மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிமேகலை காப்பிய மரபு – பகுதி 2

முனைவர் மு.பழனியப்பன்

Feb 19, 2022

siragu manimegalai2

மணிமேகலையில் காப்பியம் என்ற சொல்லாடல்

மணிமேகலைக் காப்பியத்தில் காப்பியம் என்ற சொல்லாடலும் இடம்பெற்றுள்ளது. ”நாடக காப்பிய நல்நூல் நுனிப்போர்” – (மணி:19/80) என்று சிறைக் கோட்டம் அறக்கோட்டமாகிய காதையில் காப்பிய ஆராய்ச்சி பற்றிய குறிப்பினை மணிமேகலை ஆசிரியர் காட்டியுள்ளார். சோழ மன்னன் அரசவையில் கிள்ளிவளவன் என்ற அரசனைச் சுற்றிப் பலர் இருக்கின்றனர். அவர்களுள் காப்பியத்தை ஆராயக் கூடியவர்களும் இருந்தார்கள் என்று மேற்கண்ட அடி குறிப்பிடுகிறது. அரச மரபினருக்கும் காப்பியத்திற்கும் உள்ள நெருக்கமான தொடர்பினை இவ்வடி காட்டி நிற்கிறது.
இதன்வழி காப்பியம் என்ற பகுப்பினை அறிந்து அதற்கேற்ப சீத்தலைச் சாத்தனார் தன் காப்பியத்தைச் செய்துள்ளார் என்பதை உணரமுடிகின்றது.

விழாவில் தொடங்கல்

காப்பிய கதை என்பது காப்பியத் தலைவனின் பிறப்பைச் சுட்டி, அவன் வாழ்க்கை ஓட்டத்தில் வளர்ச்சி பெற்று, நிறைவில் வெற்றி என்ற முடிவை எட்டும் நிலையில் படைக்கப்படுவது. ஆனால் சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப் பாடல் என்ற நிலையில் கோவலன் கண்ணகி மணவிழாவில் தொடங்குகிறது. அதனை அடியோற்றியே மணிமேகலைக் காப்பியத்தையும் தொடங்க வேண்டும் என்று சீத்தலைச் சாத்தனார் எண்ணியுள்ளார். ஆனால் மணிமேகலைக் காப்பியத்தில் திருமணத்திற்கான வாய்ப்பும் வசதியும் இல்லாத நிலையில் சீத்தலைச் சாத்தனார் இந்திரவிழாவினைக் கொண்டுக் காப்பியத்தைத் தொடங்குகிறார். விழாவில் காப்பியம் தொடங்கும் சிலப்பதிகார முறைமையை மணிமேகலை ஆசிரியரும் கைக்கொண்டுள்ளார் என்பதை உணரமுடிகின்றது.

உலகம் எனத் தொடங்கும் முறைமை

திருமுருகாற்றுப்படை, முல்லைப் பாட்டு போன்ற பத்துப்பாட்டுத் தொகுப்பில் அமைந்த பாடல்கள் உலகம் என்று தொடங்குகின்றன. பெரியபுராணம், கம்பராமாயணம் ஆகிய காப்பியங்களும் உலகம் என்றே தொடங்குகின்றன. காப்பியத்தை ”உலகம்” என்ற சொல்லில் தொடங்கும் மரபினை மணிமேகலை தொடங்கி வைக்கிறது.

‘‘உலகந் திரியா வோங்குயர் விழுச்சீர்ப்
பலர் புகழ் மூதூர்…” ( மணிமேகலை, விழாவறைக் காதை, அடிகள் 1-2)

என்றபடி மணிமேகலை உலகம் என்ற சொல்லுடன் தொடங்கப்பெற்றுள்ளது.

இவற்றின் வழியாக மணிமேகலை தனக்கு முன்னதான, தன் காலத்தான காப்பியமரபுகளை ஒட்டியே எழுதப்பெற்றுள்ளது என்பதை உணர முடிகின்றது. இருப்பினும் தண்டியலங்காரம் சுட்டும் காப்பியமரபுகளும் இதனுள் இடம்பபெற்றுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை ஆராய்ந்த நிலையில் தண்டியாசிரியர், தன் வடமொழிச் சார்பினாலும் தமிழ் காப்பியங்களை அறிந்ததாலும் மேற்காண் காப்பியங்களின் பண்புகளைக் கொண்டே காப்பிய மரபுகளை வகுத்துக்கொண்டிருக்க முடியும்.

இனி இக்கட்டுரை தண்டியலங்கார காப்பிய மரபுகள் மணிமேகலையுள் பொருந்தியுள்ள தன்மையை எடுத்துரைக்க முனைகின்றது.

தண்டியலக்காரக் காப்பிய மரபுகளும் மணிமேகலையும்

தண்டியால் எழுதப்பெற்ற தண்டியலங்கார அணி இலக்கண நூலானது பெருங்காப்பியத்திற்கு உரிய இலக்கணங்களை எடுத்துரைக்கின்றது. அவ்வாறு காட்டப்பெற்ற பெருங்காப்பிய இலக்கணங்கள் பின்வருமாறு.

1) பெருங்காப்பியமாவது வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றுமோ பெற்றும் காப்பியம் தொடங்கலாம்.
2) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளைப் பயனாகத் தருவதாக அமையும்.
3) தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
4) மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
5) திருமணம் புரிதல், முடிசூடல், சோலையில் இன்புறுதல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெற்றெடுத்தல், ஊடல் கொள்ளுதல், புணர்ச்சியில் மகிழ்தல் முதலிய நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
6) அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல், தூது செல்லல், போர் மேற்கொண்டு செல்லுதல், போர் நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.
7) சந்தி எனப்படும் கதைப் போக்கு (கதைத் தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.
8) அமைப்பு முறையில் பெருங்காப்பியம் உள் பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
9) எண்வகைச் சுவையும், மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

என்பன தண்டியலங்காரம் காட்டும் காப்பியமரபுகள் ஆகும். இவையனைத்தும் மணிமேகலைக் காப்பியத்துள் அடங்கியுள்ளன.

1. வாழ்த்தல், வணங்கல், வருபொருள் உரைத்தல்

பெருங்காப்பியம் என்பது தொடங்கும்போது வாழ்த்தல், வணங்கல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றைப் பெற்றிருக்கவேண்டும் என்று தண்டியலங்காரம் குறிக்கிறது. மணிமேகலை

‘‘பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்” ( விழாவறை காதை, அடிகள் 69-71)

என்று வருபொருள் உரைத்தலை விழாவறைக்காதை என்ற முதல் காதையில் பெற்றுத் தொடங்குகிறது. இந்திரவிழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி மக்களை வழிப்படுத்தும் முரசறைவோன் காப்பியத்தின் கருப்பொருளையும் முரசறைந்து அறிவிப்பதாகச் சீத்தலைச் சாத்தனார் காப்பியத்துள் காட்டியுள்ளார்.

இறைவணக்கம் என்ற நிலையில் விழாவறைக் காதையில் இந்திரனை வாழ்த்தித் தொடங்குகிறது மணிமேகலை. மேலும் பூம்புகார் அரசனையும் விழாவறைக் காதையில் வாழ்த்துகிறது மணிமேகலை. விழாவறை காதையில் மன்னனை வாழ்த்துகிற பகுதி அமைந்துள்ளது.

“முரசு கடிப்பிகூஉம் முதுகுடிப் பிறந்தோர்
திரு விழை மூதூர் வாழ் கென் றேத்தி
வான மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோ னாகுக (விழாவறைகாதை அடிகள் 31-34)
என்று அரசன் வாழ்த்தப்படுகிறான்.
“நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துகத் தெய்வம் ஈறாக
வேறு வேறு சிறப்பின்”(விழாவறை காரைத அடிகள் 54-56)

என்று இந்திர விழா நடத்துவதற்கு முன்பு இறைவர்களை வணங்கும் நிலையில் கடவுள் வாழ்த்தையும் கொண்டு விளங்குகிறது மணிமேகலை.

இவ்வாறு மன்னனை வாழ்த்தல், இறைவனை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்பனவற்றைத் தொடக்கத்திலேயே செய்து காப்பிய மரபினைக் கடைபிடித்துள்ளது மணிமேகலை.

நாற்பொருள் உரைத்தல்

மணிமேகலைக் காப்பியம் அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய நாற்பொருளையும் எடுத்துரைக்கின்றது. ” அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்” (மணிமேகலை ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை அடி 228) என்று அறம் பாடுகிறது மணிமேகலை. ” பிறவாமையே பெரும் பேரின்பம்” என்று இன்பத்தைக் கருதுகிறது மணிமேகலை. ”மெய்த்திறம் வழங்கு நற்பொருள் வீடு” என்று வீட்டினையும் பாடுகிறது மணிமேகலை. ”அருளறமே பொருளாக வேண்டும்” என்று பொருள் பற்றியும் பேசுகின்றது மணிமேகலை.

இருப்பினும் மணிமேகலை சுட்டும் நாற்பொருள் என்பது வேறானது. பௌத்த சமயம் காட்டும் நான்குவகை கத்தியங்களையே மணிமேகலைக் காப்பியம் நாற்பொருள் என்று குறிக்கிறது.

“தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து” – (மணிமேகலை, வஞ்சி மாநகர் புக்க காதை அடி 48)
“பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என்” – (மணிமேகலை மேலது அடி 94)

என்ற அடிகளில் சுட்டப்படுவது பௌத்தம் சுட்டும் நான்கு பொருள்களே ஆகும். துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் ஆகிய நான்கு வகைப்பட்ட பௌத்த தத்துவங்களே மணிமேகலை காப்பியத்தில் காட்டப்படும் நாற்பொருள்களாகும்.

தன்னிகரில்லாத் தலைவி

காப்பியம் என்பது தன்னிகரில்லாத் தலைவனை உடையதாக இருக்க வேண்டும். மணிமேகலைக் காப்பியத்தில் தன்னிகரில்லாத் தலைவியாகிய மணிமேகலை காப்பியத் தலைமை ஏற்கிறாள். அவளின் குலம் என்பது பொருளைப் பெறுவது என்பதே ஆகும். ஆனால் இவள் எவர் தருவதையும் பெறாது, இவள் அருளை, உணவை, ஆதரவை உயிர்களுக்கு வழங்குகிறாள். இவள் மணிமேகலைப் பாத்திரத்திலிருந்து கொடுக்க, கொடுக்க உலகம் உண்கிறது. பொருள் வேண்டிப் பெறும் குலத்தவள் உணவை மற்றவர்களுக்குத் தந்திடும் நிலைக்கு உயர்த்தி தன்னிகரற்றத் தலைவியாக மணிமேகலையைக் காட்டுகின்றது இக்காப்பியம்.

‘‘தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு
பவத்திறம் அறுக என பாவை நோற்றனளென் ( பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற
காதை நிறைவடிகள்)

என்று மணிமேகலையை உலக மக்களின் துன்பங்களைத் தீர்ப்பதற்காக தவம் மேற்கொள்பவளாகக் காட்டுகின்றது மணிமேகலை. இந்தப் பண்பே காப்பியத் தலைமைப் பண்பாக அமைந்து, காப்பியத் தலைவியாக மணிமேகலையை உயர்த்துகின்றது.

- தொடரும்


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிமேகலை காப்பிய மரபு – பகுதி 2”

அதிகம் படித்தது