சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’

தேமொழி

Jan 8, 2022

siragu thunbakeni1

மணிக்கொடி இதழில் 1935 ஆண்டு காலவாக்கில் வெளிவந்த புதுமைப்பித்தனின் சிறுகதையான ‘துன்பக்கேணி’ சற்றொப்ப 87 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் துயர் நிறைந்த வாழ்வைப் படம் பிடிக்கும் புனைவு. வாசவன்பட்டி என்ற திருநெல்வேலி மாவட்ட குக்கிராமத்தில் வெள்ளையனுக்கு வாழ்க்கைப்பட்டவள் மருதி. மாடு வாங்குவதற்காகப் பண்ணையாரிடம் கடன்பட்ட அவள் கணவன் கள்வன் எனவும் சூழ்நிலைச் சிக்கலில் சிக்கிச் சிறை செல்கிறான். மருதி தாய்வீட்டிற்குச் செல்கிறாள்.

கதையின் காலம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்து இந்தியா. அதாவது கதையின் காலம், 19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு துவக்கக் காலகட்டங்களிலும் தொடர்ந்து பஞ்சமும் வறட்சியும் இந்தியாவில் தலைவிரித்தாடிய காலம் ஆகும். ஐரோப்பியர்கள் உருவாக்கிய காப்பி தேயிலை கரும்பு இரப்பர் போன்ற பணப்பயிர்களை வளர்க்கும் இடங்களில் கூலியாட்கள் தேவை அதிகரித்த ஒரு பொருளாதாரச் சூழல். தமிழ்நாட்டின் நிலமற்ற அடித்தட்டு விவசாய மக்களைத் தோட்டப்பயிர் பயிரிடப்படும் இடங்களை நோக்கிப் பஞ்சம் பிழைக்கப் புலம்பெயரச் செய்த காலக்கட்டம்தான் கதையின் பின்புலம்.

கலைஞரின் புகழ் பெற்ற பராசக்தி திரைப்பட வரிகள் காட்டியது போல ‘பிறக்க ஓரிடம், பிழைக்க ஓரிடம்’ என்ற தமிழ்நாட்டின் தலை எழுத்துக்குக் கதையின் பாட்டுடைத் தலைவி மருதியும் விதிவிலக்கல்ல. இலங்கை அவள் உயிரை வளர்த்தது. இவ்வாறுதான் அடித்தட்டு ஏழைபாழைகள் தோட்டவேலை ஒப்பந்தக் கூலிகளாக வாழ்வை நடத்திக் காட்டிக் கொண்டிருந்தனர் கதை எழுதப்பட்ட அக்காலகட்டத்தில். இது போன்ற உழைப்பாளர்களை ஒப்பந்தக் கூலியாக்கி அவர்களைத் துன்பத்தில் தள்ளிய சூழலைக் கொண்ட பிஜீ தீவின் கரும்புத் தோட்டங்களை பாரதியார் ‘துன்பக்கேணி’ என்று குறிப்பிட்டார், அதையே தனது கதையின் தலைப்பாக்கிக் கொண்டு தோட்ட ஒப்பந்தக் கூலிகளின் வாழ்வின் அவலத்தை இக்கதையில் விவரித்துள்ளார் புதுமைப்பித்தன்.

“அங்கெ நிக்கது மருதியா – ஏ மூதி! தொளுவிலே மாட்டுக்கு ரெண்டு செத்தை எடுத்துப் போட்டுவிட்டு வா!” என்று கதையின் முதல் பகுதியில் அதட்டப்படுகிறாள் மருதி. கணவன் சிறையில் அடைபட்ட காலத்தில், இரண்டு மாதக் கர்ப்பிணியான அவள் பஞ்சம் பிழைக்க தாயுடன் இலங்கை மலையகத் தேயிலைத் தோட்ட வேலைக்குப் புறப்படுகிறாள். தேயிலைக் கொழுந்து பறிக்கும் ஒப்பந்தக்கூலியாக ‘வாட்டர் பாலம்’ (வாட்டர் ஃபால்ஸ்) தேயிலைத் தோட்டத்திற்குக் குடிபெயர்கிறாள். கால ஓட்டத்தில் உடற்பசி கொண்ட தேயிலைத் தோட்ட முதலாளிக்கும், ஸ்டோர் மானேஜருக்கும் இரையாகிறாள், அங்கு அது வழமை என்றும் தெரிந்து கொள்கிறாள், நோய்வாய்ப்பட்ட தாயையும் இழக்கிறாள். பிறந்த பெண் குழந்தையான ‘வெள்ளைச்சி’ யுடன் தோட்ட முதலாளி துரையின் வீட்டுத் தோட்டக்காரியாக அந்த வீட்டுக் குடிசையில் வாழ்கிறாள். கட்டுப்பாடற்று பலருடன் கொள்ளும் உடலுறவால் பாலியல் தொடர்பு மூலம் பரவுகின்ற மேக நோயால் பாதிக்கப்பட்ட துரையால், இவளும் பாதிக்கப்பட்டுத் தோல் புண்கள் கொண்டு தவிக்கிறாள் (இந்திரன் அவ்வாறு தவறான பாலியல் உறவுகளால் மேகநோயால் பாதிக்கப்பட்டால் அவன் தோற்றம் ஆயிரம் கண்கள் கொண்டவனாகக் காட்டப்படும் என்பது புராணம் கொடுக்கும் உயர்வு நவிற்சிச் சலுகை).

சிறையிலிருந்து மீண்டு அவளைத் தேடி இலங்கை வரும் கணவன் வெள்ளையன் அவள் நிலை கண்டு அதிர்கிறான். தான் அவனுடன் இனி வாழத் தகுதியற்றவள் என்று கணவனிடம் கூறி குழந்தையை அவனுடன் ஊருக்குக் கொடுத்து அனுப்பி விடுகிறாள். பின்னர் நோயின் கொடுமையால் தான் பார்த்த தோட்ட வேலையை இழந்து மகளைப் பார்க்க விரும்பி இந்தியாவிற்கு வரும் மருதி அவள் கணவன் மறுமணம் புரிந்து வாழ்வதைக் கண்டு மறைவாக வாழ்கிறாள். மகளைப் பார்க்க விரும்பிச் செல்கையில் அவள் சிற்றன்னை கொடுமைக்கு ஆளாவதைக் கண்டு வெகுண்டு மகளை மீட்டு, கங்காணி சுப்பனின் உதவியுடன் மீண்டும் இலங்கைக்கே திரும்பி அவன் மனைவியாக வாழ்கிறாள். காலங்கள் உருண்டோடுகிறது. மகள் வளர்ந்த பிறகு தான் பட்ட அதே துயர் நிறைந்த வாழ்வு ஸ்டோர் மானேஜர் மூலம் தனது மகளுக்கும் நேரும் பொழுது கொதித்து எழுந்து அந்தக் கொடியவனைக் கொல்கிறாள் மருதி. அத்துடன் தனது மதி பிறழ்ந்து மனநிலையும் பாதிக்கப் பட்டுப் போகிறாள், துன்பக்கேணியிலிருந்து அவள் வாழ்வு மீளவேயில்லை என்ற மருதியின் இந்தத் துயரக்கதை, இரு தலைமுறைகளைக் கடந்து , 14 அத்தியாயங்களாகத் தொடர்கிறது. ஆகவே இதைச் சிறுகதை என்பதைவிட குறும்புதினம் என்ற வரையறைக்குள் துன்பக்கேணி வந்துவிடுகிறது எனலாம்.

பெண்ணியச் சிந்தனை கொண்டு ஆய்வோருக்கு அக்காலப் பெண்களின் நிலை நெஞ்சைப் பிசையலாம். வர்க்க பேதம் விரும்பாத பொதுவுடைமை வாதிக்கு இலங்கை தேயிலைத் தோட்டத்திலும், இந்தியாவில் கிராமத்துப் பண்ணை ஆண்டையாலும் பரிதவிக்கும் உழைப்பாளிகளின் அல்லல் முதன்மையாகத் தெரியலாம். சமநீதிக்குப் போராடுபவர்களுக்கு ஓர் இந்தியக் குக்கிராமத்தின் சாதிய அமைப்பும் வாழ்வியலும் எவ்வாறு பேதங்கள் காட்டியதில், இல்லாமை என்ற ஏழ்மைநிலை ஒரு சில பிரிவினரை அதிகம் பாதித்தது என்பது உறுத்தலாம். சமூகவியல், வரலாற்று ஆய்வாளர்களுக்கு மேலும்பல கோணங்களும் கூடப் புலப்படக் கூடும். கதையைக் கதையாகவே படித்துச் செல்லும் ஓர் எளிய வாசகருக்கு மருதி என்ற கிராமத்து ஏழைப் பெண்ணின் துன்பியல் நிறைந்த வாழ்க்கை தொடர்கதையாகி, அவள் பாதுகாக்க நினைத்த அவளது மகளையும் தாக்கி மருதி என்ற தாயுள்ளம் நிலை பிறழ்ந்ததைப் படித்த பிறகு ஓரிரு நாட்கள் அந்தத் தாயின் துயர வாழ்வு மனதில் துக்கத்தை நிரப்பித் தூக்கத்தைத் தொலைக்க வைக்கும்.

தமிழக மக்களின் வரலாற்றில் ஒரு காலகட்டத்து வாழ்வியலைப் பதிந்து வைத்துச் சென்ற புதுமைப்பித்தனின் இந்தக் கதைக்கு வரலாற்றில் என்றும் ஒரு நிரந்தர இடமுண்டு. ஒரு குக்கிராம கடந்த கால அமைப்பையும் வாழ்க்கையையும் மக்களையும் அவர்களின் மனநிலையையும் புதுமைப்பித்தன் எழுத்து மூலம் தெளிவாகக் கண்முன் கொணர முடிவதும், “வெள்ளிக்கிழமை மத்தியானம் வெய்யிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது” என்ற விவரிப்பும் புதுமைப்பித்தனின் எழுத்தின் சிறப்பைக் காட்டி நிற்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் இளங்கலை தமிழ்ப் பாடத்திட்டத்திலிருந்த புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளை 2014 ஆம் ஆண்டு நீக்கியது. அதில் ஒன்று பொன்னகரம் மற்றொன்று துன்பக்கேணி. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைக் கேவலப்படுத்துவதாக அப்பொழுது நீக்குவதற்கான காரணமும் கூறப்பட்டது. அத்தகைய முடிவு, சென்ற காலங்களில் இல்லாதார் வாழ்வை எப்படி இருப்போர் சமூகம் பாழ்படுத்தியது என்ற உண்மையை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாத நிலையைக் காட்டுவதன்றி வேறில்லை. செய்த தவறு மனதை உறுத்தும் வகையில் சுட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதையே கதையின் வெற்றிக்கு அறிகுறியாகக் கொள்ளலாம்.

புதுமைப்பித்தன் – துன்பக் கேணி

https://ta.wikisource.org/s/sp


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’”

அதிகம் படித்தது