மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிமேகலை காப்பிய மரபு – பகுதி 2

முனைவர் மு.பழனியப்பன்

Feb 26, 2022

siragu manimegalai2

மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம்

காப்பியம் என்பது படைப்பாளனுக்கு விரிந்த களத்தைத் தருகின்றது. இக்களத்தில் காப்பியப் புலவன் சுவைகளைச் சேர்க்க இயற்கை வருணனைகளைச் சேர்க்கிறான். மலைவளம், கடல்வளம், நாட்டுவளம், நகர்வளம், இருசுடர்தோற்றம் போன்றவற்றைப் பாடுகிறான். சீத்தலைச் சாத்தனாரும் இவற்றைப் பாடியுள்ளார்.

மலை என்பது மணிமேகலைக் காப்பித்தைப் பொறுத்தவரையில் பாத பங்கய மலையே ஆகும். ‘பாத பங்கய மலை – மகத தேசத்தின் இராசதானியாயிருந்த இராசகிருக நகரத்தின் சமீபத்தில் உள்ளது. புத்த தேவன் எல்லா உயிர்களுக்கும் தரும சிந்தையை உண்டாக்க நினைந்து, அவைகளெல்லாம் கண்டு கேட்கும்படி இதன்மேலே நின்று தருமோபதேசஞ் செய்த பொழுது அன் பாதச்சுவடு தங்கப் பெற்றமையின் இப்பெயர் பெற்றது என்று பாத பங்கய மலை பற்றிய குறிப்பினை உ.வே.சாமிநாதர் குறிப்பிடுகிறார். (உ.வே.சா. (ப.ஆ) மணிமேகலை, ப. 500)

”ஆதி முதல்வன் அறஆழிஆள்வோன்
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
பாதபங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது”
(மணிமேகலை, மந்திரம் கொடுத்த காதை அடிகள் 61- 68)

என்று பாத பங்கய மலையைின் சிறப்பினைச் சுட்டி சீத்தலைச் சாத்தனார் மலைவளம் பாடுகிறார்.
பாதபங்கய மலை பரவி செல்வேன் – (மணி:12/38), பாதபங்கய மலை பரசினர் ஆதலின் – (மணி:12/109) என்றும் இம்மலை பற்றிய பதிவுகள் மணிமேகலையில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன.

கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மா கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப
உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது (மணிமேகலை, துயிலெழுப்பியகாதை,
அடிகள் 17-20)

என்று மணிமேகலை மணிபல்லத்தீவில் கண்விழித்தபோது அவள் இருந்த சூழலைக் காட்டும் நிலையில், கடலின் அழகையும், சூரிய உதயத்தின் அழகையும் காட்டுகின்றது மணிமேகலை.

மணிமேகலையில் நகர் வளம் என்பது பூம்புகார் நகரின் வளத்தைக் காட்டும் பகுதியாக அமைகின்றது. அந்நகரின் காலை முதல் அந்தி வரையான நிகழ்வுகளைச் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் காட்டுகின்றார்.

புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி
பல் மலர் சிறந்த நல் நீர் அகழிப்
புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை
ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்” (மணிமேகலை மணிமேகலா தெய்வம் வந்து
தோன்றியகாதை அடிகள்109-122)

என்று புகாரையும் இளங்கொடியாகிய பெண்ணையும் ஒப்புமைப் படுத்தி புகார் நகரின் வளம் மணிமேகலையில் காட்டப்பெறுகிறது. இப்புகார் நகரில் அந்திப் பொழுது வந்ததை அந்தியைப் பெண்ணாக உருவகப்படுத்தி அவள் வந்ததாகச் சீத்தலை சாத்தனார் புகார் நகரின் அழகை எடுத்துரைக்கிறார்.

அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்க
பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவளச் செங் கால் பறவைக் கானத்து
குவளை மேய்ந்த குடக் கண் சேதா
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழிப் படர
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் ” (மணிமேகலை மணிமேகலா தெய்வம் வந்து
தோன்றியகாதை அடிகள்109-140)

என்ற பகுதியில் புகார் நகரின் அந்தி அழகு எடுத்துரைக்கப்பெறுகிறது. புகாரைப் போற்றுவதாலும் சோழ மன்னர்களை வாழ்த்துவதாலும் மணிமேகலை கருதும் நாடு சோழ நாடே ஆகும். இச்சோழநாட்டின் சிறப்பைப் புகார் நகரின் சிறப்பிற்குள் வைத்துவிடுகிறார் சீத்தலைச் சாத்தனார்.

புகார் நகரம் தவிர கச்சி, வஞ்சி, மதுரை போன்ற நகரங்களின் சிறப்புகளும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. வஞ்சி நகரின் சிறப்பையும், கச்சி மாநகர் சிறப்பையும் கச்சி மாநகர் புக்க காதையில் சீத்தலைச் சாத்தனார் காட்டியுள்ளார். (மணிமேகலை 28: 3 – 68) (மணிமேகலை 28: 163 – 216) மதுரையைப பற்றி சிறை செய் காதையில் சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். (மணிமேகலை 22: 101 – 106)

இவ்வாறு நாடு, நகர, சூரிய உதயம், அந்த வருகை போன்றவற்றைச் சீத்தலைச் சாத்தனார் பாடிக் காப்பிய மரபுகளைக் கைக்கொண்டுள்ளார் என்று முடிய முடிகின்றது.

திருமணம் புரிதல், முடிசூடல், சோலையில் இன்புறுதல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெற்றெடுத்தல், ஊடல் கொள்ளுதல், புணர்ச்சியில் மகிழ்தல்

மணிமேகலைக் காப்பியத்தில் திருமணம், முடிசூட்டு, சோலை இன்புறல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெறல், புணர்ச்சி மகிழ்தல் போன்றனவற்றிற்கு இடம் இல்லா நிலையே காணப்படுகின்றது. ஆனால் ஊடல் காட்சி ஒன்று மணிமேகலைக்குள் இடம்பெறுகிறது. அந்த ஊடலைத் தொடர்ந்து கூடலும், மகிழ்தலும் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் புணர்ச்சியில் மகிழ்தல், மக்களைப் பெறுதல் போன்றனவும் காட்டப்பெற்றதாகக் கொள்ளப்பெற வேண்டும்.

”பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்
விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்” (மணிமேகலை துயில் எழுப்பிய காதை, அடிகள்
50-53)

என்ற நிலையில் ஊடல் சுட்டப்பெறுகிறது.

அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல், தூது செல்லல், போர் மேற்கொண்டு செல்லுதல், போர் நிகழ்ச்சி, வெற்றி பெறுதல்

மணிமேகலைக் காப்பியத்தில் மந்திரச் சுற்றம் எனப்படும் மந்திரிகளுடான ஆலோனைக்கு இடம் தரப்பெற்றுள்ளது. தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் –( மணி:7/83),மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி – (மணி:28/184) இருப்பினும் தூது செல்லல், போர் மேற்கொள்ளல், போர் நிகழ்ச்சி, வெற்றி போன்றனவற்றிற்கு மணிமேகலைக் காப்பியத்தில் இடமில்லை.

சந்தி எனப்படும் கதைப் போக்கு.

மணிமேகலைக் காப்பியத்தின் கதைப் போக்கின் சிறப்புக் கூறுகளை ஔவை துரைசாமிப் பிள்ளை பின்வருமாறு எடுத்துரைக்கிறார். ‘‘இதுகாறும் கூறிய கதைச் சுருக்கத்தை வகுத்து நோக்கின், மணிமேகலை மலர்வனம் புகுதலும், மணிமேகலா தெய்வத்தால் பின்பு மணிபல்லவம் சென்று தன் பழம் பிறப்பும் அமுதசுரபியும் மந்திரமும் பெறுதலும், பின்னர்க் காவிரிப் பூம்பட்டினம் போந்து பசித்தோர்க்கு உணவளித்தலும், அவனைக் காதலித்த உதயகுமரன் காஞ்சனன் என்னும் விஞ்சையனால் கொலையுண்டலும், அது காரணமாக அவள் சிறைப் படுத்தலும் சிறை வீடு பெறுதலும், ஆபுத்திரன் நாட்டிற்குச் சென்று அவனை மணிபல்லவம் கொணர்ந்து பழம் பிறப்பறி வித்தலும், அவனின் நீங்கி, வஞ்சிமாநகர் சென்று சமயக் கணக்கர் தம் சமயத்திறம் கேட்டலும், காஞ்சி நகர்க்கு வந்து அறவணர்பால் புத்தரோதிய அறம் கேட்டுத் தெளிந்து “பவத்திறம் அறுப்பேன்” என்று நோற்றிருத்தலும் இக் காவியத்தின் சிறப்புடைய நிகழ்ச்சிகளாம் என்பது இனிது விளங்கும்.” (ஔவை துரைசாமிப்பிள்ளை, மணிமேகலை ஆராய்ச்சி, ப. 40)

மணிமேகலை அன்னதானம் செய்தலும், உதயகுமாரன் கொலை செய்யப்படுதலும், மணிமேகலை சிறைபடுதலும், பின்பு சமயக்கணக்கர் திறம் அறிதலும், தவம் இயற்றலும் முக்கியமான கதைத் திருப்பங்களாகும். இதன் வழி மணிமேகலை வாழ்க்கை மெல்ல தொடங்கி அவள் சிறைபடுதலில் சிக்கலாகி, பின்பு சமய வாதங்களில் அவள் வெற்றி பெறலும் ஆகி முடிகின்றது. இதன் வழி தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற கட்டமைப்பினை மணிமேகலைக் காப்பியம் பெற்றுள்ளது என்று முடியலாம்.

மணிமேகலைக் காப்பியத்தின் உட்பகுப்புகள்

மணிமேகலைக் காப்பியம் தன் பகுப்பிற்குச் சிலப்பதிகாரத்தையே முன்னோடியாகக் கொண்டுள்ளது. முப்பது காதைகள் என்ற நிலையில் அது சிலப்பதிகாரத்துடன் ஒத்துப் போகிறது. மணிமேகலைக்குள் சிலப்பதிகாரம் போலக் காண்டம் என்ற பகுப்பு அமையவில்லை. நெடுந்தொடரோட்டமாக அது சென்று கொண்டே இருக்கிறது.

மெய்ப்பாடுகள்

மெய்ப்பாடுகளைக் காட்டுதல் என்பது பெருங்காப்பியத்திற்கான இலக்கணமாகும். மணிமேகலைக் காப்பியத்துள் பல்வகை மெய்ப்பாடுகளும் கொண்டு சாத்தனாரால் படைக்கப்பெற்றுள்ளது.

அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண்
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் (மணிமேகலை, சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை அடிகள் 72-74)

என்ற பகுதியில் குரங்கு ஊசல் ஆடுவது நகைப்பிற்கு இடமாக விளங்குகிறது.

ககந்தன் என்ற மன்னன் தன் மகனின் அடாத செயலைக் கண்டு வெகுண்டதை வெகுளி என்ற மெய்ப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம்.

‘‘விரி பூ மாலை விரும்பினன் வாங்கி
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செம் கை
நீல குஞ்சி நீங்காது ஆகலின்
ஏறிய செம் கை இழிந்திலது இந்த
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்” (மணிமேகலை சிறைசெய்காதை, அடிகள் 150-
158)

என்ற நிலையில் வெகுளி என்ற மெய்ப்பாடு மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது.

“ புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை
தொழுதனன் வாங்கி “ (ஆபுத்திரனுடன் மணிபல்லவம் அடைந்த காதை அடிகள் 185-189)

என்ற நிலையில் பீலிவளை கிள்ளிவளவனின் மகனை வணிகனிடம் ஒப்படைத்த போது அவன் பெற்ற மகிழ்ச்சியை மணிமேகலை உவகை என்ற மெய்ப்பாடாகக் காட்டியுள்ளது.

இளிவரல் சுவை மணிமேகலையில் காட்டப்படும் முக்கியமான சுவையாகும். இளமை நிலையாமையை வலியுறுத்தும்போது மணிமேகலைக் காப்பியத்தில் இளிவரல் சுவை பெரிதும் பயன்படுத்தப்பெற்றுள்ளது.

நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய்
இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ
புலவு புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளை தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்
வாழை தண்டே போன்ற குறங்கு இணை
தாழை தண்டின் உணங்கல் காணாய்
ஆவ கணை கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என” (மணிமேகலை, உதய குமரனை வாளால் எறிந்த
காதை அடிகள் 42- 69)

என்ற முறையில் இளிவரல் சுவை பெருகிய அளவில் மணிமேகலைக் காப்பியம் மெய்ப்பாடுகள் கொண்டு விளங்குகின்றது.

இவ்வாறு தண்டியலங்காரம் காட்டும் பல்வேறு காப்பியப் பண்புகளைப் பெற்று பெருங்காப்பியம் என்பதற்குச் சான்றாக மணிமேகலை விளங்குகின்றது.

முடிவுகள்

மணிமேகலைக் காப்பியம் தனக்கு முன்னதாக சிலப்பதிகாரத்தைப் பெரும்பாலும் அடியோற்றியே புனையப் பெற்றுள்ளது. பதிக மரபு சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களுக்கும் ஒரே நிலையில் அமைக்கப்பெற்றுள்ளது,

மணிமேகலைக் காப்பியம் தொல்காப்பியர் சுட்டும் எண்வகை வனப்புகளில் இயைபு என்னும் வனப்பு சார்ந்ததாகும். இதுதவிர தொன்மை, தோல், விருந்து என்னும் மூவனப்புகளும் மணிமேகலைக் காப்பியத்தினை உருவாக்கத் துணை புரிந்துள்ளன.

தண்டியலங்காரம் சுட்டும் பெருங்காப்பியப் பண்புகளை மணிமேகலை பெற்றுள்ளது. நாற்பொருள் என்ற நிலையில் இக்காப்பியம் பௌத்த நாற்பொருளைச் சுட்டுகின்றது. மேலும் திருமணம், நீர்விளையாட்டு, முடிசூட்டல் போன்றனவெல்லாம் மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெறவில்லை. இதனுள் எண்வகை மெய்ப்பாடுகள், நகர வருணனை, பாத பங்கய மலை வருணனை போன்றனவும் இடம்பெற்று மணிமேகலைக் காப்பியத்தை பெருங்காப்பிய இலக்கணங்கள் பெற்றதாக சீத்தலைச் சாத்தனார் யாத்துள்ளார் என்பது தெரியவருகிறது.

பயன் கொண்ட நூல்கள்.

• இலட்சுமணசாமி .கொ, சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியமரபு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம், 1977

• சாமிநாதையர்.உ.வே. (பதிப்பாசிரியர்), மணிமேகலை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை. ஒன்பதாம் பதிப்பு 2013

• தண்டபாணி. துரை (உ.ஆ) மணிமேகலை, உமா பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு 2014

• துரைசாமிப் பிள்ளை ஒளை.சு., மணிமேகலை ஆராய்ச்சி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி, சென்னை 1942


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிமேகலை காப்பிய மரபு – பகுதி 2”

அதிகம் படித்தது