மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெரியார்: நான் யாராயிருந்தாலென்ன?

தேமொழி

Sep 16, 2017

Siragu periyar3

“கடவுள் இல்லை” என்று தட்டச்சு செய்து இணையத்தில் தேடினால் கூகுள் இணையத்தேடலில் கிடைப்பவை பெரும்பாலும் ‘பெரியார் ஈ. வெ. ராமசாமி’ அவர்களைப் பற்றிய செய்திகளையும் படங்களையும் கொண்ட முடிவுகளாகவே இருக்கும். அவ்வாறே “பகுத்தறிவுப் பகலவன்” என்றாலும் அவர் குறித்த செய்திகள்தான் கிடைக்கும். ‘பகுத்தறிவுப் பகலவன்’, ‘தந்தை’, ‘பெரியார்’ என்ற பெயர்களெல்லாம் மக்கள் அன்புடன் அவருக்கு வழங்கிய பட்டங்கள். ஆனால், அவர் தானே தனக்குப் பற்பல புனைபெயர்களைப் புனைந்து கொண்டு தனது பகுத்தறிவுக் கொள்கைகளை அப்புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவற்றில், ‘சித்திரபுத்திரன்’, ‘பழைய கறுப்பன்’ என்பவை நன்கு அறியப்பட்ட புனைபெயர்களாகும். இதைத் தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி, யார் எழுதினாலென்ன, எவர் எழுதினாலென்ன, ஒருநிருபர், நமது அரசியல் நிருபர், பொதுநலப்பிரியன், குறும்பன், உண்மை காண்போன், நம்பிக்கையிழந்தவன், பார்ப்பனரல்லாதான், உண்மை விளம்பி, வம்பளப்போன், பழைய காங்கிரஸ்காரன், வம்பன், குட்டிச்சாத்தான் என்ற புனைப் பெயர்களிலும் இவர் எழுதியிருக்கலாம் என்ற பெரியாரியலில் ஆர்வம் கொண்டோர், அவர் எழுதும் முறையை நன்கறிந்த வாசகர்கள் கருதுவதுண்டு. இப்புனைப்பெயர்களில் பல அவரை வசைபாடிய பெயர்களாகவும், அதையே அவர் புனைப்பெயராக வைத்துக் கொண்டதாக இருப்பதும் வெள்ளிடைமலை.

மற்றும் சில புனைபெயர்களோ யார் எழுதினாலென்ன, எவர் எழுதினாலென்ன, பொதுநலப்பிரியன், உண்மை காண்போன், உண்மை விளம்பி போன்றவை அவர் எழுத்தின் நோக்கத்தையும் தன்மையையும் காட்டும். சாதி, மத, இன, மொழி, நாடு என்ற பல வேறுபாடுகளின் அடிப்படையில் மனிதர்களில் உயர்வுதாழ்வு கற்பிப்பதை அடியோடு வெறுத்தவர் பெரியார். அவ்வாறே ஆண் பெண் பாலின வேறுபாட்டிலும் சமத்துவத்தை எதிர்பார்த்தார். சமத்துவத்துக்கு ஊறு விளைவிக்கும் எதையும், அது எந்த உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்பட்டாலும் சாடுவதற்கு அவர் தயங்கியதில்லை. உண்மை என்று அறிந்ததை உரக்கக் கூவுவதையும், தவறு என்பதை தட்டிக் கேட்பதையும் யாரும் செய்யலாம், செய்ய வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பு. எனவே, உண்மையை யாரும் சொல்லலாம், சொல்லவேண்டும், அவற்றைச் சொன்னவர் யார் என்பதை நோக்குவதைவிட அவர் சொல்லும் கருத்து என்ன என்பதுதான் முக்கியம் என்ற அவரது கோணத்தை அவரது புனைபெயர்களும் முன்னிறுத்தின. பழைய கறுப்பன் என்ற பெயரில் குடியரசு இதழில் எழுதுவது யார் என மக்கள் அறிய விரும்பிய பொழுது அவர் ‘பழைய கறுப்பன் என்பவர் யார்?’ என்பதற்குக் கொடுத்த விளக்கம் அவரது கோணத்தை தெளிவாகக் காட்டும்.

Siragu periyar2

“பழைய கறுப்பன் என்பவர் யார்? என்று அநேகர் என்னையே கேட்டார்கள். அவ்வப்பொழுது என் மனதில் தோன்றின பதிலை அவரவர்களுக்குச் சொன்னேன். சிலருக்குத் திருப்தி, சிலருக்கு அதிருப்தி. ஆகையினால் அதிருப்தியினால் நான் கவலைப்படவேயில்லை. ஆனால் இந்தக் கேள்வியில் அடங்கிக் கிடக்கிற ஒரு உண்மையை எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டும். விசயம் முக்கியமா? விசயகர்த்தா முக்கியமா? என்பதுதான். விசயகர்த்தா முக்கியத்தினால்தான் இந்தக் கேள்விபிறந்தது என்று அறிந்தேன். விசயகர்த்தாவைக் குறித்துத்தான் விசயம் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்று நமது சனங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய மனப்பான்மைதான் நம்மையும் நமது நாட்டையும் தற்கால கதிக்குக் கொண்டுவந்து விட்டது. நான் யாராயிருந்தாலென்ன? சொன்னதெல்லாம் சரியென்று தோன்றினால் அந்தக் குறை நிவர்த்திக்கப் பாடுபடுங்கள். இல்லையேல் இன்னமும் பாடுபட்டுக்கொண்டிருங்கள். சரியில்லையென்று தோன்றினால், ஏதோ பைத்தியக்காரன் உளறுகிறான் என்று தள்ளிவிடுங்கள்.”

(“ஈரோடு முனிசிபல் நிர்வாகம்”; குடிஅரசு – 1925, பக்கம்: 125, 26-07-1925)

மூடநம்பிக்கைகளினாலும், அறியாமையாலும் மக்கள் சடங்கு சம்பிரதாயம் எனக் கடைப்பிடிக்கும் வழக்கங்களையும், அவற்றினால் அப்பாவி மக்கள் எதிர் கொள்ளும் கொடுமைகளையும் ஏமாற்றங்களையும் அவர் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சுட்டிக் காட்டத் தவறியதில்லை. அவற்றில் சில இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

அகவை பத்தே நிரம்பிய கல்கத்தா சிறுமி லீலாவதி என்பவரின் கணவன் ஜோகேந்திரநாத்கான். உறவுக்கு இணங்காத தனது குழந்தை மனைவியை அவன் கொன்றுவிடுகிறான் என்ற செய்தியை அறிந்து கொதித்துப் போய் தலையங்கம் எழுதுகிறார் பெரியார். அதில் இளவயது திருமணங்களைச் சாடுகிறார். பகுத்தறிவற்ற செயலால் விளைந்த கொடுமையின் மூல காரணத்தை மக்களின் மூளையில் உறைக்குமாறு முன் வைக்கிறார்.

“ஆண்மக்கள்தான் உயர்ந்தவர்கள்; பெண்மக்கள் தாழ்ந்தவர்கள்; ஆண்மக்கள்தான் அறிவுநிறைந்தவர்; பெண்மக்கள் அறிவில்லாதவர் என்ற கீழான எண்ணமும் இக்கொடுஞ் செயல்களுக்குக் காரணமாகும். இந்தத் தாழ்ந்த எண்ணம் நம்மவர்களை விட்டு அகலல் வேண்டும். ஆண்மக்களும், பெண்மக்களும் ‘சரிநிகர், சமானம்’ என்ற எண்ணம் வளர்தல் வேண்டும். ஆண்மக்களைவிடப் பெண்மக்கள் எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லர்; சமூக வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையில் ஆண்மக்களுக்கு உள்ள உரிமைகள், பொறுப்புகள் பெண்மக்களுக்கும் உண்டு என்ற உயரிய, பரந்த, விரிந்த நோக்கம் நம்மவரிடை உதயமாதல் வேண்டும். அன்றே, அப்பொழுதே, அக்கணமே இத்தகைய கோரமான, மனதைப் பிளக்கும் கொடிய கொலைகள் நிகழா வண்ணம் செய்துவிடலாம்.”

(“இந்துக்களின் கொடிய வழக்கம்”; குடியரசு – 1925, பக்கம்: 43, 07-06-1925)

sunday malar template.pmd

வைதீகச் சடங்குகளுக்குக் காரணம் மக்களின் பேராசையும் மூடநம்பிக்கையும். செய்யும் தவறுகளையெல்லாம் செய்துவிட்டு சடங்குகள் பிரார்த்தனைகள் மூலம் அவற்றைச் சரி செய்துவிடலாம் என்ற அறியாமையின் விளைவு இவையென்று சுட்டிக்காட்டுகிறார் பெரியார். இத்தகைய சடங்குகளால் ஒருவர் ஏமாற்றவும் ஒருவர் ஏமாற்றப்படவும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். கடவுளின் உண்மைத் தத்துவத்தையும், தங்களது செய்கைகளின் விளைவையும் பலனையும் மக்களுக்குச் சரியாக எடுத்துரைத்திருந்தால் இவ்வளவு பேராசையும், செலவுகளும் கடவுளின் பெயரால் ஏமாற்றுவதும் தோன்றியிருக்காது என்று கூறி மக்களுக்குப் பகுத்தறிவுப் பாடம் புகட்டுகிறார். இத்தகைய பகுத்தறிவுப் பாடங்களை அவர் உரையாடல்களின் வழி, சிறு சிறு கதைகளாக மக்களிடம் கொண்டு செல்கிறார்.

ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீககர்மம் செய்து வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, தான் கிழக்குமுகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஒரு பெரியார், தான் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.

புரோகிதர்: ஐயா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்துத் தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர்?

பெரியார்: நீங்கள் கிழக்கு முகமாகப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்?

புரோகிதர்: இது மேல் உலகத்திலுள்ள பிதுர்களைப் பரிசுத்தமாக்கும்.

பெரியார்: நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.

புரோகிதர்: இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச்சேரும்? பயித்தியமாய் இருக்கிறீர்களே!

பெரியார்: நீர், இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தைவிட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும்?

புரோகிதர்: (வெட்கத்துடன்) இந்த வார்த்தையை இவ்வளவுடன் விட்டுவிடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்து விடாதீர்கள்.

(“தெய்வ வரி”; குடிஅரசு – 1925, பக்கம்: 123, 26-07-1925)

இதுபோல ‘பிராயச்சித்தம்’ குறித்து மற்றொரு கதை:

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.

பெரியமனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள்.

சாஸ்திரிகள்: அப்படியா, என்ன விசேசம்?

பெரியமனிதர்: ஒன்றுமில்லை. ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதைக் கொன்றுவிட்டான். இதற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரிகள்: ஆகா உண்டு! அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும். இல்லாவிட்டால் அந்தப் பையனை பார்க்கவே கூடாது.

பெரியமனிதர்: தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன்தான், அதற்கு வேண்டியதைச் சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.

சாஸ்திரிகள்: ஓகோ! பிராமண பையனா அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும்.

(“பிராயச்சித்தம்”; குடிஅரசு – 1925, பக்கம்: 168, 16-08-1925)

ஆகவே, பெரியார் கேட்டது போலவே, சொல்வது யாராக இருந்தால் என்ன? அவர் யார் அவரது பின்புலம் என்ன என்பது ஆராய்வதை விட அவர் சொல்லில் உள்ள உண்மையை எடுத்துக் கொள்வோம். அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களாலும் பெரியார் கூறியவற்றில் உள்ள உண்மைகளை மறுக்க இயலாது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெரியார்: நான் யாராயிருந்தாலென்ன?”

அதிகம் படித்தது