மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மகாகவி ஈரோடு தமிழன்பனின் மீயடுப்பு மீதிலே ஒரு பார்வை!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 24, 2022

siragu erode thamilanban‘மீயடுப்பு மீதிலே’ மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல். முதலில் இந்தத் தொகுப்பின் தலைப்பு காரணத்தை நூலின் தொடக்கத்தில் கொடுத்திருக்கின்றனர். விறகு வைத்து எரித்துச் சமைக்கும் அடுப்புகளில் தாயடுப்பு சேயடுப்பு உண்டு. விறகுகளை உள்வாங்குவது தாயடுப்பு அந்தத் தாயடுப்பிலிருந்து தீயை அல்லது வெப்பத்தை உள்வாங்கிச் சமைக்கும் கிளையடுப்பை சேயடுப்பு என்று கூறுவர். இந்தச் சேயடுப்பை மீயடுப்பு என்றும் குறிப்பர். இந்த மீயடுப்பு போலவே நேரடித் தொடர்பு இல்லையென்றாலும் அக்கம் பக்கத்துப் புன்னகை, போராட்டம், கண்ணீர், கலவரம், பிறப்பு, இறப்பு போன்றவை மீயடுப்பாக ஒருவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அவ்வாறு இந்தச் சமுதாயம் தம்மிடம் ஏற்படுத்திய தாக்கங்களின் வெளிப்பாடே இந்த ‘மீயடுப்பு மீதிலே’ என்னும் கவிதை நூல் என்று மகாகவி ஈரோடு தமிழன்பன் குறிப்பிடுகின்றார்.

இந்த நூலின் மற்றொரு சிறப்பு ‘ஈரோசென்வியம்’ எனும் புது யாப்பைக் கண்டறிந்து அந்த யாப்பை அடியொற்றி 121 கவிதைகளை இந்த நூலில் படைத்துள்ளார் கவிஞர்.  ஏற்கனவே சென்ரியூ, லிமிரைக்கூ, சின்கொயன், கசல் போன்ற வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை தமிழன்பனரைச் சேரும்.

இந்த ஈரோசென்வியம் பெயர்க்காரணம் குறித்து ஆராயும்போது, கவிஞரை வளர்த்த ஈரோடு எனும் ஊரிலிருந்து ‘ஈரோ’ என்பதும் அவர் பிறந்த சென்னி மலை என்ற ஊரின் பெயரிலிருந்து ‘சென்’ என்பதும் வியத்தகு கருத்தைச் சொல்லும் பொருளில் ‘வியம்’ என்பதும் எடுக்கப்பட்டு ‘ஈரோசென்வியம்’ என புது யாப்பாக வழங்கப்படுகின்றது.

ஈரோசென்வியம் இலக்கணம்:

ஆறடிகளைக் கொண்டதாக இருக்கும்

முதலடியும் ஈற்றடியும் இருசீரடிகளாக அமையும்

இரண்டாமடி மூச்சீரடியாக நடக்கும்

ஏனைய மூன்றடிகளும்(3,4,5 ஆம் அடிகள்) நாற்சீரடிகளாக (அளவடிகளாக) அமையும். ஒவ்வோரடியும் இருவரிகளில் கட்டப்பெறும், இம்மூன்றடிகளும் ஓரேதுகை பெற்று வரும்.

கவிதை முழுவதும் ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களும் (இயற்சீர், உரிச்சீர்) பயின்று வரும். ஓசை இனிமைக்கு ஏற்ற எத்தளையும் கடியப்படாது.

3,4,5 அடிகளில் எதுகை அமைவது கட்டாயம். மற்ற அடிகளில் அமையலாம் இல்லாமலும் இருக்கலாம்.

எடுத்துக்காட்டுக் கவிதை

1   மதுரைக்கா போகின்றீர்?

2   மகிழ்ச்சி யோடுபோய் வாருங்கள்

3.1 நதிவைகைக் கரையினிலே

3.2 அரசனையே நடுங்கவைத்த

4.1 கொதிகோபக் கண்ணகித்தீ

4.2 கொட்டிக் கிடந்திடலாம்

5.1 மிதிக்காமல் அள்ளிவந்து

5.2 விதைப்பீரா நாடெங்கும்

6. நீதியை மீட்டெடுக்க !

இந்த புது யாப்பினை பயன்படுத்தி மகாகவி படைத்த கவிதைகள் சிலவற்றைக் காணலாம்.

இருட்டை உடைத்த

இரும்புச்சொல்! கனத்த உறக்கத்

திரட்டைக் கிழித்தசொல்

தீயில் பழுத்தசொல்

குறட்டைக் கொத்தளம்

குடைந்து பிளந்தசொல்

மிரட்டும் பகைமார்பில்

ஏறி மிதித்தசொல்

வேண்டுவன்நான் இக்கணமே!

ஒரு சொல் வேண்டும் கவிதை எழுதிட, அந்தச் சொல் எந்த வகையானதாக இருக்க வேண்டும் எனவும்  கவிஞரின் இந்தக் கவிதையில் உணர்ந்து கொள்ள இயலும்.

இதழ்களுடன் பேசாமல்

எப்படி மலருடன் பேசலாம்?

காம்புமனம் நோகுமே

கனிந்தொருசொல் சொல்லீரோ?

தேம்பும் இலைக்கொருசொல்

இல்லாமல் தீர்ந்தீரா?

நாம்பேசும் நாள்பார்த்து

வேர்க்காசை இருக்குமே

சொல்லொன்றாய் மலரீரா?

சொல்லை வைத்தே மற்றொரு சிறப்பான கவிதை. செடியையும் மலரையும் வைத்து உருவகப்படுத்தி எழுதியிருந்தாலும் வாழ்க்கையின் பெரும் தத்துவத்தை உரைப்பதாகவும் இந்தக் கவிதையை உணர முடியும்.  முதுமையில் உள்ளோரிடமும் ஓர் இனிய சொல் பேசுவது தேவை என்பதை இந்தக் கவிதை உணர்த்துவதாகவும் காணலாம்.

உதிர்ந்த இலைகளை

உதயங்கள் மறந்து போக

உதிர்த்த காற்றுதடு

ஓயாமல் அழுதிருக்கும்

அதிர்ந்த பறவைமனம்

அழிந்திருக்கும் அவலத்தால்

எதுவும் அறியாத

தளிர்களோ இவ்வுலகைத்

தம்வரவால் தாலாட்டும்!

இந்த உலகத்தில் பிறப்பும் இறப்பும் இயல்பானது, எந்த ஒருவரின் இழப்போடும் இந்த பூமியின் சுழற்சி நின்றுவிடுவதில்லை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்பதை உணர்த்தும் சிறப்பான கவிதை.

இவ்வாறு பல கவிதைகளை இந்த நூலில் படிக்க முடியும். வாய்ப்பிருந்தால் கட்டாயம் இந்த கவிதைத் தொகுப்பினை படித்துவிடுங்கள்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மகாகவி ஈரோடு தமிழன்பனின் மீயடுப்பு மீதிலே ஒரு பார்வை!”

அதிகம் படித்தது