மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெரியபுராணமும் பெரியகோயிலும்

தேமொழி

Feb 15, 2020

siragu periya kovil6

“அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை, மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.”

என இவ்வாறாக வியப்புக்குறியுடன் துவங்கும் கட்டுரை “பிரகதீஸ்வரம் – அதுவே விஸ்வரூபம்” என்ற தலைப்பில் ‘எழுத்துச் சித்தர்’ என்று குறிப்பிடப்படும் பாலகுமாரன் அவர்களால் பத்தாண்டுகளுக்கு முன்னர், அதாவது, தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டக் காலத்தில் எழுதப்பட்டு, அது நாளேட்டிலும் வெளியானது [1] (மீண்டும் அண்மைய தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வின் பொழுது, மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் இதே கட்டுரையை “ராஜராஜனின் விஸ்வரூபம், தஞ்சைப் பெருவுடையார் கோயில்: நடிகர் சிவகுமாரின் எழுத்தோவியம்” என்ற தவறான ஒரு தலைப்பில் சிவகுமார் எழுதியதாகத் தினமணி வெளியிட்டது [2] என்பது இங்கு கட்டுரை சொல்ல விரும்பும் கருத்துக்கு அப்பாற்பட்டது).

இக்கட்டுரையில் பாலகுமாரன், “மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா? கலைஞர்கள் செய்திறனா? இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர்,” என்றும் குறிப்பிடுகிறார்.

ஆம்!!!… “பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல்” என்று குறிப்பிட்டு அக்கருத்தை மேலும் விவரிக்கிறார் பாலகுமாரன். இது ஒரு பிழையான கருத்து. பெரியபுராணம் என்பது சைவ சமய அடியார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் நூல்; இதற்குத் திருத்தொண்டர் புராணம் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பது பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட அடிப்படை தமிழ் இலக்கியப் பாடம். அவ்வாறு குறிப்பிட்டதில் பிழையில்லை. ஆனால், பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம்தான் மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்ட முக்கிய தூண்டுதலாக அமைந்தது என்பதில் பிழையுண்டு. சேக்கிழாரின் காலம் ராஜராஜ சோழனுக்குப் பிற்காலம். எனவே ராஜராஜன் கோயில் கட்டும் முடிவில் பெரியபுராணத்தின் தாக்கம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே இக்கருத்து ஒரு வரலாற்றுப் பிழை. அதுவும் சோழர் மன்னன் ராஜராஜன் குறித்து வரலாற்றுப் புதினம் எழுதிய ஆசிரியர் ஒருவர் கூற்றில் உள்ள வரலாற்றுப் பிழை [3].

சேக்கிழாரின் காலம்:

‘சேக்கிழார் புராணம்’ என்ற நூல் ‘பெரியபுராணம்’ எழுதிய சேக்கிழாரின் வரலாற்றைக் கூறும் நூல். ‘அநபாயச் சோழ மன்னன்’ காலத்தில் வாழ்ந்தவர் ‘சேக்கிழார்’ என்று இந்நூல் குறிப்பிடுகிறது. சேக்கிழாரும் தாம் எழுதிய பெரியபுராணத்தில் தம்மை ஆதரித்த அநபாயச் சோழமன்னனை பத்து இடங்களில் குறிப்பிடுகிறார். மற்றொரு சோழர் காலப் புலவரான ஒட்டக்கூத்தர் என்பவரும் தம்மை ஆதரித்த மன்னன் அநபாயச் சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கச் சோழன் குறித்துக் கூறுவார். இரு புலவர்கள் கூறும் அநபாயன் குறித்த கருத்துகளில் ஒற்றுமை உண்டு என்பதால் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் குறிப்பிடும் சோழன் அநபாயன் என்பவர் ஒருவரே என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் கருத்து. எனவே, சேக்கிழாரை ஆதரித்த அநபாயன் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் என்பதும் வரலாற்று ஆய்வாளர்களிடம் நிலவும் ஒரு பொதுவான கருத்து [4].

மேலும், இந்த அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகனான இரண்டாம் இராசராச சோழன் என்பவன், அவனது 17 ஆம் ஆட்சியாண்டில் திருமழபாடி சிவன் கோயிலில் வெட்டிய கல்வெட்டு ஒன்றில் “குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள்” என்று குறிப்பிடுவதாலும், அநபாயன் மற்றும் அவரது மகன் இரண்டாம் இராசராச சோழன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அநபாயன் தம்மை ஆதரித்ததாகக் குறிப்பிடும் சேக்கிழாரின் கூற்றினை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ஆய்வாளர்களான மா. இராசமாணிக்கனார், மு. இராகவையங்கார், சதாசிவப்பண்டாரத்தார், க. வெள்ளை வாரணார் ஆகியோர் தத்தம் வழியில் மேலும் ஆராய்ந்து கூறியவற்றின் மூலம் சேக்கிழாரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்பது வரலாற்று ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக இருப்பது தெரிய வருகிறது.

சேக்கிழார் பெரியபுராணம் எழுத அவருக்கு முதன்மைத் தரவுகளாக உதவியவை தேவாரப் பதிகங்கள், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத்தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திரு அந்தாதி போன்ற நூல்களாகும். அத்துடன் நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்குச் சேக்கிழார் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு நாயன்மார்கள் குறித்து புழக்கத்திலிருந்த மக்களின் கதைகளையும் அறிந்து தொகுத்தார் என்று வையாபுரிப்பிள்ளை கருதுவார். எனவே “பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல்” என்று பாலகுமாரன் கருதுவது பொருந்தாது. பெரிய கோயில் கட்டப்பட்ட காலத்திற்கும் (கி.பி. 1010), பெரியபுராணம் எழுதப்பட்ட காலத்திற்கும் (சற்றொப்ப கி.பி. 1133-1146) இடையில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஏறக்குறைய 125 ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது.

பாலகுமாரனின் கருத்திற்கு நேரெதிராக, பெரிய கோயில் ஓவியங்கள்தான் சேக்கிழார் பெரியபுராணம் எழுதுவதில் தாக்கம் செலுத்தின என்பது அறிஞர்கள் கருத்து.

பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்:

அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் எம்.எஸ்.கோவிந்தசாமி அவர்களால், 1931 ஆண்டில் தஞ்சை பெரிய கோயிலின் கருவறையின் இருண்டிருந்த இடைகழி (சுற்றுப்பிராகாரத்தின்) அகச்சுவர்கள் முழுவதும் வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்கள் முதன் முதலில் கண்டறியப்பட்டன. இக்காலத்தில் இந்தியா முழுவதும் தொன்மையான ஓவியங்களைத் தேடும் ஆர்வம் ஆய்வாளர்களிடையே ஏற்பட்டது. இந்த தேடலுக்குத் தூண்டுதல் அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் கண்டறியப்பட்ட நிகழ்வு [5]. பேராசிரியர் கோவிந்தசாமி அவர்களால் கண்டறியப்பட்ட சோழர் கால ஓவியங்கள் மீது கி.பி.17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணி விளைவாக வரையப்பட்ட நாயக்கர் கால ஓவியங்களால் அவை மறைக்கப்பட்டிருந்தன. இந்தியத் தொல்லியல் துறை நாயக்க கால ஓவியங்கள் பாழாகாமல் மிக நுட்பமாக அவற்றை விலக்கி சோழர்கால ஓவியங்களை மீட்டெடுத்தது. அவ்வாறு வெளிக்கொணரப்பட்ட 7 சோழர் கால ஓவியங்களில் சிவன் சுந்தரரை ‘தடுத்தாட்கொள்ளுதல்’ ஓவியமும் ஒன்று. இந்த ஓவியம் கருவறை சாந்தார இடைகழியின் மேற்கு அகச்சுவரில் வரையப்பட்டுள்ளது.

சுந்தரர் தடுத்தாட்கொள்ளப்படும் ஓவியம்:

பெரிய கோயிலில் உள்ள சுந்தரர் ஓவியம் மிகவும் அழகும் சிறப்பும் பெற்ற ஓவியம். அதே வேளையில் மற்ற ஓவியங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவு பாதுகாக்கப்பட்ட நிலையில் சற்றே தெளிவாகவும் தெரியும் ஓவியமாகும். இந்த ஓவியத்தில் சிவன் ஓர் முதியவராக வந்து சுந்தரரை அவரது திருமணநாளில் அவர் தனக்கு அடிமை என்று கூறும் காட்சியில் தொடங்கி, சுந்தரரும் சேரமான் பெருமாளும் கயிலைக்குச் செல்வது வரை சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகள் வரையப்பட்டுள்ளது. இக்காட்சித் தொகுப்பு கீழிருந்து தொடங்கி மேல்வரை நான்கு பிரிவான ஓவியமாகப் பிரகாரத்தின் ஏழாம் கோட்டத்தில் ஏறக்குறைய எட்டடிக்குப் பதினான்கு அடி சுவரில் வரையப்பட்டுள்ளது. கீழ் வரிசையின் இடது புறம் தொடங்கி சுந்தரின் திருமணநாளில் விருந்தினருக்குச் சமையல் நடப்பது, விருந்தினர் திருமணப் பந்தலில் குழுமியிருக்கும் நேரத்தில் சிவன் முதியவர் கோலத்தில் வருவது, அடுத்து நடுவில் உள்ள பகுதியில் திருவெண்ணெய்நல்லூர் சபையில் முதியவர் ஓலையைச் சாட்சியாகக் காட்டி வழக்குரைப்பது, பிறகு திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை கோயிலில் முதியவர் சென்று மறைவது வரை காட்சிகள் ஒரு வரிசையாக உள்ளன. அதற்கு மேல் உள்ள பகுதியில் திருவஞ்சைக்களம் கோயிலில் சுந்தரர் வழிபடுவதும், அடுத்து யானையில் ஏறி சுந்தரரும் அவருடன் சேரமான் பெருமாள் குதிரையிலும் கயிலையை நோக்கிச் செல்வது காட்டப்படுகிறது. அதற்கும் மேலே உள்ள மூன்றாம் வரிசையில் சிவன் பார்வதி தேவர்கள் குழுமியிருக்க சுந்தரரும் சேரனும் கயிலையில் இருப்பது காட்டப்பட்டிருக்கிறது. இறுதியாக, மேலுள்ள நான்காம் பகுதியில் ஒரு மாளிகைச்சுற்று காட்டப்பட்டுள்ளது. இப்பகுதி ஓவியத்தில் மிகவும் சிதைந்துள்ள பகுதியாகும் (பார்க்க: படங்கள்).

சோழர்கால ஓவியம் குறித்த நூல்:

தஞ்சை பெரியகோயிலின் 1000 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பெரிய கோயில் ஓவியங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூலாக வெளியிடப்பட்டது. ஆங்கில நூல் தொல்லியல் துறையாலும், தமிழ் வடிவம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் மூலமாகவும் நூல் வடிவம் பெற்றன. தமிழ்ப் பதிப்பில் ஒரு சிறப்பு, பெரிய கோயில் ஓவியங்கள் கோட்டோவியங்களாகவும் வரையப்பட்ட பகுதியும் இணைக்கப்பட்டது. ஓவியர் சந்துரு மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் தொல்லியல்துறை அளித்த சுவரோவியங்களின் படிகளைக் கணினி உதவியுடன் பெரிதாக்கி ஆராய்ந்து கோட்டோவியங்களாக உருவாக்கி அளித்தனர். இந்த கோட்டோவியங்கள் படக்காட்சி குறித்து அளித்த தெளிவு ஆய்வாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த முன்னெடுப்பை வரலாற்றாய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் வியந்து பாராட்டினார் என்று நூலின் முன்னுரையும் குறிப்பிடுகிறது.

siragu periya kovil1

siragu periya kovil5

siragu periya kovil3

தஞ்சை பெரியகோயில் சோழர் கால ஓவியங்களின் காலம்:

தொல்லியல் மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் பெரிய கோயிலில் உள்ள ஓவியங்கள் ராஜராஜ சோழன் காலத்தில் வரையப்பட்டவை என்பதில் கருத்தொருமித்தவர்களாகவே இருப்பதை அறியமுடிகிறது. “இந்த ஓவியங்கள் இராசராசன் காலத்தில் எழுதப்பட்டவை. இதற்குச் சான்று, ‘இது அறிவேன் மூவேந்த வேளான்’ என்று சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட புராணக்கதைக் காட்சியில் இடம்பெறும் ஓலைச்சுவடியில் காணப்பெறும் இராசராசன் காலத்து எழுத்தாகும். மேலும் சுந்தரர் பதிகத்தின் பாடல் ஓவியமாக்கப்பட்டிருப்பதும் இந்த ஓவியங்கள் வரலாற்று-பண்பாட்டுச் செய்திகளை வெளிப்படுத்துகின்றன என்பதற்கான சான்றாகும்” என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் ம. இராசேந்திரன் கொடுக்கும் நூலின் அறிமுக முன்னுரை கூறுகிறது [6]. மேலும், திருச்சியில் உள்ள மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம் மேற்கொண்ட களவாய்வில் முனைவர்.மு.நளினி ஓலையைப் படமாக்கிப் படித்து அதில் சாட்சிக் கையெழுத்தாக, “இப்படிக்கு மூவேந்த வேளான்” என்ற இறுதிவரி காட்டப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் [7]. இது தஞ்சைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஓவிய நூல் வெளியான ஆண்டிலிருந்து சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னரே படிக்கப்பட்ட வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுந்தரரைச் சிவன் தடுத்தாட்கொள்ளும் காட்சியில் சுந்தரரின் பதிகங்கள், சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கயிலாய ஞான உலா பாடல்கள் மற்றும் நம்பியாண்டார் நம்பியின் பாடல்களின் தாக்கம் இருப்பதாக ஆங்கிலப் பதிப்பு ஓவிய நூலின் ஓவிய விளக்கங்களில் காட்டப்படுகிறது. குறிப்பாக, சுந்தரர் கைலாயம் செல்லும் காட்சியின் விவரிப்பு சுந்தரரின் வரிகளுக்கு வரையப்பட்டதாக ஒப்பிடப்படுகிறது. ஆகவே, சுந்தரர் பாடிய பதிகங்களின் அடிப்படையில் பெரிய கோயில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்றும், அவ்வாறு வரையப்பட்ட ஓவியக் காட்சிகளே பிற்காலத்தில் சேக்கிழார் பெரியபுராணத்தை உருவாக்க உதவியிருக்கக்கூடும் என்பதும் ஆய்வாளர்கள் கணிப்பாக இருப்பது தெரிகிறது [8].

அதாவது, இலக்கியங்களின் அடிப்படையில் உருவான இந்த ஓவியமே பிற்காலத்தில் மற்றொரு இலக்கியமான சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ளும் பகுதியாகவும் உருவாகியுள்ளது என்பது தொல்லியல், இலக்கிய, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் நிலவும் ஒரு பொதுவான கருத்து. குறிப்பாக, திருவெண்ணெய்நல்லூர் சபையில் முதியவர் சுந்தரரை உரிமை கோரும் காட்சியின் அடிப்படையில் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணம் எழுதப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்
வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன்; இதற்கு இவை என் எழுத்து.
பாடல்-205; 1.5.59
பெரியபுராணம் – தடுத்தாட்கொண்ட புராணம் – சேக்கிழார்

பொருள்:

அருமறை வாழும் நாவலூர் ஆதிசைவன் ஆரூரன் ஆகிய நான் (இவர் சுந்தரரின் தாத்தாவான ஆரூரன்) செய்யும் செயல் இது. பெருமுனியாகிய வெண்ணெய் நல்லூர் பித்துக்கு யானும் என் வழிமுறை மரபில் உள்ளோரும் வழிவழியாகத் தொண்டு செய்வதற்கு எழுதிக் கொடுத்த ஓலை இது. இதனை உள்ளுணர்வு, செயல் என்னும் இரண்டும் தெளிவாக இயங்குகையில் எழுதிக் கொடுத்தேன். இதற்கு இவை என் கையெழுத்து [9].

siragu periya kovil4
இவ்வாறாக ஓலையில் எழுதி இருந்ததை கரணத்தார் உரத்துப் படிக்க, அதைக்கேட்ட சபையோர் கேட்டு வியக்கும் காட்சிதான் பெரிய கோயில் தடுத்தாட்கொள்ளும் ஓவியம் காட்டுவதும்.

பெரியகோயிலின் ஓவியத்தில் முதியவர் கொடுக்கும் ஓலையைச் சபையோர் ஆய்வு செய்யும் காட்சியில் ஓலையில் உள்ள வரி பத்தாம் நூற்றாண்டு தமிழ் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது என்றும் சோழர் கால ஓவியம் பற்றிய நூல் குறிப்பிடுகிறது. முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் இப்பாடலின் இறுதிவரியான “இருமையால் எழுதி நேர்ந்தேன்; இதற்கு இவை என் எழுத்து” என்ற வரிதான் ஓலையில் எழுதப்பட்டுள்ளது. இந்த வரியையே சேக்கிழார் தனது பாடலின் வரியாக எடுத்தாள்கிறார் என்று தமது உரை ஒன்றில் கூறியுள்ளார் [11] .

குடவாயிலாரின் இந்தக் கூற்று, ஓவிய நூலின் முன்னுரை குறிப்பிடும் ‘இது அறிவேன் மூவேந்த வேளான்’ என்பதிலிருந்து மாறுபட்டிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மேலும் இந்த ஓவியம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்பொழுது இது குறித்த தெளிவு எதிர்காலத்தில் கிடைக்கலாம்.

படங்கள் – உதவி:

காணொளி உரைகளின் தேர்வு செய்யப்பட்ட ஒரு சில திரைக்காட்சிகளின் காட்சிப்பிடிப்பு [12].

நன்றி: ஓவியத்தின் தகவல் விளக்கமளித்து உதவிய பொன்னியின் செல்வன் குழுமம் திரு. சுந்தர் பரத்வாஜ்

தகவல் தந்து உதவியவை:

[1] பிரகதீஸ்வரம் – அதுவே விஸ்வரூபம்: பெரிய கோயில் 1000 ஆண்டுகள்; எழுத்தாளர் பாலகுமாரன், செப்டெம்பர் 24, 2010. தினமலர்

https://www.dinamalar.com/news_detail.asp?id=90671

[2] ராஜராஜனின் விஸ்வரூபம், தஞ்சைப் பெருவுடையார் கோயில்: நடிகர் சிவகுமாரின் எழுத்தோவியம்; நடிகர் சிவகுமார், பிப்ரவரி 5, 2020. தினமணி

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/feb/05/the-tanjore-big-temple-actor-sivakumar-3349880.html

[3] உடையார் (புதினம்); பாலகுமாரன். https://ta.wikipedia.org/s/803

[4] பெரியபுராணம்: காப்பிய அறிமுகம்-A01121; முனைவர் சிலம்பு நா. செல்வராசு. http://www.tamilvu.org/courses/degree/a011/a0112.pdf

[5] Chola Murals : Documentation and Study of the Chola Murals of Brihadisvara Temple, Thanjavur; P.S. Sriraman, pp. 56 &81-110, 2011, ASI Publication, ISBN: 9780230330818.

[6] ‘தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்’, நூல், 2010; தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், வெளியீட்டு எண்: 382, 2010, ISBN:978-81-7090-425-0.

[7] கருங்கல்லில் ஒரு காவியம் – 3, கோகுல் சேஷாத்ரி, இதழ் எண். 3, நவம்பர் 2004. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=38

[8] உலகப் பார்வைக்கு உதயம் – 1, இரா.கலைக்கோவன், மு.நளினி, கலையும் ஆய்வும், இதழ் எண். 133. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1440

[9] திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்), சேக்கிழார், 12 ஆம் நூற்றாண்டு, திருமலைச் சருக்கம் – தடுத்து ஆட்கொண்ட புராணம்; தமிழ் இணையக் கல்விக்கழகம் – http://www.tamilvu.org/slet/l4100/l4100uri.jsp?song_no=205&book_id=120&head_id=7&sub_id=1456

[11] Dr. Kudavayil Balasubramanian Speech on Chola Temples; Tamil Heritage Trust – Pecchu Kaccheri, 06 THT PK 2018, LINK – https://youtu.be/D2r9lO2n0A8?t=3780

[12] R.Viswanathan – Chola paintings; Tamil Heritage Trust – Pecchu Kaccheri, 10 THT PK 2018, LINK – https://youtu.be/78_RFbUCf3w?t=535
—–


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெரியபுராணமும் பெரியகோயிலும்”

அதிகம் படித்தது