மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரமிள் கவிதைகள் -படிமம் –படிப்பினை

இல. பிரகாசம்

Sep 16, 2017

Siragu piramil3

நவீன தமிழ் இலக்கியத்தில் பெரும்பங்களிப்பைச் செய்தது சி.சு.செல்லப்பா அவர்கள் நடத்திய ‘எழுத்து’ இதழ். இலக்கிய விமர்சனங்களோடு தன் பயணத்தை தொடங்கிய எழுத்து இதழ் பிற்காலத்தில் இதழ்களின் வளர்சிக்கு ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது எழுத்து இதழில் எழுதியவர்களுக்கு முகவரியாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

அவ்வகையில் ‘எழுத்து’ இதழில் கவிதைகள் எழுதியவர்களின் அறுபத்து மூன்று கவிதைகளையும் அக்கவிதைகளை எழுதிய இருபத்து நான்கு கவிஞர்களையும் “புதுக்குரல்கள்” என்று தொகுத்து வெளியிட்டது. அத்தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர்களில் வெகுசிலர் மட்டுமே கவிதையை தொடர்ந்து செய்து வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் ‘பிரமிள்’ என்று அழைக்கப்படுகிற இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்த சிவராமலிங்கம்.

“புதுக்குரல்” தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர்களில் வடித்தெடுப்பது சற்று கடினமென்றாலும் இக்கட்டுரைக்காகவாவது பிரமிளை முன்னிலைப்படுத்த அவசியமாகிறது. மேலும் பிரமிள் கவிதை அமைப்பு, உத்திமுறை மற்றும் படிமம் ஆகியவற்றின் காரணமாக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

பிறவாத கவிதை:

ஒரு நிகழ்வு சட்டென ஒரு கணத்தில் ஒருவனை எப்படியெல்லாம் திடுக்கிட வைக்கும்? அந்த நொடியில் நிஜம் என்பது என்ன? இடம், பொருள், காலம், வினை ஆகியவைகளை எண்ணி முடிப்பதற்குள் ஒரு கவிதை பிறந்து, வளர்ந்து தன் உருவத்தை சட்டென ஒரு மின்னலைப் போல வானத்தில் வெளிச்சத்தைப் படரச்செய்து, அதன் பின் தோன்றுகிற இடியைப் போல நிகழ்கிற தருணம் ஒரு கவிதை பிரசவிக்கிற கணமாக இருக்கிறது.

     “ஒரே கணத்தில்

     கிழித்து

     காலத் துரும்பை

     எற்றி எடுத்து

     எரித்து நீறாக்கி

     நிற்க வேண்டாமா

     கவிதை?” (1974)

மேற்கண்ட வரிகள் ஒரு கவிதை எப்படி நிகழ்கிறது அல்லது எப்படி நிகழலாம் என்று ஓர் அனுமானத்தை எடுத்துக்கூற முற்படுகிறது. அனுமானம் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு கரு உருவாகத் தேவைப்படும் விந்து முக்கியத்துவம் பெறுவதைப் போல கவிதைக்கான கருவானது கணநேரத்தில் எந்த ஒன்றிலும் நிகழ்ந்து விடக்கூடியது. அவற்றுக்கான விந்து(வித்து) எது என்று அவதானித்து செய்யப்படுகிற போது கவிதை பிரசவிக்கிறது. அது நிழ்காலத்தை குறித்து.

பிரமிள் கவிதைகள்:

Siragu piramil1

வாழ்வின் சில தருணங்களில் நமக்கும் மற்றொருவருக்கும் இடையில் ஏற்படுகிற இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மௌனமாக இருக்கலாம். ஆனால் அந்த மௌனம் பெரும் அதிர்வு நிகழ்விற்குப் பின்னால் தோன்றுமானால் அதற்கு அழுத்தம் அதிகம். அல்லது சொற்களால் நிரப்பப்படாத தன்மையில் அக்கணங்கள் தன்னை உரித்துக் கொண்டவையாக இருக்கிற போது அக்கணத்தில் மௌனம் மிக ஆழம் சென்று நம்மை பார்க்கும் வலிமையை பெறுகின்றன. அத்தகைய ஒரு அழுத்தம் “பேச்சு” என்கிற தலைப்பில் அமைந்த கவிதையில் காணக்கிடைக்கிறது.

     “பூவின் இதழ்ச் சுவருள்

     வண்டுக்குரல் ஒலிகள்

     மோதி மடிகிறது.

     முத்தத்திரை மறைவில்

     பேச்சுப் புதைகிறது” (எழுத்து-1962)

மேற்கண்ட வரியில் பூவிற்கும் வண்டிற்கும் இடையில் நிகழ்கிற காதலின் மௌனம் ஏற்படுத்துகிற அதிர்வு அடுத்த வரியில் பொங்கி வருகிறது. அவ்வரி

     “ஆனால் இ ரத்தம் கதைக்கிறது

     மவுனம் அதிர்கிறது”

மௌனத்தின் அதிர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய பாதிப்பின் குறியீடாக மௌன அதிர்கள் படிமமாக இருக்கிறது.

மற்றொரு கவிதையான “நிழல்கள்” கவிந்த இருளில் பாய்கிற வெளிச்சம் ஏற்படுத்துகிற பாதிப்பை வெளிக்கொணர்கிறது.

     “இரவில் குளித்து

     உலகம் வீசும்

     வெளிச்சச் சாயை பரிதி”

ஒரு வாசகன் மீண்டும் இவ்வரிகளை படிக்கிற போது வேறாரு கற்பனை உலகத்தை அவனுக்கு இரையாக்கி வைத்திருப்பதை உணரமுடியும்.

காவியம்:

பிரமிளின் கவிதைகள் காலத்தை கடந்து வந்து பாதிப்பை ஏற்படுத்துபவை. அவற்றுக்கு எளிய மிகச்சிறந்து உதாரணமாக “காவியம்” என்ற தலைப்பில் அமைந்த கவிதை அவரது புகழை சொல்லிக் கொண்டே இருக்கும். சொல்லிக் கொண்டே இருக்கிறது.

     “சிறகிலிருந்து பிரிந்த

     இறகு ஒன்று

     காற்றின்

     தீராத பக்கங்களில்

     ஒரு பறவையின் வாழ்வை

     எழுதிச் செல்கிறது.”

முன்பு கூறியது போல ஒரு கவிதை நிகழ்வதற்கான “கணநேரம்”. அது ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை இக்கவிதை நம்மை உசுப்பிவிடச் செய்கிறது.

அதே போல் மற்றொரு கவிதையான “குமிழிகள்”

     “இன்னும்

     உடையாத ஒரு

     நீர்க் குமிழி

     நதியில் ஜீவிக்க

     நழுவுகிறது.”

நிலையற்ற தன்மை கொண்ட நீர்க் குமிழி ஏற்படுத்துகிற சொல்கிற “நிலையாமை” ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. அதே கவிதையில் மற்ற வரிகள் வேறொரு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் உள்ளது.

     “கைப்பிடியளவு

     கடலாய் இதழ்விரிய

     உடைகிறது

     மலர் மொக்கு”

பாதிப்பு இரண்டு பகுதிகளுக்கும் ஒன்று என்றாலும் தாக்கத்தின் அளவு வேறுபடுவதை உணரமுடிகிறது.

எல்லை:

எந்த ஒரு நிகழ்விற்கும் செயலுக்கும் எல்லைகள் இவ்வளவு தான் என்று துணிந்து வரையறுக்க முடியாது.

     “கருகித்தான் விறகு

     தீயாகும்

     அதிராத தந்தி

     இசைக்குமா?

     ஆனாலும்

     அதிர்கிற தந்தியில்

     தூசி குந்தாது.

     கொசு

     நெருப்பில் மொய்க்காது” (எழுத்து-1965)

E=mc2:

     “நைவேத்யத்தை

     குருக்கள் திருடித் தின்றதினால்

     கூடாய் இளைத்துவிட்ட

     நெஞ்சைத் தொட்டு

     ‘இங்கே’ என்றான் சிவன்.

     ‘அசடு’ என்று

     மாணவர்கள் சிரித்தார்கள்.” (அஃக் 1972)

இந்திய புராண கதை ஒன்றை படிமமாக வைத்து செய்யப்பட்ட E=mc2   என்ற கவிதை அவரது ஆளுமைக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

“பாலை” என்ற கவிதை

     “பார்த்த இடமெங்கும்

     கண்குளிரும்

     பொன் மணல்

என் பாதம் பதித்து

     நடக்கும்

     இடத்தில் மட்டும்

     நிழல் தேடி

     என்னோடு அலைந்து

     எரிகிறது

     ஒரு பிடி நிலம்”

காலடியில் தொடர்கிற நிழல் பாலை நிலத்தில் எத்தகை தேவை ஒன்றாக இருக்கிறது என்று கூறுகிறது. இக்கவிதையில் கட்டமைப்பு படிமம் சரியானபடி அமைந்துள்ளது.

நிகழ மறுத்த அற்புதம்:

Siragu piramil2

நவீன தமிழ் இலக்கியத்தில் புராணக்கதைகளை மையமாகக் கொண்டு சோதனை செய்தவர்கள் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். பிற்கால கவிஞரான பிரமிள் இச்சோதனையையும் செய்து பார்த்தார்.

ஆனால் பிரமிள் நடந்து முடிந்த ஒரு புராண நிகழ்வை மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியக்கூறு உண்டா? இக்காலத்தில் ஏன் சாத்தியப் படவில்லை என்ற கேள்விக்கு பதிலை கொடுக்கிறார். அது “நிகழ மறுத்த அற்புதம்” என்ற கவிதையில்.

     “என்றோ ஒருநாள்

     தனது விளையாட்டு சிறுபாதம்

     அறியாது மிதிக்க-

     அற்புதம்!

     ஒருகல்

     துயில் கலைந்தெழுந்தது”

புராணக் கதையான அகலிகை மோட்சக் கதையின் சாரமே கவிதைக்கான கரு. அக்கவிதையின் மற்ற வரிகள்

     “பழைய கருணையை

     பரிசோதித்துப்

     பார்ப்போமென்று

     வேண்டுமென்றே இடறி

     நின்று

     கவனித்தான்”

     ——————

     கருணையின் பாதியை

     நழுவவிட்ட காரணமோ

     அற்புதம் நிகழவில்லை

     மிஞ்சியது

     இடறிய கால் விரலில்

     ஒருதுளி ரத்தம்

     கால் விரல் வலித்தது”

மீண்டும் நிகழ்த்தப்பட்ட அதே “நிகழ் நாடகம்” வேறொரு முடிவைத் தருகிறது.

     “கருணை கலைந்தது

     ‘த்ச’ என்றான்

     மனிதன் ராமன்”

மற்றொரு கவிதையான “ராமன் இழந்த சூர்ப்பநகை”யும் புராணக் கதையில் வேறொரு முடிவை தருவதாகவே சோதிக்கப்பட்டுள்ளது.

பழைமை:

உடலில் ஏற்படுகிற இருவகையான பசியின் குணம் அது வெளிப்படுகிற தருணம் ஆகியவற்றை விவாதம் செய்ய தூண்டுகிறது “பழைமை” என்ற கவிதை.

     “உடற்பசி தணிந்தால்

     பொய்ப்பசி.

     உயிர்பசி தணித்தது

     இதுவும் பொய்ப்பசி.

     ஒரு பசிப் பொய் போய்

     இது ஒரு புதுப்பசிப் பொய்” (கசடதபற 1972)

“நாளை புரட்சி” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையும் பசியைப் பற்றித்தான் விவாதிக்கிறது.

     “வயிற்றில் குடியிருந்து

     வாழ்ந்து பசிக்கிறது

     நிகழ்காலம்

     பசியில் அடைத்த

     காதிலும் விழுகிறது

     ‘நாளைய புரட்சி

     சரித்திரம் நமது கட்சி’

     என்றென்

     பசியைக் கூட ஜீரணிக்க முயற்சிக்கும்

     ஏப்பக் குரல்க்ள” (1973)

பசி ஒவ்வொருவருக்கும் நிகழ்காலத்தில் இருப்பு கொள்ளவே தூண்டுகிறது.

மற்றொரு கவிதையான “தாசி”யில் உடலில் ஏற்படுகிற பசியை பற்றித்தான் பேசுகிறது. ஆனால் அது மோகத்தை வளரவிடுகிறது.

     “குங்குமம், கூந்தலில் மலர்

     ‘குலக்கொடி நான்

     ஆனால் இது

     பசிக் கொடுமையில்’ என்றாய்”

பாலியல் தொழில் புரிகிற ஒரு பெண் அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? என்பதை தெரிந்து செய்கிற போது அங்கு குற்ற உணர்ச்சி தேவையா? என்ற கேள்வியை அவர்களுக்குள்ளாகவே கேட்கிற மாதிரி அமைந்திருக்கிறது.

     “எனவே நான்

     பேரம் பேசவில்லை” என்று மோக தாகத்தால் நாடிச்சென்றவன் அவளுடைய காரணங்களை அந்த நொடியில் கவனித்தானா? அப்போதும் அடுத்த வரியாக “எனதின்பம் உனதுதரத்துள்” என்று அவன் கூறுகிறான். இச்சைக்குப் பிறகு,

     “உன் கண்களில் ஒரு

     மலட்டுத்தனம்

     குற்றத்தை உணரா மனப்

     பாசி!”

என்ற வரிகளில் குற்றத்தை உணர்கிற இருவரின் உள்ளமும் எத்தனை கொதிப்பிற்குள்ளாகி சிக்கித் தவிக்கும்? என்பதையும் “நேற்றிரவு பேரம் பேசியிருக்கலாம்” என்ற வரியும் அந்நிகழ்வு அவர்கள் இருவருக்குள் நிச்சயிக்கபட்டதாக கூட இருந்திருக்கலாம். ஆனால் குற்ற உணர்ச்சி என்பது அவர்கள் இருவரின் உளப்பாங்கோடு சம்பந்தப்பட்டது என்பதை இரகசியத்தை அவர்களுக்குள் முடித்து வைக்கிறார்.

பிரமிள்:

நவீன தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதையில் பல பரிணாமங்களைக் கண்டவர் பிரமிள். எழுத்து இதழில் அடையாளம் காணப்பட்டு கசடதபற, நடை, அஃக், சதங்கை ஆகிய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். இவரது குறுநாவல் “கண்ணாடியுள்ளிருந்து” ஒரு நிகழ்வு தொடர்ச்சியின் தன்மை எப்படி சுழற்சியை இழந்து விடாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மிகப் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. மிக நீண்ட வரிகளைக் கொண்ட இக்குறுங்காவியம் இன்றைய இளம் வாசகர்கள் வாசித்துக் கற்க வேண்டிய பாடம் என்று கூட சொல்லலாம். படிமம் படிப்பினையை பெற்று பிரமிளின் அடையாளமாக இன்றுவரை காணப்படுகிறது. மற்றொரு அடையாளமாக “மண்டபம்” கவிதையும் பேசப்படுகிறது.

தமிழில் கவிதைகள் மட்டுமல்லாது நாவல், கட்டுரைகள், ஓவியம், சிற்பம், சோதிடம் ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரமிள் கவிதைகள் -படிமம் –படிப்பினை”

அதிகம் படித்தது