மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பார்ப்பன பெண்களின் முன்னேற்றத்தில் சுயமரியாதை இயக்கம் !

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 7, 2019

siragu-suyamariyaadhai1

அண்மையில் தோழர் ஓவியா எழுதிய கருஞ்சட்டைப் பெண்கள் என்ற நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் பற்றி பல செய்திகளை சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக தந்தை பெரியார் அவர்களாலும், சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளாலும் பயன் பெற்றோர் பார்ப்பனர் அல்லாத பெண்கள் மட்டுமல்ல பார்ப்பன பெண்களும் என்ற தகவலை குடியரசு ஏட்டில் 1930 இல் வெளிவந்த ஒரு கடிதம் மற்றும் குமரன் இதழில் வெளிவந்த கடிதம் இவற்றை தொகுத்து தரப்பட்டிருந்த செய்தியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பார்ப்பன பெண்கள் என்றாலும் மனுவின் படி அனைத்துப் பெண்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களே!

பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என தெளிவாக கூறுகின்றது.(மனு அத்தியாயம் 9; சுலோகம் 32)

குறிப்பாக விதவைகளின் மறுவாழ்வை வலியுறுத்தி அன்றைய காலக்கட்டங்களில் சுயமரியாதை இயக்கம் சுழன்று பரப்புரை செய்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூட அதனை வலியுறுத்தி பல பாடல்களை இயற்றி உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

“கோரிக்கை அற்று கிடக்குதண்ணே இங்கு
வேரிற் பழுத்த பலா – மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்
வடிகின்ற வட்ட நிலா!” என்று தன் கவிதைகளால் கைம்பெண்கள் துயரத்தை எழுதியவர்.

அந்த பணியால் பெரிதும் பயன்பெற்றவர்கள் பார்ப்பன பெண்களே என்பதே உண்மை. ஏனெனில் பார்ப்பன சமுதாய பெண்களை எட்டு, ஒன்பது வயதில் திருமணம் செய்துகொடுத்து விடும் வழக்கம் இருந்தது. அந்தப் பெண்களின் சிறு வயது கணவன்கள் இறந்து விட்டால் அந்த இளம் விதவைகளுக்கு மொட்டை அடித்து மூலையில் அமர்த்திவிடும் கொடுமை சென்ற நூற்றாண்டின் இறுதிவரை நிலைத்திருந்தது. ‘மொட்டைப் பாப்பாத்தி’ என்ற சொல்லாடலை நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் அந்தக் கொடுமையை இன்று தேடினாலும் காண முடியாது. அதற்கு காரணம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் தந்தை பெரியாரும் அவரின் தன்மான இயக்கமும் தான். தந்தை பெரியாரின் உரையை பார்ப்பன வீட்டின் பெண்கள் முக்காடு அணிந்து கொண்டு அந்தக் காலத்தில் கேட்பார்களாம். ஏனெனில் அய்யா பேசிய பெண் விடுதலை அனைத்து சமூக பெண்களுக்குமானது.

siragu-suyamariyaadhai2

அதனை பாராட்டி ‘என்னுடைய மறுபிறப்பு’ என்ற பெயரில் 11.11.1930 இல் வெளிவந்த குடியரசில் ஒரு பார்ப்பனப் பெண் எழுதிய கடிதம் வெளிவந்தது.

“பார்ப்பனீயம் என்னும் பெயரில் ஒரு நச்சு மரம் என்னுடைய சமூகத்தில் ஆழமாகப் பரவியுள்ளது. அதை வேரறுத்த சுயமரியாதை இயக்கத்தின் மூலமாக எனக்கு மறுபிறப்பு கிடைத்துள்ளது. ”கெட்ட சகுனம் பிடித்தவள்” என என் மீது சுமத்தப்பட்டிருந்த களங்கத்தைத் துடைத்தெறிந்த இயக்கம் சுயமரியாதை இயக்கம். தமிழ்நாட்டு மண்ணில் இந்த இயக்கம் நீடூழி வாழ வேண்டும்.”

இதே போல பார்ப்பன விதவைப் பெண் ஒருவர் எழுதிய கடிதம் ‘குமரன்’ ஏட்டில் 1938 இல் வெளிவந்தது. செல்வியா? திருமதியா? என்னும் தலைப்பில் வெளியான அந்தக் கடிதத்தில்,

‘எனதருமைச் சகோதரிகளே! மதத்தின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்துவதாக பார்ப்பனர்கள் மீது சுயமரியாதை இயக்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், அந்தச் சொல்லொணாத் துயரத்தை நாங்களும் அனுபவிக்கிறோம். நீண்ட நாட்களாக இந்தத் துயரத்தை சகித்துக் கொண்டிருந்த நான், இப்போது சுயமரியாதை இயக்கம் மூலமாக மறுவாழ்வு பெற முடிவெடுத்து விட்டேன். நான் ஒரு பார்ப்பனப் பெண். எனக்கு 9 வயதிலேயே திருமணம் செய்துவைத்தார்கள். எனது கணவரை ஒருமுறை கூட நான் பார்த்தது இல்லை. நான் வயதுக்கு வந்தவுடன் என்னுடைய படிப்பு நிறுத்தப்பட்டு, என்னை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க எனது தந்தை தயாராக இருந்தார். ஆனால் என்னை அழைத்துச்செல்ல மாமனார் வீட்டில் நான்காயிரம் ரூபாய் கேட்டனர். அவ்வளவு பணம் எங்களால் தர முடியவில்லை. இந்த அதிர்ச்சியிலேயே என் பெற்றோர் இறந்து போனார்கள். அதன் பிறகு நான் எனது அண்ணியாரால் கொடுமைபடுத்தப்பட்டேன். நான் இப்போது செல்வியா? அல்லது திருமதியா? என்னுடைய நிலை என்ன? எனக்குச் சடங்குப்படி திருமணம் முடிந்துவிட்டது. ஆனாலும் நான் உண்மையில் திருமணமாகாத பெண்ணாகவே வாழ்கிறேன். இத்தகைய துயரங்களை பார்ப்பனர் அல்லாத பெண்கள் மட்டும் அனுபவிப்பதில்லை. அனைத்துப் பெண்களுமே அனுபவிக்கின்றனர்’.

இந்த வரிகளின் வலியை இன்று அந்தச் சமுதாய பெண்களால் கூட உணர முடியாது. ஏனென்றால் அந்த அளவிற்கு வேத காலத்தின் ஈர்ப்பு பார்ப்பன பெண்களையும் பிடித்து ஆட்டுகின்றது. ராமராஜ்யம் அல்லது மனுவின் காலம் என்பது ஒன்று அமையுமானால் அது உண்மையில் பார்ப்பன பெண்களுக்கு மிக கேடானது என்பதை அந்தச் சமுதாய பெண்கள் உணர வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டிற்கு எங்கும் செல்ல வேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இசுலாமியர் ஒருவரை விரும்பியதாக ஸ்வாதி என்ற பார்ப்பனப் பெண்ணை தொடர் வண்டி நிலையத்தில் கொன்ற இடத்தில் இருந்தே எண்ணிப்பார்க்கலாம்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பார்ப்பன பெண்களின் முன்னேற்றத்தில் சுயமரியாதை இயக்கம் !”

அதிகம் படித்தது