மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாண்டுகுடி வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்

பி. பிரதீபா

Aug 28, 2021

siragu-naattuppurap-paadalgal1அறிமுகம்

தமிழகம் தொன்மைச் சிறப்பும், இலக்கிய வளமையும், இலக்கணச் செழுமையும் கொண்ட மாநிலம் ஆகும். தமிழகத்தில் வழங்கும் தமிழ் மொழியும் தொன்மையும், வளமையும் கொண்ட மொழியாகும். தமிழ் மொழிக்கு ஏட்டிலக்கியங்கள் வளமை தருவதைப்போல, நாட்டுப்புற இலக்கியங்களும் ஏற்றம் தந்து கொண்டுள்ளன. இருப்பினும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்னும் பல தொகுக்கப்படாமல், பதிவு செய்யப்படாமல் உள்ளன. அவற்றைத் தொகுத்து வெளியிடும் முயற்சி நடைபெறும் நிலையில் தமிழ் மொழிக்கு இன்னமும் இலக்கிய வளமைகள் கூடும். அவ்வகையில் பாண்டிகுடி பஞ்சாயத்து சார்ந்த பகுதிகளில் வழங்கும் நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் இவ்வாய்வு செய்யப்படுகிறது. அவ்வகையில் ஆய்வுக்களத்தை அறிமுகம் செய்யும் இயலாக இவ்வியல் விளங்குகின்றது.

தமிழ்நாடு

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இது சென்னையைத் தலைநகராகக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. தொன்று தொட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இதனை,

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப என்ற புறநானூற்றுப் பாடலில் தமிழ்நாடு தமிழகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் போன மாநிலமாகும். தமிழகம் தற்போது கன்னியாகுமரி முதல் திருத்தணி வரையான பரப்புகளை உள்ளடக்கி விளங்குகிறது. இது இருநூற்று முப்பத்து நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாநிலம் ஆகும். தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகள் முப்பத்தொன்பது ஆகும். இவ்வகையில் பரந்த பரப்புடைய மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது.

இராமநாதபுர மாவட்டம்

தமிழக மாவட்டங்களில் ஒன்று இராமநாதபுரம் மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் வரலாற்றுச் சிறப்பும் அரச பரம்பரை மாண்பும், மக்கள் பெருக்கமும் உள்ள மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் ஒருங்கிணைந்த இராமநாதபுர மாவட்டமாக முகவை என்ற பெயரில் முன்னர் மிகப்பெரிதாக இருந்தது. தற்போது இதில் இருந்து சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் பிரிந்து தனித்தனி மாவட்டங்களாக விளங்குகின்றன. இம்மாவட்டத்தின் தலைநகர் இராமநாதபுரம் ஆகும். மாவட்ட தலைநகர்க்குரிய அனைத்து வசதிகளையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் தாலுக்காக்கள்

இராமநாதபுர மாவட்டம் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, இராமேஸ்வரம், திருவாடானை, ஆர்;.எஸ்.மங்கலம் தாலுக்காக்களாக பிரிக்கப் பெற்றுள்ளது. இவற்றுள் பாண்டுகுடி என்ற ஆய்வுக்குரிய களம் திருவாடானை தாலுகாவில் உள்ளது.

திருவாடனை வட்டம்

திருவாடானை வட்டம் தொண்டி, திருவாடானை, புல்லூர், மங்கலக்குடி, என்ற நான்கு உள்வட்டங்களும் இருபத்தேழு வருவாய் கிராமங்களும் அமைந்துள்ளன. பாண்டுகுடி என்ற ஊர் ஒரு வருவாய் கிராமமாக திருவாடனை வட்டத்திற்குள் அமைந்துள்ளது.

பாண்டுகுடி கிராம அறிமுகம்

இராமநாதபுர மாவட்டம் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் பாண்டுகுடி ஆகும். பாண்டுகுடி பஞ்சாயத்தானது ஐந்து சிற்றூர்களை உள்ளடக்கியதாகும். அவை, கோணரியேந்தல், முருகனேந்தல், இளையாத்தன் வயல், திணையத்தூர், பாண்டுகுடி போன்றவையாகும்.

பாண்டுகுடி ஊர் அமைப்புமுறை

பாண்டுகுடி கோவில் சார்ந்த குடிகள் வாழ்ந்து வரும் ஊராகும். இவ்வூரில் செட்டியார்களும், நாட்டார்களும் வாழ்ந்துவருகின்றனர். பாண்டுகுடி என்ற ஊர் “பாண்டவர்கள் வனவாசத்தின்போது தங்கிய ஊர்” என்று ஒரு செய்தி வாய்மொழிச் செய்தியாக வழங்கி வருகின்றது.

இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், அரசு மேல்நிலைப்பள்ளியும் அரசு மருத்துவமனையும் உள்ளன. ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடியும், அரசு சார்ந்த நிர்வாக அமைப்புகள் பலவும் அமைந்துள்ளன. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுத்திடல் ஒன்றும்  உள்ளது. அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் இவ்வூரில் நூலகம் உள்ளது.

ஊருக்கு நடுவில் பெருமாள் கோவிலும், பிள்ளையார் கோவிலும் உள்ளன. சைவ, வைணவ கோவில்கள் இரண்டும் ஒரே இடத்தில் காண்பது இவ்வூருக்கு தனி அழகை தருகிறது. இக்கோவில்களின் வலது புறம் கோவில் குளம் அமைந்துள்ளது.

பாண்டுகுடி முருகன் கோவிலில் விநாயகரும், முருகனும் சேர்ந்து காட்சி தருவது இவ்வூரின் தனிச்சிறப்பாக அமைகிறது. இக்கோவிலின் முன்பாகவே மடம் ஒன்றும் அமைந்துள்ளது. இம்மடமானது பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமை வாய்ந்த மடமாகும். வழிப்போக்கர்களும், சன்னியாசிகளும், துறவிகளும் இங்கு தங்குவதற்கு ஏற்றவகையில் இது கட்டப்பட்டுள்ளது. இம்மடத்தின் அருகே ஆஞ்சனேயர் கோவிலும் விநாயகர் கோவிலும் மூன்று நாக தேவதைகள் சேர்ந்த கோவிலும் வரிசையாக அமைந்துள்ளன. இக்கோவிலின் முன்பே பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது.

பாண்டுகுடியில் செட்டி இன மக்;கள் அதிக அளவில் வாழ்ந்து வந்துள்ளனர். செட்டி நாட்டார் வாழ்ந்த பகுதியில் மட்டும் ஐந்து தெருக்களும் ஐம்பதுக்கும் மேலான பழமை வாய்ந்த வீடுகளும் உள்ளன. இதை தவிர, வடக்குடியிருப்பு, காமட்சியம்மன் குடியிருப்பு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு, முருகன் கோவில் தெரு, என்ற ஐந்து தெருக்கள்உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் ஒவ்வொரு கோவில் என வடக்குக்குடியிருப்பில் வரலாட்சியம்மன் கோவிலும், காமாட்சியம்மன் குடியிருப்பில் காமாட்சியம்மன் கோவிலும், வடக்குத் தெருவில் தங்கை மாரியம்மனும், தெற்குத் தெருவில் அக்கா மாரியம்மனும், பஜனை மடமும், முருகன் கோவில் தெருவில் முருகன் கோவிலும் அமைந்துள்ளன. செட்டியார் இனத்தார்களின் சபையாக ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் சமூக சபையும், திருமண மண்டபங்களும் உள்ளன.

இவ்வூரில் கிறித்தவ சமய கோவில் ஒன்றும் உள்ளது. அதுமட்டுமின்றி இசுலாமிய சமயத்தவர்களும் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றன. அவ்வகையில் அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாகவும், பக்திச் சிறப்பு கொண்டதாகவும் பாண்டுகுடி கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும்.

ஐப்பசி கார்த்திகை மாதங்களில் நிலங்கள் எல்லாம் பசுமையாக காணப்படும் தமிழ் மாதங்களில் வைகாசி, ஆனி ஆகிய இரண்டு மாதங்களைத் தவிர மீதம் பத்து மாதங்களிலும் இவ்வூரில் திருவிழாக்கள் நடத்தப்பெற்று வருகிறது. இத்திருவிழாக்கள் காலம் காலமாகவே கொண்டாடப்பட்டு வருகின்றன.

இவ்வூரைச் சுற்றி முப்பதுக்கும் மேற்ப்பட்ட குளங்கள் உள்ளன. இவை இவ்வூரின் நீர் வளத்தைப் பெருக்குவனவாக உள்ளன. இவ்வூரில் கிராம மக்களுக்கு தேவையான கடை வசதிகள் அனைத்தும் உள்ளன. குறிப்பாக நகைக் கடைகள் இங்கு அமைந்துள்ளன. இத்தகைய அமைப்புடைய பாண்டுகுடி ஊரானது நாட்டுப்புற இலக்கிய வளங்களுக்கும் உரியதாக உள்ளது. இப்பகுதி சார்ந்த நாட்டுப்புற இலக்கிய வளங்களை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது.

நாட்டுப்புற இலக்கியம் அறிமுகம்

பல்லாண்டு காலமாகவே நாட்டுப்புற பாடல்கள், கதைகள், பழமொழி போன்றவைகள் வாய்மொழியாக வெளிப்பட்டு வருகின்றன. மனித சமுதாயத்தில் நாட்டுப்பற இலக்கியத்தின் வேர்கள் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. நாட்டுப்பபுற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதை அனைவரும் பார்க்கும் வகையில் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகத்  திகழ்கிறது. இன்று வரை நாகரீக சமுதாயத்திலுள்ள கல்லாத மக்களிடையே எஞ்சியுள்ள நம்பிக்கை திருவிழாச் சடங்குகள், மரபு விளையாட்டுப் பாடல்கள் கலைகள், ஆட்டங்கள் முதலியவற்றைப் பற்றி ஆராயும் இயலாக நாட்டுப்புறவியல் விளங்குகிறது.

நாட்டுப்புற இலக்கியங்கள்

மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்ட நாட்டுப்புற இலக்கியம் பல வகைகளை கொண்டதாகும். அவற்றில் நாட்டுப்புறப்பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள்,  பழமொழிகள், விடுகதைகள் போன்றன குறிக்கத்தக்கனவாகும். இவை தவிர நாட்டுப்புற நம்பிக்கைகள், நாட்டுப்புறத்தெய்வங்கள், நாட்டுப்புற விளையாட்டுக்கள், நாட்டுப்புற மருத்துவம், நாட்டுப்புற கட்டடக்கலை போன்றவற்றையும் நாட்டுப்புற இலக்கிய வகைமைகளாகக் கொள்ளத்தக்கனவாகும். இவற்றில் நாட்டுப்புறப்பாடல்கள் என்பவை ஆய்வுக் களத்திற்கு உரியது என்பதால் அது பற்றிய செய்திகள் இங்கு விரித்துரைக்கப்பெறுகின்றன.

நாட்டுப்புற பாடல்களின் இயல்புகள்

நாட்டுப்புற மக்கள் தங்கள் முன்னோர்கள் பாடியதைக் கேட்டு நன்கு மனதில் பதிய வைத்து அதை நினைவுபடுத்தி மீண்டும் பாடுவர். அவ்வாறு பாடும் பொழுது சில வார்த்தைகளையோ அல்லது அடிகளையோ மறக்கும் பொருட்டு அந்த இடத்தில் மனதில் தோன்றும் வார்த்தைகளைக் கொண்டு புதிதாகச் சேர்த்துப் பாடுவர். அவ்வாறு பாடல்களை மாற்றிப் பாடினாலும் பாட்டின் சுவையும் பொருளும் மாறாமல் வந்து கேட்போரை மயக்கத்தில் ஆழ்த்தும். ஒருவர் பாடுவதைக் கேட்டு மற்றொருவர் மற்றொரு ஊரில் பாடும்பொழுது இடம் விட்டு இடம் செல்லும் இயல்பினைக் கொண்டதாகவும் திகழ்கிறது. நாட்டுப்புறப்பாடல்கள் இயற்கையாகவே தோன்றும் எளிமையான எண்ணங்களை இதயத்துடன் ஒன்றிப்பாடும் பாடல்களாகும்

பொதுவாக நாட்டுப்புறப்பாடல்கள் பெரும்பாலானவற்றை யார் எழுதினார்கள் என்று அறுதியிட்டுக் கூற இயலாது. நாட்டப்புறக் கவிஞர்கள் பாடுவதற்கு முன்பாக பெருந்திட்டங்களுடனும் பெருத்த ஆயத்தங்களுடனும் பாடல்களைப் பாடுவதில்லை. தங்கள் மனதில் தோன்றும் ஒரு வார்த்தையைப் பாட ஆரம்பிக்கும் பொழுது அதனைத் தொடுத்தே வார்த்தைகள் தொடர்ந்துவர பாடல்களைப் பாடுகின்றனர்.

எளிய உள்ளங்களில் இருந்து எளிமையான பாடல்களை இதயம்தொடும் வகையில் ஆக்கப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் சிறந்த சொற்களாலும், செம்மையான அமைப்பாலும் எளிமையாலும், உவமையாலும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே மாதிரியான ஒருமுகப்போக்காலும் கேட்பவர்களின் இதயங்களை கவர்ந்தும், இதயத்திரிருந்து என்றும் நீங்காமலும் நிலைத்து நிற்கிறது. நீல வனத்தையும், பசுமை நிறைந்த நிலத்தையும், வானுயர ஓங்கி வளர்ந்த மலையையும், முத்து விளையும் கடலையும், மலையின் முடியையும், ஆறு பாய்ந்து கொழிக்கும் வயல்களையும், வயல்களில் உழைக்கும் மனித இனத்தைப் பற்றியும் நாட்டுப்புறப்பாடல்களில் காணமுடிகிறது.

நாட்டுப்புற பாடல்களின் வகைகள்

மனிதன் தான் பிறந்து, வளர்ந்து இறக்கும் தருவாயிலும் நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பங்கு வகிக்கிறது. இத்தகைய நாட்டுப்புற பாடல்களானது தாலாட்டுப்பாடல், குழந்தைப்பாடல், காதல் பாடல், தொழில் பாடல், கொண்டாட்டப் பாடல், பக்திப்பாடல், ஒப்பாரிப்பாடல், பன்மலர்ப்பாடல் என பல வகைகளை உள்ளடக்கியதாகும்.

பாண்டுகுடி பகுதியில் பல்வகை நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன. தாலாட்டுப்பாடல்கள்,  கும்மிப் பாடல்கள்,  களையெடுப்புப் பாடல்கள் போன்றனவற்றைத் n;தாகுத்தும் பகுத்தும் ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

முடிவுகள்

இராமநாதபுர மாவட்டத்தில் திருவாடானை வட்டத்தில் அமைந்த ஊர் பாண்டுகுடியாகும். இப்பாண்டுகுடி சிற்றூராக இருந்தாலும் இக்கிராமத்தில் பக்தி செழித்து ஓங்கி வளர்ந்து வருகிறது. கோயில் சார்ந்த குடிகளாக  இவ்வூர் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் முதன்மைத் தொழில்ஆகும். இத்தொழில் சார்ந்த நிலையில் மக்கள் பல நாட்டுப்புற இலக்கியங்களைத் தமக்குள் வழங்குகி வருகின்றனர். அவ்வாறு வழங்கிவரும் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்வது என்பது காலத்தின் தேவையாகும். இதன்பிறகு இவ்வாய்வழி மரபு தொடராமல் போக வாய்ப்புண்டு என்ற நிலையில் இவை சேகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

பாண்டுகுடி அனைத்து இன மக்களும் இணைந்து வாழும் தன்மை உடையதாகும். இவ்வூரில் கிறிஸ்துவர்களும், முகமதியர்களும், இந்துக்களும் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.

பாண்டுகுடி ஐந்து தெருக்களைக் கொண்டிருந்தாலும் அவ்வைந்து தெருக்களிலும் ஐந்து கோயில்கள் அமைந்திருப்பது சிறப்பிற்குரியதாகும்.

பாண்டுகுடியில் முப்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் ஊரைச் சுற்றி அமைந்துள்ளன. இவை இவ்வூரின் நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. இவ்வூரில் பல்வகையான நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் கிடைக்கின்றன.

சான்றாதாரங்கள்

1.கருவூர் கதப் பிள்ளைச் சாத்தன், புறநானூறு, பாடல்எண். 168 அடி 18

2. தகவலாளி பெரியய்யா தந்த தகவல்

.


பி. பிரதீபா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாண்டுகுடி வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்”

அதிகம் படித்தது