ந்த, அறிவுபூர்வமான புதியதொரு அரசியல் கலாச்சாரம் ஒன்று இலங்கையில் உருவாவதற்கு வழியமைக்கலாம். இலங்கைத்தீவில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டுமாயின், இந்து சமுத்திரத்தின் முத்தாக மீண்டும் மிளிர வேண்டுமாயின் இப்போதிருக்கின்ற வழியும் சந்தர்ப்பமும் இதுவாகத்தான் இருக்கமுடியும். இந்தப் புள்ளியிலிருந்தே ஒரு 360 பாகை மாற்றத்திற்காக ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்!
ஈழன்.
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- ““பழையன கழிதலும் புதியன புகுதலும்”!”