மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பீர்க்கங்கொடியும் வான்முகிலும் சாரலும்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Oct 23, 2021

siragu kurunthogai1

“பீர்க்கங்காய் வாங்கி வரச் சொன்னேனே வாங்கி வந்தியா?”, எனச் சாரல் வான் முகிலிடம் கேட்டாள்;
இல்லையே மறந்துட்டேன் என்றான் வான் முகில், எத்தன தடவை நினைவுபடுத்தினேன் எனக் கடிந்து கொண்டாள்;

“இல்லமா நீ சொன்ன எல்லா காய்கறியும் வாங்கினேன், இது மட்டும் மறந்துபோச்சு”

“அது எப்படி மறக்கும்?”

வான் முகில் பேசவில்லை. அமைதியாகக் கணினியைத் திறந்து முகநூலை மேயத் தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து அவன் அறைக்கு வந்த சாரல், “சரி பீர்க்கங்காய் வாங்கி வரத்தான் மறந்துட்ட, பீர்க்கை பூ வாங்கி வரலாம்ல”, என்றாள் குறும்பாய்

“அது எங்க கிடைக்கும்”

“குறுந்தொகையில்” எனச் சொல்லிக் கண்ணடித்தாள்

“குழப்பாதமா”

இன்னள் ஆயினள் நன்னுதல்’ என்று அவர்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்று மன், வாழி தோழி, நம் படப்பை
நீர் வார் பைம் புதல் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.

என்று குறுந்தொகை பாடலை சொன்னாள் சாரல்

“ இதுக்கு என்ன பொருள்? எனக்கு ஒன்னும் புரியல”

“ சொல்றேன் கேட்டுக்கோ”

மழைக்காலம் வந்துவிட்டது, கார்காலத்தில் உன் தேகத்துடன் ஒட்டியிருந்து குளிர் போக்குவேன் என்று சொன்ன தலைவன் இன்னும் வரவில்லை; தலைவியால் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; தலைவனை நினைத்து நினைத்து உருகிப் போகிறாள், அவள் கைவளையல்கள் கழன்று விழும் அளவுக்கு இளைத்து விடுகிறாள், அப்போது அவள் தோட்டத்தில் பீர்க்கை மலரைப் பார்க்கிறாள்,

அந்த பீர்க்கை மலரின் நிறம் மஞ்சள், அது தலைவனை எண்ணி உணவு எடுக்காமல் இரத்தம் சுண்டிப்போன அவள் மேனியின் நிறத்தை ஒத்து இருக்கிறது; தன் தோழியை அழைத்து இந்த பீர்க்கை மலரை எடுத்துக்கொண்டு என் தலைவரிடம் சென்று உன் தலைவியின் மேனி இந்த பீர்க்கைப் பூவைப் போலப் பசலை படிந்து உள்ளது எனக் கூறி அவரை விரைவாக என்னிடம் வந்து சேரச் சொல் என யாரேனும் தூது சென்றாள் நான் மகிழ்வேன் என்கிறாள்.

“இது தான் குறுந்தொகைப் பாடலோட பொருள்”

“ஓ , 2000 வருடத்திற்கு முன்னதாகவே பீர்க்கைத் தமிழர் உணவிலிருந்திருக்கா?” என வியப்புடன் கேட்டான் வான்முகில்

“ஆமாம், உன் பெயரில் இருக்கும் வானுக்கும் முகிலுக்கும் எத்தனை காதல் கதைகள் தெரியுமோ அதே அளவு காதலை இந்த பீர்க்கை மலரும், காயும் கண்டிருக்கு”

“ இவ்வளவு அழகா இந்தப் பாடலை எனக்குச் சொல்லிக் கொடுத்த சாரலுக்கு வான்முகில் என்ன பரிசு தரப்போறேன் தெரியுமா?” எனச் செல்லமாகக் கட்டியணைத்து அவளை அவனருகில் இழுத்தான்

“தடாலென தன்னை விடுவித்துக் கொண்டு, நாளைக்கு ஒழுங்கா பீர்க்கங்காய் வாங்கிட்டு வா” அது தான் பரிசு என்று சொல்லிவிட்டு ஓடினாள் சாரல்

“ஓய், ஓடாத நில்லு”

“ இந்தா, நீ கேட்ட பீர்க்கங்காய்”

“அட, இது இன்ன கொடி?”

“அதுவா, பீர்க்கங்கொடி, இனி நம்ம வீட்டில் பீர்க்கை மலர் பார்க்கும்போதெல்லாம் தன் தலைவனுக்குப் பீர்க்கை மலரைக் கொண்டு சென்று தன் தவிப்பை உணர்த்தச் சொன்ன குறுந்தொகை பாடல் நினைவில் இருக்கும்ல”

சாரல் அன்பாய் அவன் கண்களைப் பார்த்தாள்! இதழ்கள் பேசித் தொடங்கின.

குறுந்தொகை 98, கோக்குளமுற்றனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பீர்க்கங்கொடியும் வான்முகிலும் சாரலும்”

அதிகம் படித்தது