மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிமேகலை காலத்திற்கு முந்தைய சமயங்களும், அவற்றின் நிலைப்பாடும்

முனைவர் மு.பழனியப்பன்

Dec 26, 2020

siragu manimegalai2
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதான பத்து நூற்றாண்டுகளில்  உலக அளவில் மெய்ப்பொருள் பற்றிய தேடல் என்பது நிகழ்த்தப்பெற்று வந்துள்ளது. மெய்ப்பொருள் பற்றிய தேடல் என்பது  சமயம் சார்ந்த தேடலாக முதலில் அமைந்தது. பின்னால் அச்சமயக் கருத்துகள் வலுப்பெற்றுத் தத்துவங்கள் உருப்பெற்று வளரத் தொடங்கின. சமயக் கருத்துகளும் தத்துவங்களும் ஒரே வழிப் பாதையின அவற்றின் இயல்புகள் வேறானவையாகும். இதனை “இப்பிரபஞ்சத்தின் மூலத்தை இயல்பினை ஆராய்வது தத்துவம். வாழ்க்கைக்கொரு குறிக்கோளையும், அக்குறிக்கோளையடைய ஒருவழியினையும் காட்டுவது சமயம்”  என்ற ஞானனின் கருத்து வரையறை செய்கிறது.

“மக்களின் வேண்டல்களைப் பூர்த்தி செய்து, அவர்களை ஈடேற்ற வல்ல ஒரு முழுமுதற்கடவுளைப் பற்றுக் கோடாகக் கொள்பவையே (பெரும்பாலானவை) மதங்கள். தத்துவ ஆய்வின் முடிவாகி மூலப்பரப்பொருளும் சமயவாதிகள் இயம்பும் முழு முதற் கடவுளும் ஒன்றேயெனக் கொள்ள விரும்பியதன் முடிவே சமயம்” என்ற கருத்து மதமும் தத்துவமும் ஒருங்கு கூடும் இடத்தைச் சுட்டுகிறது. மெய்ப்பொருள் தேடல் என்பது மூலத்தைத் தேடும் ஆராய்ச்சியாகும். மதம் என்பது மூல முதற்பொருளாக கடவுளைக் காட்டி அக்கடவுளை சந்தேகமறத் தொழச் செய்யும் முயற்சியாகிறது. மதத்தில் மூலப் பரப்பொருள் பற்றிய ஆராய்ச்சிக்குப் பெரும்பாலும் இடம் இருப்பதில்லை. ஆனால் மூலப்பரம்பொருளை ஆராதிக்கிற மனப்பாங்குச் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மெய்ப்பொருள் தத்துவம் என்பதும் மதம் என்பதும்  ஒரு கோட்டில் செல்லும் இரு பயண அனுபவங்களாகின்றன.

எகிப்து, இந்தியா, சீனா போன்ற பல நாடுகளில் மெய்ப்பொருள் பற்றிய பரவலான தேடல்கள் இருந்துள்ளன. இந்நாடுகளிலும் மத வழிபாடுகள் இருந்துள்ளன.  இம்மெய்ப்பொருள் தேடல்களில், கடவுள் பற்றிய மதக் கருத்துகளில் ஓர் ஒப்புமைத் தன்மை இருந்துள்ளது. “கிரேக்கர் மெய்ப்பொருள் இயல் கொள்கை முறைகளுக்கும், இந்தியக் கருத்து முறைகளுக்கும் வியக்கத்தக்கவாறு ஒப்புமை காணப்படுகிறது”   என்ற கருத்து கிரேக்க மெய்ப்பொருள் இயலுக்கு இணையானது இந்திய மெய்ப்பொருள் வரலாறு என்பதை உணர்த்துகிறது.

“உலகு தழுவிய தத்துவ இயல் வரிசையை ஆராய்ந்தால் அது தேசியமாக இருப்பதை விட சர்வதேசியமாக இருப்பதைக் காணலாம். ஒரு மதம் இதர நாடுகளில் உள்ள மதங்களின் கருத்துகளைத் தாராள மனத்துடன் ஏற்றுக் கொண்டதைப் போல தத்துவ இயலும், பிற தத்துவக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் தாராள மனப்பான்மை காட்டியிருக்கிறது”  என்ற செய்தியும் உலகு தழுவிய மெய்ப்பொருள் தேடலின் ஒன்று பட்ட ஒற்றை இழையைக் காட்டுவதாக உள்ளது.

“தத்துவ இயலில் கிரேக்கர்கள் கி.மு 600 – 300. வரை முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்துக்கள் கி.மு. 400 ஆண்டுக்கெல்லாம் களைத்து உட்கார்ந்து விட்டனர். ஐரோப்பாவில் கி.மு.500  –லேயே இருள் சூழ்ந்து விட்டது. பின்னர் கி.பி. 600 இல் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய ஒளி (மறுமலர்ச்சி) ஏற்பட்டது”  என்ற கருத்தின்வழியாக உலக அளவில் மெய்ப்பொருள் தேடலுக்கான முயற்சிகள் தொடங்கப்பெற்ற நிலையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

“மெய்ப்பொருள் இயல் வரலாறுகளை ஆராய்ந்தால், மெய்ப்பொருளியல் கருத்துகள், கிரீஸ் நாட்டில் தோன்றுவதற்கு முன்பே, இந்திய நாட்டில் தோன்றின என்ற முடிவை எவரும் எதிர்க்க முடியாத முறையில் பெறுகிறோம். கிரீஸ் நாட்டில் மெய்ப்பொருளியல் தோற்றங்களை கி.மு. ஆறாம் நூற்றாண்டு குறிக்கின்றது. ஆனால இந்தியாவிலே அப்போது மெய்ப்பொருளியல் மிகவும் விரிவடைந்திருந்த காலமாக அது இருந்தது. ஆதலின் மெய்ப்பொருள் இயலின் பொது வரலாற்றை இந்திய நாட்டில் இருந்துத் தொடங்கவேண்டும். கிரீஸ் நாட்டில் இருந்து அன்று”  என்ற கருத்து இந்திய மெய்ப்பொருளியல் சிந்தனைத் தோற்றத்தின் பழமையை எடுத்துரைப்பதாகும்.

மேற்குறிப்பிட்ட கருத்துகளின் வாயிலாக உலக அளவில்  நிகழ்ந்த மெய்ப்பொருள் தேடல்களில் இந்திய தத்துவ முன்னோடிகளும் பங்கு வகிக்கின்றனர் என்பதும், உலகிற்கு அனைத்து நாடுகளுக்கும் முன்னதாக மெய்ப்பொருள் பற்றிய தேடலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பதும் தெரியவருகிறது.

இந்திய மெய்ப்பொருள்சார் தத்துவங்கள் வேத சார்பின. வேத மறுப்பின என்ற இரு வேறு பாதைகள் உடையனவாகும். ஆனால் இவை இரண்டும் மூல முதலைத் தேடிச் சென்ற பயணங்கள் என்பதில் ஐயமில்லை. இந்திய மெய்ப்பொருள் தேடலைச் மதச் சார்புடையதாக மட்டும் கொண்டுவிடாமல் தத்துவச் சார்புடையதாகக் கொண்டு ஆராய்வதே பொருத்தமானது. ஏனெனில் மதம் மூல முதலாக கடவுளைக் காட்டுகிறது. தத்துவம் மூல முதலாக கடவுள் அல்லாத ஒன்றை முன்வைக்கிறது. மணிமேகலை காலத்தில் கடவுளை நம்பும் மதங்களும் இருந்தன. கடவுள் அல்லாத ஒன்றை முதலாக் காட்டும் தத்துவ நிலைகளும் இருந்தன. எனவே மணிமேகலை கால சமயங்கள் என்ற நிலையில் மெய்ப்பொருளைத் தேடிப் பயணிப்பது என்பது இருவழிகளைக் கொண்டது என்றாலும் அவற்றின் தேடல் திசை ஒன்று என்பதை உணர்ந்து கொள்ளவேண்டியுள்ளது.

இவ்வியல் மணிமேகலை காலத்திற்கு முன்னதான  மெய்ப்பொருள் தேடல் முயற்சிகளைத் தொகுத்து மொழிவதாக அமைக்கப்பெற்றுள்ளது.
தொடக்க காலத்தில் மெய்ப்பொருள் தேடலில் அமைந்திருந்த மூவகை நிலைகள். இந்திய மெய்ப்பொருள் தேடலின் தொடக்க காலத்தில் மூவகை நிலைகள் காணப்பெறுகின்றன. அவை
1.    ஆரியர் வருகைக்கு முற்பட்ட சிந்து வெளி மக்களின் சமய நெறி,
2.    வேதநெறி,
3.    வேதங்களைப் புறக்கணித்த நெறி
என்பனவாகும். . இம்மூன்று முயற்சிகள் பற்றிய செய்திகளின் விளக்கங்கள் பின்வருமாறு.

சிந்துவெளி மக்களின் சமயநெறி

சிந்துவெளி மக்களின் சமய நெறி என்பது ஆரியர் வருகைக்கு முன்னதாக இந்தியப் பகுதிகளில் இருந்த சமய நெறிமுறை ஆகும். ஆரியர் வருகைக்கு முன்பாக இந்தியாவில் மெய்ப்பொருள் தேடல் நிகழ்ந்துள்ளது என்பதற்குச் சிந்துசமவெளி நாகரீகம் ஓர் அடையாளம். அதுவே முழுமையான அடையாளம் இல்லை என்றாலும் உறுதிப்படுத்தப்பட்ட அடையாளமாகின்றது.

சிந்து சமவெளி நாகரீக மெய்ப்பொருள் தேடல் என்பது காடு சார்ந்த தேடல் ஆகும். காடுகளில் ஆசிரமங்கள் அமைத்து அமைதியான நிலையில் மெய்ப்பொருள் தேடல்களைச் சிந்துசமவெளியினர் நிகழ்த்தினர்.  ஆரியர்தம் கடவுளர்கள் நகரத்தில் இருந்தவர்கள். காட்டில் உறையாதவர்கள். தேர்களில் பயணித்தவர்கள். இந்த அடிப்படை வேறுபாடு தொடங்கி பல வேறுபாடுகள் சிந்துசமவெளி சார் மெய்ப்பொருள் தேடலின் வழியாகக் காணக்கிடைக்கின்றன.

சிறப்பான நாள்களில், சிறப்பான இடங்களில் வேள்விகளை முன்வைத்துச் செய்யப்படும் வழிபாடு ஆரிய வழிபாடு. ஆனால் கோயில் என்ற நிலையான இடத்தில் கடவுளை வழிபடும் முறைமை சிந்து சமவெளி மக்களிடத்தில் இருந்துள்ளது. திண்ணிய உருவம், பலரும் ஒன்று சேர்தல், தொடர்ந்து வழிபடல், கடவுளைப் பற்றியும் அண்டப் பகுதிகளைப் பற்றியும் அவற்றின் தொடர்பு பற்றியும் ஆராய்தல் ஆகிய பண்புகள் சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படுவதாக அறிஞர்கள் உரைக்கின்றனர்.

மேலும் சிந்து நதி மக்கள் லிங்க வழிபாடு, தாய்த் தெய்வ வழிபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருந்தனர். இதுபற்றிய குறிப்புகள் வேதங்களில் இல்லை என்றே கூறுமளவிற்குக் குறைவாக உள்ளன. பறவைகள், விலங்குகள் ஆகியவற்றைப் போற்றி வளர்க்கும் செயல்பாடுகள் சிந்து வெளி நாகரீகத்தில் இருந்துள்ளன. அவற்றைப் பலியிடும் வழக்கம் வேத வழக்கமாகின்றது.

இன்னுமொரு குறிக்கத்தக்க வேறுபாடு இறந்தவர்கள் புதைத்தல், புதைத்தாழியில் வைத்தல் என்ற மரபாகும். வேதநெறி இறந்தவர்களை எரித்துவிடக் கோரும் நிலையில் இது மிக முக்கியமான வேறுபாடாக அமைகின்றது. இவ்வகையில் ஆரியர்க்கு முன்னதாக ஒரு மெய்ப்பொருள் தேடல் சிந்து வெளி நாகரீகத்தில் இருந்துள்ளது என்பது  உறுதியாகின்றது.  சிந்து வெளி நாகரீகத்தின் மெய்ப்பொருள் நிலையைப் பின்வரும் நிலையில் தொகுக்கலாம்.

1.    மக்கள் வாழ்வில் காடுகள் தந்த ஊக்கம்,
2.    திண்ணிய வடிவில் தெய்வச் சிந்தனைகளோடு கூடிய கோயில்
வழிபாடு
3.விலங்குகள், பறவைகள், மரங்கள் முதலியவை உலக அமைப்பில்
பெற்ற உயர்வு,
4.    தெய்வத்தின் பெண்மைத் தன்மையின் உயர்வு
5.    கடவுளது படைக்கும் தன்மை
6.    தெய்வங்கள் நாட்டின் வீரர்களாகத் தோன்றும் முறை
ஆகிய முக்கியமான ஆறு கூறுகள் கொண்ட சமய நிலை சிந்துவெளி நாகரீகத்தில் காணப்பெற்றுள்ளது. இவை வேதத் தொடர்பற்ற திராவிட மூலக் கருத்துகள் என்று அறிஞர்கள் காட்டுகின்றனர்.

இதே கருத்தை ராகுல் சாங்கிருத்தியாயனும் முன்வைக்கிறார். “சிந்துப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் மெஸபடோமியா, எகிப்து, மக்களைப் போலவே தனித்தனிக் கடவுள்களை வழிபட்டனர். கடவுள் விக்கிரங்களும் அடையாளங்களும் அங்குத் தோன்றின. ஆனால் ஆரியா வர்த்த ஆரியர்களுக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லை. குறிப்பாக அவர்கள் சிந்து பள்ளத்தாக்கு மக்களின் லிங்க வழிபாட்டை வெறுத்தனர்”  என்ற கருத்து வேதச் சார்பற்ற சிந்துவெளி நாகரீத்தின் தனித்தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

மேற்குறித்ததன் வழி ஆரியர் வருகையால் எழுந்த வேதங்களுக்கு முன்னதாக இந்திய சமுதாயத்தில் மெய்ப்பொருள் பற்றிய அறிவு,தெளிவு, கொள்கை, கோட்பாடுகள் இருந்துள்ளன என்பது தெளிவாகின்றது.

வேத நெறி

வேதமரபு மணிமேகலை காலத்திலும் அதற்கும் முன்னும், அதற்குப் பின்னும் இந்திய மெய்ப்பொருளியல் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று வளர்ந்து வருகிறது. எனவே அதனை மணிமேகலை காலச் சமயங்களின் முற்கால நிலை என்ற பகுப்பில் அடங்கி இங்கு அந்நெறி பற்றிய கருத்துகள் அறிவிக்கப்பெறுகின்றன.

வேத நெறி காலத்தை கி.மு.1500  முதல்  என்று வரையறுக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.  இதற்கு முன்னதான காலம் சிந்துசமவெளிக்காலம் என்பதையும் இதன் கால எல்லையை வைத்து உணர்ந்துகொள்ள முடிகின்றது.

வேதங்கள் நான்காகும். இவற்றில் இருக்கு வேதத்தைப் பல தலைமுறைகளைச் சார்ந்த முனிவர்கள் படைத்ததாக கருதப்படுகிறது. அங்கிரா, பிரகஸ்பதி, பரத்வாஜர், நர், ஸம்க்ருதி, கவுரவீதி ஆகிய தலைமுறையினர் இருக்கு வேதப் படைப்பாளர்கள் ஆவர். இவர்கள் கி.மு.  முதல் கி.மு.1520 முதல் 1420  வரை இருக்கு வேதப் படைப்பில் ஈடுபட்டதாக ராகுல் சங்கிருத்யாயன் குறிக்கிறார்.  இருக்குவேதமே அடிப்படை வேதம் என்றும், அது பின்னாளில் நான்காகக் கிளைக்கப்பட்டது என்றும் ஒரு கருத்து நிலவகிறது.

சாமவேதத்தைப் பரப்பியர் ஜைமிநி முனிவர் ஆவார். வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது தர்மமே என்ற அடிப்படையில் இதனை ஜைமிநி முனிவர் பரப்பினார். யஜுர் வேதத்தைப் பரவச் செய்தவர் வைசம்பாயர் ஆவார். அதருவ வேதத்தைப் பரவச் செய்தவர் சுமந்து என்பவர் ஆவார்.
இந்நான்கு வேதங்களில் அடிப்படையாக சில மூலக்கருத்துகள் அமைக்கப்பெற்றுள்ளன. “மனித ஆற்றல் கடந்த வல்லமை, ஞானம், ஒளி. அழியாப்பேறு, நன்மை செய்யும் விருப்பம், பாவத்தைப் பொறுக்காத தன்மை ஆகியவை வேத தெய்வங்கட்கும், அத்தெய்வங்களைச் சேர்ந்தவற்றிற்கும் இயல்பாக அமைவன”  என்று வேதம் சார் கடவுள் கொள்கை வரையறுக்கப்பெறுகிறது. “தெய்வங்களின் வல்லமையான தெய்வீகம் ஒன்றே” என்று ஒரு கடவுள் நெறியை வேதங்கள் வற்புறுத்துகின்றன. வேதங்கள் பொதுவான அறங்களையும் மொழிகின்றன. “ஒருவருக்கொருவர் அன்பாக இருத்தல், மதிப்பு கொள்ளுதல், இணங்குதல், பெற்றோரைப் பணிதல், சமூகமாகக் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளல், வேட்ப மொழிதல், பயனுள பேசுதல், மணவுறவின் அன்பு, கடப்பாடு ஆகியவை குடும்ப உறுப்பினர்க்கான அறங்களாகக் கொள்ளப்பெறுகின்றன.

வேதங்களுடன் தொடர்புடைய சில பகுதிகளும் உண்டு. அவை பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம் ஆகியனவாகும். பிரமாணங்கள் என்பவை சடங்குகள், யக்ஞங்கள் பற்றி அறிவிப்பன. ஆரண்யகம் என்பது காட்டில்  எழுதப்பெற்ற எழுத்துகள் என்று பொருள்படுவன. வேதத்தின் நிறை பகுதி உபநிடதங்கள் ஆகும். இரகசியமான பேச்சுவார்த்தை என்று அதற்குப்பொருள். வேத காலத்தில் எழுந்த இந்தப் பிரதிக் குழுமத்தைப் பின்வருமாறு வகைப்படுத்திக்கொள்ளலாம்.

சம்ஹிதை பிரமாணம் ஆரண்யகம் உபநிடதம்
ரிக்வேதம் ஐதரேயம்கௌசிடாகி ஐதரேயம்

கௌசிடாகி

ஐதரேயம்

கௌசிடாகி

சாமவேதம் தண்டயமகாஅல்லதுபங்கவிம்சாசத்விம்சா .ஜைமினியா ஜைமினியாஉபநிடதம்

பிராமணம்

சாண்டயோகா

கேனா

வெள்ளை

யஜுர்வேதம்

சதபதம்   பிர்ஹதரண்யகா

ஈசா

கருப்புயஜுர்வேதம் தைத்ரீயம் தைத்ரீயம் தைத்ரீயம்

கதா

மைத்ரி

ஸ்வெதாஸ்வரம்

அதர்வணவேதம் கோபதம்   பரஸ்னா

முண்டகா

மண்டூக்கியா

என்ற நிலையில் வேதம் சார் குழுமங்களை அட்டணைப்படுத்த முடிகிறது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிமேகலை காலத்திற்கு முந்தைய சமயங்களும், அவற்றின் நிலைப்பாடும்”

அதிகம் படித்தது