மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 6, 2016

puratchi kavignar1தனக்குப்பின் ஒரு கவிப் பரம்பரையினரை உருவாக்கியதில் முதன்மையானவர் பாரதிதாசன் அவர்கள். அவரின் கவிதை வரிகளில் அனல் தெறிக்கும். குறிப்பாக பெண்ணியம் குறித்தும், பெண் கல்வி குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும்  அவர் எழுதிய கவிதைகள் பழமைவாதிகளின் ஆதிக்கத்திற்கு சவுக்கடியாக இருந்தது எனின் அது மிகையன்று!!

புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா உரைத்த

   பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!

“உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த

   உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!

அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!”

   அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!

குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்

   குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!

என்று “பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா” என்ற  கவிதையில், கேள்வி எழுப்புகிறார் புரட்சிக் கவிஞர் அவர்கள்.

puratchi kavignar3விதவைகள் மறுமணம் குறித்து எழுதும் போது ஒரு பெண் தன் துணை இழந்து தவிக்கும் தவிப்பினை “கைம்மைப் பழி” என்ற கவிதையில்,

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே  இங்கு

வேரிற் பழுத்த  பலா-மிகக்

கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்

வடிகின்ற வட்ட நிலா!

சீரற்று இருக்குதையோ குளிர் தென்றல்

சிறந்திடும் பூஞ்சோலை-சீ

சீஎன்று இகழ்ந்திடப் பட்டதண்ணே  நறுஞ்

சீதளப் பூமாலை.

என்று கூறுவதோடு விதவை மறுமணத்தின் அவசியத்தை

காதல் இல்லாவிடம் சூனியமாம் புவி

காதலினால் நடக்கும்!-பெண்கள்

காதலுளத்தைத் தடுப்பது, வாழ்வைக்

கவிழ்க்கின்றதை நிகர்க்கும்.

காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட

கைம்மையைத் தூர்க்காதீர்!-ஓரு

கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச்

சாத்திரம் பார்க்காதீர்!

என்று மிக அருமையான வரிகள் மூலம் உணர்த்துவதை பார்க்கலாம் !!

puratchi kavignar2மேலும் துணை இறந்த பின் ஒரு பெண் வேறு துணை ஏற்றிட வழி இன்றி இருக்கும் இந்த சமூக அவல நிலை பற்றி எழுதுகையில்,

கூண்டிற் கிளிவளர்ப்பார் — இல்லத்தில்

   குக்கல் வளர்த்திடுவார்,

வேண்டியது தருவார்; — அவற்றின்

   விருப்பத்தை அறிந்தே!

மாண்டவன் மாண்டபின்னர் — அவனின்

   மனைவியின் உளத்தை

ஆண்டையர் காண்பதில்லை — ஐயகோ,

   அடிமைப் பெண்கதியே!

என்று வருந்துவதை காண முடியும் !!

puratchi kavignar7அதே போன்று விருப்பம் இன்றி ஒரு ஆண்மகன் பெண்ணை தீண்ட நினைக்கும் தருணம் அந்த பெண் எவ்வாறு அந்த அறிவிலியை சாடுகின்றாள் என்பதை

செல்வப்பிள்ளாய் இன்றுபுவியின் பெண்கள்

சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!

கொல்லவந்த வாளைநீ குறைசொல்லாதே!

கொடுவாள் போல் மற்றொருவாள் உன்மனைவி

மெல்லிடையில் நீகாணாக் காரணத்தால்,

விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப் பெண்கள்மேல்!

பொல்லாத மானிடனே, மனச்சான்றுக்குள்

புகுந்துகொள்வாய்! நிற்காதே! என்றேன்; சென்றான்.

என்ற கவிதை வரிகள் கொண்டு செப்பிடும் பாங்கு ஒரு பெண்ணின் அனுமதியின்றி  அவள்  மீது  நடக்கும் வன்முறையை எப்படிச் சாடவேண்டும் என்ற எழுச்சியை உணர்த்தும் !!

puratchi kavignar8ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டது எனின் இன்றும் இந்தச் சமூகம் அக்குழந்தையை பாரமாக எண்ணிடும் அவல நிலையில் தான் உழன்று கொண்டு இருக்கின்றோம் !! தமிழ் நாட்டின் உசிலம்பட்டியில் நடந்திடும் பெண் சிசுக் கொலைகளே அதற்கு சாட்சி.  அதை உடைத்து பெண் குழந்தைகள் இந்தநாட்டின் கண்கள் மட்டுமல்ல மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை,

சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!

காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்

பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!

நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்

தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!

என்ற வரிகள் கொண்டு அருமையாக  எழுதியிருப்பார் புரட்சிக் கவிஞர் !

puratchi kavignar13இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பெண் என்றாலே மூடத்தனத்தில் மூழ்கி இருப்பவள்  என்ற எண்ணத்தினை மாற்றிட

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற

காடு, மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்

தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!

புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்

கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!

என்று கூறும் வரிகள் ஒரு பெண் குழந்தை எப்படி வளர்கப்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திடும் !!

puratchi kavignar12அதே போன்று பெண்  கல்வியின் இன்றியமையாமை  பற்றி

பெற்றநல் தந்தைதாய் மாரே,-நும்

பெண்களைக் கற்கவைப் பீரே!

இற்றைநாள் பெண் கல்வியாலே,-முன்

னேறவேண் டும் வைய மேலே!

பெண்களால் முன்னேறக் கூடும்!

பெண்களால் முன்னேறக் கூடும்-நம்

வண்தமிழ் நாடும் எந் நாடும்!

கண்களால் வழிகாண முடிவதைப் போலே!

கால்களால் முன்னேற முடிவதைப் போலே!

பெண்ணிகளால் முன்னேறக் கூடும்!

என்றும்;

தந்தை தன் மகளிடம் கல்வியின் தேவை குறித்து கூறும் நிலையில்

படியாத பெண்ணா   யிருந்தால்,-கேலி

பண்ணுவார் என்னை இவ்வூரார்   தெரிந்தால்

கடிகாரம் ஓடுமுன் ஓடு!-   என்

கண்ணல்ல? அண்டை வீட்டுப்   பெண்களோடு

கடிதாய் இருக்குமிப்   போது!-கல்வி

கற்றிடக் கற்றிடத் தெரியுமப்      போது!

கடல்சூழ்ந்த இத்தமிழ்    நாடு-பெண்

கல்விபெண் கல்விஎன் கின்றதன்  போடு.

என்ற கவிதை வரிகள் மூலம் விளங்கிக்கொள்ள முடியும் !!

பெண்கல்வி என்பது தன்னை மட்டுமே செப்பனிட மட்டுமல்ல தான் சார்ந்த குடும்பத்தினரின் அறிவின் வளர்ச்சிக்காவும் தான் என்பதை குடும்ப விளக்கு என்ற கவிதைத் தொகுப்பில் மிக அழகாக எடுத்துரைப்பதுடன்- கல்வி இல்லாமல் இருக்கும் பெண்களின் நிலை குறித்து இருண்ட வீடு என்ற கவிதை தொகுப்பில் தன் கவி கொண்டு கோடிட்டு காட்டுவார் கவிஞர் !!

puratchi kavignar10இந்தச்  சமூகம் செழிப்போடு வாழ வேண்டும் என்றால் பெண்களும் ஆண்களும் சேர்ந்து பயணிக்க வேண்டும் – அப்படி பயணிக்க முடியாது, பெண் என்பவள் ஆண் என்பவனை சார்ந்தே இருந்திட வேண்டும் என்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி என்பதை,

ஆண் உயர் வென்பதும் பெண் உயர் வென்பதும்

நீணிலத் தெங்கணும் இல்லை

வாணிகம் செய்யலாம் பெண்கள்

வானூர்தி ஒட்டலாம் பெண்கள் நல்

ஏணை அசைத்தலும்   கூடும்:-   அதை

யார் அசைத் தாலுமே  ஆடும்!

வீணை மிழற்றலும்   கூடும்;-    அது

மெல்லியின் விரலுக்கா    வாடும்?

நாணமும் அச்சமும் வேண்டும்   எனில்

ஆணுக்கும் பெண்ணுக்கும்

சேயிழை மார்நெஞ்ச மீது நாம்

சீறுபுலி யைக்காணும் போது

தீயதோர் நிலைமைஇங் கேது?- நம்

தென்னாட்டில் அடிமைநில் லாது

தூயராய்த் தொண்டாற்ற வேண்டும்- பல

தொழிதற்கல்வி யுங்கற்க வேண்டும்!!

என்று சீற்றத்தோடு எடுத்துரைப்பார் பாவேந்தர் !!

பெண்ணிற்கான குணங்களாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று கூறும் போது

ஒரு பெண்ணிற்கு இந்த குணங்கள் தேவையற்றவை என்பதை

அச்சமும் மடமையும் இல்லாத   பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின்   கண்கள்

மடமைதான் அச்சத்தின் வேராம்-அந்த

மடமையால் விளைவதே போராம்

கடமையும் அறமுநல் லொழுக்கமும் வேண்டும்

கல்விவேண்டும் அறிவு கேள்வியும் வேண்டும் !!

கல்வியும் – அறிவும் தான் ஒரு பெண்ணின் தேவையான குணங்கள் என்று  மிக தெளிவாகவே விளக்கியிருப்பார் கவிஞர் !!

பெண்ணியம் என்றால் பெண்ணின் கல்வி

அவளின் பொருளாதாரச் சுதந்திரம்

சமூகத் தொண்டில் அவளின் பங்கு எந்த தடையும் இன்றி நடைபெறுதல்

தன்னை பொருளாக கருதும் தன்மையில் இருந்து தன்னையும் – அப்படி நினைக்கும் சமூக சூழ்நிலையையும் மாற்றி அமைத்தல் என்று இன்றைக்கு பெண்ணியம் பல்வேறு பரிணாமங்களை தொட்டு விரிந்து கொண்டிருக்கின்றது .

puratchi kavignar9ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்னரே பெண் கல்வி குறித்தும் – பெண்களின் ஆளுமை குறித்தும் தன் கவிதை கொண்டு எடுத்து இயம்பிய புரட்சிக்கவிஞர் அவர்களின் கவிதைகள் காலத்தால் அழியாதவை !!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் !!”

அதிகம் படித்தது