சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாரதியாரின் பாடல்களில் காணலாகும் சிற்றிலக்கியக் கூறுகள்

முனைவர் மு.பழனியப்பன்

Jan 1, 2022

siragu Bharatiyar

பாரதியார்  தன் காலத்துக்கு முந்தைய அனைத்துவகை  தமிழ் இலக்கியங்களையும். கற்று உணர்ந்திருக்கிறார். அவர்  தமிழ்க் காப்பிய மரபிற்கு ஏற்ப பாஞ்சாலி சபதத்தில் சருக்கம் என்ற பிரிவுகளைக் கையாள்கிறார். அவர் அதில் நாட்டு நகர வருணனைகளைப் பாடுகிறார். மேலும் பாஞ்சாலி சபதத்தில் மாலையை வருணனை செய்கிறார். இவ்வகையில் பாரதியார் தமிழ்க் காப்பிய  மரபுகளை அறிந்துள்ளார் என்பது தெளிவாகிறது. பாரதியாருக்குப் பல நாட்டுப்புற இசை வடிவங்களும் தெரிந்துள்ளன. சிந்து, சந்திரமதி புலம்பல், நவராத்திரிப் பாட்டு போன்றன அவரால் எடுத்தாளப்பெற்றுள்ளன. அவருக்குப் பல சிற்றிலக்கிய மரபுகளும் தெரிந்து இருக்கின்றன. அம்மரபுகளைப் பின்பற்றி அவர் பல சிற்றிலக்கியங்களைப் படைததுள்ளார். இவ்வகையில் அவர் மரபு சார்ந்த தமிழின் இலக்கிய வளர்ச்சியின் நீட்சியாகவே கொள்ளத்தக்கவராகிறார். அவர் புதிய பாடுபொருள்களைத் தம் பாடல்களில் காட்டினாலும் பழைய இலக்கியமரபுகளை அவர் உள்வாங்கிக்கொண்டே அவற்றின் வழியிலேயே படைப்பு முறையை அவர் கைக்கொண்டுள்ளார்.

“பாரதியார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவிலும் இருபதாம் நூற்றாண்டின் முதலிலும் வாழ்ந்தவர் ஆவார். தாம் பிறப்பதற்கு முன் தோன்றித் தமிழ்த் தொண்டாற்றிய பெரியோர்கள் வழிகளைப் பின்பற்றியதோடு தம் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், தம் படைப்புகளில் பதிவு செய்துவிட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அந்தப் பணியினை பாரதியார் செம்மையாகவே செய்துள்ளார். மற்றை நாள் கவிஞருக்குப் போலன்றி இவரின் தோள் மீது புதுப்புது சுமைகளைக் காலம் சுமத்தியது. மரபு நிலையில் இருந்து மாறிப் போய் விடாமலும் நல்லனவாய் தமக்குத் தோன்றிய புதிய மாற்றங்களை ஏற்பதிலுமாக இவரின் தமிழ்ப்பணி நடந்தது என்பதை நினைவில் போற்றல் வேண்டும்.”[1] என்ற கருத்து பாரதி இரு வேறு காலக்கட்டங்களின் இணைப்பாக விளங்கியவன் என்பதைக் காட்டுவதாகவும்,  அவன் பழமைக்கும் புதுமைக்கும் பாலாமாக அமைகிறான் என்பதைக் காட்டுவதாகவும் உள்ளது.

பாரதியார் மாலை, பள்ளு, தூது, அகவல், வெண்பா திருத்தசாங்கம், திருப்பள்ளி எழுச்சி, நவரத்னமாலை, துவஜம், விண்ணப்பம், திருப்புகழ், நெஞ்சொடு கிளத்தல் (சொல்வது), அங்க வருணனை (கேசாதி பாதம்)  போன்ற பல சிற்றிலக்கிய வகைகளை எடுத்தாண்டுள்ளார். இச்சிற்றிலக்கியங்கள்வழி பாரதியாரின் தமிழ் மரபுப் பயிற்சியினையும், அவரின்  சிற்றிலக்கியப் படைப்புத்திறனையும் உணர்த்துகிறது.

மாலை இலக்கியங்கள்

மலர்களால் தொடுக்கப்பெற்று மாலை உருவாகிறது. இது போன்று ஒரு  பொருள் குறித்து பல்வகை யாப்புடைய செய்யுள்களால் அந்தாதித் தெடையில் பாடப்படும் இலக்கியவகை மாலை இலக்கியங்கள் ஆகின்றன. பாரதியார் தமிழ் சிற்றிலக்கியமான மாலை வகையையும் கையாண்டுள்ளார். அவர் புதுச்சேரியில் வீற்றிருக்கும் மணக்குளத்து விநாயகர் மீதும், பாரததேவியின் மீதும் மாலைகளைப் பாடியுள்ளார்.

விநாயகர் நான்மணி மாலை

வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் நான்கு வகையான பாக்களைக் கொண்டு அந்தாதி யாப்பில் நாற்பது என்ற எண்ணிக்கையில் பாடுவது நான்மணி மாலையின் இலக்கணம் ஆகும். பட்டினத்தார் பாடிய கோயில் நான்மணி மாலை முதல் நான்மணிமாலையாகும்.

தொடர்ந்து குமரகுருபரர் எழுதிய திருவாரூர் நான்மணி மாலை, அதனைத் தொடர்ந்து, சிவப்பிரகாசர் எழுதிய நால்வர் நான்மணி மாலை போன்றனவும் பாரதியாரின் நான்மணி மாலை இலக்கியத்திற்கு முன்னோடிகளாக விளங்கியுள்ளன. பாரதியாரால் பாடப்பெற்ற முழுமையான சிற்றிலக்கியம் விநாயகர் நான்மணிமாலை ஆகும்.  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதாம் ஆண்டு இந்நூல் பாடப்பெற்றிருக்க வேண்டும். இப்பாடலில் சிற்சில இடங்களில் விடுபடுதல் இருந்த நிலையில் அவை சுத்தானந்த பாரதியாராலும், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையாலும் நிறைவு செய்யப்பெற்று பதிப்பிக்கப்பெற்றுள்ளன. இந்நூலின் பாட்டுடைத் தலைவர் புதுச்சேரியில் வீற்றிருக்கும் மணக்குள விநாயகர் ஆவார்.

            ‘‘விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா

            குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன்

            அரங்கத்திலே திருமாதுடன் பள்ளி கொண்டான் மருகா

            வரங்கள் பொழிய முகிலோன் உள்ளத்து வாழ்பவனே! ”[2]

என்ற கலித்துறைப்பாடல் பாரதியின் இதிகாச அறிவையும், அவரின் விநாயகர் மீதான பக்தியையும் ஒருங்கே காட்டுவதாக உள்ளது.

            ‘‘வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே

            ஆழ்க உள்ளம் சலனமிலா தகண்டா வெளிக்கண் அன்பினையே

            சூழ்க துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக

            வீழ்க கலியின்  வலியெலாம் கிருதயுகந்தான் மேவுகவே!” [3]

என்ற விருத்தப்பாடல் அவர் விநாயகர் நான்மணிமாலையில் மணக்குளத்து விநாயகனைப் போற்றிப் பணிந்து பாடியுள்ளார் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

பாரதமாதா நவரத்ன மாலை

பாரத மாதாவிற்கு நவ ரத்தினங்கள் கொண்டு பாரதியார் சூட்டிய மாலை பாரத மாதா நவரத்ன மாலையாகும். வெண்பா, கட்டளைத் கலித்துறை, எண்சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, வஞ்சி விருத்தம், கலிப்பா, அறுசீர் விருத்தம், எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் போன்ற ஒன்பது வகை பாக்கள் கொண்டு அந்தாதித் தொடையில் இம்மாலையைப் பாரதியார் பாரத மாதாவிற்குச் சூட்டியுள்ளார்.

‘‘வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த

பாரதமா தாவின் பதமலர்க்கே — சீரார்

நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக் காப்பாம்

சிவரத்ன மைந்தன் திறம்”  [4]

என்ற பாடல் நவரத்ன மாலைக்கான காப்புப் பாடலாகும். இதில் கணபதியை வேண்டி இந்நவரத்னமாலையைப் படைக்கிறார் பாரதியார். இப்பாடலையும் இணைத்தால் இம்மாலை பத்துப் பாடல்களை உடையதாகும். இந்நவரத்தின மாலையில் வயிரம், முத்து போன்ற ஒன்பது நவரத்தினங்கள் ஒவ்வொரு பாடலிலும் சுட்டப்பெறுகின்றன.

இவ்வாறு மாலை இலக்கியத்தினைக் கைக்கொண்டு தமிழ்ச்சிற்றிலக்கிய மரபுகள் மாறாமல் பாரதியார் பாடியுள்ளார்.

தூது

தூது இலக்கியவகையும் பாரதியாரின் மனம் கவர்ந்துள்ளது. இவ்விலக்கியவகை சாயல் கொண்ட பாடல்களைப் பாரதியார் பாடியுள்ளார். முருகனுக்குக் கிளியைத் தூதுவிடும் பாடல் ஒன்று பாரதியாரால் முருகக் கடவுள் மீது கிளித்தூது என்ற தலைப்பில் எழுதப்பெற்றுள்ளது.

‘‘சொல்ல வல்லா யோ? — கிளியே

சொல்ல நீ வல்லாயோ?

வல்ல வேல் முருகன் — தனை இங்கு

வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று”[5]

என்ற பாடல் கிளியைத் தூதாக முருகனிடம் விடும் தூது சிற்றிலக்கியச் சாயல் உடைய பாடல் ஆகும். இது தவிர கண்ணன் பாட்டில் பாங்கியைத் தூதுவிடுதல், பாஞ்சாலி சபதத்தில் விதுரனைத் தூதுவிடுதல் போன்றனவும் இத்தூது இலக்கியச் சாயல் உடையனவேயாகும்.

பள்ளு

உழவர்களின் சிற்றிலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும். இப்பள்ளு இலக்கியச் சாயலையும் பாரதியார் கையாண்டுள்ளார்.

‘‘உழவுக்கும் தொழிலுக்கும்   வந்தனைசெய்வோம் — வீணில்

உண்டுகளித் திருப்போரை   நிந்தனைசெய்வோம்

விழலுக்கு நீர்ப் பாய்ச்சி   மாயமாட்டோம் — வெறும்

வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்.”[6]

என்ற பாடல் களியாட்டமாக பாரதியாரால் பள்ளு இலக்கியச் சாயல் கொண்டு படைக்கப்பெற்றுள்ளது.

அகவல்

மாணிக்கவாசகர் பாடிய சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அகவல் என்பதாகும்.  போற்றித் திருஅவகல், கீர்த்தி திருஅகவல் அவரால் இயற்றப்பெற்றன. இது யாப்பு அடிப்படையில் அமைந்த சிற்றிலக்கியம் ஆகும். ஓளவையார் பாடிய விநாயகர் அகவல், வள்ளலார் பாடிய அருட்பெருஞ்சோதி அகவல் போன்றனவும் இவ்வகையில் அமைவனவாகும். பாரதியார் இந்த சிற்றிக்கிய வகையைக் கைக்கொண்டுள்ளார். பாரதியார் போற்றி அகவல் என்ற இருபத்து மூன்று அடிகள் உள்ள பகுதியைச் சக்தியின் மீது பாடியுள்ளார்.

            ”செய்கையாய் ஊக்கமாய் சித்தமாய் அறிவாய்

            நின்றி;டும் தாயே! நித்தமும் போற்றி

            இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி

            துன்பம்; வேண்டேன், துடைப்பாய் போற்றி

            அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி

            சக்தி போற்றி! தாயே போற்றி!

            முக்தி போற்றி! மோனமே! போற்றி!

            சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி!” [7]

என்று சக்தியின்மீது பாரதி அகவல் பாடியுள்ளார். இதுவும் அகவல் என்ற சிற்றிலக்கிய வகையினைச் சார்ந்ததாகக் கொள்ளத்தக்கது. மாணிக்கவாசகர் பயன்படுத்திய விண்ணப்பம், திருப்பள்ளி எழுச்சி, திருத்தாசாங்கம் போன்றனவும் பாரதியாரால் எடுத்தாளப்பெற்றுள்ளன.

வெண்பா

வெண்பா யாப்பில் அமைந்து சிற்றிலக்கியங்கள்  வெண்பா என்று அழைக்கப்பெற்றன. வினா வெண்பா போன்ற இலக்கியங்கள் இவ்வகை சார்ந்தனவாகும். பாரதியார் மஹாசக்தி வெண்பா, விடுதலை வெண்பா என்பன பாரதியாரால் பாடப்பெற்றுள்ளன.

            ‘‘நெஞ்சில் கவலை நிதமும் பாயிராக்கி

            அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை- தஞ்சமென்றே

            வையமெலாம் காக்கு மஹாசக்தி நல்லருளை

            ஐயமறப் பற்ற லறிவு”[8]

என்ற பாடலில் மகாசக்தியின் புகழைப் பாடுவதாக வெண்பா யாப்பில் இச்சிற்றிலக்கிய வகை பாரதியாரால் பாடப்பெற்றுள்ளது.

‘‘சுகத்தினை நான்வேண்டித் தொழுதேன்; எப்போதும்

அகத்தினிலே துன்புற் றழுதேன் — யுகத்தினிலோர்

மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி

ஆறுதலைத் தந்தாள் அவள்” [9]

என்ற நிலையில் வெண்பா என்ற யாப்பு வடிவம் சார்ந்த விடுதலை வெண்பா என்ற சிற்றிலக்கிய வகையையும் பாரதியார் படைத்துள்ளார்.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளி எழுச்சி சிவனுக்குரியது. இத்திருப்பள்ளி எழுச்சி சிற்றிலக்கிய வடிவைப் பாரதியார் பாரத மாதாவிற்கு ஆக்கிக் கொள்கிறார்.

‘‘பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்

புன்மை யிருட்கணம் போயின யாவும்

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கிய அறிவெனும் இரவி;

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்

தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.

விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!

வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!”[10]

என்ற பாடல் தொடங்கி ஐந்து பாடல்களைத் திருப்பள்ளி எழுச்சியாகப் பாடியுள்ளார் பாரதியார். இது பாரதத் தாயையும் விழிப்படைய வைத்தது. பாரத மக்களையும் விழிக்க வைத்தது.

பாரத மாதா திருத்தாசங்கம்

இறைவன் அல்லது மன்னனின் பத்துவகை அடையாள அங்கங்களைச் சிறப்பித்துப் பாடுவது திருத்தசாங்கம் என்பதாகும். மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில் சிவபெருமான் மீது திருத்தசாங்கம் பாடியுள்ளார். பாரதியார் அவ்விலக்கிய வகையைப் பாரத தேவிக்கு ஆக்கிக் கொண்டுள்ளார். நாமம், நாடு, நகர் , ஊர்தி, படை, முரசு, தார், கொடி, மலை, ஆறு  போன்ற பாரதமாதாவின் பத்து அமைப்புகள் குறித்து காம்போதி, வசந்தா, மணிரங்கு, சுருட்டி, கானடா, தன்யாசி, முகாரி, செஞ்சுருட்டி, பிலகரி, கேதாரம் போன்ற பத்துவகை இசை வடிவங்களில்; பாரதியார் இப்பாடல்களைப் பாடியுள்ளார். இதன்வழி பாரதியாருக்கு இருந்த இசைப்புலமையும் தெரியவருகிறது,

‘‘பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்

பிச்சை யருளியதாய் பேருரையாய் — இச்சகத்தில்

பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த

பாரதமா தேவியெனப் பாடு” [11]

என்ற பாடல் நாமம்  பற்றிய காம்போதி ராகப் பாடல் ஆகும்.

மகாசக்திக்கு விண்ணப்பம்

ஒன்றை வேண்டிப் பாடுவது விண்ணப்பம் ஆகும். மாணிக்கவாசகர் சிற்றின்பத்தில் என்னை விட்டுவிட்டு பேரின்பத்தில் என்னை நீத்தல் செய்து விடாதே என்று இரங்கிப் பாடியது நீத்தல் விண்ணப்பம் ஆகும். பாரதியாரும் இதே சாயலில் மோகத்தைக் கொன்றுவிட மகாசக்திக்கு விண்ணப்பிக்கிறார்.

மோகத்தைக் கொன்றுவிடு — அல்லா லென்றன்              மூச்சை நிறுத்திவிடு

தேகத்தைச் சாய்த்துவிடு – அல்லாலதில்   சிந்தனை மாய்த்துவிடு

யோகத் திருத்திவிடு — அல்லா லென்றன்             ஊனைச் சிதைத்துவிடு

ஏகத் திருந்துலகம் – இங்குள்ளன  யாவையும் செய்பவளே![12]

இவ்வாறு பாரதியார் மோகம் கொன்று யோத்தில் இருந்த மகாசக்தியிடம் விண்ணப்பிக்கிறார்.

மாதாவின் துவஜம்

அருணகிரிநாதர் முருகனின் கொடியான சேவல் கொடி குறித்துப் பாடிய சிற்றிலக்கிய வகைமை துவஜம் ஆகும். பாரதியார் இதனையும் ஒரு வடிவமாகக் கொண்டு பாரத தேவிக்கு  துவஜம் என்ற சிற்றிலக்கிய வகையைப் படைத்துள்ளார். மொத்தம் பத்து பாடல்களை உடைய இப்பகுதி எக்காலத்திலும் பாரதமாதாவின் கொடி வணக்கப்பாடலாக நின்று நிலைக்கும்.

‘தாயின் மணிக்கொடி பாரீர் — அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்            அதன்

உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே

பாங்கின் எழுதித் திகழும்செய்ய

பட்டொளி வீசிப் பறந்ததுபாரீர்!”[13]

என்ற நிலையில் பாரதமாதவின் கொடியை வாழ்த்திப் பாடுகிறார் பாரதியார். இப்பாடல்கள் பத்தும் திருத்தசாங்கத்தின் தொடர்ச்சியாகவே தொகுக்கப்பெற்றிருப்பது சிறப்பு. பாரதியார் பாடல்கள் தொகுக்கும் போது திருத்தசாங்கம் முன்பும் அதன் பின்பு மாதாவின் துவஜமும் வைக்கப்பட்டுள்ளது. திருத்தசாங்கம் கொடியை நிறைவாகக் கொண்டு முடிகிறது. அக்கொடியின் சிறப்பை மீளவும் பாரதியார் எடுத்துரைப்பது போல துவஜம் துவங்குகிறது,.

சக்தி திருப்புகழ்

பாரதியார் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் வகைமை போன்றும் பாடல்களைப் படைத்து;க்கொள்ள முயன்றுள்ளார்.

‘‘சக்திசக்தி சக்தீசக்தீ  சக்தீ என்றோது

சக்திசக்தி சக்தீஎன்பார் – சாகார்   என்றே நின்றோது.”[14]

என்ற பாடலில் சக்தியின் திருப்புகழ் பாடப்படுகிறது.

நெஞ்சொடு சொல்வது

திருக்குறளில் கற்பியலில்  நெஞ்சொடு கிளத்தல் என் ற அதிகாரம் உண்டு. இது கோவை சாயல் பெற்றதாகும். நெஞ்சொடு புலம்பல் போன்ற துறைகள் சங்க இலக்கியங்களில் உண்டு. பாரதிக்கு அகப்பொருள் கோவை பாட வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் ஒரு துறைக் கோவையாக நெஞ்சொடு சொல்லல் என்பதைப் படைத்துக் காட்டு முன்வந்துள்ளார். இதன் காரணமாக பாரதியாருக்குக் கோவை பாடவும் விருப்பம் இருந்தமை தெரியவருகிறது.

‘‘பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;

பயனன்றி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!

கேட்டது நீ பெற்றிடுவாய், ஐய மில்லை;

கேடில்லை, தெய்வமுண்டு, வெற்றி யுண்டு,

மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி

வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,

நாட்டினிலே சனகனைப்போல் நமையும் செய்தாள்;

நமோநமஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே” [15]

என்ற பாடல்  இறைத்தலைவியான காளியிடம் கேட்பது குறித்து  தன்னெஞ்சிடம் உரைத்தனவாகும். கோவை பாடும் விருப்பத்தின் ஒரு பகுதியும் பாரதியாருக்கு இதன்வழி நிறைவேறியுள்ளது.

கண்ணம்மாவின் — அங்க வர்ணனை

கண்ணம்மாவின் அழகைப் பாதாதி கேசமாகப் பாரதியார் பாடுகிறார். அதனில் இடம்பெறும் முதல் பாடல் இது.

‘எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ

எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ

எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ

எங்கள் கண்ணம்மா நுதல் பாலசூரியன்  ”[16]

என்ற பாடல் கேசாதி பாதம் என்ற இலக்கியவகை சார்ந்ததாகும்.

இவ்வாறு தமிழ்ச் சிற்றிலக்கிய மரபின் தொடர்ச்சி பாரதியாரால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ச் சிற்றிலக்கிய மரபின் தொடர்ச்சியாக பல சிற்றிலக்கியங்களை அவர் படைத்தாலும் அவற்றில் நாட்டுக் கருத்துகளை  உட்புகுத்தி பாரதியார் புதுமை படைத்துள்ளார். அவரின் மரபு சார்ந்த கவிதை வல்லமை இப்பாடல்களில் தெரியவருகின்றன.

முடிவுகள்

பாரதியாரியல் இருந்துத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தொடங்குகிறது என்பது திறனாய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்ற முடிவு.  என்றாலும் பாரதியார் பழமையில்  காலூன்றி அதனைத் தொடர்ந்தே புதுமைகளை ஆக்கத் தொடங்கியுள்ளார் என்பது இங்கு எண்ணத்தக்கது. அவர் தனக்கு முன்னதான காலத்து இலக்கியங்களான சிற்றிலக்கியங்களைக் கற்று அவற்றைப் போல்  படைத்துக் கொண்டு  அவற்றின் நீட்சியாகத்  தம் படைப்புகளை அமைத்துக்கொண்டுள்ளார்.

பாரதியார்  மாணிக்கவாசகர், வள்ளலார், அருணகிரியார் போன்ற சிற்றிலக்கியவாதிகளைப் பின்பற்றித் தன்  சிற்றிலக்கியப் படைப்புகளைப் படைத்தளித்துள்ளார். இதன்வழி பாரதியார் காலத்தில் தமிழ் மக்கள் மாணிக்கவாசகர், வள்ளலார், அருணகிரியார் போன்றே சான்றோர்களின் பாடல்களைப் பாடி வந்துள்ளனர் என்பதும் தெரியவருகிறது.

பாரதியார்  நெடிய சிற்றிலக்கிய வகைகளைப் பாடும் அளவிற்கு அவருக்கு கால அளவும், வாழ்க்கைப் போக்கும்  இடம் தரவில்லை. இதன் காரணமாக சிறிய சிற்றிலக்கியங்களிலை அவர் படைத்துக்கொண்டுள்ளார். அளவில் பெரிய சிற்றிலக்கியங்களைப் பாடிக் கொள்ள அவருக்கு ஆசை இருந்துள்ளது. தூது, பள்ளு போன்ற சிற்றிலக்கியவகைகளில் அவரின் கவனம் சென்றிருந்தாலும் அப்படைப்புகள் குறைந்த நிலையில் முழுமை பெறாத நிலையில் அவரால் பாடப்பெற்றுள்ளன.

விநாயகர் நான்மணி மாலை, பாரத மாதா  திருப்பள்ளி எழுச்சி, பாரத மாதா திருத்தசாங்கம் போன்ற சிறு அளவிலான சிற்றிலக்கியங்களை அவர் பாடுவதில் ஆர்வம் காட்டி  அவற்றில் வெற்றியும் கண்டுள்ளார்.

விண்ணப்பம், துவஜம், திருப்புகழ் போன்ற படைப்புகள் அவரின் சிற்றிலக்கிய படைப்பாற்றல் திறனுக்கு சான்றுகளாக அமைகின்றன.  நெஞ்சொடு சொல்வது, அங்கவருணனை ஆகிய சிற்றிலக்கியச் சாயல் பெற்றனவாகும்.

இவ்வகையில் பாரதியாரின் புதுமைப் பயணம் என்பது அவரின் பழைய இலக்கிய வகைகளைச் சார்ந்தே வெளிப்பட்டுள்ளது என்பது தெளிவு.

 சான்றாதாரங்கள்

தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

இரா. கலியபெருமாள், http://ilakkiyapayilagam.blogspot.com/2010/04/blog-post_579.html

பாரதியார், விநாயகர் நான்மணி மாலை, பாடல் 34

பாரதியார், விநாயகர் நான்மணி மாலை.பா.35

பாரதியார் , பாரத மாதா நவரத்ன  மாலை. பா.1

பாரதியார், முருகக்கடவுள் மீது  கிளித்தூது பாடல்.1

பாரதியார், சுந்திரப் பள்ளு பா 4

பாரதியார், போற்றி அகவல்

பாரதியார், மஹா சக்தி வெண்பா பா.2

பாரதியார்,விடுதலை வெண்பா, பா 5

பாரதியார்,பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி-பா. 1

பாரதியார், பாரத்தேவியின் திருத்தசாங்கம், பா. 1

பாரதியார்,  மகா சக்திக்கு விண்ணப்பம், பாடல். 1

பாரதியார், மாதாவின் துவஜம் பாடல் -1

பாரதியார், சக்தி திருப்புகழ் பாடல்.1.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாரதியாரின் பாடல்களில் காணலாகும் சிற்றிலக்கியக் கூறுகள்”

அதிகம் படித்தது