மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிமேகலை காலத்திற்கு முந்தைய சமயங்களும், அவற்றின் நிலைப்பாடும் (பாகம்- 2)

முனைவர் மு.பழனியப்பன்

Jan 2, 2021

siragu manimegalai2

வேதத்தின் நிறைவுப் பகுதியான உபநிடதங்கள் பல தத்துவ விசாரங்களுக்கு வாய்ப்பளித்தது. இதன் காரணமாக வேதத்திற்குப் பின்பு வேதம் சார் கருத்துகளை நிலைநிறுத்தியன உபநிடதங்களே ஆகின்றன. இவற்றின் கால அளவைப் பின்வருமாறு பிரிக்கிறார் ராகுல் சங்கிருத்தியாயன்.

1. பழங்கால  உபநிஷத்துக்கள்(கி.மு.700)
(1) ஈசா (2) சாந்தோக்யம் (3)பிரகதாரண்யகம்

2. இரண்டாம் காலகட்ட உபநிஷத்துகள் (கி.மு.600-500)
1) ஐதரேயம் (2) தைத்ரீயம்.

3. மூன்றாம் காலகட்ட உபநிஷத்துகள் (கி.மு.500-400)
(1) பிரஸ்னம் (2) கேணம் (3) கதா (4) முண்டகம் (5) மாண்டூக்யம்

4. நான்காம் காலகட்ட உபநிஷத்துகள்(கி.மு.200-100)
(1) கவுஷீதகி (2) மைத்ரீ (3) ஸ்வேதாஸ்வரம்.

என்ற நிலையில் நான்கு காலகட்டங்களாக உபநிடதங்கள் தோற்றம் பெற்ற காலம் வரையறுக்கப்பெறுகிறது. உபநிடதங்கள் புத்தர் காலத்திற்கு முந்தையன என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். உபநிடதங்கள் பிரம்மம், ஆன்மா, மறுபிறப்பு, முக்தி ஆகிய கருத்துகளை முன்வைத்து விவாதித்தன. உபநிடதங்களின் எண்ணிக்கை மொத்தம் நூற்றியெட்டு என்று முத்திகா என்ற உபநிடதம் குறிக்கிறது.

இளமை, யாக்கை, செல்வம் ஆகியனவற்றின் நிலையற்ற தன்மையை உபநிடதங்கள் உணர்த்துகின்றன. ஆத்மாவைப் பற்றியும், பரம்பொருளைப் பற்றியும் பல்வேறு விவாதங்களை உபநிடதங்கள் கொண்டுள்ளன. பற்பல கடவுளர் கொள்கையில் இருந்து ஒரு தெய்வக் கொள்கைக்கு உபநிடதம் வழி வகுக்கிறது. பிரம்மமே மெய்ப்பொருள் என்று உபநிடதத்தால் ஏற்கப்படுகிற்து.

இந்த உபநிடதக் கருத்துகளை விளக்க எழுந்தன பிரம்ம சூத்திரமும் பகவத் கீதையும் ஆகும்.  அவை பற்றிய விளக்கங்கள் பின்வருமாறு.

பிரம்ம சூத்திரம்

பிரம்ம சூத்திரம் என்பது உபநிடதங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, ஒருமைப்பாட்டைக் கண்டறியச் செய்யும் வகையில் எழுதப்பெற்றுள்ளது. பாதராயணர் என்பவரே உபநிடதக் கருத்துகளை ஒழுங்குபடுத்தி நூற்பாவடிவில் பிரம்ம சூத்திரத்தை இயற்றினார் என்ற கருத்து உண்டு. பிரம்ம சூத்திரத்திற்கு வேதாந்த சூத்திரம், சாரீரிக மீமாம்சை என்று வேறு பெயர்களும் உண்டு. பிரம்மம் என்ற பரம்பொருளை விளக்குவதால் இது பிரம்ம சூத்திரம் எனப்பட்டது. வேத முடிவுகளை விளக்குவதால் வேதாந்த சூத்திரம் எனப்படுகிறது. ஆன்மாவைப் பற்றியும் ஆராயும் இதன் திறன் கருதி இதனை சாரீரிக மீமாம்சை என்று அழைப்பர். பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்களை உடையது. அத்தியாயங்களில் நான்கு பாதங்கள் உள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட நூற்பாக்கள் இதனுள் உள்ளன. பிரம்ம சூத்திரம் அடிப்படையில் தனி மனித ஆன்ம ஈடேற்றத்தை முன்வைத்து எழுதப்பெற்றுள்ளது.

இப்பிரம்ம சூத்திரத்திற்குப் பலர் விரிவுரை  செய்தனர். சங்கரர், இராமாநுஜர், மத்வர், நீலகண்டர் போன்றோர் அவர்களுள் குறிக்கத்தக்கவர்கள். பிரம்ம சூத்திரம் இந்திய மெய்யியல் வளர்ச்சியில் குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றது.

பகவத்கீதை

இராமாயணமும், மகாபாரதமும் இந்திய மெய்யியல் சார் இதிகாசங்கள் ஆகும். இவையும் இந்தியத் தத்துவ இயலில் வேதம் சார் கருத்துகளை மொழிவன என்றாலும் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக விளங்கும் பகவத்கீதை உபநிடத, வேதப் பொருள்களின் விழுமிய பொருள்களைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. பகவத் கீதையில் வேதங்களில் நான்  சாமவேதமாக இருக்கிறேன் என்று கிருஷ்ணனர் உரைக்கிறார். கீதையின் ஒவ்வோர் அத்தியாய முடிவிலும் உபநிஷத்தும், பிரம்ம வித்தையும், யோக சாஸ்திரமும் ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன பம்பாஷணையுமாகிய ஸ்ரீமத் பகவத் கீதையில்…. யோகம் முற்றிற்று என்று வருகிறது” என்பதனால் கீதை வேத, உபநிடச் சார்பினது என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது.

பகவத் கீதை எழுந்த காலத்தைப் பின்வருமாறு ஞானன் விளக்குகிறார். “சிவனையும் வேறு சிறு தெய்வங்களையும் வணங்கிய ஆரிய வருகைக்கு முற்பட்ட தொல் இந்தியா காலம்- இயற்கைக் கூறுகளாகத் தேவர்களைப் படைத்து, வேள்விகள் இயற்றி, வளத்தை வேண்டி நூற்றாண்டு கால மண்ணுலக வாழ்வில் ஆசையுற்று வணங்கிய வேதகாலம், வேதகாலத்தில் முளைத்த வேள்விகளை எதிர்த்து அகிம்சையை ஆதரித்த சமணம், புத்தம், ஆசீவகம் மற்றும் உலகாயதம் ஆகிய மதங்களின் கலகக்குரல் காலம், இந்தத் தத்துவங்களை உள்வாங்கி, வேதத்தில் வற்புறுத்திய சடங்குகளை நிராகரித்து இறைக் கொள்கையை உள்முகமாகத் திருப்பி பிரம்மம் – ஆன்மா என்ற கருத்துருவாக்கத்திற்கு உட்பட்ட உபநிடதகாலம் ஆகிய நான்கு வித் தத்துவ காலங்களுக்குப் பின் ஏற்பட்ட  சூழலை முன்னிட்டு மன்னராட்சி காலம் ஓங்கிய பின்னணியில் முழுமுதற் கடவுள் தேவைப்பட்ட காலத்தில் எழுந்த நூல் பகவத்கீதை.”  என்ற கருத்தானது இந்திய மெய்ம்மையியல் வரலாற்றின் தொடர்ச்சியை எடுத்துரைப்பதாக உள்ளது. இந்திய மெய்யியல் வளர்ச்சியில் மணிமேகலை காப்பியம் எழுவதற்கு முன்பே வேதமரபு தழைத்து ஓங்கியது என்பதை மேற்குறித்த சான்றுகளின் வழி அறியமுடிகின்றது.

கீதை ஜீவன்கள், பிரகிருதி, காலம், கருமம் ஆகிய ஐந்து பொருள்களை வரையறுக்கின்றது. நிஷ்காமியமாக அனைத்துச் செயலையும் செய்ய வேண்டும். செயற்பலனில் பற்று வைக்கக் கூடாது. முடிவை இறைவனிடம் விட்டுவிட வேண்டும். எல்லாம் ஈசனே என்று சரணாகதி அடையவேண்டும்   என்று கீதையின் தத்துவ விளக்கம் அமைகிறது.

இவ்வளவில் வேதகாலத்தின் இந்திய மெய்யியல் நிலை விரிந்த கால எல்லையையும், பரவலான வேதப் பிரதிகளையும் கொண்டிருந்தது என்பதை அறியமுடிகின்றது.  வேதங்கள் தமக்கு எதிரான அல்லது முரண்பாடான கருத்துகளையும் தனக்குள் ஏற்றுக் கொள்ளும் நிலையில், மற்ற மதத்தின் கோட்பாடுகளைத் தன் வயப்படுத்தும் நிலையில் செயல்பட்டுள்ளன என்பதற்கு அதன் உபநிடத, பிரம்ம சூத்திர, பகவத் கீதை ஆகியவை உள்ளிட்ட வளர்ச்சியே சான்றாகின்றது.

தமிழகச் சூழலில் வேதநெறி

தொல்காப்பியத்தில் வேதநெறி குறித்தும் அந்தணர் பற்றியும் பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.  தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தில்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு”

என்ற பகுதியில் உள்ள ‘நான்மறை முற்றிய’  என்ற தொடர் வேதங்களைக் குறிப்பதாகும். தொல்காப்பியத்தில் அந்தணர் வேதம் ஓதும் முறை பற்றி ஒரு நூற்பாவில் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

“எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே”

என்ற பகுதியில் அந்தணர் மறைத்தே என்ற குறிப்பு இங்குக் கவனிக்கத்தக்கது. இவை தவிர வாகைத் திணையில் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என வருகின்றது. உயர்ந்தோர் என்ற நிலையில் தொல்காப்பிய காலத்தில் அந்தணர் வைத்து எண்ணப்பெற்றுள்ளனர்.  இவ்வகையில் வேதச்சார்பு தொல்காப்பியத்தில் காணப்படுவதை அறியமுடிகிறது.

சங்க இலக்கியத்தில் நான்மறைகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.  “பதினாயிரங்கை முதுமொழி முதல்வ”   என்று பரிபாடலிலும், “நான்மறை முதுநூல் “     என்று அகநானூற்றிலும்,     “சிறந்த வேதம் விளங்கப்பாடி”  என்று மதுரைக்காஞ்சியிலும்,      “நாஅல் வேத நெறிதிரியினும்” , “கெடுவில் கேள்வியுன் நடுவாதலும்”  , “வாய் மொழி உரைதர”   என்ற பாடலடிகளில் நான்மறைகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் வாயிலாக சங்க காலத்தில் வேத வாக்கியம் நடைமுறையில் இருந்தது என்பதை அறியமுடிகின்றது.

சங்க இலக்கியங்களில் அந்தணர்கள், அவர்கள் இயற்றிய வேள்விகள் பற்றிப் பல குறிப்புகள் காணப்பெறுகின்றன. “எண்நாணப் பல வேட்டும்  என்று அந்தணர்கள் வேள்வி இயற்றிய முறையைப் புறநானூறு காட்டுகிறது. அந்தணர்க்கு உரிய ஒழுக்கம் வேள்வி செய்தல் என்பதைப் பின்வரும்  பதிற்றுப்பத்துப் பகுதி விளங்குகிறது.

    “ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றலென்று ஆறுபுசித் தொழுகும்
அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி”

என்னும் இப்பாடலடிகள் சங்ககாலத்தில் அந்தணர் வேள்வி செய்தற்கு உரியவர்களாக விளங்கினர் என்பதைக் காட்டுகின்றன.. புறநானூற்றில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்றோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவ்வரசர்ளின் பெயர்களுடன் வேள்வி, யாகசாலை முதலிய அமைந்திருப்பதன் வாயிலாக இவர்கள் வேள்விகள் இயற்றினர் என்பது தெரியவருகிறது. இதன் காரணமாக அரசர்களின் தொடர்பு கிடைக்கும் அளவிற்கு அந்தணர்கள் வேள்வித் திறம் புரிந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

பாலைக் கௌதமனார் என்ற புலவர் தானும் தன் மனைவியும் சுவர்க்கம் பெற வேள்வி நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளைப் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற மன்னனிடத்தில் வைக்கின்றனர். அவனும் பத்து யாகங்களைச் செய்தான் என்பது வரலாறு. இதனைச் சிலப்பதிகாரமும், பதிற்றுப்பத்தும் உரைக்கின்றன.

‘‘சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்
றந்துடன் போற்றி யவை துணையாக
எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபிற் கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி’’

என்ற பாடலில் வேள்வி செய்யும் முறைகள் சுட்டப்பெற்றுள்ளன. பாலைக்கௌதமானர் தன் விருப்பத்தை நிறைவேற்றிய சேரனுக்காகப் பாடிய இப்பாடலில் வேள்விச் செயல் குறிக்கப்பெற்றதன் வாயிலாக அக்கால வேள்வி நிலையைப் பற்றி அறிந்துகொள்ள முடிகின்றது.

    “அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கி
உரைசால் வேள்வி முடித்த வேள்வி
அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு
இருஞ்சே றாடிய மணல்மலி முற்றம்”

என்ற கபிலர் பாடலிலும் வேள்வி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் “கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது  வேள்வி வேட்டனை”   என்ற அடியிலும் வேள்வி வேட்டல் பற்றிய செய்தி இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது.  “மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்     முன்முயன்று அரிதினில் முடித்த வேள்வி”   என்ற அகநானூற்றுக் குறிப்பிலும் வேள்வி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

“அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன்”
என்று புறநானூற்றில் அந்தணர் தீ பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
“பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறை போகிய
தொல்லாணை நல்லாசிரியர்”

என்ற மதுரைக் காஞ்சியடிகளிலும் வேள்வித்துறை பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.
வேள்வி இயற்றிய முறையைப் புறநானூற்றின் இருபாடல்கள் காட்டுகின்றன.

 நல் பனுவல், நால் வேதத்து,
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பலகொல்?
யா பலகொல்லோ? பெரும! ’’

என்ற பாடலில் வேள்வியாற்றிய முறை அறிவிக்கப்படுகிறது. வேள்வி முறை பற்றிப் பேசும் மற்றுமொரு பாடல் பின்வருமாறு.

வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண் ஞாண்மிசைப் பொலிய
மறம் கடிந்த அருங் கற்பின்,
அறம் புகழ்ந்த வலை சூடி,
சிறு நுதல், பேர் அகல் அல்குல்,
சில சொல்லின், பல கூந்தல், நின்
நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்ப்
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர் ஏழின் இடம் முட்டாது,
நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்,
மண் நாணப் புகழ் பரப்பியும்,
அருங் கடிப் பெருங் காலை,
விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை,
என்றும், காண்கதில் அம்ம, யாமே’’

என்ற பாடலிலும் வேள்வியாற்றும் முறை பற்றி எடுத்துரைக்கப் பெறுகிறது. இவ்வாறு வேதங்கள், வேள்விகள் பற்றிய பல்வேறு குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன. மேலும்  வேதங்கள் சுட்டும் சுவர்க்கம், நரகம் போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன. இவற்றின் வழியாகத் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றுக்கு முந்தைய காலம் வேதகாலம் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

தொடர்ந்து எழுந்த அற இலக்கியங்களில் வேதச் சாயல் இடம்பெற்றிருந்தது. “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்“  என்ற வேள்வி மரபு திருக்குறளில் காட்டப்பெறுகிறது, இல்லறம் வேள்வி செய்தலுக்கு ஈடானது என்று வள்ளுவர் மொழிகிறார்.

“இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
துணைத் துணை வேள்விப் பயன்”
“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார் “
ஆகிய குறள்களில் வேள்வி செய்தல் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இருப்பினும் வேள்வியை வள்ளுவர் ஏற்கவில்லை என்பதும் இங்கு எண்ணப்படவேண்டியது. வேள்விக்கு மாற்றாக அவர் விருந்தோம்பலைக் காட்டுகிறார் என்பது தமிழ்ச்சமுதாய மரபிற்குக் காட்டும் வேறுபாடாகும். வேள்வியில் உயிர்க்கொலை செய்யப்படுதல் வழக்கமாக இருந்துள்ளது. இதனைத் தமிழ்ச்சமுதாயம் ஏற்கக் கூடாது என்ற கருத்து அக்காலத்தில் இருந்துள்ளது.

    “ஊனுண் டுயிர்கட்கு அருளுடையேம் என்பானும்
தானுடன் பாடின்றி வினையாக்கும் என்பானும்
தாமுறு வேள்யிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு”

என்ற திரிகடுகப் பாடலில் வேள்வி பற்றிய குறிப்பு இருந்தாலும் அதில் உயிர்ப்பலி கூடாது என்று உரைக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாக வேள்வி நெறியும் அதற்கு மாற்றான நெறியும் சங்கம் மருவிய காலத்தில் இருந்தன என்பது அறியத்தக்கதாக உள்ளது.
ஏலாதியில் வேதத்தைக் கற்றவர்கள்அதன் படி ஒழுக வேண்டும். ஒழுகினால் விண்ணுலக வாழ்வைப் பெறலாம் என்ற கருத்து இடம்பெற்றுள்ளது.

 “மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழித்து விண்ணோர்க்கு
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு”
ஏலாதியில் மற்றுமொரு பாடல், மறையின் வழிவந்தார்கண்ணே வனப்பு என்ற குறிப்பினைப் பெற்றுள்ளது.

“சென்றபுகழ் செல்வ மீக்கூற்றஞ் சேவகம்
நின்ற நிலைகல்வி வள்ளன்மை- என்றும்
வழிவந்தார் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு”

இப்பாடல்கள் தவிர நான்மணிக்கடிகையிலும் ““தொன்மரபின் வேதம் கூறுவன பாட்டுள”   என்று வேதத்தின் தொன்மரபு சுட்டப்பெறுகிறது. இவ்வகையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வேதமரபு சுட்டப்பெற்றுள்ளது என்று கொள்ளமுடிகின்றது.

அடுத்து சிலப்பதிகாரத்தில் அந்தணர், வேள்வி, வேதம் ஆகியன பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. “நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் ’’  , ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் , ‘‘அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் ’’ ,  ‘‘ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திர கணக்கர் தம்மொடு ’’  , அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க ’’ , அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் ’’ ,‘‘ அறுகளத்து அந்தணர் ஆசான் பெருங்கணி’’  என்ற பாடலடிகளில் அந்தணர் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன.

வேள்விகள் பற்றி பதினோரு இடங்களில் சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.  ‘‘வேதமுதல்வன் வேள்வி கருவியோடு’’, ‘‘அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்’’, ‘‘மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை’’, ‘‘மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்’’, ‘‘நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான்’’, ‘‘பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்’’, ‘‘வேள்வி கிழத்தி இவளொடும் கூடி’’, ‘‘கேள்வி முடித்த வேள்வி மாக்களை ’’, ‘‘வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி’’ , ‘‘நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் ’’, ‘‘வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின் ’’   என்பன அவையாகும்.

வேதம் என்ற சொல் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பெற்றுள்ளது.  “விண்ணவன் வேத முதல்வன் விளங்கு ஒளி’’, ‘‘வேதமுதல்வன் பயந்தோன் என்பது’’ , ‘‘வேதமுதல்வன் வேள்வி கருவியோடு”   என்பன அவற்றிற்கான சான்றுகளாகும்.

சிலப்பதிகாரத்தில் குறிக்கத்தக்க பாத்திரம் மாடல மறையோன் பாத்திரம் ஆகும். இவனால் சிலப்பதிகார மாந்தர் தம் வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இவன் சேரனை வேள்வி செய்ய அறிவுறுத்துகிறான்.

“மறையோன் மறைநா உழுது வான்பொருள்
இறையோன் செவிசெறு வாக வித்தலின்
வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயம்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி”

என்ற அடிகளில் வேள்வி செய்ய வலியுறுத்தப்பெற்றுள்ளது. மதுரைக்காண்டத்தில் பராசரன் என்ற அந்தணன் பற்றிய வரலாறும் உரைக்கப்பெற்றுள்ளது. இவற்றால் சிலப்பதிகாரத்தில் வேதநெறி தழைத்தோங்கியது என்பதை உணர முடிகின்றது.

வேத நெறிகளை ஏற்ற நிலையில் இந்திய மெய்ப்பொருள் நிலையில்  பல சமயங்கள் விளங்குகின்றன. சைவம், வைணவம், சாங்கியம், வேதாந்தம், வைசேடிகம், பிரம்மவாதம், அளவையியல் ஆகியன வேதச் சார்பினை ஏற்கும் சமயங்கள் ஆகும். வைதிக சமயங்களான இவற்றின் நிலையை மணிமேகலை காப்பிய காலத்திற்கு முன்னதாக அமைந்த நிலையை பின்வரும் பகுதி காட்டுகின்றது.

சைவம்

தொன்மைக் காலச் சமயங்களுள் ஒன்று சைவ சமயம் ஆகும். இதன் தொடக்க நிலை சிந்து சமவெளி நாகரீகத்தில் தொடங்கி வேதங்களில் வளர்ச்சி பெற்றுள்ளது.  தமிழ்ப் பரப்பில் சங்ககாலத்திலேயே இச்சமயத்தின் கூறுகள் படைக்கப்பெற்றிருந்தன.

சிந்து சமவெளி நாகரீகமும் – சைவ சமய அடையாளங்களும்

ஆங்கிலேயர்கள் இருப்புப்பாதை பதித்தல் பணியின்போது தற்போதைய பாகிஸ்தான் பகுதிகளை ஒட்டி அமைந்த சிந்துசமவெளிப் பகுதிகளில் புதையுண்ட இரு நகரங்களைக் கண்டுபிடித்தார்கள். அந்த நகரங்கள் தொன்மைக் காலம் நாகரீகச் சான்றுகளாகக் கொள்ளப்பெற்றன. சிந்துசமவெளி நாகரீகம் என்று அழைக்கப்பெற்று அதன் மீதான ஆய்வுகள், அகழ்வு ஆய்வுகள் தொடங்கப்பெற்றன.

சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்று ஆய்வாளர்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன் கலை, பண்பாடு, சமயம் போன்ற பற்றிய பல கருத்துகள் ஆய்வாளர்கள் வாயிலாக வெளியிடப்பெற்றது. அங்குக் கிடைத்த ஒரு முத்திரை மிக முக்கியமான சமயச் சான்றாக விளங்குகின்றது.

1930 ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆய்வு செய்த ஜான் மார்சல் என்ற அறிஞர் அங்குக் கிடைத்த ஒரு முத்திரையை யோகி வடிவ முத்திரை என்றும். யோகிகளுள் சிறந்தவரான சிவனின் உருவம் அது என்றும் இந்த முத்திரையைக் குறித்து அறிவித்தார். இரு கொம்புகளைத் தாங்கிய நிலையில் கால்களை மடித்து அமர்ந்த கோலத்தில் விலங்கினங்கள் சூழ இந்த யோகி அமர்ந்துள்ளார். காளைகள் சூழ்ந்திருப்பதன் காரணமாக இவ்வுருவை அவர் சிவபெருமானின் உருவம் என்றார்.

ஆனால், பின்னால் வந்த அறிஞர்கள் பலர் இது பெண் தெய்வம் என்றும், புத்த சமயத்தின் ஆதிவடிவம் என்றும், சமணத் தீர்த்தங்கரரின் முன் நிலை என்றும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டனர். ஆய்வு உலகில் இன்னமும் இது குறித்தான சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இவற்றை ஒருபுறம் வைத்துக்கொண்டாலும் சிந்துசமவெளிப் பகுதிகளில் பல்வேறு சிவலிங்க வடிவங்கள் கிடைத்துள்ளன.

இந்த உருவச் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. இதன் காலம் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது இப்போது இருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் கி. மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சைவ சமயம் என்பது தெரியவருகிறது.

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளியில் சைவ சமயப் பண்பாட்டு எச்சங்கள் இருந்துள்ளன என்றால் அதற்கு முன்பு சைவ சமயம் தோன்றியிருக்க வேண்டும் என்பது குறிக்கத்தக்கதாகும்.

வேதங்கள் சுட்டும் பழமை:

இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த எழுத்தாவணங்கள் வேதங்கள் ஆகும். நால்வகை வேதங்களில் யஜுர் வேதத்தில் மையப்பகுதியில் அமைந்திருப்பது ருத்ரம் என்பதாகும். இது சமகம் நமகம் என்று இருபிரிவுகளை உடையது. சமகம் என்ற பகுதியில் நமக்கு வேண்டும் பொருள்களின் பட்டியலும், நமகம் என்பதில் சிவபெருமானுக்கான பெயர்கள் பலவும் தரப்பெற்றுள்ளன. இவ்வேதப் பகுதி தவிர ரிக் வேதத்திலும் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ருத்திரன் என்ற பெயரைச் சிவனாகக் கொள்ளலாம் என்றாலும் சிவனுக்கு உரியப் பல தன்மைகளுக்கு முரணாக சில பகுதிகளும் ருத்திரத்தில் காணப்படுகிறது. பசுபதி – விலங்குகளின் தலைவன் என்று யஜுர் வேதம் ருத்திரனைக் குறிப்பிடுகிறது. அம்பிகாவின் உடன் பிறந்தவன் ருத்திரன் என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றால் ருத்திரன் வேறு சிவன் வேறு என்று வேற்றுமை பாராட்டினாலும் பெரும்பாலும் ருத்திரன் என்ற பெயர் சிவனுக்கு உரியது என்பதே சரியாகும்.

யஜுர், ரிக் வேதங்களில் சிவன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பதால் சைவத்தின் அடிப்படைகளை வேதங்களே சொல்லியுள்ளன என்ற அடிப்படையில் சைவம் வேதகாலத்திற்கும் முந்தைய சமயம் என்பதும், அது ஆரியர் வருகைக்கு, ஆரிய எழுச்சிக்கு முன்பே இருந்த திராவிட கலாச்சாரம் என்பதும் இவற்றின் வழி தெளிவாகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிமேகலை காலத்திற்கு முந்தைய சமயங்களும், அவற்றின் நிலைப்பாடும் (பாகம்- 2)”

அதிகம் படித்தது